Tuesday, January 15, 2008

பொங்கல் மாதிரி .....


பொங்கல் மாதிரி............





எம் மண்ணில் அநேகமான உடல்கள் வெளிநாடுகளுக்கு கப்பல் ஏறிவிட மனங்களும், உணர்வுகளும் அங்கேயே தங்கிவிட்டதை தான் நாங்கள் புலம்பெயர்வு என்கிறோம். அப்படி நடமாடும் கூடாக நான் புலம்பெயர்ந்த நாளிலிருந்து இன்று வரை யாழ்பாணத்து வாழ்கைக்காகவும் அந்த பழைய நாட்களின் சுகந்தத்துக்காகவும் எத்தனையோ சந்தர்பங்களில் ஏங்கிப் பரித்தவித்ததுண்டு. அதுவும் இந்தப் பொங்கல் நாள் வந்தாலே போதும்....
சொல்லத் தேவையில்லை; அம்மா தன்னுடைய சின்னவயதுப் பொங்கல் நாட்களிலிருந்து அப்படியே தனது தலைப் பொங்கல் வந்து, பிறகு அப்படியே நாங்கள் பிறந்த பின்னான பொங்கல் நாட்கள் வரை பழைய நாட்களின் நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்து விடுவார். கடைசியில் சின்னதாக இரண்டு,மூன்று கண்ணீர் துளிகள் முற்றும் போட்டு முடியும்.
அமெரிக்கா வந்த பிறகு தைப் பொங்கலின் பாரம்பரிய முறையே முற்றிலும் மாறிவிட்டது. மாக் கோலம் போட்டு அந்த ஊசிப் பனிக் குளிரில் பச்சைத் தண்ணியில் தலைக்கு குளித்து, புது துணி கட்டி , பட்டாசு வெடித்து பொங்கின அந்தக் காலம் இப்போது நினைவுகளில் மட்டுமென்ற முற்றுப்புள்ளிக்கு ஈடு கொடுத்துவிட்டு வந்து இருபத்தி இரண்டு பொங்கல்கள் போய்விட்டது இந்த வருடத்துப் பொங்கலோடு.
இங்கே வெளியில் முற்றத்தில் பொங்குவது என்பது சட்டத்துக்கு புறம்பானதா இல்லையா என்பதெல்லாம் தெரியாது; ஆனால் அந்த பிரச்சினையை விட முக்கியமான தடங்கல் இந்த ஊரின் காலநிலை தான்; மார்கழி, தை மாதங்களில் தான் இங்கு பனி கொட்டுவது அதிகம். எந்த நாள் பனி கொட்டும், எப்போது ஆலங்கட்டி மழை பொழியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும் இந்த வருடம் எப்படியாவது முற்றத்தில் பொங்க வேண்டும் என்ற ஆவலுடன் எல்லாப் பொருட்களையும் வாங்கிவிட்டு , இலங்கையைச் சேர்ந்த ஒருவரின் மளிகைக் கடையில் மண்பானை , மண் அடுப்பெல்லாம் இருக்கு என்று சொன்னார்கள். சரி எப்படியாவது மண்பானையும், மண் அடுப்பும் வாங்கி பின் முற்றத்திலாவது பொங்க வேண்டும் அல்லது வீட்டுக்குள் பொங்கினாலும் மண்பானையில் பொங்க வேண்டும் என்ற ஆவலில் எல்லா ஆயத்தமும் செய்து கொண்டிருந்தேன். முற்றத்தில் பொங்க ஆயத்தம் செய்யத் தொடங்கியதுமே வீட்டில் என் கணவரும், தம்பிமாரும் நியூ யோர்க் சட்ட விதிகள் அது இது என்று பயமுறுத்தத் தொடங்கிவிட்டார்கள். அது மட்டுமல்ல பொங்கல் என்றால் என்னவென்று அறிந்திராத அயலில் நாம் மட்டும் முற்றத்தில் பொங்கினால் எப்படியிருக்கும் என்ற சங்கோஜம் அவர்களை நிர்வாணத் தீவில் ஆடையணிந்தவன் மனநிலையில் கொண்டு போய் விட்டுவிட்டது. ஆனால் அதையெல்லாம் அலட்சியம் செய்து கொண்டு நானும் என் மூத்த மகனும் வெளியில் தான் பொங்குவது என்று தீர்மானித்திருந்தோம்.
என் மகனுக்கு வெளியில் அம்மா சமைப்பதை வேடிக்கை பார்க்கும் ஆசை. எனக்கோ தமிழ் பண்டிகைகளைப் பற்றியும் , எங்கள் பாரம்பரியம் பற்றியும் அவர் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற இலட்சியம்.
ஆனால் நடந்தது வேறு....மண்பானை நான் வாங்கப் போன போது கடையில் முடிந்துவிட்டது. அதிலேயே மனம் வெறுத்துப் போய்விட்டது. பானையில்லையென்றதும் பழையபடி ஏதாவது ஒரு எவர் சில்வர் பாத்திரம் தான் பொங்கல் பானையாகப் போகிறது என்பது நிச்சயமாகிவிட்டது. அது ஒரு தடங்கல் என்று இருக்க
வானிலை அறிக்கை பொங்கல் தினமான திங்கள் கிழமை அன்று சராசரி 5 அங்குலத்துக்கு பனி கொட்டும் என்று அறிவித்து முற்றத்தில் பொங்கும் திட்டத்தையே தவிடு பொடியாக்கிவிட்டார்கள்.
அஷ்வத்தாமாவுக்கு இப்பொழுது கொஞ்சம் விசயங்கள் புரிகிறது . அதனால் அவர் நிறையக் கேள்விகள் கேட்கிறார். ஆனால் அச்சுதனுக்கு எதுவும் புரியவில்லை. அண்ணா கேட்கும் கேள்விகளையும், நாங்கள் சொல்லும் பதில்களையும் அண்ணாந்து கேட்டுக் கொண்டிருப்பார். பொங்கல் பொருட்கள் ஒவ்வொன்றையும் எடுத்து இது என்ன? என்ன கலர் இது? என்று தான் இவருடைய கேள்விகள் இருக்கும்.
இரண்டு பிள்ளைகளின் கையால் பொங்கல் பானை வைத்து, அவர்களைக் கொண்டு அரிசி உலையில் போட்டு பொங்கலை அமர்களமாகக் கொண்டாட வேண்டும் என்று நிறைய ஆசையோடு பொங்கலுக்காக காத்திருந்தால் காலநிலை மாற்றம் அச்சுதனுக்கு காய்சலையும், இருமலையும் கொண்டு வர பாவம் பிள்ளை பொங்கலுக்கு முதல் நாள் இரவு முழுவதும் மூச்சு விடக் கஷ்டப்பட்டு நித்திரை இல்லாமல் தவித்து நாலு மணிக்கு தான் ஏதோ கொஞ்சம் கண்ணயர்ந்தார். இத்தனை சுகவீனத்தில் பிள்ளையை காலையில் எழுப்பி , தலைக்கு குளிக்க வைக்கவா முடியும்? அதனால் அவரை நித்திரை கொள்ளவிட்டுவிட்டு...அஷ்வத்தாமவை உலுக்கு உலுக்கு என்று உலுக்கி எழுப்ப ,அவர் சிணுங்கிக் கொண்டு "இன்னும் கொஞ்ச நேரம் படுக்கப் போறன்" என்றார்.
"பிள்ளை தானே அப்புச்சாமிக்கு பொங்க வேணும் எழும்புங்கோ குஞ்சு" என்று மன்றாடி அவரை எழுப்பிக் கொண்டு போய் குளிக்க வார்த்த போது சரியாக காலை ஆறரை மணி. பாவம் பிள்ளை குளிரில் நடுங்கி உதடு வெட வெட என்று தந்தி அடித்துக் கொண்டிருக்கும் போதும் பொங்கலைப் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.



ஒரு மாதிரி எவர் சில்வர் பாத்திரமொன்ற்றில் விபூதி, குங்குமப் பொட்டு, சந்தனப் பொட்டு வைத்து அஷ்வத்தாமா கையால் அடுப்பில் வைத்து கற்பூரம் காட்டி , பால் ஊற்றி உலை வைப்பித்தேன். பால் கொதித்துப் பொங்கும் வரை அஷ்வத்தாமாவுக்கு பொறுமையில்லை. அதற்குப் பின் தானே அவருடைய முக்கிய வேலை. சும்மா நாட்களிலேயே நாங்கள் சமைக்கும் போது அம்மா நான் குக்கிங்...பண்ணுறேன் என்று வந்து கரண்டியோடு அடுப்புக்குக் கிட்ட கதிரையை இழுத்து வைத்து ஏறிவிடுவார்கள் இரண்டு பேரும். இன்று அஷ்வத்தாமா தான் பொங்கல் பொங்கப் போகிறார் என்று சொன்னால் சும்மாவா இருப்பார்?






இந்த முறை கிழக்குப் பக்கமாக பால் பொங்கி வழிந்ததில் அம்மாவுக்கு மிகவும் மகிழ்சி. முதல் மூன்று சிரங்கை அரிசியை அஷ்வத்தாமா கையால் போட்டு பொங்கல் தொடங்கியது. பொங்கிக் கொண்டிருக்கும் அச்சுதன் எழுந்து வந்தார். பாவம் சளி பிடித்திருப்பதால் மூச்சு விடவே கஷ்டப்பட்டு ஆஸ்துமா நோயாளி போலவே மூசிக்கொண்டிருந்தார்.
அதனால் அவரை குளிப்பாட்டாமல் சின்னதாக உடல் கழுவல்(Body wash) தான்.



அதன் பின் சாமி அறையில் சாமிபடங்களுக்கு முன் விளக்கு ஏற்றி, ஒரு தாம்பாளத்தில் பொங்கலும், பழங்களும் வைத்து படையல் வைத்து அம்மம்மாவும், பேரன்களும் பூஜை பண்ணி சாமி கும்பிட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் பொங்கி முடிந்து சூரியனுக்கும் , சுவாமிக்கும் படைத்துவிட்டு உடனேயே பொங்கல் பொங்காதவர்கள் வீடுகளுக்கு எங்கள் வீட்டுப் பொங்கலில் பகிர்ந்து அனுப்புவது பாரம்பரியம் ..எங்கள் குடும்பமென்றில்லை ஊரில் அநேகமானோரின் பாரம்பரியம் அது. உழவர்கள் தமது பொங்கலை மற்றவர்களுடன் பகிர்ந்து உட்கொள்வார்கள் என்பதை குறிப்பதாக இந்தப் பழக்க வழக்கம் தொன்று தொட்டு வருகிறது என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காலத்து உழவர்கள் தமது விளைச்சலை வழியில்லாத ஏழைகளுக்கு தானமாக ஒரு பகுதியை முதலில் கொடுத்துவிட்டுத் தான் தமது இல்லங்களுக்கு எடுத்துச் செல்வார்களாம். அந்தப் பழக்கம் காலப்போக்கில் பொருளாதாரத்துக்கு ஏற்ப இப்படி மருவிட்டது என்று என் அப்பா சொல்வார்.
எதுவாயினும் நன்பர்களுடன் பரிமாறி உண்பது என்பது மனதுக்கினிய விசயம் தானே? அதனால் இங்கேயும் எங்கள் நண்பர்கள் இரண்டொருவர் வீடுகளுக்கு பொங்கல் கொண்டு போய் கொடுப்பது வழக்கமாகிவிட்டது. இன்றும் மூன்று நண்பர்கள் வீடுகளுக்கு தம்பியும், என் கணவரும் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தார்கள். அதன் பின் காலை பத்தரை மணி போல் பொங்கல் சாப்பிட்டோம்.
எல்லாம் முடிந்த பின் அவரவர் தத் தமது வேலைக்குக் கிளம்பிவிட நானும் பிள்ளைகளும் அம்மாவுடன் வீட்டில் தனிய பழையபடி .....முடங்கிப் போக...வெறுமையாய் இருந்தது....பொங்கல் தினம்.
ஒரு சில மணிநேரம் யாழ்ப்பாணத்தில் பொங்கல் செய்வதாக பாவனை செய்யத் தான் முடிந்ததே தவிர உணர்வால் அனுபவிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. குழந்தைகளுக்கு ஒரு போலியாக , சின்ன வயதில் செப்பு விளையாட்டு நான் விளையாடியாதைப் போல , ஒரு பொம்மை விளையாட்டுப் போல் உணர்வுரீதியாக அனுபவிக்க வேண்டிய பாரம்பரியத்தை நாடகமாகக் காண்பிக்கிறேனோ என்று ஒரு குற்ற உணர்ச்சி எனக்குள் எழாமல் இல்லை; ஆனால் என் பிள்ளைகளுக்கு அவர்களுடைய வேர்களை அடையாளம் காட்டும் சூழ்நிலையில் நான் இல்லை. வேர்கள் என்று மாதிரிகளை மட்டுமே அடையாளம் காட்ட முடியும்.
போராட்ட பூமியில் உறவுகளின் உயிர்களை இழந்துவிடுவோமே என்ற பரிதவிப்பில் புலம் பெயர்ந்து விட்டோம்..இப்போது உயிரைத் தவிர அநேகமாக எல்லாவற்றையும் இழந்துவிட்டோமோ என்று
தோன்றுகிறது.


No comments: