Sunday, September 13, 2009

பிரிவுகளுக்கான நிச்சயத்துடன் சந்திப்புகள்!

குழுமங்களில் சந்திக்கும் எல்லோரையும் அவ்வளவு இலேசில் உறவு முறை சொல்லி அழைத்து விட மனது வராது. ஆனால் மனதார அண்ணா என்று நான் விரும்பி அழைக்கும் மூவரில் மூத்தவர் சங்கரண்ணா.. ! முத்தமிழ் குழுமத்தில் பூவை நீ மெல்லியலே..என்ற கவிதைத் தொடரில் நானும் அவரும் உண்மையிலேயே அண்ணா தங்கையாக உருவகித்து தான் கவிதைப் போர் புரிந்திருக்கிறோம். எங்களுடைய அந்த கவிதைக்கு கவிதை எழுதும் போரால் ஏதோ ஒரு வழியில் போக வேண்டிய கதை வேறு வழியில் திரும்பி பயணப்பட்டுப் போனது அத்தனை சுவாரஸ்யம். அந்தக் கவிதைத் தொடரில் அவருடைய தங்கையாக அருக்காணி என்ற பெயர் என் பாத்திரத்துக்கு.. இன்றை வரைக்கும் அந்த அருக்காணியாகத் தான் அண்ணாவுக்கு நான்...! :)

நாட்டின் எல்லைகளுக்கப்பால் இருக்கும் நட்புகளைப் பற்றி நினைக்கும் போது வாழ்நாளில் ஒரு தடவையாவது இவர்களை சந்திக்கக் கிடைக்குமா என்ற ஏக்கம் இருக்கும். தொலைவு கொடுக்கும் பயம் அது...! ஒரே நாட்டின் எல்லைகளுக்குள் இருப்பவர்களை எப்போதும் சந்திக்கலாம்..இப்ப என்ன அவசரம் என்ற அசட்டை மனதில் இருக்கும்..


ஆனால் நாங்கள் வசிக்கும் அதே அமெரிக்காவில் இருந்தும் எப்ப அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தவர் என்றால் இவர் ஒருவரைத் தான் இருக்கும். காரணம் இவருடைய தமிழீழ ஆதரவாக இருக்கலாமோ அல்லது அவரது எழுத்தோ அல்லது ஏதோ என்னால் விபரிக்க முடியாத பந்தமோ என்னவோ எனக்கு தெரியவில்லை... ! ஆனால் அவரை சந்தித்த முதல் நாள் இருக்கே...அது எந்த ஒரு நட்புக்கும் சரி உறவுக்கும் சரி முதல் முதலாக சந்திக்கும் நாளாக இருக்கவே தகுதியற்ற நாள்...!

வன்னி அவலங்களில் கொடூரமாக சிதைக்கப்பட்ட , கொல்லப்பட்ட குழந்தைகளினதும், மனிதர்களினதும் படங்களடங்கிய பதாகைகளுடன், மனதில் உக்கிரமும், ஆவேசமும், இயலாமையும், சோகமும் ஒன்றாக கலவையாகிய உணர்வு நிலையில் , ஒரு கொடூரமான குளிர் உறைந்த நாளில், உடல் சுகவீனத்துடன் வந்த கணவரும், குழந்தைகளும் நானும் கவனயீர்ப்பு போராளிகளாக நின்ற நாளில் தனது பங்களிப்பையும் அளிக்க அண்ணாவும் ஒரு போராளியாகவே வந்து நின்ற நாள் அது!!

இத்தனை நாள் சந்திக்க ஆசைப்பட்ட அண்ணாவை முதன் முதல் சந்திக்கிறோமே என்ற சந்தோஷத்தையோ பரபரப்பையோ அனுபவிக்கமுடியாமல் போன நாள் அது!! சந்தித்த அடையாளமாக கூட நின்று ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத சூழலுக்குள் அடங்கி நின்ற நாள் அது!!

ஆனாலும்............

வெள்ளை மாளிகையின் முன்னால் வன்னியில் அவலப்பட்ட ஈழத்தமிழருக்காக ஒன்று கூடிய கிட்டத் தட்ட பத்தாயிரம் தமிழர்கள் மத்தியில் என்னை மட்டும் கண்டு பிடித்து என் முன்னால் வந்து நின்று "சுவாதி" என்று புன்னகைத்து ஒரே தருணத்தில் என்னை திடுக்கிடவும் பிரமிக்கவும் வைத்தது அந்த அன்புள்ளம் !! அந்தத் தருணம் எனக்கு மிகவும் வெகுமதியான நிமிடம் தான்!! என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து நிமிடம் நிலைதிருந்திருக்குமா அந்த சந்திப்பு??
ஆனால் ஆயுசுக்கும் நினைவுகளில் நிழலாகத் தொடர்ந்து கொண்டிருக்கப் போகும் பிரமிப்பு அது!!


"தோழி! நான் இப்போது அமெரிக்காவில் பிலடெல்பியாவில் இருக்கிறேன். " என்று ஒரு நாள் நிலாரசிகனிடமிருந்து மடல் வந்த போது தான் ஒரே நாளில் எனது தூரத்து உறவில் மாமா முறையானவர் தனது இரண்டு மகன்மரையும் இராணுவத்தின் குண்டுக்கு பலிகொடுத்த செய்தி கிடைத்து துக்கத்தில் இருந்தோம்... நிலாரசிகன் வந்திருக்கிறார் என்று சொன்னதும் எதிர்பார்த்தபடியே சிநேகனிடம் ஒரு மகிழ்ச்சி ரேகையை முகத்தில் பார்த்ததும் அப்பாடா ..நிலாவை சந்திக்க போக வரம் கேட்கலாம் என்று தைரியம் வந்தது. நிலாவின் கவிதைகளை வாசித்து வாசித்து பின்னூட்டமிடாத ரசிகனாக இருந்த சிநேகனுக்கு நிலாவை நேரில் சந்திக்க விருப்பம் இருந்ததில் ஆச்சரியமில்லை. சொன்ன நாள் போய் சந்திக்க முடியாமல், அடுத்த நாள் தான் நிலாவிடம் போக முடிந்தது.

நிறைய பேசவில்லை. ஆனாலும் எப்படியோ ஒரு தடவையாவது சந்திக்கக் கிடைத்ததே என்ற ஆத்ம திருப்தி.

நிலாவுடன் பிலடெல்பியா மாலை குடும்பமாக சுற்றிப் பார்த்தோம். திரும்பும் போது சிநேகன் சொன்னார்" என்னமோ ஒரு சகோதரத்தை விடுதியில் விட்டு விட்டு வாற மாதிரி கவலையா இருக்கு" :(


நிலாவைச் சந்தித்ததைப் பற்றி தானே பதிவு எழுத போவதாக சிநேகன் சொன்னார். "அந்த நிலாவைத் தான் நான் கையைக் குலுக்கினேன்..சுவாதியால..." என்று தலைப்பு வைத்து... மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு பரா எழுதி வைத்திருக்கிறார். இன்னமும் முடிக்கவில்லை.... என்பது வேறு கதை... :):)

ஆனால் என்னால் அந்தச் சந்திப்பையும் அதையும் என்னால் ஒரு பதிவாக எல்லோரும் சுவாரஸ்யமாக படிக்குமளவுக்கு வார்த்தைகளால் கோர்க்க முடியவில்லை!! என்னுடைய திறமையின்மையோ அல்லது உணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அடையாளம் காட்டும் அல்லது வர்ணிக்கும் தகுந்த வார்த்தைகள் என்னுடைய அகராதியில் இல்லையோ என்னமோ ...எனக்கு சொல்லத் தெரியவில்லை.. :(

இந்தமாதிரி ஏதோ ஓரிரு சந்தோசத்தை தவிர அடுத்து நடந்த அத்தனை நிகழ்வுகளும், கிடைத்த செய்திகளும் என்னுடைய மனநிலையையும், உடல்நிலையையும் மிகவும் பாதித்துக் கொண்டு இருந்த வேளையில் அந்த பயங்கரமான நாள் மே 17ம் திகதி. அத்தனை ஈழத்தமிழர்களையும் போல் நானும் நிலை குலைந்து போன நாள். என்னை நானே தைரியப்படுத்த முடியாமல் கடைசியில் மருத்துவமனையை நாடி ஓடிப் போக வேண்டிய நிலையில் நான் இருந்த போது 13 நாட்களே மீதமிருந்தது அப்துல் ஜப்பார் ஐயா என் வீடு வர............ !

(தொடரும்)


3 comments:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in