Tuesday, April 7, 2009

ஈழத் தமிழராகவே செத்து தொலையுங்கள்...!!

ஈழத் தமிழராகவே செத்து தொலையுங்கள்...!!


எனக்கு புரியவில்லை....

ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோம் என்கிறார்கள்;
ஆனால் ஈழத்து தமிழ் மக்கள் மீதும் எமது குழந்தைகள் மீதும் தூவப்படும் மரண குண்டுகளில் அவர்கள் பெயர்களைப் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். பிணங்களை காப்பாற்றி ஈழத்தில் எதை சாதிக்கப் போகிறார்கள்?{ பிணந்தின்னிக் கழுகுகளின் இரையே பிணங்கள் தான் என்பதை மறந்துவிட்டு என்ன இது முட்டாள் தனமான கேள்வி?}

மரமேறி விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம். அப்பிடி இருக்கு இந்திய அரசின் ஒப்பனை வசனங்கள். ஒரு பக்கம் அம்மா வயதான ஐயாவுக்கு கடிதம் எழுதுகிறாராம் தீர்வு காணவும் போரை நிறுத்தவும் வலியுறுத்துவோம் என்று... இன்னொரு பக்கம் நச்சு வாயுவையும், எரி குண்டுகளையும் எதிர்க்கு பரிசளிப்பாராம். பார்த்துக் கொண்டிருக்கும் வெளி உலகில் மனித மூளை சுமந்து இரத்தம் ஓடும் நரம்புகளால் பின்னப்பட்ட இரு கை கால் பிறப்புகள் அப்படியே நம்பிவிடுமாக்கும்... கை கொட்டி சிரிக்க வருகிறது....விரக்தியின் விளிம்பில் சிரிக்கத் தானே முடியும்???

அவர் வயோதிபர் ;அரசியல்வாதி;அவருக்கு குடும்பம் இருக்கிறது; நாம் யார் அவருக்கு?? அவரால் என்ன செய்ய முடியும்? அவரை நம்பியா எமக்கு சுதந்திரம் வேண்டி போராட்டத்தை தொடக்கினோம் அல்லது போராட்டத்தை ஆதரித்தோம்?

நாம் தானே எமக்கான போராட்டத்தை தொடக்கினோம்? நாங்கள் தானே எங்கள் பிள்ளைகளையும், சகோதரர்களையும் போராளிகளாக்கினோம்? வளர்த்தோம்?போராளிகள் என்பவர்கள் என்ன வேற்றுக்கிரகத்தில் இருந்தா வந்தார்கள்? அவர்களை பெற்றவர்களும் ஈழத் தமிழர்கள் தான். அவர்களை போராடச் சொன்னவர்களும், அவர்களுடைய போராட்டத்துக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களும், அவர்களை வளர்த்தவர்களும் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தான். எங்களுக்கான விடியலுக்கு நாங்கள் எங்களை காக்க எங்களுக்காக எங்களால் உருவாக்கப்பட்டவர்கள் தான் போராளிகள். அவர்கள் மட்டும் எமக்குப் போதும் .. அவர்களோடு எமது எதிர்காலம் இருக்கட்டும்; இல்லையேல் அவர்களோடு சேர்ந்து செத்து மடியலாம்... ஈழத்தமிழராகவே செத்து மடியலாம்..என்ன நடந்துவிடப் போகிறது இனிமேல் இத்தனை நாள் நடந்ததை விட பெரிதாக...??

ஒருவர் ஈழத்தமிழருக்காக சாகும் வரை உண்ணாவிரதமிருப்பேன் என்பார்; இரண்டு நாளில் அதைக் காலவரையற்ற உண்ணாவிரதமாக்குவார்; இன்னும் இரண்டு நாளில் பலரின் வேண்டுகோளுக்காக உண்ணாவிரதத்தை முடித்தேன் என்பார். அதையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை தவிர ஈழத்தமிழனால் என்ன செய்ய முடியும்??

இன்னொருவர் உதவுவதாக அரசியல் கூத்துக் கட்டின போது அவரது முதலைக் கண்ணீரை நம்பியதும் எமது தவறு தான். அவர் உதவவில்லை என்றதும் அவரை தூற்றினாலும் நமது தவறு தான். இந்த தவறுகளை நாம் இன்னொரு தடவை செய்யாதிருக்க முயற்சிக்கலாம் , எங்கள் போராட்டத்தையும் உயிர் அவலங்களையும் இவர்களும் கையிலெடுத்து அரசியல் செய்யாமலிருக்கட்டும்....! எங்களை வைத்து உடன்பிறப்புகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று புளுகாமல் இருக்கட்டும். எங்கள் அவலங்களும் மரண ஓலங்களையும் வைத்து தேர்தலில் வாக்குக் கேட்காமல் இருக்கட்டும். இழந்து போகும் மவுசை திரும்ப தேரில் ஏற்ற எந்த அரசியல்வாதியும் ஈழத் தமிழன் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருக்கட்டும்.

அட விடுங்கப்பா...யாருமே உதவவில்லையென்றே தீர்மானித்துவிட்டோம்... உதவப் போவதில்லை என்பதும் தெரியும்...நாங்கள் என்ன எங்கள் போரளிகளுக்காக ஆயுதம் கேட்டோமா? இல்லையே... !! எங்கள் சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுகிறோம்...எங்கள் வழியில் தடைக்கல்லாக ஏன் நிற்கிறீர்கள் என்று தானே ஆரம்பத்திலிருந்து இந்தக் கணம் வரை கேட்கிறோம்....??

அட போங்கப்பா....யாருமே உதவவில்லையென்றால் ...என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...அங்கு? துடிக்க துடிக்க மரணத்தை ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொருவராக வீழ்ந்து சாவைத் தழுவப் போகிறீர்கள்..அவ்வளவு தானே?? சாவுங்கள்...செத்து போங்கள்... ஈழத்தமிழர்களாகவே செத்துத் தொலையுங்கள்... உங்கள் சாவு வீடுகளால் இன்னொரு தேசத்தின் இறையாண்மையை காப்பாற்றிய பெருமை உங்களுக்குக் கிடைக்கட்டும்... செத்துத் தொலையுங்கள் ஈழத்தமிழராகவே....என்ன நடந்துவிடப் போகிறது....பெரிதாக...?

அங்கு சாவது யார் ...? திரைப்பட நடிகர்களா அல்லது பெரிய பெரிய அரசியல்வாதிகளா? வெறும் ஈழத் தமிழன் தானே?? உங்களுடைய உயிருக்கு என்ன மதிப்பிருக்கிறது? அற்ப உயிர்கள் தானே? பைசா பெறுமா உங்கள் உயிர்?? நீங்கள் உயிரோடு இருந்து என்ன சாதித்துவிடப் போகிறீர்கள்...?? தேர்தல் காலங்களில் ஓட்டு வாங்க உதவலாம் உங்கள் செத்தவீடுகள்... போய் செத்து தொலையுங்கள்....ஈழத்து தமிழராகவே செத்து தொலையுங்கள்... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக....??

மனுசனாய் பிறந்தால் எண்டைக்கோ ஒரு நாள் சாக வேண்டிய விதி தானே? எல்லாரும் ஒன்றாய் செத்து தொலையுங்கோ.. ஈழத் தமிழராகவே செத்துத் தொலையுங்கள்...பெருமையுடன்...!

. ஒரு வகையில் நிம்மதியடையலாம் சாகும் போது குடும்பத்தோடு சாகிறீர்களே என்று. ஒரு வகையில் பெருமைப்படலாம் பிறந்த மண்ணில் ஈனர்களுக்கு பணியாமல் சுரணையுள்ள தமிழராய் சாகிறீர்களே என்று. ஒரு வகையில் பெருமையாக சாகலாம்... உங்கள் உரிமைகளை பிளாஸ்டிக் குடங்களோ, சில நூறுத் தாள்களோ விலை பேசாமல் சுயமான உணர்வுடன் சாகிறீர்கள் என்று...ஒரு வகையில் பிராத்தனையுடன் சாகலாம் இன்னொரு பிறப்பிலும் ஈழத்தமிழனாய் பிறந்து மடிய வேண்டும் என்று. ...!

ஏன் என்றால் உலகில் தனது இனத்தின் சுதந்திரத்துக்காக இத்தனை போராடியவனும், எத்திக்கிலிருந்தும் எந்த பிரதியுபகாரமும், உதவியும் கிடைக்காது அகதியாய் போனவனும் , சர்வதேசத்தால் மனிதாபிமானம் அற்று கைவிடப்பட்டவனும் ஆனால் கடைசி மூச்சு வரை தனி நாட்டின் மகத்துவத்தை முற்றிலும் சரியான புரிந்துணர்வோடு இருப்பவனுமானவன் அல்லவா அந்த தேசத்திலேயே கிடந்து மடியும் ஈழத்தமிழன்? அப்படி ஒரு ஈழத்தமிழனாய் இருப்பது பெருமைக்குரியது, எல்லாவற்றையும் விட...செத்து தொலையுங்கள் ஈழத்தமிழராகவே... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...??

என் தேசத்தில் இந்தக் கணம் மரணத்தை சுவாசிக்கும் என்னருமை சோதரங்களே... உங்களுக்காக புலம் பெயர்ந்த எமது கண்களில் இனிமேல் கண்ணீர் வராது. மாறாக உங்கள் ஒவ்வொருவருடைய மரணமும் எமது மனதில் வேரோடிப் போகும். எந்தவொரு பசப்பு வார்த்தைகளாலும் இனிமேல் ஏமாறமாட்டோம்.. இனியொரு உண்ணாவிரத நாடகத்தையோ , மனிதச் சங்கிலியையோ அல்லது இன்னொரு கவிதையையோ பார்த்து நம்பிக்கையோடு வாய் பார்த்து ஏமாற மாட்டோம்..! யாராவது அல்லது எந்த தேசமாவது உங்களைக் காப்பாற்ற வருவார்கள் என்று நம்பி ஏமாற மாட்டோம்...உங்களுக்கு நாங்களும், எங்களுக்கு நீங்களும் மட்டும் தான்...! உங்களுக்காக எங்களது உயிரை சருகாக்கி , தெம்பிருக்கும் வரை எந்த வழியிலும் நாம் போராடுவோம்...! புலம் பெயர்ந்த இடத்திலிருந்தே உங்களை எப்படியாவது காப்போம்.. இல்லையேல்... பரவாயில்லை செத்துத் தொலையுங்கள்... ஈழத்தமிழர்களாகவே....செத்துப் போங்கள்....என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...??

வாழ வேண்டும், வாழப் போகும் வாழ்கையை சுதந்திரமாக வாழ வேண்டும்; அகதியாயும் அடிமையாயும் வாழ்வைதை விட நாம் எல்லோருமே செத்துப் தொலைந்து போய்விடலாம்..ஈழத்தமிழராகவே.... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...??

உலகம் ஏதாவது செய்யும், எமது மரணம் எதையாவது செய்ய இவர்களை தூண்டும் என்று முட்டாள்தனமாக நம்பி தம்மைத் தாமே தீக்கிரையாக்கின முத்துகுமார்களுடன் சேர்ந்து நாமும் செத்து தொலைஞ்சு போய்விடலாம்... ஈழத்தமிழராகவே...என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...?

இனி எவரும் ஈழத்தமிழனுக்காக அழ வேண்டாம்; அவன் மானத்துடன் செத்துப் போகிறான்... அவனுக்காக நீலிக் கண்ணீரோ, போலி மாரடிப்போ வேண்டாம். எங்கள் சாவிலாவது நீங்கள் உங்கள் சாலங்களை புறந்தள்ளி வையுங்கள் அரசியல்வாதிகளே!!!1 comment:

Anonymous said...

ஒரு வகையில் நிம்மதியடையலாம் சாகும் போது குடும்பத்தோடு சாகிறீர்களே என்று. ஒரு வகையில் பெருமைப்படலாம் பிறந்த மண்ணில் ஈனர்களுக்கு பணியாமல் சுரணையுள்ள தமிழராய் சாகிறீர்களே என்று. ஒரு வகையில் பெருமையாக சாகலாம்... உங்கள் உரிமைகளை பிளாஸ்டிக் குடங்களோ, சில நூறுத் தாள்களோ விலை பேசாமல் சுயமான உணர்வுடன் சாகிறீர்கள் என்று...ஒரு வகையில் பிராத்தனையுடன் சாகலாம் இன்னொரு பிறப்பிலும் ஈழத்தமிழனாய் பிறந்து மடிய வேண்டும் என்று. ...!