Sunday, September 13, 2009

பிரிவுகளுக்கான நிச்சயத்துடன் சந்திப்புகள்!

சில நேரங்களில் எதிர்பார்ப்பது நடக்காமல் போகும் போது மனம் உடைந்து போகும். சில சமயம் எதிர்பாராதது நடக்கும் போது மனம் அப்படியே வானத்தில் பறக்கும். இரு முரணான உணர்வுகள். இரண்டையும் இந்த ஒரே உடல் சுமக்கும் மனமோ அல்லது மூளையோ தான் அனுபவிக்கிறது. இந்த இரு அனுபவங்களையும் நான் குழுமங்களில் எழுத தொடங்கியதிலிருந்து அடிக்கடி அனுபவித்துக் கொண்டு தானிருக்கிறேன்.

வானத்தில் பறக்கிறமாதிரியான சந்தோஷங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது எனக்குக் கிடைத்தன.. இப்படி அனுபவங்களை எனக்கு வழங்கிய விஜி, சுதன், குமார் ஐயா, ஜப்பார் ஐயா , சிவ சிவா ஐயா & குடும்பத்தினர், சங்கர் அண்ணா & அண்ணி, நிலா & ரிஷி என்ற தொடர் நிகழ்வுகளில் எத்தனையோ நாளாக மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டிருந்த ஷைலஜாவைச் சந்திக்கும் நிகழ்வு கடைசியில் நடந்தேறியது இப்போது கூட கனவு போல இருக்கிறது..!!:):)

குழுமங்களில் பரிச்சயமானவர்களில் நான் முதன் முதலில் சந்தித்ததென்றால் என் அன்பான விஜியையும், சுதனையும் தான்.

இரண்டு வருடங்களின் முன் ஒரு கந்தசஷ்டி விரத நாளில் இருவரும் தமது நண்பர்களுடன் எங்கள் வீட்டுக்கு வந்தனர். வந்த அத்தனை நண்பர்களும் விருந்து சாப்பாடு சாப்பிட சுதன் கந்த சஷ்டி உபவாசத்தால் பழமும் பாலும் சாப்பிட, விஜி மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டது எனக்கு கொஞ்சம் கவலை தான். :):)

என்னைப் பார்த்ததும் சுதனின் முகத்தில் தெரிந்த உணர்வு..." அட இந்த மூஞ்சியை பார்க்கத் தான் என்னை ஆக்கினைப் படுத்தி இத்தனை தூரம் இழுத்து வந்ததா விஜி??" என்பது போலத் தெரிந்தது... :):) ஆனால்.. எனக்கு விஜியைப் பார்த்ததும் என்னவோ 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு கட்டடித்துவிட்டு டூர் வந்தமாதிரி இருந்தது. சுதன் சூப்பரா அழகா , மேக்கப் இல்லாமலே கதாநாயகனுக்கு கிட்டவா இருந்தார்.

ஒரு நல்ல சந்திப்பு; மனம் விட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து உரையாடக் கிடைத்த அருமையான ஒரு சந்தர்ப்பம்!! இனி எப்ப இன்னொரு தடவைக்கான சந்திப்பு என்ற ஏக்கத்துடனான பிரிதல்..! நிகழ்வுகளின் நினைவுகளை மனதில் கொடுத்துவிட்டு வாகனத்தில் ஏறும் போது திரும்பிப் பார்த்த விஜியின் முத்திரை குற்றிய புன்னகை.....இன்னமும் மறக்கவில்லை.. !!

ஆனாலும் என்னால் அந்த நிகழ்வை ஒரு பதிவாக எல்லோரும் சுவாரஸ்யமாக படிக்குமளவுக்கு வார்த்தைகளால் கோர்க்க முடியவில்லை!! என்னுடைய திறமையின்மையோ அல்லது உணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அடையாளம் காட்டும் அல்லது வர்ணிக்கும் தகுந்த வார்த்தைகள் என்னுடைய அகராதியில் இல்லையோ என்னமோ ...எனக்கு சொல்லத் தெரியவில்லை.. :(

அதே போல் தான் குமார் ஐயாவுடனான சந்திப்பும்........!!

எந்த இடத்துக்கு பயணப்படவேண்டுமென்றாலும் என் பிராண்நாதரையோ அல்லது தம்பிமாரையோ வாகன உதவிக்காக எதிர் நோக்க வேண்டிய கட்டாயம் எனக்கு...வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தும் லைசன்ஸ் இல்லாத காரணத்தால்..........

அப்படியொரு சூழலில் 2 மாதத்திற்கு முன்னாலேயே குமார் ஐயாவின் மடல் வந்ததும் என் கணவரிடம் சொல்லிவிட்டேன் அன்றைய தினம் அவர் வேலையிடத்தில் லீவு எடுத்துவிட வேண்டுமென்று.... அந்த தினம் நான் மூன்று குழும நண்பர்களை மட்டுமல்ல மேலும் இரண்டு முக்கியமானவர்களை முதன் முதலாக சந்தித்தேன்..!

குமார் ஐயா, சிவ சிவா ஐயா, ரிஷி ஐயா ஆகியோருடன் கலையுணர்வு , கைத்திறமை அத்தனையும் கைவரப் பெற்றவர்களான சிவ சிவா ஐயாவின் அம்மாவையும், அவர் மனைவியையும்.....சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

குசல விசாரிப்புகள், புத்தக பரிமாற்றங்கள், தேநீர், சிற்றுண்டி என்று எல்லாம் குறைவில்லாமல் இருந்தது. என்னுடைய இரண்டு இம்சை அரசர்களும் வாசலில் நுழையும் போதே நான் அஷ்வத்தாமா , நான் தான் அச்சுதன் என்று தாங்களாவே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே போனதிலிருந்து வெளியே வரும் வரை என்னைப் பார்க்கிலும் அதிகமால அவர்கள் தான் குமார் ஐயாவோடும், சிவ சிவா ஐயாவோடும், சிவசிவா ஐயாவின் தாயாருடனும் பேசினார்கள் .
(கொலுவை அலங்கரித்த கைகள் என் குழந்தைகளயும் அரவணைத்துக் கொண்டன.)


இங்கே இருக்கும் வீடுகளில் பேஸ்மெண்ட் என்று பாதாள அறைகள் விஸ்தாரணமானவையாக இருக்கும். அந்த பேச்மெண்ட் முழுவதும் வியாபித்திருந்த அந்தக் கொலுவைக் கண்டதும் அப்படியே வாயடைத்து பிரமித்துப் போனது தான் அந்த சந்திப்பில் எனக்கு மிக முக்கியமானவிடயம்.
இப்படியொரு பிரமாண்டமான விஸ்தாரமான கொலுவை இதற்கு முன் நான் எப்பவும் பார்த்ததில்லை.என் குழந்தைகளுக்கும் இது ஒரு புதினம் தான். சிவ சிவா ஐயாவின் அம்மாவை அவர்கள் "அம்மம்மா" என்று தான் அழைத்தார்கள். அம்மம்மா அந்தக் கொலுவில் நிறைய இவர்களுக்கு விருப்பமான ஐட்டங்களாக வைத்திருந்தது எனக்கு உள்ளூர பயமாகவும் இருந்தது..எங்கே இவர்கள் அந்த பொம்மைகளை எடுக்க கொலுவில் கை வைத்துவிடுவார்களோ என்று....
என்னமோ அன்று அவர்கள் வழமையை விட சமர்த்தாக இருந்தார்கள் .. :):)

கொலுவைப் பற்றி எழுதத் தொடங்கினால் இந்தப் பதிவு எத்தனை நீளத்துக்கு தொடரும் என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு அலங்காரமும் ஒரு கதையையோ அல்லது காட்சியையோ விபரிப்பவையாக இருந்தன. உதாரணத்திற்கு அந்தக் கொலுவில் ஒரு காட்சி சரவணப் பொய்கையில் ஆறு தாமரைப் பூக்களில் முருகக் கடவுளின் பிறப்பையும் வளர்ப்பையும் கதையாகச் சொல்லியது.

(சரவணப் பொய்கை. )


கொலுவில் நூறு ஆண்டுகளைக் கடந்த பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 48 வருட கால பிளாஸ்டிக் பொம்மைகள் கூட இருந்தன. எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்தது அந்தப் பல்லாங்குழி தான். மூன்று தலைமுறைகளாக கை மாறி வந்து கொண்டிருந்த அந்தப் பல்லாங்குழியும், சோழி முத்துகளும் சிவ சிவ ஐயாவின் அம்மாவுக்கு அவருடைய மாமியார் கொடுத்ததாம்.
இதே போல் 108 (என்று தான் நினைக்கிறேன்..) வகையான பிள்ளையார்களுக்கென்று தனியாகப் படிகட்டி அலங்கரித்து வைத்திருக்கிறார்கள்.

இதே போல் அங்காடித் தெரு, உச்சிப் பிள்ளையார் கோவில், தாஜ்மஹால், மிருகக்காட்சி சாலை, கடற்கரை, கல்யாணக் காட்சி, பாத்திரக் கடை என்று பல நிகழ்வுகளை கலை நயத்துடன் அலங்கரித்து வைத்திருந்தார்கள்.

(சிவ சிவா ஐயாவீட்டுக் கொலுவில் பல்லாங்குழியையும், சரவணப் பொய்கையையும், இன்னும் சில காட்சிகளையும் நான் புகைப்படம் எடுத்த தை விட தம்பி கண்ணபிரான் ரவிசங்கர் எடுத்தவை அழகாக எடுத்திருப்பதால் அவருடைய சில படங்களையே இங்கு போட்டிருக்கிறேன். நன்றி கே.ஆர்.எஸ்).சிறிது நேரத்தில் சிவ சிவா ஐயாவின் மனைவியாரும் வந்துவிட சபை நன்றாகவே கலகலப்பாக களை கட்டியது.
கடைசியில் விடைபெறும் போது வழமை போலவே... கனமான மனமும், காட்டிக் கொள்ளாத புன்னகையும், விடை சொன்ன வார்த்தைகளும், கையசைப்புமாய்.... அந்த சந்திப்பையும் என்னால் ஒரு பதிவாக எல்லோரும் சுவாரஸ்யமாக படிக்குமளவுக்கு வார்த்தைகளால் கோர்க்க முடியவில்லை!! என்னுடைய திறமையின்மையோ அல்லது உணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அடையாளம் காட்டும் அல்லது வர்ணிக்கும் தகுந்த வார்த்தைகள் என்னுடைய அகராதியில் இல்லையோ என்னமோ ...எனக்கு சொல்லத் தெரியவில்லை.. :(


(தொடரும்.)
No comments: