Thursday, July 12, 2007

உலக அகதிகள் தினம்

உலக அகதிகள் தினம்
உறவுகளை இழந்த மனிதன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி!

இன்றைய உலகில் பல்வேறு யுத்தங்களால சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும், அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் அனாதைகளானோரும் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள். *இவர்களின் அன்றாட அடிப்படை இன்னல்களையும் சிக்கல்களையும் உலக அரங்கில் புலப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படுவதே இந்த அகதிகள் தினமாகும். இது ஆனி (ஜூன்) மாதம் 20,ம் திகதியாக ஐக்கிய நாடுகளின் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வருடம் ஐந்தாவது உலக அகதிகள் தினத்தை அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலகில் மிக அளவில் ஆப்பிரிக்காவிலேயே அகதிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பு கூறுகின்றது. இதனால் முதலில் இந்த நாள் முதலில் ஆபிரிக்க அகதிகள் தினமாகவே முன்பு சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆபிரிக்க தவிர்ந்த பல்வேறு தேசங்களிலும் வெளி நாட்டுப் படையெடுப்புகளாலும் , உள் நாட்டுப் போர்களினாலும், சமூக சூழல்களாலும் மக்கள் அதிக அளவில் அகதிகளாக புலம் பெயர்வதும் புகலிடம் தேடுவதும் சகஜமான நிலையில் ஆனி 20 ம் திகதி உலக அகதிகள் தினமாக ஐக்கிய நாடுகளால் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உத்தியோக பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
போர்களினாலும் , எதேச்சாதிகாரத்தினாலும் ஒடுப்பட்ட மக்களின் உரிமை , சுதந்திரம் என்பவற்றின் அர்த்தம் அழிக்கப்பட்டு வாழ்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத அகதிகளின் மனக் குமுறல்களை வெளி உலகம் உணர வேண்டும் என்பதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்,.. ஆனால் உலகம் உணர்ந்ததா என்பது கேள்விக் குறியே!
உலகின் பல் வேறு நாடுகளிலும் போர்களாலும் அரசியல் ஒடுக்கு முறைகளாலும் புலம் பெயர்ந்தோர் மட்டுமல்ல சொந்த மண்ணிலேயே அகதிகளாக அலைக்கழிக்கப்படும் மக்கள் பசியிலும் பட்டினியிலும் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் பயத்துடனும் பாதுகாப்பற்ற சூழ் நிலைகளிலும் கழித்துக் கொண்டிருக்கின்றனர். இத் தகைய கொடுமையான நிலமையில் வாழ்ந்து வரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதற்காகவும் இத் தினம் உதவியாக இருக்கும்..
அண்மைக் காலமாக இலங்கை உள் நாட்டுப் போரிலும் , பாலஸ்த்தீனத்து விடுதலை அமைப்புகள் மத்தியில் ஏற்பட்டுள்ள மோதல்களினால் மீண்டும் பாலஸ்த்தீன மக்களும் இன்னமும் முடிவுக்கு வராத நிலையிலிருக்கும் ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையினனல் அந் நாட்டு மக்களும் பல இலட்சக் கணக்கில் அகதிகளாகியுள்ளனர். மேலும் பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். சூடான், சோமாலியா என் ஆபிரிக்கக் கண்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அகதிகள் பல்வேறு துன்பங்களூக்கு ஆளாகி வருகின்றனர்.

அழகான இச்சிறு கோளினைச் சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களுமொழிந்து, உலகமெங்கனும் சமாதானமும், அமைதியும் , இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்ல ஒரு விடிவு காலம் வர இந்த உலக அகதிகள் தினம் உதவியாக இருக்குமெனில் சந்தோஷமே!!

No comments: