Wednesday, August 15, 2007

புலம்பெயர்வு.


புலம் பெயர்தல் என்பது அறிவியல் கூற்றுப்படி கால காலமாய் நடந்து கொண்டு தானிருக்கின்றது. ஆனால் வெவ்வேறான காரணங்களினால் மாறுபாடான புலம் பெயர்வுகள் இதுவரை நடந்து கொண்டிருப்பதால் தான் உலகத்தின் ஒரு பகுதி சரித்திரம் உருவாகிக் கொண்டிருக்கின்றது என்று கொள்ளலாமென்று நான் கருதுகின்றேன். கொள்ளலாமா?


ஆரம்ப காலங்களில் புலம் பெயர்வுகளினால் தான் வெவ்வேறான சமூக அமைப்புகள் தோன்றின. ஒவ்வொரு கூட்டமும் வெவ்வேறான இடங்களை நோக்கி அல்லது தேர்வு செய்து புலம் பெயர்ந்து ஒவ்வொரு சமூகப் பின்னணிகளையும் உருவாக்கி அவை காலப்போக்கில் கலாச்சாரம் பரிமாண வளர்சியாகி..இன்று நாகரீக முன்னேற்றமாக மாறி பொருளாதார
காரணிகளாகவும் , புகலிட காரணங்களாகவும் புலம் பெயர்தல் மாறுபாடான சூழ்நிலலகளில் பரிணாமம் அடந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சொல்லலாமா?


சொந்த தேசமும் சுவாசமும் சமமானது தான். அதை யாராலும் மறுக்க முடியாது; என்ன தான் மேல்நாட்டில், படோபகமாக வாழ்ந்தாலும் (இங்கே எங்கே படோபகம்? எல்லாம் கடன் மட்டையில் தான் வாழ்கையே போகிறது..எங்களூரில் கடைகளில் கணக்கு வைத்து கடன் வாங்குவதில்லையா? அது போல்..என்ன எங்களூர் கடைகாரர் மிகவும் நல்லவர். வட்டி போட மாட்டார், அடகு கடையை தவிர. ஆனால் இங்க்கு எல்லாக் கடனுக்கும் வட்டி தானே?) பழைய சாதத்தில் மோர் ஊற்றி பச்சை மிளகாயுடன் சாப்பிடுவது போல வருமா? இங்கேயும் தான் அப்படி பழையதை சாப்பிட்டுப் பார்கிறேன்... ஒரு சுகமும் தெரியவில்லை. பௌர்ணமி நாட்களில் முற்றத்துக் குரு மணலில் அம்மம்மாவின் மடியில் படுத்திருந்து வானத்தில் நட்சத்திரம் எண்ணியது போல இங்கே எங்கே போய் குரு மணல் கும்பியையும் அம்மம்மாவின் மடியும் தேடுவது?
அந்த மாதிரியான நாட்களில் நிலாச் சோறு சாப்பிட அம்மா அப்பா பெரியம்மா பெரியப்பா அண்ணா அக்கா தம்பி தங்கச்சி மாமா மாமி மச்சாள் அத்தான் என்று எல்லா உறவுகளும் ஒன்றாக ஒரு இடத்தில் கூடியிருக்க பெரியம்மாவின் கையால் கவளமாக உருட்டித் தரும்
சோற்று உருண்டையை இங்கே எந்த ஃபாஸ்ட் புஃட் கடையில் வாங்க முடியும்? அல்லது ஒரு நிலாச் சோறு சாப்பிடுவதற்கு உறவென்று இங்கு யாரிருக்கிறார்கள் பக்கத்தில்? ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு தேசமாய் திக்குக்கு திக்காய் ... எந்த ஊரில் போய் நிலாச் சோறு சாப்பிடுவது..?
எத்தனையோ வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நிலாச் சோறு மாதிரி மேல் நாட்டவர் பாணியில் சாப்பிடுவதற்கு ஒரு நாகரீகமான பெயர் இருக்கிறது.. ஃபேமிலி ரீயூனியன்" என்று... அப்படி தான் எமது நிலாச் சோறு நிகழ்சியுமாக போகிறது போலும்.


எல்லாவிதமான அபிலாஷைகளும் உண்டு. உறவுகளுக்காக ஏங்குவதும் பிரிவுகளால் அழுவதும் சகஜமாகிவிட்டது; ஆனாலும் புலம் பெயர்வு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது அல்லது தவிர்க்க விருப்பமில்லாமல் தேர்வு செய்யப்பட்டுவிடுகிறது. பொருளாதார வசதிக்காகவும், பணம் பொருள் வாகை போறவற்றின் ஆடம்பர ஆசைகளுக்காகவும் வசதியான
மாறுபட்ட வாழ்கை விருப்பத்திற்காகவும் மட்டுமல்ல புகலிடத் தேவைக்காகவும் புலம் பெயர்தல் அவசியமாக்கப்பட்டுவிட்டது.

ஒரு சமூகக் கூட்டத்தின் புலம் பெயர்வானது உரு மாறி இப்போது ஒவ்வொரு தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கும் , தேவைகளுக்காகவும் அடைபடைக் காரணியாகிவிட்டது.

இது ஒரு வகையில் உலகளவில் இந்த தேசத்தில் இந்த இன மக்கள் இந்த மதத்தைச் சார்ந்த மக்கள் தான் குடியிருக்கிறார்கள் என்று இன மத மொழி வாரியாக பிரிக்க வகையில்லாமல் செய்து எந்த தேசத்திலும் எல்லா இன மக்களும் வாழும் ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்று சொல்லலாமா?

தமிழன் போகாத இடமில்லை; வாழாத நாடு இல்லை; ஆனால் தமிழனுக்கென்று ஒரு தனி நாடு இல்லை என்ற விதி இன்னும் மாறவில்லை..அப்படியே தான் இருக்கின்றது.. கற்காலத்து நாடோடி வாழ்கையை இன்னமும் கடைப்பிடிப்பவர்களாக தான் நாம் இருக்கின்றோம். எல்லா இடத்ஹ்டிலும் பரந்து பிரிந்து வாழப் பழகிவிட்டோம். எம்முடைய நாட்டில் எமது கலாச்சாரத்தில் நாம் எப்படி எப்படி வாழ்ந்தோமோ அதே வழிமுறைகளை இங்கேயும் நாங்கள் எங்களுக்காக கோவில்களாயும், உணவகங்களாயும், ஏன் பள்ளிக்கூடங்களாயும் கூட உருவாக்கிக் கொண்டுவிட்டோம்.. ஆனாலும் ஒரு திருப்ப்தி வருகிறதா? எதோ ஒரு குறை உணர்வு முள்ளாக இருக்கத் தான் செய்கிறது. அது ஏன்? அல்லது அது என்ன? என்ன தான் உருவாகிக் கொண்டாலும் எங்களூரின் சூழலை , அதனுடைய இயற்கையை, இயல்பை எங்களால் இங்கே கொண்டுவர முடியவில்லையே.....?

எந்த நாட்டில் குடியேறி குடியுரிமை பெற்றாலும் அது காகித அளவில் தான்..மனதளவில் அந்தந்த மக்களின் கரிசலின் மணம் தான் அவரவர்களிடம் இருக்கும்; அதை யாராலும் மறுக்கவோ அழிக்கவோ முடியாது.


வேஷங்கள் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக சொந்தமான முகங்களை கழற்றியா வைக்க முடியும்? முடியாது! முடியவே முடியாது!!

1 comment:

butterfly Surya said...

வாழ்த்துக்க்ள்.

சூர்யா
சென்னை..
butterflysurya@gmail.com