Thursday, July 12, 2007

ஓ சமுதாயமே!

ஓ....சமுதாயமே வெட்க்கப்படு!

மிகவும் கடுமையான கட்டுப்பாடான பாரம்பரியமிக்க கேர்டிஷ் முஸ்லிம் இனததைச் சேர்ந்த குடும்பத்தின் அழகானா ஆனால் சுதந்திரமில்லாத ஐந்து பெண் பிள்ளைகளில் ஒருத்த்தி தான் பனாஸ் மொஹமெட். அவளுடைய குடும்பத்தச் சேர்ந்த ஆண்களின் தீர்மானத்தின் கீழ் வரும் கட்டளைப்படி தான் அவள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி அவளுடைய வாழ்கையும் எதிர்காலமும் இருக்க வேண்டுமென்ற கொடுமையான விதி அவளுக்கு.
சொந்த நாடான ஈராக்கிலிருந்து அகதிகளாக அவளுடைய குடும்பம் லண்டன் வந்த போது > அவளுக்கு 10 வயது. மேற்கத்திய நாகரீக பாதிப்பேதும் அவளுக்கும் அவளுடைய மற்ற சகோதரிகளுக்கும் வராமலிருக்க அதிகமான கவனமும் கட்டுப்பாடுகளும் அவளுடைய குடும்பத்தினரால் எடுக்கப்பட்டன. அவளுடைய 16 வது வயதில் அவளுடைய சம்மதமின்றியே அவளுடைய இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதனுடன் அவளுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு முன் அவள் தனது வருங்காலக் கணவனை 3தடவை தான் பார்த்தாள் அதுவும் அவளுடைய தந்தயின் முன்னிலையில். பழமைவாதியான படிபறிவில்லாத கணவனை அவளுடைய குடும்பத்தினர் டேவிட் பெக்கமென் போலிருப்பான் என்று சொல்லி ஏமாற்றி அவளை அவனோடு அனுப்பி வைத்தனர். தனது கணவனின் வாரிசுகளைப் பெற்றுக் கொடுப்பதும் கணவனுடைய தேவைகளை மட்டும் நிறைவேற்ற வேண்டியதுமான கடமைகளைத் தவிர வாழ்கையில் பெண் என்பவள் வேறு எதற்கும் உபயோகமற்றவள் என்ற மனப்போக்குடைய கணவனுடன் வாழ்கை நடத்த அனுப்பிவைக்கப்பட்ட அவள் கணவனிடம் கொடுமையையும் பலாத்காரத்தையும் தான் > அனுபவித்தாள். அவளுடைய 19 வது வயதில் தன் கணவனுடன் வாழ முடியாது என்று தனது பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்தாள் .
அவள் குடும்பத்தினர் அவள் கணவனுடன் வாழாமல் வந்தது குடும்ப கௌரவத்துக்கு இழுக்காக நினைத்தனரே தவிர அவள் கணவனின்கொடுமைகளால் மனதாலும் உடலாலும் > பாதிக்கப்பட்டதைப் பற்றி அக்கறைப் படவில்லை. ஆனால் அவளோ பிடிவாதமாக அவனுடன் வாழ மறுத்துவிட்டாள்.
பாலைவனமாய் வறண்டு போன வாழ்வில் இனி பசுமை வரவே வராது என்று நினைத்திருந்த பனாசின் வாழ்கையிலும் குளிர் மழை பெய்தது. அவன் - ரஹ்மத் சுலைமான் என்ற இளைஞன் அவளுடைய வாழ்கையில் வசந்தமாக வந்தான். தன்னுடைய இருண்டு போன வாழ்கையில் ஒரு மெல்லிய ஒளிக் கீற்றை அவள் கண்டாள்; வாழ்கையில் மீண்டுமொரு பிடிப்பு அவளுக்கு வந்தது; சந்தோஷத்தை தன் வாழ்கையில் முதன் முதலாக தானாகவே சுயமாக அப்போது தான் அறிமுகப்படுத்திக் கொண்டாள் .
ஆனால் பிற்போக்குத் தனமும் , பழைமை வாதமும் , மூர்க்கத் தனமும் கூடிய அவளுடைய குடும்பம் அவளுடைய காதலை ஏற்க மறுத்தது.
அதன் பலன் அவளை அவளுடைய குடும்பத்தினரும் உறவினரும் ஒரு கேவலமான பிறவியாகக் கருதினார்கள்; தமது குடும்பத்தின் கௌரவத்தை அழிக்க வந்த துர்தேவதையாக வெறுத்தார்கள். அவளையும் அவளுடைய காதலனையும் பல் வேறு வழிகளில் மிரட்டினார்கள். பிரித்தார்கள்; ஆனால் பனாஸும் சுலைமானும் தமது உறவில் உறுதியாக இருந்தார்கள். தனக்கும் தனது காதலனின் உயிருக்கும் ஆபத்து என்பதை பனாஸ் உணர்ந்தாள். காவல் துறையினரிடம் புகார் கொடுத்தாள்;
ஆனாலும் அவள் கொலை செய்யப்பட்டாள்.
அதுவும் யாரால்? பெற்ற தந்தையால்!! தனது குடும்ப கௌரவத்தை குலைத்த பெண் என்ற ஒரு குறுகிய நோக்கில் பெற்ற மகள் என்றும் பாராத தந்தையும், தந்தையின் சகோதரனும் அவர்களுடைய இனத்தைச் சேர்ந்த சில நபர்களுடன் சேர்ந்து அந்த அப்பாவிப் பெண்ணைச் சித்திரவதை செய்து கொன்றார்கள். கொலை செய்யப்பட்ட மூன்று மாதங்களின் பின் அவளுடைய உடல் ஒரு சூட்கேஸ் பெட்டியில் திணிக்கப் பட்டு , புதைக்கப் பட்டிருந்து பொலீஸார் கண்டு எடுத்தனர்.
இத்தனைக்கும் அவள் செய்த ஒரே ஒரு தவறு தனக்கு விருப்பமான வாழ்கையை வாழ துடித்தது மட்டுமே......
ஹானர்ஸ் கில்லிங் என்று சொல்லப்படும் இத்தகைய கொலைகளில் பலியாவது பெரும்பாலும் பெண்கள் தான். பரம்பரை அல்லது குடும்பக் கட்டுப்பாடுகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் பெண்களே இப்படித் தமது குடும்பத்தினராலேயே கொல்லப்படுவதை தான் ஹானர்ஸ் கில்லிங் என்று சொல்லப்படுகின்றது. குடும்ப அல்லது பரம்பரை கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக தமது கலாச்சாரத்துக்கும், கட்டுப்பாடுகளுக்கும் புறம்பாக நடக்கும் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்; கொல்லப்பட வேண்டியவர்கள் என்பது அவர்களது கொள்கையாம். இப்படிப்பட்ட பெண்கள் தமது குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக வாழ்வது தமது குடும்பத்துக்கு அவமானம்; அவமானச் சின்னமாய் வாழ்வதை விட அவளை தண்டிக்கும் தீர்ப்பில் அவளை இழப்பதில் எவ்வித கவலையும் அவர்களுக்கு இருப்பதில்லையாம்; இந்த வகையில் ஒரு நாளில் ஆகக் குறைந்தது 13க்கும் ,வரூடத்துக்கு 5000க்கும் மேற்பட்ட பெண்களும் சிறுமிகளும் அவர்களது குடும்பத்தினராலேயே கொலை செய்யப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பு காட்டுகின்றது.
கடுமையான கலாச்சாரக் கட்டுப்பாடுகளை மூர்க்கத்தனமாக பின்பற்றும் இனங்களைச் சேர்ந்த குடும்பங்களில் இருக்கும் பெண்கள் தமது கலாச்சாரத்துக்கோ , இன , மத கொள்கைக் கோட்பாடுகளுக்கோ புறம்பான உறவு , நடைத்தை வழிகளை தேர்வு செய்யும் பட்சத்தில் அத் தகைய உறவு முறைகளை அல்லது நடத்தையை தமது குடும்பத்துக்கும் , மதத்துக்கும், இனத்துக்கும் இழைக்கப்படும் பேரிழிவாக கருதி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் இத்தகைய படு பாதகமான கொடூரமான மூர்க்கத்தனமான முறையில் தான் பெற்ற மகள் என்றோ தனது சகோதரி என்றோ அல்லது தனது பேத்தியென்றோ மனைவி என்றோ தாயென்றோ உணர்வேதுமில்லாமல் அந்தப் பெண்களைக் கொலை செய்கின்றனர்.
இத்தகைய கொடும் செயல்களை உலகில் உலவ விடுவது மனித சமுதாயத்துக்கே இழுக்கு. இப்படிப்பட்ட கொடும் செயல்களை தட்டிக் கேட்கும் திராணியில்லாத எமக்கு பெண்ணியம், பெண் விடுதலை, சமத்துவம் என்று சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது ?
தாய் நாடு என்கிறோம்; தாய் மொழி என்கிறோம்; இயற்கையையும் சக்தியையும் பெண்ணாகவே கருதுகின்றோம்..ஆனால் பிறப்பால் எம்முடன் இருக்கும் பெண்ணை பெண்ணாக மனிதாபிமானத்துடன் மதிக்கிறோமா? தெரியவில்லை...
நாங்கள் பங்கெடுத்தால் தான் குற்றவாளிகளா? இல்லை.. இன்னமும் இப்படிப்பட்ட கொடுரமான கொலைகளை மௌனமாக வேடிக்கை பார்ப்பதாலும் குற்றவாளிகளாகின்றோம். என் பங்குக்கு நான் என்னுடைய எதிர்ப்பை காண்பித்துவிட்டேன் இப்படியாக... இதை வாசிக்கும் நீங்கள் உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
உங்கள் எதிர்ப்பைக் காட்ட விரும்பினால் கீழே இருக்கும் சுட்டியை உபயோகியுங்கள். அங்கு டரப்பட்டிருக்கும் html code ஐ coppy & paste செய்து உங்கள் வலைப் பூக்களில் பதிவு செய்யுங்கள்... உதிர்ந்த பூக்களின் முகங்களைப் பார்த்தாவது இனியொரு பூ உதிராமல் உலகம் காப்பாற்றுகிறதா என்று பார்க்கலாம்.


http://www.myspace.com/icahk

No comments: