Wednesday, April 2, 2008

நிறுத்துங்கள்...உங்கள் கௌரவக் கொலைகளை!

பெண்ணியம், பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகிறோமே... அந்த மூன்று வார்த்தைகளின் முக்கியத்துவம் பற்றியோ, அவற்றின் உண்மையான தாத்பரியம் பற்றியோ நாம் உண்மையிலேயே சிந்திக்கிறோமா என்று கேட்டால் இல்லை.. இல்லவே இல்லை என்று நான் அடித்துச் சொல்வேன்.

பெண் என்பது இரண்டு திரண்ட செழுமையான மார்பகங்களும், ஆணின் உடற் சேர்க்கைக்கு ஏதுவான வாசல் கொண்ட மர்மஸ்தானமும், குழந்தை பெறுவதற்கான கர்ப்பப் பையும் கொண்ட என்பு கட்டி, தசை வரிந்து, தோல் மூடிய ஒரு உருவகம். அந்த உருவகத்திடம் இருக்கும் ஆத்மாவுக்கும் அதன் உணர்வுகளுக்குமான முக்கியத்துவம் அநேகமாக கணக்கில் எடுக்கப்படாதவை.

பெண் சமுதாயம் இற்றைத் திகதிகளில் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பது கேள்வி என்றால் சகல துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு பரவியிருக்கின்றது என்பது மேம்போக்கான விடை மட்டுமே. சமூக ரீதியாக, சராசரியாக சொல்லப்படும் ஒரு நிகழ்தகவு தான் பெண்ணின் முன்னேற்றம் என்பது.

ஆனால் தனிப்பட்ட வாழ்கையில் ஒவ்வொரு பெண்ணிற்கும் உடலியல், உளவியல், கருத்தியல் ரீதியாக எந்தவொரு முன்னேற்றமும் இதுவரை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றும் பெண் சிசுக் கொலை நடந்துகொண்டு தான் இருக்கிறது. போன வருடத்தை விட இவ்வருடம் கொஞ்சம் குறைந்துள்ளது என்ற ரீதியான தகவலே தவிர முற்றாக நிறுத்தப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயம். வரதட்சணை, பாலியல் வன்முறை, வன்புணர்தல், கொலை போன்றவை பெண்ணினத்துக்கு எதிராக இன்றும் நடைபெற்று வருபவையே..!

பெண்களும் சிறுமிகளும் பெண் சிசுக்கள் உட்பட வருடத்திற்கு 5000 பேர் அவர்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்படுகின்றனர் என்பது சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு. இக் கொலைகளில் 99% சதமான கொலைகள் கற்பு, நடத்தை, வாழ்வியல் கோட்பாடு, மதக் கொள்கை என்ற போர்வையில் பெண்ணினத்தைக் கடுமையாக ஒடுக்கி வைத்திருக்கும் கலாச்சார பின்புலன்களில் ஊறியவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

ஹானர்ஸ் கில்லிங் என்று சொல்லப்படும் இத்தகைய கொலைகளில் பலியாவது பெரும்பாலும் பெண்கள்தான். பரம்பரை அல்லது குடும்பக் கட்டுப்பாடுகளுக்கு மாறாக நடந்துகொள்ளும் பெண்கள், தம் குடும்பத்தினராலேயே கொல்லப்படுவது தான் ஹானர்ஸ் கில்லிங் என்று சொல்லப்படுகின்றது. குடும்ப அல்லது பரம்பரை கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக தமது கலாச்சாரத்துக்கும் கட்டுப்பாடுகளுக்கும் புறம்பாக நடக்கும் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்; கொல்லப்பட வேண்டியவர்கள் என்பது அவர்களது கொள்கையாம். இப்படிப்பட்ட பெண்கள் தமது குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக வாழ்வது தமது குடும்பத்துக்கு அவமானமாம்; அவமானச் சின்னமாக வாழ்வதை விட அவளைத் தண்டிக்கும் தீர்ப்பில் அவளை இழப்பதில் எவ்விதக் கவலையும் அவர்களுக்கு இருப்பதில்லையாம்.

கடுமையான கலாச்சாரக் கட்டுப்பாடுகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் இனங்களைச் சேர்ந்த குடும்பங்களில் இருக்கும் பெண்கள் தமது கலாச்சாரத்துக்கோ, இன, மதக் கொள்கை - கோட்பாடுகளுக்கோ புறம்பான உறவு, நடத்தை வழிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில் அத்தகைய உறவு முறைகளை அல்லது நடத்தையைத் தமது குடும்பத்துக்கும் மதத்துக்கும் இனத்துக்கும் இழைக்கப்படும் பேரிழிவாகக் கருதி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் இத்தகைய படு பாதகமான, கொடூரமான மூர்க்கத்தனமான முறையில், தான் பெற்ற மகள் என்றோ, தன் சகோதரி என்றோ, தன் பேத்தியென்றோ, மனைவி என்றோ, தாயென்றோ உணர்வேதுமில்லாமல் அந்தப் பெண்களைக் கொலை செய்கின்றனர்.

இத்தகைய கொடும் செயல்களை உலகில் உலவ விடுவது மனித சமுதாயத்துக்கே இழுக்கு. இவற்றைத் தட்டிக் கேட்கும் திராணியில்லாத எமக்குப் பெண்ணியம், பெண் விடுதலை, சமத்துவம் என்று சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது? தாய் நாடு என்கிறார்கள்; தாய் மொழி என்கிறார்கள்; இயற்கையையும் சக்தியையும் பெண்ணாகவே கருதுகிறார்களாம்... ஆனால் பிறப்பால் ஆண்களுடன் இருக்கும் எம்மைப் பெண்ணாக மனிதாபிமானத்துடன் மதிக்கிறார்களா? இல்லை...!!

நாங்கள் பங்கெடுத்தால் தான் குற்றவாளிகளா? இல்லை.. இன்னமும் இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளை மௌனமாக வேடிக்கை பார்ப்பதாலும் குற்றவாளிகள் ஆகின்றோம். சரி.. பெண்ணாகிய நாம் எங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறோம்??

குடும்பத்தினரால் கொல்லப்படும் இந்த ஹானர்ஸ் கில்லிங் கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.சி.ஏ.ஹெச்.கே (International Campaign Against Honour Killings) என்ற அமைப்பு. பெண்ணினத்தை ஒடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதும், உதவுவதும் இவ்வமைப்பின் நோக்கம். மேலதிக விபரங்களுக்கு http://www.stophonourkillings.comஎன்ற இணையத்தை பார்வையிடவும்.

பாதுகாப்பற்று, சாவின் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு பெண்ணுக்கும் தகுந்த ஆலோசனைகளை இந்த அமைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது. மிகவும் அந்தரங்கமான, ரகசியமான ஆலோசனைகளுக்கு இந்த அமைப்பினரின் கீழ்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்: Nina at ninasalih@googlemail.com.

மேலதிக விபரங்களுக்கு email: ICAHK's founder Diana Nammi at diana.nammi@gmail.com

தொலைபேசி: l +447862733511

பெண்களைப் பொறுத்தவரை எம்மை நாமே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் சுதந்திரமும் பாதுகாப்பும் எங்களுடைய கவனத்தில் மட்டுமே தங்கியிருக்கின்றது. வரதட்சணைக் கொடுமையோ, அல்லது கொடுமைப்படுத்தும் கணவனின் வன்முறையோ அல்லது வன்புணர்தலுக்கு முயல்பவர்கள் பற்றியோ உடனடியாகக் கவனத்தில் எடுக்க வேண்டும். வன்முறைகளைச் சகிப்பவள் முட்டாள்.

உங்கள் குடும்பத்தார் மூலம் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் உடனடியாக உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவருடன் அதைப் பற்றி சொல்லிவிடுங்கள்.

பெண் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு முதல் காரணம் அவள் தான். தாரமாவதற்காகவும் தாயாவதற்காகவும் மட்டுமே பெண் என்பவள் படைக்கப்படுவதாய் நினைத்துவிடுகிறாள். அவள் குடும்பம், பாசம், அன்பு என்று முழு ஈடுபாட்டுடன் ஐக்கியமாகிவிடுவதால் தன் வாழ்கையில் முக்கியமான உறவுகளிடம் பலஹீனமாகிவிடுகிறாள். அவளுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையே பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மிகப் பரந்த இந்த உலகத்தில், வாழ்கை என்பது பலவித கோணங்களிலிருந்து ரசித்து, உணர்ந்து அனுபவிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பம். அதைப் பெண் என்பவள் மற்றவர்களால் விதிக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் முடங்கி அவர்கள் எதிர்பார்ப்பிற்கமைய வாழ்வதை விதியாக ஏற்றுக்கொள்வாள் என்றால் அவளுக்கு வாழ்கை என்பதே அனாவசியம்.

எந்த ஒரு பெண் தன் கருத்துகளுக்கு அமைய, தன்னுடைய சொந்த உணர்வுகளால் மட்டுமே வாழ்கையை வாழத் தலைப்படுகிறாளோ அந்தப் பெண் சுதந்திரமானவளாகக் கருதப்படுவாள்.

No comments: