Saturday, January 5, 2008

இப்படியுமொரு கடிதம்...! (கடிதம் 1)

அப்பா....
அந்த அப்பா ஒருநாள் தன் மகனின் அறையைக் கடந்து சென்றபோது தான் கவனித்தார் அறை வழமைக்கு மாறாக மிகவும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பதை.

மிகவும் நேர்த்தியாக விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் கண்ணுக்குப் புலப்படுமாறு ஒரு கடிதம் வைக்கப்பட்டிருந்தது. சந்தேகமே இல்லை.... அந்தக் கடிதம் அப்பாவுக்கு அவரின் மகன் எழுதியது.
அன்புள்ள அப்பா,
தவிர்க்க முடியாத காரணங்களினால் மிகவும் மனவேதனையுடன் தான் இக் கடிதத்தை எழுதுகின்றேன்.

நான் என்னுடைய புதிய காதலியுடன் புது வாழ்கையைத் தொடங்கப் போகிறேன். அந்த வாழ்கை முறை உங்களுக்கும் அம்மாவுக்கும் ஏற்று கொள்ள இயலாதவொரு சங்கடம் என்பதால் என்னால் உங்களுக்கு சொல்லிக் கொண்டு போக முடியவில்லை

என் காதலியுடனான உறவில் புதியதொரு ஈர்ப்பை கண்டேன். அவளை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது, ஆனால் அவளுடைய தொப்பிள், நாக்கு , கண் இமைகளில் குத்தியிருக்கும் நகை அலங்காரங்களோ அல்லது பச்சை குத்தியுள்ள கைகளோ அல்லது அவள் அணியும் இறுக்கமான தோலாடைகளோ உங்களுக்குப் பிடிக்காது. அத்துடன் என்னை விட எட்டு வயது மூத்தவள் என்பதாலும் நீங்கள் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.
வெறும் ஈர்ப்பு மட்டுமில்லை அப்பா, அவள் இப்போது கர்ப்பமாக இருக்கின்றாள்.எங்களுக்கென்று ஒரு புது வாழ்கையை தொடங்கினால் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கலாம் என்று என் காதலி சொல்கிறாள். அது சரியென்றே எனக்கும் தோன்றுகிறது. அவளுக்கு சொந்தமான ட்ரெய்லர் ஒன்றில் தான் மரங்களடர்ந்த பகுதியில் எங்கள் குடும்ப வாழ்கையை நாங்கள் கொண்டு செல்லப் போகின்றோம். எங்கள் இருவருடைய கனவும் நிறைய குழந்தைகள் பெற்று வாழ வேண்டுமென்பதே.

கஞ்சா போன்ற பொருட்கள் உண்மையில் யாரையும் நேரிடையாக பாதிப்பதில்லை என்ற உண்மையை என்னுடைய காதாலி தான் எனக்கு உணர்த்தினாள். அவள் என் கண்களைத் திறந்துவிட்டாள். இப்போது எங்களுக்குத் தேவையான கஞ்சாச் செடிகளை நாங்கள் குடியிருக்கப் போகும் டிரைலர் பகுதியில் சிறு அளவில் வளர்க்கத் தொடங்கியுள்ளோம். இந்த விளைச்சலில் வரும் கஞ்சாவை மற்ற நண்பர்களூடன் எங்களுக்குத் தேவையான கொஹேயின்,பிரவுன் சுகர் போன்றவற்றுக்காக பண்ட மாற்றும் செய்யவுள்ளோம்.

அதே நேரம் இப்போதிருக்கும் விஞ்ஞானம் எய்ட்ஸ் நோய்க்கு சீக்கிரம் நிவாரணம் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் இறைவனைப் பிராத்திகின்றோம்.ஏன் என்றால் என்னுடைய காதலி விரைவில் அந்த நோயிலிருந்து மீண்டு வர வேண்டுமே!!

அப்பா! கவலைப்பட வேண்டாம். என்னைப் பார்த்துக் கொள்ள என்னால் முடியும். எனக்குப் பதினைந்து வயதாகிறது.என்னை தற்காத்துக் கொள்ள என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சில நாட்களின் பின் கட்டாயம் உங்களையும் அம்மாவையும் பார்த்து விட்டுப் போக வருவோம். அப்போது உங்களுக்கு எத்தனை பேரன் பேத்திகள் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இங்ஙனம்
அன்புடன் உங்கள் மகன்
ஜான்.

பிற் குறிப்பு: அப்பா! மேலே நான் குறிப்பிட்ட்டவை எதுவும் உண்மையல்ல; நான் எனது நண்பன் எட்வர்ட் வீட்டிலிருக்கிறேன். என் மேசை மீது இருக்கும் பள்ளிக்கூடத்தில் தரும் புரோகிரஸ் கார்டை விட வாழ்கையில் மிக மோசமானவை நிறைய வெளி உலகில் இருக்கின்றன என்பதை உங்களுக்கு நினைவு படுத்தவே இக் கடிதம் எழுதினேன்.

ஐ லவ் யூ அப்பா!!

மோசமான மார்குகள் எடுத்தற்காக என்னைத் தண்டிக்க மாட்டீர்கள் என்ற வாக்குறுதியோடு வீட்டுக்கு வருவதில் எனக்கு எந்த ஆபத்தும் இல்லையெனும் பட்சத்தில் உங்கள் கோபம் தீர்ந்த பின் எட்வேர்ட் வீட்டுக்கு தயவு செய்து போன் செய்யுங்கள் !

(ஆங்கிலத்தில் எழுதியது யாரோ... தமிழாக்கம் என் கணவர் தேவகுமார் அவர்கள்)

No comments: