Saturday, January 5, 2008

கடந்து சென்ற ஆண்டு சுமந்து சென்ற கறைகள்...!!

இந்த வருடம்
தன் மேல் எழுதி வைத்திருக்கும்
வரலாற்றின் சாரம்
போரும், பலிகளும்
கொலைகளும்,
கற்பழிப்புகளும்.......

இரத்த ஆற்றில் மிதந்த
கனவுகள் சுமந்த உடல்கள்
வெடித்துச் சிதறிய பிணங்களின்
சதைத் துண்டுகள்,
பாலகமா, வயோதிபமா என்று
பேதமில்லாத வன்முறைகள்
ஒருவனின் தாயை இன்னொருவன் சுகித்த
ஒருவனின் சகோதரியை இன்னொருவன் காமுற்ற
ஒருவனின் மனனவியை இன்னொருவன் கற்பழித்த
மிருகத்தனம் நிரம்பிய வரலாறுகள்....

பட்டினியில் ஒட்டிய வயிறுகள்
பணத்துக்கு விலை போன கற்பு
கடவுளை சொல்லி கற்பழித்த போலிகள்
நோயாளியையே நுகர்ந்த வைத்தியர்கள்
மாணவியை பாலியலில் சுகிக்க முனைந்த குரு;
குழந்தை பட்டாளத்தையே கொல்லையில் புதைத்த
மானிடப் பேய்கள்...

ஏழைகளின் ரத்தம் சுவைக்கும்
பணமுதலைகள்;
வாக்குகளுக்காக பிச்சையெடுத்து
பிச்சை போட்டவனை பிச்சைக்காரராக்கும்
அரசியல்வாதிகள்;
போராட்டமே வாழ்கையாகிப் போன
மக்கள்;
அந்தப் போராட்டத்தில் குளிர்காயும்
தலைமைப்பீடங்கள்;
கல்வியை வியாபாரமாக்கிய கல்லூரிகள்,
படித்தபின் வேலைக்காக பேரம் பேசும் மாணவர்கள்....

இன வெறியிலும் கொலை;
மத வெறியிலும் கொலை,
போனது என்னவோ மானிட உயிர்கள் மட்டுமே.
கதறூவதும் கண்ணீர் விடுவதும்
வெஞ்சினம் கொள்வதும். வஞ்சம் தீர்ப்பதும்
இலட்சியங்கள்;

இத்தனைக்கும் நடுவில்
மனிதன் பந்து விளையாடுகிறான்;
பரீட்சை எழுதுகிறான்;
வேலைக்கு விண்ணப்பிக்கிறான்
ஆலயம் செல்கிறான்;
கடவுளையும் நம்புகிறான்;
தனக்காக மட்டும் பிராத்திக்கிறான்;
வானமண்டலத்திற்கு விண் கப்பல் அனுப்புகிறான்;
விஞ்ஞானம் பயில்கிறான்;
சமாதானம் பேசிக் கொண்டே
போர்க்கலம் வாங்குகிறான்;
அமைதிப் பேச்சுக்கிடையில்
அணுகுண்டும் செய்கிறான்.

ஆயுள் போகிறது ஆண்டுகளாக.
ஒவ்வொரு ஆண்டும் புதிய நம்பிக்கையின்
சின்ன அகல் வெளிச்சத்தோடு
விடிய
இருள் மட்டும் கடுமையாக தொடர்கிறது..
அகலையும் வென்று விடுகிறது!

இதோ இப்போதும் ஒரு புத்தாண்டு வருகிறது!
இப்பவும்
அதே அகலுடன் மனிதர்கள்
வாசல் பார்த்து நிற்கிறோம்!
வரட்டும்..பார்க்கலாம்!!

இதோ கறைகளில் சில பட்டியல்களாக.....

*தமிழ் ஈழத்தின் அரசியல் ஆலோசகர் சுப தமிழ் செல்வன் அவர்களினது அகால மறைவு.
எல்லாளன் படையெடுப்பில் காலமான கரும்புலிகளின் வீர உடல்கள் நிர்வாணமாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டமை.
*இன்னொரு தமிழ் இனப் பிரச்சினையாக உருவெடுத்த மலேசியத் தமிழர்களின் சம உரிமைப் போராட்டம்.
*பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமான பெனாஸிர் பூட்டோ கொடூரமாக கொல்லப்பட்டமை.
*2007 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே கலவரங்களோடு அடியெடுத்து வைத்தது வங்கதேசம்.
*மியான்மரின் அரசை எதிர்த்து புத்த பிக்க்ஷுக்கள் நடத்திய போராட்டங்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் ஒடுக்கியதும், புத்த விகாரைகள் சூறையாடப்பட்டமையும்.
*ஈராக்கிலும் , ஆப்கானிஸ்தானிலும் மிகக் கூடிய அளவில் அமெரிக்கா இராணுவத்தினரை பலிகொடுத்தது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 126 இராணுவ வீரர்களும், ஈராக்கில் 899 இராணுவ வீரர்களும் இந்த வருடம் கொல்லப்பட்டார்கள்.
அதே போல் 18,610 ஈராக்கிய பொதுமக்கள் இது வரை மாண்டு போயிருக்கின்றனர். மே மாதத்தில் மட்டும் ஈராக்கில் 2155 பொதுமக்கள் இறந்தார்கள் .
* இந்தியாவில் மட்டும் என்னவாம்?
இராமர் பாலம்
தெகெல்காவின் மோடி ரிப்போர்ட்
அணுமின் ஒப்பந்தம்
நொய்டா நிதாரி
நந்திகிராம் கிளர்ச்சி, மரணங்கள்
ஹைதரபாத் இரட்டை குண்டு வெடிப்பு
என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்.. அப்படியிருந்தும் இந்திய அரசு அதைவிட பக்கத்து நாட்டில் இருக்கும் தமிழினத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டுமென்ற அக்கறையுடன் ஆயுத உதவி, ஆலோசனை, ரோந்து என்றெல்லாம் தொண்டு செய்து கொண்டிருக்கின்றது.

*அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தின் கல்லூரி ஒன்றில் ஒரு மாணவனின் துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் உட்பட 32 பேர் கொல்லப்பட்டமை. அதே போல் வணிக வளாக துப்பாக்கிச் சூடு, கலிபோர்னியாவின் மலிபூ வில் ஏற்பட்ட தீவிபத்து. என்று இங்கேயும் இரத்தச் சாக்கடை ,,ஆனாலும் சாகவாசகமாக ஒவ்வொரு நாடாக போர் வயல் உளுது கொண்டிருக்கிறது இந்த வல்லரசு.
*லண்டனிலும் கார்க் குண்டு வெடிப்பு.
இயற்கை அன்னை மட்டும் சும்மாவா இருந்தாள்? ஜப்பானில் பூகம்பமாயும், வங்க தேசத்தில் வெள்ளமாயும்,இந்தோனேஷியாவில் நில நடுக்கமாயும் தான் கொடூர பக்கத்தை காட்டிவிட்டாள்.

இவை மட்டுமல்ல இதைப் போல இன்னும் நிறைய ..நிறைய...சுமந்து போய்விட்டது பாவப்பட்ட 2007ம் ஆண்டு.

இப்போது வந்திருக்கும் 2008 மிகவும் பயந்து கொண்டு வந்திருக்கும்; என் மீது என்ன கரும்புள்ளி ,செம்புள்ளி குற்றப் போகிறார்களோ என்று பயந்து கொண்டு வந்திருக்கும்.
என் மேல் இரத்தமாயும், பிணங்களாயும் எத்தனை எத்தனை கோரங்கள் வந்து ஒட்டிக் கொள்ளப் போகிறதோ என்று பயந்து கொண்டு வந்திருக்கும். எத்தனை எத்தனை போர்கள், குண்டு வெடிப்புகள், இயற்கை அழிவுகள் என்று கொடுமைகள் வந்து பழி தீர்க்கப் போகிறதோ என்று பயந்து கொண்டு வந்திருக்கும்.

இதைப் பற்றி இந்த மானுட இனம் கவலைப்படுமா? சிந்திக்குமா?
யாராவது சிந்தித்தால் 2008 க்கு கொஞ்சமாவது ஆறுதல் வரும்! இப்படியே எல்லோரும் நினைத்தால் அமைதி வரும்! நிம்மதி வரும். அல்லவா?

No comments: