Saturday, January 31, 2009

பெரியப்பா.!!

உறவுகள் என்ற பாலங்களை கடவுளே அமைத்துக் கொடுத்து விடுகிறான்; அவனே அந்த பாலங்களின் ஆயுட்கால திகதியையும் நிர்ணயித்துவிடுகிறான். எனக்கென்று ஒரு சில உறவுப் பாலங்கள் மட்டுமே என் வாழ்கைத் தீவில். 26ம் திகதி காலை ஒரு பாலம் காலாவதியான செய்தியோடு தான் எனக்கு விடிந்தது. என் பெரியப்பா என்ற பாலம் தனது இறுதி யாத்திரையை தொடக்கிவிட்டது.


எத்தனையோ மனிதர்களை நான் சந்திக்கிறேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை , ஒவ்வொரு விதமான அறிவு என்று தனிப்பட்ட சிறப்பியல்புகள் இருக்கும். ஆனால் என் பெரியப்பாவிடம் நான் சந்தித்த அத்தனை பேரின் சிறப்பியல்புகளும் மொத்தமாய் இருக்கும். அவரிடம் என்ன இல்லை என்று என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று நான் சொன்னால் அது மிகைப்படுத்தலாகவே மற்றவர்களுக்கு தோன்றும். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது தான் உண்மை.

சிறு வயதில் தந்தையை இழந்த என் பெரியப்பாவை அப்பாச்சி மிகவும் கஷ்டப்பட்டு தான் வளர்த்தார் என்று பெரியப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் படித்து சிறிது காலம் உபாத்தியார் வேலை பார்த்திருக்கிறார். அப்போது மாதம் 5 ரூபா தான் சம்பளமாம். 2 சதத்துக்கு அரிசி வாங்கியிருக்கிறோம் என்று பெரியப்பா சொல்லும் போது பிரமிப்பாக கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால் அந்த 2 சத அரிசி வாங்கக் கூட கஷ்டப்பட்ட காலங்கள் இருந்தது என்று சொல்வார். பெரியப்பாவின் அப்பா அவரது சிறு வயதிலேயே காலமாகிவிட்டதால் அப்பாச்சியின் அண்ணா மேற்பார்வையில் தான் பெரியப்பாவையும் பெரியப்பாவின் அண்ணாவையும் அப்பாச்சி வளர்த்தாராம்.

பெரியப்பாவுக்கு ஒரு அக்கா கூட இருந்தாராம். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது விசக் காய்ச்சல் வந்து இறந்து போனாராம்.

ஆசிரியத் தொழிலில் இருந்ததால் புத்தக வாசிப்பும் , எழுத்துத் திறமையும் பெரியப்பாவுக்கு இயல்பாகவே அவருடன் சேர்ந்து வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதன் காரணமாகத் தான் பதிப்பகம் நடத்த வேண்டுமென்ற ஆர்வம் மிகுந்திருந்தது. ஒரு சில தடைகளையும் மீறி அவருடைய உறவினருடன் சேர்ந்து அச்சகம் ஒன்றையும் நடத்தியிருக்கிறார். அந்த அச்சகத்தின் பெயர் கலைமகளோ என்னவோ...ஒரு பெயர் ..சிறிய வயதில் கதை போல் அவருடைய மடியிலிருந்து பழைய காலக் கதைகளை கேட்ட போது சொன்ன தகவல்கள் தான் இவை.. இப்ப அந்த அச்சகத்தின் சரியான பெயர் அது தானா என்று என்னை நானே கேட்கும் போது பெரியப்பாவிடம் கேட்க வேண்டுமென்ற ஆர்வம் சுயாதீனமாக தோன்றுகிறது கணத்தில்....ஐயோ பெரியப்பா தான் இல்லையே...!

ஒரு காலத்தில் பெரிய வர்த்தகராயும் இருந்தார். செல்வச் செழிப்பும், வாகன வசதியுமாக நிறைந்த வாழ்கை, காதல் மனைவி, கண்ணுக்கு அழகான இரண்டு பிள்ளைகள், அளவான குடும்பம் என்றிருந்தாலும் அவர்களோடு சேர்த்து பெரியம்மாவின் சகோதரர்களையும் சகோதரியையும், தனது சகோதரர் குடும்பத்தையும் சேர்ந்த்து தன் குடும்பமாக கட்டிக் காத்து பொறுப்பாக கவனித்து வந்தார் .

காலங்கள் போனது...வழமைபோல் வர்த்தகத்தில் சரிவு வந்தது; நிலை மாறியது; உரிமையாளராய் இருந்தவர் கணக்காளாராகினார். ஆனால் எந்த நிலையிலும் தன்னுடைய கடமைகளை சரியாகவே செய்தார். தன் மனைவியின் சகோதரர்களை நல்ல நிலைக்கு உயர்த்திவிட்டார். என் அம்மா பெரியம்மாவின் தங்கை. எங்கள் அப்பாவை பற்றி தெரிந்த எவரும் என் அம்மாவுக்கு கணவராகவும் எங்களுக்கு அப்பாவாகவும்,முத்துச்சாமி என்ற மனிதரை வரமாக தந்த முழு முதல் கடவுள்மார் என்று தான் சொல்வார்கள் என் பெரியம்மா பெரியப்பாவை. அப்படித் எல்லோருக்குமே நல்ல வாழ்கையை வழியமைத்துக் கொடுத்தவர் பெரியப்பா தான்.

எந்த நிலைக்கு வந்தாலும் அவர் கைவிடாத ஒரு விசயம் அவரது படிப்பு.
தமிழ், சைவம் , சித்தாந்தம், தத்துவம், சோதிடம் , கணக்கு என்று அவருடைய புலமை விரிவானது; பலமானது. வித்துவான், பண்டிதர், சைவப் புலவர் என்றெல்லாம் பட்டம் வாங்கினார். ஒரு காலத்தில் அதாவது இனப்பிரச்சினை என்ற அரக்கன் தலைதூக்கி கோரத் தாண்டவம் ஆடாத காலத்தில் யாழ் கோட்டை முனீஸ்வரன் கோவிலின் திருவிழாவில் ஒரு நாள் திருவிழா பெரியப்பாவுடையது. அடடா... அந்த நாட்கள் எத்தனை இனிமையானவை..?

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னுடைய வாழ்கையில் நான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக நினைப்பது என்னிடம் இருக்கும் தமிழைத் தான்! அந்த தமிழின் மறு பெயர் என் பெரியப்பா தான்! சண்முகராஜா!

பெரியப்பா இறந்துவிட்டார் என்று கேட்ட அந்த கணத்திலிருந்து இன்னும் மீளமுடியாத நினைவுச் சுழிக்குள் இருந்து கொண்டு தான் இதை நான் எழுதுகிறேன்.

பெரியப்பா என்றதும்......

யாழ்ப்பாணத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக குடியிருந்த அந்த வீடும், வளவும், பெரியப்பா படுத்திருந்து புத்தகம் படிக்கும் அந்த சாய்மனைக் கதிரையும், பென்னம் பெரிய கருங்காலியாலான 2 அலுமாரிகளும் அவை நிறைந்திருந்த புத்தகங்களும், அந்தப் புத்தகங்களை பெரியப்பா பாதுகாத்த அக்கறையும் சட்டென்று கண்ணுக்கு முன் வருகிறது!

பெரியப்பாவை நான் கடைசியாகப் பார்த்தது 1989ஆம் ஆண்டு சென்னையில் . இந்த 20 வருடங்களில் என்னுடைய நினைவிலிருக்கும் என் பெரியப்பாவின் முகத்தை இந்த கணம் வரை மட்டுமல்ல இனிமேல் எந்தக் காலமும் பார்க்க முடியாத கொடுப்பினையோடு தான் யோசிக்கிறேன்.... வெள்ளை வேட்டி , நஷனல் சட்டை, நெற்றி பரவிய விபூதி, கோடா போட்ட சுருட்டு புகைத்த படி புத்தகம் படித்த பெரியப்பா...! என் பெரியப்பாவின் சுருட்டு வாசனைக்கு மட்டும் அப்படியொரு சுகந்தம். விடு முறைக்கு மாதம்பையிலிருந்து ஒவ்வொரு முறை நாங்கள் யாழ்ப்பாணம் வரும் போதும் தங்கராசாவின் காரோடு ரயில் நிலையத்திலேயே எங்களை வந்து கூட்டி வர பெரியம்மாவோடு ஆஜராகி நிற்பார் என் பெரியப்பா! ஆச்சி ராசாத்தி, என்று அன்பாகவும் கப்புறு என்று கிண்டலாகவும் பேசும் பெரியப்பாவின் பேச்சை இனி எப்போது கேட்கப் போகிறேன்?! அவருடைய பேச்சில் எத்தனை நகைச்சுவை? எத்தனை சொல் நயம்? என்னவொரு கிரந்தம் இருக்கும் தெரியுமா?

அவருடைய வன்ன மானே பாடலும், கல்லோயா பாட்டும்... எப்பவும் மறக்க முடியாது. நினைத்த நிமிடத்தில் வெண்பா புனையும் இலக்கண சுத்தம் அவருக்கிருந்த மிகப்பெரிய தமிழ் கொடை. அவரிடம் நான் கற்றது கொஞ்சம் தான், எவ்வளவோ கேட்க வேண்டுமென்றிருந்தேன், எத்தனையோ சந்தேகங்கள், வரலாற்றுக் குறிப்புகள், சரித்திரக் கேள்விகள், இலக்கணப்பாடங்கள்...என்று இன்னமும் பெரியப்பாவிடம் கேட்க எனக்கு நிறைய இருக்கிறது... ஆனால் பதில் சொல்லத் தான் பெரியப்பா என்னுடன் இல்லை இனிமேல்..!

என்னுடைய பெரியப்பா அழுது நான் பார்த்தது இரண்டே இரண்டு தடவை தான். ஒன்று அவரது தாயாரின் மரண தறுவாய். மற்றது அவரது மனைவியின் அம்மா அதாவது எங்கள் அம்மம்மாவின் மரணவீட்டில். மற்றப்படி கவலையை கோழைத்தனமாக பார்த்துப் பயம் கொள்ளும் பலஹீனம் அவரிடமில்லை. எதையும் சந்திக்கும் எதிர்க் கொள்ளல் , தன்னம்ப்பிக்கை அந்த மெல்லிய தேகத்துக்குள்ளும் இருந்த மிகப்பெரிய பலம். அவர் யாரைப் பற்றியும் யாரிடமும் புறம் சொல்லி நான் பார்த்ததில்லை . உச்சக்கட்ட கோடீஸ்வரரிலிருந்து , ஏழை வீடு வரை தரம் பார்க்காமல் புழங்கி நட்பாய் தான் இருந்து நான் பார்த்திருக்கிறேன். ஆச்சி, மாணிக்கம், ராசா , தம்பி என்று தான் மற்றவர்களை கூப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.

அது என்னமோ பெரியப்பா இரவு நித்திரை கொண்டு நான் பார்த்தது குறைவு. இரவிரவாக முழித்திருந்து புராணமும், இதிகாசமுமாய் படித்துக் கொண்டிருப்பார். அப்போது எனக்கு 7 வயதிருக்கும். நான் ஆஸ்துமாவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.. ஆஸ்துமா இழுப்பில் சாமம் சாமமாய் நானும் நித்திரை கொள்ளமுடியாமல் மூச்சிரைத்துக் கொண்டிருப்பேன் ... இழுப்பு வலியில் அழுது கொண்டிருக்கும் என்னை தன்னோடு கூட்டிக் கொண்டு போய் என் கவனத்தை திசை திருப்ப அந்த 7 வயதில் எனக்கு மருந்தாக தனது தமிழ் புத்தகங்களை தந்து படிக்க விடுவார்....!! அவ்வளாவு இலேசில் யாரும் அவருடைய புத்தகங்களை தொட முடியாது. கடையில் வாங்கியது போலவே பத்திரமாக வைத்திருப்பார். சுவிஸ் பாங்கிலிருக்கும் கோடி ரூபாவுக்கு சமம் என்னுடைய ஒவ்வொரு புத்தகமும் என்பார். அவர் அன்றைக்கு ஊட்டி விட்ட அந்த மருந்து என்றைக்கும் என்னிடமிருக்கும் வரை என்னுடைய பெரியப்பா இறந்துவிட்டதாய் நான் நினைக்கக் கூடாது என்று தான் என் அறிவு சொல்கிறது இப்போதும். ஆனால் என் மனமோ என்னுடைய மொத்த நூலகமும் இன்று மொத்தமாய் ஒரு பிடி சாம்பராகப் போகுதே என்று கதறுகிறது.

இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் எங்கெங்கு தமிழ் இளைஞர்கள் இருக்கிறார்களோ அங்கங்கு யாராவது ஒருவராவது என் அண்ணாவைத் தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்று பெருமையாகச் சொல்வேன். ஏழுமலை என்று ஒரு பட்டப் பெயர் அண்ணாவுக்கு . ஒரு கணக்கை 7 விதமாக நிறுவுவாராம். அப்படியெல்லாம் நங்கள் எங்கள் அண்ணாவைப் பற்றி பெருமைப்படும் ஒவ்வொரு நொடியும்... என் அண்ணா சொல்வார் .அப்படியெல்லாம் ஊர் தெரிந்த சிவகுமார் மாஸ்டருக்கே கணக்கு பாடத்தின் வழிகாட்டி அவர் அப்பா தான் என்று..!.

என் அக்கா வசந்த கௌரி ....அநேகமான எல்லா தமிழ் பேச்சுப் போட்டிகளிலும் நல்லூர் கந்த சுவாமிக் கோவில் சமய அறிவுப் போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களாக அள்ளி வருவார்.. அப்போதும் அந்த வெற்றிகளுக்குப் பின்னாலும் என் பெரியப்பா தான் வித்தாக இருந்தார்.

இரண்டு மூன்று புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கு என்னை கூட்டிப் போய் எழுத வைத்து , பரிசில்களும், சான்றிதழுமாய் எனது சேகரிப்பை ஆரம்பித்து வைத்தவரும் அவர் தான். இன்று எனது கோப்புகளில் கோர்த்து வைத்திருக்கும் சான்றிதழ்களில் சமயத்துக்கும் தமிழுக்கும் கிடைத்திருப்பவை அத்தனைக்கும் அடிக்கல் நட்டது என் பெரியப்பா தான்.

ஒரு மனிதன் பணக்காரனாய் இருந்து பிரபலமடைவதைப் பார்க்கிலும் அறிவாளியாக இருந்து பெருமையடைவது எவ்வளவு வெகுமதி வாய்ந்தது என்பதை என்னுடைய எழுத்து மற்றவர்களால் சிலாகிக்கப்படும் ஒவ்வொரு கணமும் உணர்வேன்... அதை எனக்கு வகை செய்தவர் என் பெரியப்பா தான்!


எனக்கு என்று ஒரு நினைவு இருக்கும் காலம் வரையில் என் அம்மம்மாவுக்கு அடுத்தபடியாக நான் உரிமையோடு சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும், ஓடிப் போய் மடி சேர்வதும் , ஓவென்று அழுவதும் என் பெரியம்மா பெரியப்பா குடும்பத்திடம் மட்டும் தான். மற்ற எந்த உறவினர்களிடமும் அப்படியொரு ஒட்டுதல் எனக்கு வருவதில்லை. என்னைச் சுற்றி எனக்கு விருப்பமான வெகு சில பூ மரங்களை தான் தேர்ந்தெடுத்து பூந்தோட்டம் வளர்த்து வைத்தேன். ஆனால் காலன் என்பவன் ஒவ்வொரு பதியத்திலும் கொஞ்சம் கொஞ்சமாய் கொதி நீர் ஊற்றி கருக்கிக் கொண்டே இருக்கிறான். இதோ இப்போது என் பெரியப்பா என்ற வெகு அழகான பூம்பதியத்தையும் வேரொடு சாய்த்துவிட்டான். அங்கொன்றும் இங்கொன்றுமாய் எஞ்சியிருக்கும் பூம்பதியங்களோடு எனது பூந்தோட்டம் கிட்டத்தட்ட பாலையாகி வருவகிறது.. மாற்றுப் பதியம் வைக்க ஈடு செய்யும் தகுதியுடன் இனிமேல் எவரும் வரப்போவதில்லை...

ஒவ்வொரு மரணங்களுக்கும் வயது, நோய், சூழல் என்று காரணங்களை சமாதானம் சொல்ல அறிவால் முடிகிறது; ஆனால் வைத்திருக்கும் அன்பும், இனிமேல் பார்க்கவே முடியாது என்ற இயலாமையும் தான் அறிவைப் பார்க்கிலும் பலம்வாய்ந்ததாக இருக்கிறது.

என்ன செய்ய....????????

என்னுடைய பெரியப்பா ஒரு பூரணமான வாழ்கையை அனுபவிச்சு, நேசித்து வாழ்ந்த மனிதர். கடைசி வினாடியும் சிரித்துக் கொண்டு தான் இருந்தார் என்று பெரியம்மா சொன்ன போது மனதுக்கு இதமாகவே இருந்தது. அப்படியான கடைசி நிமிடங்கள் அநேகமானோருக்கு கிடைப்பதில்லை. ஆனால் அப்படியொரு நிம்மதியான நிறைவான நிறைதலோடு தான் தனது இறுதி துயிலுக்குள் பெரியப்பா புகுந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தனது கடமைகளையும் தனது வாழ்கையையும் சரிவர செய்த நிம்மதியோடு அயர்ந்து தூங்குகிறார். தூங்கட்டும்,,, இனி வரும் காலங்களில் இந்த 60 வருட வாழ்கையின் துணையாக அவர் இருந்துவிட்டு இப்போது அவர் இல்லாத வெறுமையோடு என் பெரியம்மாவின் தனிமையை பற்றிய கவலையை அவருக்கு இனி யாரும் சுட்டிக் காட்டாமல் இருப்போம். பெரியப்பா தன்னுடைய நிறைவான வாழ்வின் கடைசிப் பயணத்தை பயணிக்கட்டும்...!!!!.


No comments: