Tuesday, March 24, 2009

கோணங்கள் - குறு நாவல்.

கோணங்கள்
(குறு நாவல்)
1


காலம் எவ்வளவு வேகமாய் ஓடுகிறது என்பது அறிவுக்கு எப்போதுமே தெரிந்தே இருந்தாலும் ஒரு சில தருணங்களில் தான் அது சிலுவையில் அறையப்படும் ஆணியின் வலியாய் நெஞ்சில் உறைக்கிறது. தன்னைவிடப் பத்துப் பதினைந்து வயது குறைந்த பெடியன்கள் தங்கள் திருமண அழைப்பிதழை கையில் கொண்டு வந்து நீட்டும் பொழுதோ தனது நண்பர்கள் தங்கள் பிள்ளைகளின் பிறந்த நாளுக்கும், சாமத்திய வீடுகளுக்கும் அழைக்கும் போதோ , தன் வயதொத்தவன் திடீரென்று மாரடைப்பு வந்து மரணிக்கும் போதோ தான் காலத்தின் வேகம் தன்னை பார்த்து நகைப்பது உறைக்கும். அதே போல் தான் இன்றைக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருபத்தி இரண்டு வருசங்களுக்குப் பிறகு வந்து இறங்கின போதும் அவனை அந்த உணர்வு தாக்கியது. மனதுக்குள் எதையோ இழந்த உணர்வு மெல்லிசாக பரவியது... ஊருக்குப் போய் அம்மா, சகோதரங்களை இத்தனை நாளைக்கு பிறகு பார்க்கப் போகிறோமென்ற சந்தோஷம் இருந்தாலும் இலேசான இயலாமையும் இழையோடியதை தவிர்க்க முடியவில்லை.

என்னவோ நேத்து மாதிரி இருக்கு இதே விமான நிலையத்தில் கள்ளப் பாஸ் போர்ட்டும், கீறின விசாவுமாய் அவனும் மாட்டுக்கார மணியனின் தம்பி சந்திரனும் நடுங்கினபடி விமானம் ஏறியது.அதற்குள் இருபத்திரண்டு வருசங்கள் ஓடிவிட்டது. இத்தனை காலத்தில் வாழ்கையில் ஏதாவது திருப்தியாய் செய்திருக்கிறோமா என்று நினைத்துப் பார்த்தால் ஊரில் அக்காவின் கலியாணமும், தங்கச்சியின் சாமத்தியத்தையும் தவிர வேற என்னத்தை உருப்படியா செய்திட்டன் என்ற வெறுப்பு வருகிறது.. எனக்கென்று எதையாவது திருப்தியாய் அனுபவித்திருக்கிறேனா என்று நினைத்துப் பார்த்தால் ப்ச் என்று உதட்டைப் பிதுக்கத் தான் முடிந்தது,

வெளிநாட்டுக்கு வந்து பழகின பிரண்டியும் , பியரும், அப்பப்ப வந்து போகும் சமந்தாவையும் தவிர வாழ்கையில் எதையும் தனக்கென்று புதியவையாகவோ, இனிமையானதோ, அல்லது அர்த்தமுள்ளதாயோ தென்படுகிறதா என்ற தேடலில் சூனியமான தொலைவில் ஒரு கேள்விக்குறி மட்டும் மங்கலாக.............
நான் சாகிறதுக்கிடையில உன்னை ஒருக்காலெண்டாலும் பாத்திடவேணும் ராசா என்று அவ்வப்போது அம்மா போனில் அழும் போது கவலையாத் தான் இருக்கும். அவளின் அழுகைக்காவது ஒருக்கா ஊருக்குப் போய்ட்டு தான் வர வேணும் என்பதைத் தவிர அவனுக்கு அவ்வளாய் நாட்டமில்லை நாட்டுக்குப் போக...
அம்மாவை நினைக்கும் போதும், அவன் விமானம் ஏறேக்கிலை அம்மாவின் வயிற்றிலிருந்த தங்கச்சி இப்ப எப்பிடி இருப்பாள் என்ரு நினைக்கேக்கிலையும் தான் அவனுக்கு ஊருக்குப் போக வேண்டுமென்ற சுரணை எப்போதாவது வரும்...
அவன் வெளிநாட்டுக்கு வந்த 6 வருசத்திலேயே அப்பா மோசம் போனார். அவர் செத்துப் போன செய்தி அவனுக்கு வந்து சேர ஒரு மாசத்துக்குமேலே எடுத்தது. பெத்த அப்பா செத்தது கூட தெரியாமல் அவன் இருந்த தருணத்திலிருந்தே அவனுக்கு ஊரிலிருந்த கொஞ்ச நஞ்ச பற்றும் விட்டுப் போய்விட்டது.

அந்த தொய்வு இழுப்போடு உயிரைக் குடுத்து வயலில் குளிர், வெயிலெண்டு பாராமல் உழைச்சு உழைச்சு ஓடாய்ப் போன அப்பா! பிள்ளையளுக்கு ஒரு குறையும் வரக் கூடாதெண்டு பார்த்துப் பார்த்து வளர்த்த அப்பா! முதல் நாள் பள்ளிக்கூடத்தில கொண்டு போய் விடேக்கிலை புத்தி மதி சொன்ன மாதிரி அவன் வெளிநாட்டுக்குக் கிளம்பின அண்டும் நிறைய அறிவுரை சொல்லி தளு தளுத்தழுத்து அழுத அப்பா! அண்டைக்கு அப்பா அவனிட்டை குடிக்கக் கூடாதுதெண்டும், சிகரட் குடிக்க பழகக்கூடாதெண்டும் வாங்கின ரெண்டு சத்தியத்தையும் காலப்போக்கில் அவன் மறந்ததும் மீறினதும் வேற கதை.. ஆனால் அந்த அன்பான அப்பாவை வாழ்கையில் அவனால் இலேசில் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட அப்பாவின் முகத்தை கடைசியாகப் பார்க்க முடியாமல் போனதில் அவனுக்கு விதியை நொந்து கொள்ள மனம் வரவில்லை. நோய் நொடியில் கிடந்து அழுந்தி செத்துப் போயிருந்தால் போற காலம் வந்து போய்ட்டார் என்று தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அப்பாவின் மரணம் அப்படி சாதரணமாய் இருக்கவில்லை.
எத்தினையோ உழைச்சு காசு காசா ஊருக்கு அனுப்பினாலும் அப்பாவுக்கு உருப்படியா எதுவும் செய்த திருப்தி அவனுக்கு கடைசி வரை கிடைக்கவில்லை. இன்று வரை அது ஒரு பெரிய குறையாகவே மனதினடியில் அடைந்துவிட்டது. அப்பாவின் சாவு கூடத் தெரியாமல் இருந்த காலத்தின் கட்டாயத்தையும் சூழ்நிலையையும் அவனால் இன்று வரை சகித்துக் கொள்ள முடியவில்லை. அப்பா செத்துப் போன அந்த நாள் அவன் இங்க பெடியளோட பார்பகியூ பார்ட்டியில் கும்மாளமடித்துக் கொண்டிருக்க அங்க அப்பா அனாதையா செல்லடியில் சிதறிப் போயிருக்கிறார் என்ற நினைவே அவனுக்கு ஆயுசுக்கும் போதுமாய் இருந்தது நினைத்து நினைத்து மருகவும் கொதிப்படையவும்.
செல்லடி கனத்த நேரத்தில் எல்லாருமே தின்னவேலியை விட்டு இடம் பெயர்ந்து வேற வேற இடங்களுக்கு போய் கொண்டிருந்த நேரம் அது...! பெரியமாமா குடும்பத்துடன் அவனுடைய குடும்பமும் இடம் பெயர்ந்து போன போதும் அப்பா மட்டும் வீட்டையும் தோட்டந் துறவையும் விட்டிட்டு போக மனமில்லாமல் அங்கேயே இருந்ததில் வந்த வினை தான் அப்பாவின் முடிவு. ... அண்டைக்கு தின்னவேலியை சுத்தி ஒரே குண்டு மழையும் செல்லடியுமாய் சிதறிக் கொண்டிருந்ததாம். அம்மாவையும் , மற்றவையையும் பெரிய மாமா குடும்பத்தோடு அனுப்பிவிட்டு "எனக்கென்ன நடக்கப் போகுது...நீங்கள் போங்கோ.. நான் ரெண்டு மூண்டு நாளைக்குப் பிறகு வாறன் எல்லாத்தையும் சரிப் பண்ணிட்டு" எண்டு வழியனுப்பினவராம். அண்டைக்கு இரவு நடந்த வான் தாக்குதலில் அந்த அயலே செல்லடியில் செல்லரித்துப் போனதாம். ரெண்டு நாளா அந்தப் பக்கம் ஓயாமல் குண்டு மழை. அதால என்ன நடந்தது என்ற சேதியே யாருக்கும் தெரியாமல் போக.... நாலைஞ்சு நாளைக்குப் பிறகு பெரியமாமா வேற ஆட்களோட வந்து பார்த்தால் வீடு தரைமட்டமாய் கிடந்ததாம். அப்பா துண்டு துண்டாய் உடல் சிதறி அடையாளம் தெரியாமல் ...அவர் தான் ராசையா எண்டு அடையாளம் காட்டினதே அவரிண்ட விரலில இருந்த அவன் அவருக்கு மணி அக்காவிடம் கொடுத்தனுப்பின அந்த மோதிரம் தானாம். சிதறிக்கிடந்த அப்பாவை குப்பையோட குப்பையா அயலில கிடந்த மற்ற உடல் துண்டங்களோடை சேர்த்து எரிச்சுப் போட்டு போனவராம் பெரியமாமா... அந்த சூழ்நிலையில அதை தவிர வேற வழியில்லை.. இப்படி ஒரு சாவு அப்பாவுக்கு யார் எழுதினது? ஏன் இப்படி ஒரு விதி அவருக்கு வர வேணும்? இந்த எண்ணமே அவன் மனதில் புற்றாய் அரிக்கத் தொடங்கி நாட்டையும், நாட்டின் நடப்பையும் வெறுக்க முக்கிய காரணமாய் ஆகிவிட்டது.

“கண்டறியாத விடுதலை வாங்கினமாம் விடுதலை..." அவன் தன்னுடைய கோணத்திலிருந்த பார்வைப் புள்ளியை சற்றும் நகர்த்த தயாராக இருக்கவில்லை....

அப்பா இல்லாத நாட்டுக்கு போக வேண்டுமா என்ற நினைவே அவனுக்குள் வேரோடிப் போய் கிடந்தது. மூளியாய் போன அம்மா முகத்தை என்னெண்டு பாக்கிறது? என்ற நினைப்பு புரையேறிப் போய் அவனை எரித்தது. அதிலேயே அவன் ஊர் பயணத்தை இதுவரை போர் நிறுத்தங்கள் நாட்டுக்கு பல வந்தாலும் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். இந்தப் பயணம் கூட கிளம்பியிருக்க மாட்டான்.... ஆனால் அம்மா போன மாதம் திடீரெண்டு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த யோசனையாலும், அம்மா அவனை தான் சாகிறதுக்கிடையில பார்க்க வேணுமெண்டு அழுததாலயும் , இப்ப கடைசியாய் நடந்த சண்டை நிறுத்தத்தில பெரிசா ஒரு அத்துமீறலும் இல்லாதது போல் இருந்ததாலும் , அதனால் நிறைய ஈழத்து சனங்கள் ஊருக்குப் போய்ட்டு வந்து கொண்டிருந்ததாலயும் ஒரு மாதிரி மனசு வந்து கிளம்பினான்.

" இந்த நேரத்தில ஊருக்குப் போய் வந்தால் சரி..இல்லாட்டில் உவன்கள் எப்பெப்ப என்னத்தை துடக்குவாங்கள் எண்டு சொல்லேலாது... அதுக்கு பிறகு அம்மாவுக்கொண்டு நடந்தாலும் அப்பா மாதிரி சாவு செய்தி கூட தெரியாமல் இருந்திடும்..அதை விட ஒருக்கா போய் அம்மாவை பார்த்திட்டு வாறது அம்மாவுக்கும் நிம்மதி எனக்கும் ஆறுதலாயிருக்கும் " என்று வெளிக்கிட்ட பயணம் தான் இது. ஆனாலும் அவ்வப்போது சில பல அசம்பாவிதங்களையும் கேள்விப்படுவதால் நிறையப் பயத்தோடையும், கொஞ்சம் ஆர்வத்தோடையும் தான் வந்து இறங்கினான்.

வழியெல்லாம் ஒவ்வொரு இராணுவ முகாம்களிலும் பாதுகாப்பரண்களும் பச்சைத் தொப்பிகளுமாய் கையில் கனரக ஆயுதங்களுடன், விரோதமாய் முறைத்த இராணுவத்தினர்களைப் பார்க்க மனதுக்குள் பீதியும், கிலியுமாக இருந்தது அவனுக்கு. ஏன் தான் வந்தோமோ என்று சினமாக ஒரு புறமும் , திரும்பி உருப்படியா அமெரிக்கா போய் சேருவோமா என்ற பயம் மறுபுறமும் ஆட்டிப்படைத்தது.

"கொழும்புக்கு வாங்கோ அல்லது இந்தியாவுக்கு வாங்கோ எல்லாரையும் வந்து பார்க்கலாம்" என்று சொன்னால் கேட்டார்களா என்று குடும்பத்தினர் மேல் ஆத்திரம் வந்தது.

என்னவோ மூன்று மாசத்துக்கு முன்னமே அனுமதி வாங்க வேணுமாமே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே போவதென்றால்...அதுவும் குடும்பத்தில் எல்லாருக்கும் குடுக்கமாட்டாங்களாம்.. என்ன சீரழிவோ என்று அலுத்துக் கொண்டான். யாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று அவன் கேட்கவில்லை. ஒன்று பெடியளிட்டயாய் இருக்கும் இல்லாட்டில் இராணுவத்திடமாயிருக்கும். இரண்டும் சேர்ந்து தானே ஊரை இந்தப் பாடு படுத்துதுகள்..மனதுக்குள் வெறுப்பாக இருந்தது.

ஊர் எப்படியிருக்கும்? வீடு எப்படியிருக்கும்? தம்பி தங்கச்சி நல்லா வளர்ந்திருப்பார்கள்.. அக்காவும் அத்தான் பிள்ளைகள் என்று குடும்பமாயிட்டா. அம்மாவுக்கு வயதும் போச்சு..இந்த 22 வருஷத்தில எல்லாமும் மாறிப்போயிருக்கும்...பஸ்ஸில் ஊர் வந்து சேரும்வரை ஒரே படபடப்பு....உயிரோடு வீடு போய் சேருவோமா என்ர சந்தேகத்துடன் தான் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் இறங்கும் போதும் தனக்குள் கேட்டுக் கொண்டான். நடுவழியில் பஸ்ஸை நிப்பாட்டி காடையர் கூட்டம் வந்து வெட்டிப் போட்டாங்களென்றால் என்ன கதி? வீட்டாருக்கு தெரியவருமா..நான் இந்த பஸ்ஸில தான் வந்தனானெண்டு? என்று பலவிதமான கிலியுடன் தான் பிரயாணப்பட்டான். கடைசி சோதனைச் சாவடி ஆனையிறாவோ அல்லது அதுக்கு அங்காலயும் ஏதாகிலும் இருக்குமோ என்று யோசித்தான். என்ன கிலுசுகெட்ட வாழ்கை இந்த நாட்டில? சீ... எப்பிடியாவது என்ர குடும்பத்தை அங்க எடுப்பிச்சிட வேணும்..இங்க கிடந்து நக்கரையாமல் அங்க வந்து நிம்மதியா இருக்கட்டும்..இந்த முறை திரும்பி அமெரிக்கா போனதும் தம்பியையும் தங்கச்சியையும் எப்பிடியாவது கனடாவுக்குள் எடுத்து விட வேணும்.. என்று நினைத்துக் கொண்டான்.

யாழ்ப்பாணத்தின் மிகச் சாதாரண குடும்பம் அவனுடையது. ஆசைகள் நிறையவும் அவற்றை நிறைவேற்ற வழியில்லாத பொருளாதரமும் கொண்ட வழக்கமான ஏழ்மையின் அடையாளங்கள் கொண்ட குடும்பம். வயது, வாழ்கைத் தரம் பற்றிய சிந்திக்கத் தெரியாத அப்பாவும் அம்மாவும் குழந்தை பெறுவதை கடவுள் தந்த கொடையாக நினைக்கப்பழகிக் கொண்டதில் அவன் 19 வயதில் விமானம் ஏறும் போது அம்மா நிறைமாதக் கர்பிணி. இன்றைக்கு அவன் வீடு நோக்கிய பயணத்தில் அம்மாவின் வயிற்றுக்குள் இருந்த தங்கச்சி இருபத்திரெண்டு வயது இளம் பெண்ணாய் வளர்ந்துவிட்டாள். அவளையும், அக்காவின் பிள்ளைகளையும், அத்தானையும் புதிதாகப் பார்க்கப் போகிறான் என்பது ஒருவிதத்தில் சந்தோஷம் கலந்த சங்கடம்.

ஊருக்குக் கிளம்பும் முன் கனடாவிலிருக்கும் பெரிய மாமி சொன்ன மாப்பிள்ளை வீட்டோடு கதைத்துவிட்டு தான் வந்தான். தங்கச்சியின் படம் அவர்களுக்கு திருப்தியாம். சீதனம் , கலியாணச் செலவு எண்டு ஒரு பட்டியல் அவனிடம் சொன்னார்கள். கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. ரெஸ்ரோரண்டில் வேலை பார்க்கிற மாப்பிள்ளைக்கு இவ்வளவு சீதனமா எண்டும் யோசித்தான். ஆனால் இங்க வந்து இறாங்கின பிறகு ரெஸ்ரோரண்டோ என்ன இழவோ பரவாயில்லை..முதலில் அவளுக்கு கல்யாணம் செய்து அதன் மூலமா அவளை கனடாவுக்குள் கூப்பிட்டு விட வேண்டியது தான் என்று தீர்மானித்தான். இப்பிடி தினம் தினம் செத்து செத்து பிழைக்கிற வாழ்கை வாழுறதை விட அங்கனேக்கில வந்து கிடந்தால் வெல்பேயர் காசு கிடைக்கும்; இலவசமா படிக்கலாம்; மருத்துவ செலவு இலவசம்...எண்டு வசதியா அவள் இருக்கலாமே.... அப்படியே ஏஜன்ஸிக்கார மகேந்திரனிடமும் தம்பிக்காக கதைக்க வேணும். கொஞ்சம் கூட காசு தான் அவனிடம்..ஆனால் கனடாவுக்குள் ஆட்களை கூட்டி வருவதில் அவன் ஒருவன் தான் இப்போதைக்கு நம்பகமான ஏஜன்ஸிக்காரன். வேற வழியில்லை; முடிஞ்சால் அக்கா, அத்தான், பிள்ளைகளை இந்தியாவுக்குள் எடுத்துவிட்டுவிட வேணும். அவையோடை அம்மாவும் இருக்கலாம்.. மனதுக்குள் ஏகப்பட்ட திட்டம்.....எதிர்காலம் பயமுறுத்தியது ..நாட்டில் காலடி எடுத்து வைத்த நிமிடத்திலிருந்து உடம்பெல்லாம் குளிர்ந்து போய் ரத்தம் சில்லிட்ட மாதிரி ஒரு உணர்வு. அது பயமா அல்லது இருபத்தி இரண்டு வருடம் கழிச்சு ஊருக்கு வரும் அதிகப்படியான மன உணர்ச்சியின் வேகமா பதட்டமா என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.. ஆனால் ஒரு வெட வெடப்பு எல்லாவற்றையும் மீறி உடம்பைக் உலுக்கிக்கொண்டிருந்தது.

அவனுக்கு தின்ன வேலிக்கு போக வேணுமெண்ட ஆசை தான் மனதில் இருந்தாலும் முழுக் குடும்பமும் அப்பா செத்ததில் இருந்தே இங்கே மட்டுவிலில் புலம் பெயர்ந்து இருக்கிறதால நேரே இங்கேயே வந்து நுணாவில் சந்தியில் இறங்கிவிட்டான். இங்க புலம் பெயர்ந்த பிறகு அக்காவுக்கும் இந்த ஊரில் தான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைச்சது. மணியகாரர் வளவு வேலுப்பிள்ளை வாத்தியாரின்ண்டை பேரனை தான் அக்காவுக்கு கலியாணம் செய்தது. இப்ப எல்லாரும் அங்க தான் இருக்கினம். அத்தான் இங்க ஒரு பள்ளியில் ஆசிரியராம். இப்ப தங்கச்சியும் அந்தப் பள்ளியில தான் படிப்பிக்கிறாளாம்.

எல்லோரையும் பார்க்கப் போகிறோம் என்பது மனதுக்குள் என்னவோ சந்தோஷமாயும் பரபரப்பாயும் தான் இருந்தது. ஆனாலும் ஊர் மண்ணில் காலடி வைத்ததும் அந்நியமாய் உணர்ந்தான். மனம் பக் பக் என்று அடித்துக் கொண்டது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவுமே பசுமையாகத் தெரியவில்லை. மொட்டைப் பனைகளும், குழி விழுந்த தெரு வீதிகளும், இடிபாடுகளும், புதர் மண்டிய வளவுகளும், நெஞ்சைப் பிசைந்தன. முன்பெல்லாம் சுடலைகள் கூட இதை விட அழகாய் இருந்தது போல் ஒரு நினைவு. மயானங்களில் கூட அரளி பூ மரங்களும், கொன்றைப் பூக்களும் கொஞ்சம் தள்ளி சுடலை வைரவர் கோவிலுமாய் எவ்வளவு நல்லா இருக்கும்? ஊரைவிட்டுப் போன போது தேக்கிவைத்திருந்த அன்றைய ஊரின் வடிவை மறக்கமுடியாதவனாய் வந்தவனுக்கு ஏதோ உழி கொண்டு போன மாதிரி கருகிப் போயிருந்த இந்த ஊரின் நிலையை வைத்து தன் சொந்த ஊரும் இப்படித் தான் இப்ப இருக்குமோ என்று ஒப்பீடு செய்து பார்த்தான். ஞாபகத்தில் இப்பவுமிருந்த பனை வடலியையும், வைரவர் கோவிலையும், அவனுடைய பள்ளிக்கூடத்தையும் ஏக்கத்தோடு நினைத்துப் பார்த்தான்...

"பிரண்டு போவாங்கள் எல்லாத்தையும் மண்ணோட மண்ணாக்கிப் போட்டிருப்பாங்கள்" என்று நினைத்துக் கொண்டான்.

"சீ என்ன சாபக்கேடடா இந்த மண்ணுக்கு?" என்று கவலையாக இருந்தது அவனுக்கு, இப்ப கூட அப்பா தான் நினைவுக்கு வந்தார். எந்த பருவ காலத்திலும் தோட்டத்தையும் சரி வீட்டு வளவையும் சரி பச்சைப் பசேலென்று வைத்திருப்பதில் அப்படி ஒரு வெறி பிடித்த அக்கறை அப்பாவுக்கு.

வீட்டு முற்றத்தில் எத்தினை வகையான ரோசாப் பூ செடியளை நட்டு வைச்சிருந்தார்? எப்படியும் ஒரு பத்துப் பன்னிரண்டு செடியாவது நிண்டிருக்கும். அக்கம் பக்கத்து வீட்டுப் பொம்பிளையள் கலியாணவீடுகளுக்கும், திருவிழாக்களுக்கும் அலங்கரிச்சுக் கொண்டு போறதெண்டால் ஒரு ரோசாப் பூ தாரியளே கொண்டைக்கு வைக்க என்று கேட்டு வருவது இண்டைக்கும் பசுமையா நினைவில இருக்கு அவனுக்கு.

முற்றத்தை வளைச்சுப் போட்ட மாதிரி பென்னம் பெரிய மல்லிகைப் பந்தல்... என்ன விலாட் மாமரம் என்ன? வீட்டு பின் வளவில நிண்ட செம்பாட்டான் மாமாரமும் , செவ்விள நீர் தென்னை மரமும். பச்சை மிளகாய், தக்காளி, எண்டு மரக்கறி செடிகளுமாய் எப்பிடி ஒரு வடிவான வீடும் வளவுமாய் ..தின்ன வேலியில் அநேகமானவர்களின் வீட்டு வளவுகள் இப்படித் தான். தின்னவேலி மண்ணுக்கு அப்படி ஒரு செழுமை. தின்ன வேலி குடி தண்ணீர் என்றால் அந்தக் காலத்தில் வாயூறும் சனங்களுக்கு...யாழ்ப்பாணத்தின் பசுமையான, செழுமையான பிரதேசங்களில் தின்னவேலி தானே பேர் போன இடம்..? வீடெல்லாம் பூவும் காயுமாய் குலுங்கின காலமெல்லாம் இனிமேல் அங்கு வாழ்ந்த மனிதர்களின் ஞாபகங்களில் மட்டும் வாழ்ந்து அவர்களுடனேயே மறையப் போகும் வரலாறு தான்...

அப்பாவோட போய்ட்டுது தின்னவேலி வாழ்கை. ஆனாலும் அம்மாவுக்கு இப்பவும் ஆசை தின்னவேலி வளவிலை ஒரு கொட்டிலை போட்டுக் கொண்டாவது இருக்க வேணும். கடைசி மூச்சை அப்பா செத்த அந்த வளவுக்குள்ளேயே விட வேணுமாம்... ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஆசை. அம்மாவுக்கு இப்படி ஒரு ஆசை. அவனுக்கோ எப்படியாவது தன் குடும்பத்தினரை இந்த மண்ணை விட்டு கொண்டோடி போயிட வேணும் எண்ட ஆசை. அம்மாவும் ஒருத்தரிண்ட சொல்லையும் கேட்காமல் கொஞ்ச நாள் தின்னவேலி வளவில கொட்டிலை போட்டுக் கொண்டு தான் இருந்தவ. ஆனால் பழையபடி அறுவான்கள் குண்டு போட்டு எல்லாம் தரைமட்டமாக்கிப் போட்டான்கள். அம்மா உயிர் தப்பினது அருந்தப்பு. அண்டையிலேருந்து இப்ப வரை அம்மாவும் இங்க மட்டுவிலில் தான் அக்கா குடும்பத்தோட இருக்கிறா.

என்ன அரசியல் சகுனித் தனமோ , போராட்ட இளைப்பாறலோ நாட்டில் போர் நிறுத்தமெண்டு நோர்வேக்காரன் பேச்சுவார்த்தையில் இறங்கி கொஞ்சநாளா சண்டையெல்லாம் குறைஞ்சு ஓய்ஞ்சு போயிருக்கு ரெண்டு மூண்டு வருஷமாய்.. ஏனோ இப்ப தான் அவனுக்கும் மனம் வந்துது ஒருக்கா ஊருக்குப் போய்ட்டு வருவமெண்டு. ஒருவகையில் மனசளவில் மட்டுமில்லை, இத்தனை வருஷமாய் இங்க குளிருக்குள்ளயும், பனிக்குள்ளயும் , நகம் வெடிக்க வெடிக்க உழைச்சு உழைச்சு ஊரில வாங்கின கடனையும், அக்காவிண்ட கலியானம், தங்கச்சின்ர சாமத்தியம், தங்கச்சி , தம்பின்ர படிப்பு எண்டும், மாசா மாசாம் வீட்டுச் செலவுக்கும் வைத்தியச் செலவுக்குமாய் அம்மாவுக்கும் , இடைக்கிடை அக்கா குடும்பத்துக்கும் அனுப்புவதுமாய் போய்க் கொண்டிருந்ததே தவிர சேமிப்பு எண்டு எதுவும் பெரிசா கையிருப்பில் இருக்கவில்லை

ஊருக்குப் போறதெண்டால் வழிச்செலவு, சாமான் சக்கட்டு எண்டு எப்பிடியும் அஞ்சு அல்லது ஆறாயிரம் டொலர் செலவாகும். அந்தக் காசை எல்லாம் சேர்த்து அம்மாவுக்கு அனுப்பினால் ஒரு வருஷத்துக்கு அம்மா கஷ்டமில்லாமல் இருக்கலாமே என்று கணக்குப் பார்ப்பான்.

வெளிநாட்டு வாழ்கை எண்டால் மட்டும் என்ன சும்மாவா?தர்மசத்திரத்தில படுத்துக் கிடந்து ஆரும் போடுற அன்னதானத்திலா வயிறு வளர்க்கிறான்? கனடாவில் என்றால் அகதிக் காசு வரும். களவாய் வேலை செய்யலாம்; அகதி என்ற தகுதிக்கு நிறைய உதவிகளும், இலவச சேவைகளும் அங்க கிடைக்கும். ஆனால் இங்க அமெரிக்காவில் அகதி எண்டாலும் வேலை செய்தாக வேணும். உழைச்சால் தான் காசு. காசு இருந்தால் தான் வாழ்கை.

ஏதேதோ நினைத்துக் கொண்டு நுணாவில் வாசிகசாலையடியில் வந்து நின்றான். இங்க இருந்து கொஞ்ச தூரம் உள்ள நடந்து போனால் மணியகாரர் வளவு வருமெண்டு மணி அக்கா சொன்னவ. ஏதோ ஒரு நினைப்பில் கிளம்பிட்டான். வாற தேதியும், நேரமும் வீட்டுக்கு அறிவிக்க முடியேலை. வந்திறங்கின அண்டே பஸ் ஏறிட்டான் ஊருக்கு வர. அதனால் வீட்டாருடன் எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை. கொஞ்ச நாளாவே தங்கச்சிண்ட ஹாண்ட் போனும் வேலை செய்யேலை... அதனால் புது ஊரில் அவனுக்கு வழி தேடுவது சிரமமாகவும் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது,

என்னெண்டு மணியகாரர் வளவைக் கண்டு பிடிக்கிறதெண்டு குழப்பத்தோடு நின்றவன் போற வாற யாரிடமாவது தான் வழி கேட்க வேண்டுமென்று தீர்மானித்தான். வழியில் போன யாருக்கும் அவனை கவனிக்க வேண்டுமென்ற சுரணை தென்படவில்லை. முன்பெண்டால் வெளிநாட்டிலிருந்து ஆராவது வந்தால் வேலிக்கு மேலால் முகங்கள் முளைக்கும். சின்னப் பெடியங்கள் பின்னால ஓடி வருவான்கள்.. ஒருகாலத்தில் அவனும் லண்டனிலிருந்து குமணன் அண்ணை வந்த போது அதிசயமாய் அவனுக்குப் பின்னால் ஓடியிருக்கிறான். குமணன் அண்ணையின் உருவ மாற்றமும், பெல்பாட்டம் லோங்ஸும்..வெட்லுக் சேட்டும் அப்ப அவனுக்கு அத்தனை ஆசையாய் இருக்கும்...தானும் வெளி நாடு போக வேணுமெண்டு அப்பவே அவனுக்குள் கனவை வளர்க்க காரணமாய் இருந்தவர் குமணன் அண்ணை தான். அவரும் இப்ப எங்க எண்டு தெரியாது. தன்ர தாய் தகப்பன் எண்டு குடும்பம் முழுதையும் லண்டனுக்கு எடுப்பிச்சிட்டார் எண்டு கேள்விப்பட்டது தான்.

உணர்சிகளற்ற வெளிறிய முகங்களுடன் அங்கங்கு சனங்கள் மிரட்சியோடு இரண்டு பக்கமும் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள். எந்தக் கணத்திலும் சாவு வரலாம் என்ற திகில் சேர்ந்த எதிர்பார்ப்புடன் நடமாடும் அவர்களுக்கு இவனை விடுப்பு பார்க்க நேரமில்லை என்பது உறைக்க அவனுக்குள்ளும் லேசான பயம் ஊடுருவத் தொடங்கியது.

"என்னடாது... போர் நிறுத்தமெண்டாங்கள்.அமைதிப் பேச்சு நடத்தினமெண்டு பசப்பினாங்கள்.இங்க ஒவ்வொருத்தரிண்டை முஞ்சையிலயும் பிரேதக் களையெல்லோ தெரியுது? ஊரே பெரிய சுடலைமாதிரி கிடக்கு..."

"இத்தனை நாள் அங்க கிடந்தது போல் பேசாமல் அங்க அமெரிக்காவிலயே கிடந்திருக்கலாமோ. செலவழிச்ச காசும் மிச்சமாயிருந்திருக்கும். உயிருக்கும் பயமில்லாமல் இருந்திருக்கலாம். இங்க வந்து ஏதும் ஒண்டு நடந்திதெண்டால் யார் பாக்கிறது எதிர்காலத்தையும் குடும்பத்தையும்?" என்று யோசித்தான்.
உயிருக்கான பயத்துக்கு முன் உறவுகளுடனான சந்திப்பு இரண்டாம் பட்சமே,

வழியில் போன மனிதர் ஒருவரை வில்லங்கமாய் வழிமறித்து " அவன் போக வேண்டிய மணியகாரர் வளவுக்கு வழி கேட்க அவர் அவனை அதிசயம் கலந்த அதிர்ச்சியுடன் பார்ப்பது போல் அவனுக்குபட்டது. ஆனாலும் அவர் எதுவும் விபரம் விசாரிக்காமல் அவனுக்கு வழி சொல்லிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினார். அவருடைய பார்வையின் தாக்கம் அவனுக்குள் என்னமோ செய்தது.

அவர் காட்டின பாதையில் போனாலும் மேலும் ரெண்டு மூன்று பேரிடமும் வழி கேட்டு கொண்டு போனான், அவர்களும் அவனை ஒரு மாதிரியாகப் பார்பது போலவே தோன்றியது அவனுக்கு, அதனாலோ அல்லது கன காலத்துக்குப் பிறகு குடும்பத்தினரைப் பார்க்கப் போகிறோமென்ற மகிழ்சியினாலோ அல்லது அப்பா போன பிறகு அம்மாவை முதன் முதலாக பார்க்கப் போகும் அந்த கொடுமையான தருணத்தைக் கற்பனை செய்ததாலோ எதென்று அறுதியிட்டு இனம் காண முடியாமல் இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது. உடம்பில் ஓடும் மொத்த இரத்தமும் சில்லிட்டுப் போன மாதிரி இருந்தது.

வழிசொன்னவர்கள் சொன்ன அடையாளப்படி பெரிய பாசிபடிஞ்ச பழைய கால மதில் சுவரும், அந்த மதில் சுவரில் உடைஞ்சு போய் இருந்த பெரிய தொந்தி மட்டும் உடைய முன்னம் தான் ஒரு பிள்ளையார் சிலை எண்டதையும் . உது தான் மணியகாரர் வளவெண்டும் அவனுக்கு உணர்த்தியது. மதிலோடு தொங்கிக் கிடந்த படலையைத் தாண்டி சென்ற பார்வையில் பாதை நீளமாயும், தொங்கலில் பெரிய அந்தக் கால நாற்சார வீடும் தெரிந்தது.

பென்னம் பெரிய அந்த வளவின் விஸ்தாரத்தையும், வீட்டின் பிரமாண்டத்தையும் கவனம் செலுத்த முடியாமல் வீட்டுக்கு முன்னால் நின்ற சனக்கூட்டமும், வீட்டிலிருந்து வந்த ஒப்பாரியும் அவனைக் கலவரத்துக்குள்ளாக்கியது. வீட்டுக்குள்ளிருந்து வந்த அழுகையின் தீனமும், வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சனங்களும் அவனுடைய வீட்டில் யாரோ ஒருவரின் மரணத்தின் அடையாளத்தை தெள்ளத் தெளிவாக அவனுக்கு உணர்த்த ஏனோ ஒரு கணம் அம்மா தான் மனதுக்குள் வந்தா. சாகிறதுக்கு முன்னம் ஒருக்கா உன்னைப் பாக்க வேணும் ராசா எண்டு அம்மா கடைசியா போனில் கேட்டது தான் இப்ப நினைவுக்கு வந்தது. அடுத்த கணம் சரியான வீட்டுக்கு தான் வந்திருக்கிறோமோ என்ற எண்ணமும் வர "கடவுளே இந்த வீடா இருக்கக் கூடாது" என்று சின்னப் பிள்ளை தனமாய் மனம் வேண்டியது. வந்த அன்றே ஒரு செத்தவீட்டு நிகழ்சியை அவன் எதிர்கொள்ள மனதளவில் தயாராக இருக்கவில்லை. உள்ளிருந்து வரும் அழுகுரலின் தீனம் மண்டைக்குள் என்னவோ செய்ததாலும், அந்த அழுகை யாருக்காக என்று நேரில் பார்க்கும் திராணியில்லாததாலும் மேலே போக கால்கள் ஏவாமல் வழியிலேயே உறைந்து போய் நின்றான்.

அவனையும் அவனுடைய தயக்கத்தையும் கவனித்த ஒருவர் அவனுக்கு கிட்ட வந்தார்.
" ஆர் வேணும் தம்பி? நீர் ஆர்?"

"மணியகாரர் வளவெண்டு...."

'இதான் தம்பி ..நீர்...?" என்று கேள்வியை இழுத்தபடி அவனை ஏற இறங்கப் பார்த்தார் அவர்...

"நான் ...நான்...வேலுப்பிள்ளை வாத்தியாரிண்ட பேரன் கலியாணம் செய்த வசந்தியெண்டு... அவவுக்கு தம்பி..அமெரிக்காவில இருந்து வாரன்..."

"ஓஓ?வசந்திண்ட தம்பியே...அட ஞான வைரவரே.. என்னைய்யா உம்மட கூத்து...? " என்று வானத்தை நோக்கி கை கூப்பி கும்பிட்டுவிட்டு "ம்ம் என்னத்தைச் சொல்லுறது...வாரும்...உம்மடை அக்காவிண்ட வீடு தான் உது... உள்ள போம்... "என்று இவனிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் நின்ற ஒரு இளைஞனைக் கூப்பிட்டு "தம்பியை உள்ள கூட்டிக் கொண்டு போ... இவர் வசந்திண்ட தம்பியாம். அமெரிக்காவில இருந்து வந்திருக்கிறார்." என்று சொல்ல அவன் இவனுடைய கைகளில் இருந்த 2 சூட்கேஸுகளையும் வாங்கிக் கொண்டான்.. "வாங்கோ" என்று ஒரு வார்த்தையுடன் உள்ள நடக்கத் தொடங்கினான் அந்த இளைஞன்.

அவனுக்கோ கால்களுக்கு அடியில் நிலம் சரிஞ்சு போறமாதிரி இருந்தது. யாராவது தன்னை தாங்கிப் பிடிச்சால் நல்லதெண்டு யோசிச்சான். உள்ளே ஓடிப் போக வேணும் போல கால்களை மனம் ஏவினாலும் கால்கள் நகர மறுத்தன. இதயம் பக் பக் என்று தாறுமாறாக அடிக்கத் தொடங்கியது. இவ்வளவு மனத் தைரியமின்மை தன்னிடம் இருக்கெண்டு இப்ப தான் அவனுக்கு கூட விளங்கினது. அவனால் நடக்க முடியவில்லை என்று உணர்ந்த அந்த மனிதர் மெல்ல அவனுடைய கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டார். கொஞ்சம் பலமாக அவனை இழுக்குமாப் போல் கூட்டிக் கொண்டு போனார். கூடத்தில் வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்ட உடலை அருகில் போய் பார்த்த போது தான் தெரிந்தது அது அம்மா இல்லையெண்டு. மனதுக்குள் நிம்மதியாக ஒரு கணம் உணர்ந்தாலும் ... ஆனால் செத்தவீடு அவனுக்குரிய ஒருவருடையது என்று மட்டும் உணர்த்தியது.

அப்ப ..அப்ப...உது யார்? என்ன இப்பிடி இருக்கு... தலைப்பக்கம் ஏதோ வெள்ளையாய் வழிவது போல்...என்ன அது ? அவனால் ஒரு கணம் கூட அங்கே கிடத்தப்பட்ட மனிதனை பார்க்க முடியாமல் இருந்தது. பிரேதமாகக் கிடந்தவனின் தலையில் கட்டுப் போட்டிருந்தாலும் வெள்ளையாய் எதோ ஒன்று வெளியில் வருவது தெரிந்தது. இரத்தம் ஊறி கட்டப்பட்டிருந்த துணியில் கறையாய் தெரிந்தது. "ஐயோ என்ன கருமம் இது?" என்றிருந்தது அவனுக்கு. அந்த இடத்தைவிட்டு ஓடிப் போக வேணும் போல இருந்தது, சோர்ந்து போய் பிணத்துக்குக் கிட்டவாய் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு கிடந்தாள் ஒரு வயதான பெண்மணி. அம்மா தானோ என்று யோசித்தான்...

"தங்கச்சி...இஞ்சை பாரும்...யார் வந்திருக்கிறார் எண்டு...." அந்த மனிதரின் குரலில் பிரேதத்தை கிடத்தியிருந்த வாங்கில் தலை கவிழ்ந்திருந்த பெண் தலையை நிமிர்த்திப் பார்க்க அவன் அதிர்ந்து போனான்..அது அவனுடைய அக்கா வசந்தி. அழுதழுது முகம் கண்ணெல்லாம் வீங்கிப் போயிருந்த அக்காவும் மற்றவர்களும் அவனை அடையாளம் கண்டு சில நொடிகளிலேயே ஐயோ என்று அலறிக் கொண்டு வந்து அவனைக் கட்டி இழுத்து ஒப்பாரி வைச்சு அழத் தொடங்கினார்கள். சுருண்டு கிடந்த அந்த பெண்மணி அவன் நினைத்தது போல் அம்மா தான்.. அவனைப் பார்த்ததும் நெஞ்சிலும் தலையிலும் மாறி மாறி மாரடித்து அழத் தொடங்கினாள். அவன் சிலையாக செத்துக்கிடந்த அந்த மனிதனையே பார்த்துக் கொண்டு நின்றான். உள் உணர்வுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது செத்துக் கிடக்கிறது அத்தான் தான் எண்டு. அவன் உழைச்சு குடும்பத்துக்கு செய்த முதல் சந்தோஷமான காரியத்தின் கதாநாயகனை பிணமாகத் தான் அவன் முதன் முதலா பார்க்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இருபதினாயிரம் டொலர் சிலவழிச்சு அக்காவுக்கு அவனால் கொடுக்கப்பட்ட வாழ்கை இன்று பிரேதமாக அவனுக்கு முன்னால் கிடந்ததை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அக்காவின் எதிர்காலம், அக்காவிண்ட மூண்டு பிள்ளையளிண்டை வாழ்கை இனி எப்பிடி இருக்குமெண்டு நினைச்சுப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது மாதிரி இருந்தது. அம்மா, அக்கா இருவரும் சிலையாக நின்ற அவனுடைய காலைப் பிடித்துக் கொண்டு களைக்க களைக்க அழுது கொண்டிருக்க அவர்களை தேற்ற வேண்டுமென்ற சுரணையே இல்லாமல் இடிந்து போய் நின்றான் அவன். ஓரத்தில் அக்காவின் பிள்ளைகள் மூன்றும் அப்பா அப்பா என்று அரற்றியபடி சுருண்டு கிடந்ததை அவனால் சகிக்க முடியவில்லை. இதைப் பாக்கிறதுக்காகவா இவ்வளவு நாள் கழிச்சு இத்தனை தூரம் வந்தேன் என்று தன் மீதே கோபம் வந்தது. ஏன் இந்த சாவு? என்ன நடந்தது? எப்பிடி வந்தது இந்த சாவு..? சாகிற வயசா அவருக்கு?அவனுக்குள் ஆயிரம் கேள்விகளாக நிறையத் தொடங்க இருட்டான புலத்தில் தெரியாத விடைகளை தேட முயன்று கொண்டிருந்தான்.

"அக்காவிண்ட கலியாணத்துக்கு வாராம அத்தானிண்டை சாவுக்கா வந்தனீ? அக்கா கூறைச்சீலை கட்டின சீரைப் பார்க்காமல் வெள்ளைச் சீலை கட்டுறதை பாக்க வந்தனீயே ராசா?"

"இனி என்னையும் என்ர பிள்ளையளையும் யார் பார்க்கப் போகினம்? என்னையும் பிள்ளையளையும் அனாதையளா விட்டிட்டு போட்டாரே...பாரடா தம்பி?"

"என்ர ராசாவை கொண்டிட்டாங்களே அறுவாங்கள்.. பாடைல போறவங்கள்..."

"உனக்கொரு கலியாணம் பேசி கட்டி வைக்க வேணுமெண்டு சொல்லிட்டு அவர் ஊர்கோலம் போறாரே.."

வரிசையாக அம்மாவும் அக்காவும் ஒப்பாரி சொல்லி சொல்லி அழ அவன் அந்த மரணத்திற்கான காரணத்தை சரியாக கணிக்க முயன்றுகொண்டிருந்தான்..
வந்த பயணக்களைப்பையும் மீறி அதிர்சி அவனை அடித்துப் போட்டது போல் பிரமை பிடிச்சுப் போயிருந்தான் அவன்.

மனசாலும் உடம்பாலும் மிகுதியான களைப்பில் அம்மாவுக்கும் அக்காவுக்கும் பக்கத்திலேயே குந்தினான். அவன் தோளில் சாய்ந்து விம்மிக் கொண்டிருந்த அக்காவை மெல்ல ஆதரவா அணைத்துக் கொள்ளத் தான் முடிந்ததே தவிர... வார்த்தை எதுவும் வரவில்லை அவனுக்கு.

கொஞ்ச நேரத்தில் கூட்டமாய் பள்ளிச் சீருடையுடன் பிள்ளைகள் வந்து அத்தானுக்கு இறுதி மரியாதை செய்தார்கள்.

"மாஸ்டரைப் பார்க்க வந்திருக்கிறியளே? பாருங்கோ... உங்கட மாஸ்டரை எப்படி கொண்டு போட்டிருக்கிறாங்கள் எண்டு பாருங்கோ.. ஐயோ..என்ர கண்ணுக்கு முன்னாலேயே என்ர ராசாவை சுட்டுப் போட்டாங்களே...என்னால ஒண்டும் செய்யேலாமல் போச்சே.. என்னையும் சாக்காட்டியிருக்கலாமே..அறுவாங்கள்.. பிரண்டு போவாங்கள்" அக்காவின் வார்த்தைகள் அவனுக்கு புரியவைத்தது... அத்தானை சுட்டு சாக்காட்டியிருக்கிறாங்கள் எண்டு. யார் சுட்டது? ஆர்மியா? போர் நிறுத்தமெண்டு சொன்னாங்களே பாவியள்...சமாதான பேச்சு வார்த்தைக் காலத்திலும் சனங்களை சுட்டுக் கொல்லுறாங்களெண்டால் போர் நிறுத்தமெண்டதுக்கு என்ன அர்த்தம்? அவனுக்கு புரியவில்லை.

எல்லாரையும் பார்க்க முடிஞ்சுது. தங்கச்சியை காணேலேயே என்று யோசித்தான். தம்பியும் கண்ணில் படவில்லை. ரெண்டுபேரும் எங்க என்று மனம் தேடினாலும் யாரிடம் கேட்கிறது இந்த நேரத்தில் என்று பேசாமல் இருந்தான். அவனுக்கு யாரும் எதுவும் விபரமாக நடந்த சம்பவத்தை சொல்லும் நிலையிலும் இருக்கவில்லை. அத்தானின் சாவு அவனுக்குள் பயத்தை உக்கிரமாகக் கொட்டிவிட்டிருந்தது. இந்த வாழ்கைக்கும் அவனுக்கும் சரிப்பட்டு வராது. எப்பவும் சாவு வருமெண்ட விதியின் கைகளைப் பற்றிய சித்தாந்தத்தையெல்லாம் அவனால் சிந்த்தித்துப் பார்க்க முடியவில்லை. இப்படி சாக வேண்டுமெண்டு யார் எழுதினது? ஏன் இப்பிடி சாக வேணும்? அண்டைக்கெண்டால் அப்பா..இண்டைக்கு அத்தான்.. எண்டு அவனுடைய குடும்பத்திலேயே ரெண்டு காவு வாங்கின நாட்டின் போர் என்ற பலியெடுப்பு நிகழ்வு இனியும் வராதெண்டு எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில் இஞ்சை ஏன் இருக்க வேணும் ?
கனநேரம் வைச்சிருக்க முடியாது... தலை பிரிஞ்சு மூளை வெளில வர தொடங்கிடும்... இப்பிடித்தான் ராசரத்தினத்தின்ர மகள் லீலாவுக்கும் நடந்தது..அதால கெதியில பிரேதத்தை எடுக்கிறது { நல்லது..

{ நன்றி :ஓவியம் -http://www.tamilnation.orgart/strugglero.htm}


பிரேதமாயிட்டீங்களே? நேத்துவரை சிறிதரன் மாஸ்டர் சிறிதரன் மாஸ்டர் எண்டு சொன்ன என்ர ராசா இப்ப பிரேதமாயிட்டாரே.... அக்கா பைத்தியம் பிடித்தவள் மாதிரி தலை தலையாய் அடித்து கதற அதை பார்க்க முடியாமல் அவன் எழும்பி வேற பக்கம் போய் நின்று கொண்டான். மனதுக்குள் தாங்கவியலாத துக்கமும், இயலாமையும் குமைய குமைய கையாலாகாதவனாய் வீட்டுச் சுவரில் தன் முஷ்டியால் ஓங்கி குத்தினான். அங்கே அரற்றிக் கொண்டிருக்கும் பொம்பிளையளைப் போல் அவனால் கத்தி அழ முடியவில்லை. ஆனாலும் ஐயோ என்று கதறினால் நல்லா இருக்கும் போல் தோன்றியது அவனுக்கு.

முதலில் அவனை அழைத்து வந்த அந்த மனிதர் தான் திரும்பவும் அவனுக்கு பக்கத்தில் வந்தார். " தம்பி... உம்மட அத்தானுக்கு ஆருமில்லை...கொள்ளி போட... சின்ன மகனுக்கு மூண்டு வயசு. அவனிட கையால தான் கொள்ளி வைக்க வேணும். ஆனாலும் நீரும் ஒருக்கா போய் குளிச்சிட்டு வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்திட்டீரெண்டால்...காரியத்தை பார்க்கலாமெல்லே...ஏதோ கடவுளாப் பாத்து தான் உம்மை இண்டைக்கு இங்க அனுப்பி வைச்சிருக்கிறார். இல்லாட்டில் உம்மட தம்பி கிடக்கிற நிலமைல.... அவர் முடிக்கும் முன்னே

தம்பிக்கு என்ன? அவனுக்கு என்ன நடந்தது? என்று அவசரமாய் கேட்டான்.

"என்னத்தை சொல்லுறது.... நேத்து இந்த அயலை வளைச்சு வீடு வீடா சோதனையெண்டு வந்தாங்கள் பாவியள். அதுல ...தான்... "என்று மேலே எப்படி விபரிப்பது என்று தெரியாமல் பாதியில் நிறுத்தினார் அவர்...

"சரி வாரும் வீட்டுக்குள்ளை போய் கதைப்பம்..". என்று அவனை உள்ளே அழைத்துப் போனார் அவர்.

வீட்டுக்குள் நின்ற ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியை அவனிடம் " இவ என்ர மனுசி" என்று அறிமுகப்படுத்தினார். அந்த பெண்ணிடம் " உள்ளை கூட்டிக் கொண்டு போய் தம்பிக்கு ஏதும் குடிக்க கொடும். " என்றார்.

இல்லை இல்லை எனக்கொண்டும் வேண்டாம்... என்றான் இவன்.

தம்பி எங்க?

"இஞ்சேரும் இவரை அறைக்குள்ள கூட்டிக் கொண்டு போம். என்ரு மனைவியிடம் சொல்லிவிட்டு இவனிடம் "அவவோட போங்கோ" என்றார்.

அந்த பெண் வீட்டின் கடைசி அறைக்கு அவனை கூட்டிப் போனார். " அறுவாங்கள் சீரழிச்சுப் போட்டாங்கள் ராசா உம்மட குடும்பத்தையே" என்ரு சொன்னபடி கதவைத் தி/ரந்துவிட அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. "இன்னும் என்ன அதிர்சி இருக்கோ?" என்ற பயம் கவ்வ அறைக்குள் பார்த்தான். அங்கு ஒரு பாயில் தம்பியும். மூலைக்குள் ஒரு பெண்ணும் முடங்கிக் கிடந்தார்கள்.

"நேற்று அயலட்டை எல்லாம் வீடு வீடா சோதனை போட்டுக் கொண்டு வந்தாங்கள்.. வீட்டில உம்மட அத்தானும், தங்கச்சியும், தம்பியும் இருந்தவை. வந்தவங்கள் தங்கச்சியை சீரழிச்சுப் போட்டாங்கள். தடுக்கப் போன தம்பியை அடிச்சு வளர்த்திப் போட்டு அத்தானை சுட்டுப் போட்டு போய்ட்டாங்கள்.." அந்தப் பெண் சொல்லிக் கொண்டு போனது எதுவும் காதில் விழவில்லை தங்கச்சியை சீரழிச்சுப் போட்டாங்கள் என்று கேட்ட பின்..... கருகிப் போன குருத்தோலை மாதிரி கிடந்த தங்கச்சியையும், சவத்துக்கும் அவனுக்கும் மூச்சு ஒன்று வித்தியாசம் காட்ட கிடந்த தம்பியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.

(தொடரும்)





glitter-graphics.com

No comments: