Friday, October 3, 2008

அறியப்பட வேண்டியவர்கள்...


இது என்னுடைய பதிவு அல்ல. என் தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரைப் பற்றியும் இணையத்தில் கிடைக்கும் கட்டுரைகளை ஒரு தொகுப்பாக இங்கு சேர்க்கத் தொடங்கியிருக்கிறேன். எனது மண்ணில் பிறந்தவர்களின் பெருமையை ஒருங்காக படிக்கும் வாய்ப்பு மற்றவர்களுக்கும் கிடைக்கட்டுமே என்பதே எனது நோக்கம். இங்கிருக்கும் பதிவுகளை எழுதிய பதிவர்கள் அனைவைரையும் தலை தாழ்த்தி வணங்கி என் நன்றிகளையும் அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

அன்புடன்
சுவாதி


மாணிக்கம் யோகேஸ்வரன்


''உலகிலேயே மிகத் தொன்மையானது தமிழிசைதான்!''


மாணிக்கம் யோகேஸ்வரன், உலகப் பிரசித்திபெற்ற சர்வதேச தமிழ் இசைக் கலைஞர். பாரம்பரிய தமிழ் இசையும் மேற்கத்திய இசையும் கலந்து ஒரு புது வெள்ளமாகப் பிரவாகம் எடுக்கும் மாணிக்கம் யோகேஸ்வரன் குரல் கேட்பவர்கள் அனைவரையும் கிரங்கச் செய்யக்கூடியது. ஹாலிவுட் சினிமாவில் பாடிய முதல் தமிழர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. வார்னர் பிரதர்ஸ் தயாரித்த, ஸ்டான்லி குப்ரிக்கின் 'eyes wide shut' சினிமாவில் நிர்வாணக் காட்சியில் இவர் பாடிய பகவத் கீதை ஸ்லோகங்கள், பெரிய சர்ச்சைக் குள்ளானது. திருக்குறளை 133 ராகத்தில் பாடி இவர் வெளியிட்டுள்ள ஆல்பமும் புகழ்பெற்றது. மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார், மாணிக்கம் யோகேஸ்வரன். இதில் ஐந்து தமிழ் ஆல்பங்கள். லண்டனில் வசித்து வரும் இவர், 'ஏசியன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்' என்ற இசைக் கல்லூரியை நடத்திக்கொண்டு வருகிறார். இதன் மூலம், முக்கியமான கலைஞர்களை அழைத்து வருடம் தோறும் லண்டனில் இவர் நடத்தும் தமிழிசைக் கச்சேரிகள் பிரசித்தமானவை. இப்போது தமிழிசைப் பன்கள், சுரங்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையில் நடைபெற்ற சங்கமம் நிகழ்ச்சியில் பாடுவதற்காக, மாணிக்கம் யோகேஸ்வரன் தமிழகம் வந்திருந்த போது இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

''முதலில் உங்களைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள். எப்படி இசை உங்களுக்கு அறிமுகமானது?"

''என் சொந்த ஊர் யாழ்ப்பாணம். அங்கேதான் பிறந்து, வளர்ந்தேன். அப்போது, மிகவும் அமைதியாக, பார்ப்பவர்கள் எவரையும் உடனே வசீகரித்துவிடக்கூடிய அழகுடன் இருந்தது யாழ்ப்பாணம். எங்களுடையது இசைக் குடும்பம் கிடையாது. ஆனால் அப்பா, அம்மாவுக்கு நல்ல குரல் வளம்; தேவாரம் பாடல்களை வீட்டில் பாடுவார்கள். அவர்கள் பாடுவதைக் கேட்டு, கேட்டுதான் எனக்கு முதலில் இசை அறிமுகமானது. பாடசாலையில் சங்கீத பூஷனம் முத்துக்குமாரசாமி எனக்கு ஆசிரியராக இருந்தார். அவர் மூலமாக, சின்ன வயதிலேயே பாட்டுகளைக் கேட்கிற ஆசையும் பாடுகிற வேட்கையும், இசை வளமும் எனக்கு வந்தது.

''பாடசாலையை முடித்தவுடன் மிருதங்கம், வயலின், ஆர்மோனியம் என்று உள்ளூரிலேயே ஒரு சிறிய இசைக் குழு அமைத்து கோவில்களில் பாடினோம். அதன்பிறகு பக்கத்து ஊர்களுக்கும் சென்று சின்னச் சின்ன கச்சேரிகள் செய்யத் தொடங்கினோம். எல்லோருமே சின்னப் பசங்கள் தான். அதிகமும் பக்திப் பாடல்களும் கொஞ்சம் கிளாசிக்கலான சினிமா பாடல்களும் பாடுவோம். நல்ல வரவேற்பு இருந்தது. வாரியார் சுவாமிகள் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, என் கச்சேரி கேட்டு, பொன்னாடை போர்த்தி பட்டம் சூட்டி பாராட்டினார்.

"அமைதியாக, விளையாட்டுத் தனமாக போய்கொண்டிருந்த வாழ்க்கை; 1983 இனக் கலவரத்தில் சீர்குலைந்து சின்னாபின்னம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சரியாகிவிடும் என நினைத்தோம். ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. எனவே, என் குடும்பத்தார்கள் படிப்பதற்காக என்னை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே என் அக்கா இருந்தார்கள்.

''லண்டனுக்கு வந்தபிறகு கர்நாடக சங்கீதம், அரேபியன் பாடல்கள், மேற்கத்திய இசை எல்லாவற்றையும் முறையாகக் கற்றுக்கொண்டேன். சென்னைக்கு வந்து மிருதங்க வித்வான் டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் சங்கீதம் படித்தேன். பெரிய மேதை டி.வி. கோபாலகிருஷ்ணன். இன்று இருக்கும் இசை விற்பன்னர்களில் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இரண்டையும் ஒரே மேடையில் பாடக்கூடியவர் உலகில் இவர் மட்டும்தான். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்றவர்களுக்கு இசை சொல்லிக்கொடுத்தவர். அவரிடம் கற்ற சங்கீதம்தான் இன்றும் என் பலம். மீண்டும் லண்டன் திரும்பி, கோயில்களில் கச்சேரி செய்து கொண்டிருந்தேன். ஒரு கோயில் கச்சேரியைக் கேட்டுவிட்டு, சர்வதேசப் பிரபலமான ஜெர்மனியில் உள்ள 'dissidenten' ஜாஸ் இசைக்குழுவில் என்னைப் பாட அழைத்தார்கள். அது ஒரு பெரிய வாய்ப்பு; ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா என அவர்களுடன் நான் சுற்றாத நாடுகள் இல்லை. உலகப் பிரசித்திபெற்ற பல இசைத் திருவிழாக்களில் அவர்களுடன் பாடியிருக்கிறேன். அவர்களது இரண்டு ஆல்பங்களில் தமிழிலேயே பாடினேன். அந்த ஆல்பங்களுக்கு கிடைத்த வரவேற்பால் ஜெர்மனி, பிராங்க்பர்ட் இசைத் திருவிழாவில் என்னை தமிழிசைக் கச்சேரி செய்யச் சொன்னார்கள்.

''இப்போது, 'the shout' இசைக்குழுவில் இருக்கிறேன். ஜாஸ், ஒபரா, இந்திய பாரம்பரிய சங்கீதம் என வெவ்வேறு பின்னணி கொண்ட இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழு அமைத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் உதித்ததுதான் 'தி சவுட்'. மொத்தம் பதினாறு பேர் இருக்கிறோம். எல்லோருமே அந்தந்தத் துறைகளில் மிகப்பெரிய கலைஞர்கள். ஆங்கிலம், தமிழ், அரேபியன், லத்தின் அமெரிக்கா இசை என எல்லாம் கலந்த, ஒரு ஒழுங்கு இல்லாத இசைக் கோர்வையாக இருக்கும் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எட்டு வருஷத்தில் உலகளவில் முக்கியமான இசைக்குழுக்களில் ஒன்றாக ஆகியிருக்கிறோம். லண்டனில் வருஷா வருஷம் நடக்கும் மிகப்பெரிய இசைவிழா பிபிஸி விழா. அதில் பாடும் வாய்ப்பு சென்ற வருஷம் எங்களுக்குக் கிடைத்தது. 600க்கும் மேற்பட்ட சிம்பொனி இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பாடிய அந்த நிகழ்ச்சி சிலிர்ப்பான ஒரு அனுபவம்.

"நான், இந்திய பாரம்பரிய சங்கீதத்தைச் சேர்ந்தவன் என்றாலும் என் பாடல்களை விரும்பி கேட்பவர்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். 'இந்திய இசையைக் கேட்டால் மனசுக்கும் இதயத்துக்கும் ஒரு அமைதி கிடைக்கிறது; தியானம் செய்வது போல் இருக்கிறது' என்கிறார்கள் அவர்கள்.''

''ஹாலிவுட் சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?''

''ஹாலிவுட்டில் மிகப்பெரிய இசைக் கம்போஸர் ஜோஸ்லின் புக். அவருடைய இரண்டு ஆல்பங்களில் நான் பாடியிருக்கிறேன். அந்த ஆல்பங்களைக் கேட்ட ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக், ஜோஸ்லின் புக்கிடம் இவர் என் படத்தில் பாடவேண்டும் என்று சொல்லி என்னை அழைத்தார். அந்தப் படம்தான் 'eyes wide shut'. கணவனை ஜலசியாக்குகிற ஒரு மனைவி, அதனால் வரும் பிரச்னைகள் பற்றிய படம். அதில் 'கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் வருவான்' என்ற அர்த்தம் தரும் பகவத்கீதை ஸ்லோகங்களை பாடினேன். படம் வெளியான பிறகுதான், நிர்வாணக் காட்சியில் அப்பாடல் இடம்பெற்றிருப்பது தெரிந்தது. அமெரிக்காவில் மிகப்பெரிய சர்ச்சை ஆகிவிட்ட்து. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தினர் அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். பிறகு, 'காதலா, இன்பமா, இதுவொரு நரகமா...' என்று தமிழிலேயே எழுதி பாடி மாற்றினோம். அதன்பிறகு ஸ்பைக் லீயின் '25th hour' சினிமாவில் பாடினேன். தொடர்ந்து சில படங்களில் பாடியிருக்கிறேன்.''

''தற்கால தமிழ் சினிமா இசை பற்றிய உங்கள் மதிப்பீடு?''

''இசையை எப்படி ரசிப்பது என்பதற்கு முறையான ஒரு பயிற்சி இருக்கிறது. தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களிடம் இந்த ரசனைப் பயிற்சி இல்லை. எனவே, இந்த பாடல் சரியாக இல்லை; எங்களுக்கு புதிதாக வேண்டும் என இசையமைப்பாளர்களிடம் கேட்டு வாங்கத் தெரியவில்லை. தமிழ் சினிமா இசையின் தரம் குறைந்துகொண்டே வருவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். தேவைதான் உற்பத்தியை தீர்மானிக்கிறது. தமிழ்நாட்டில், உலகம் முழுக்க தன் ஆதிக்கத்தைச் செலுத்தும் வல்லமைபடைத்த ஏ.ஆர். ரஹ்மான் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சிறந்த இசையை ரசிகர்கள்தான் கேட்டுப் பெறவேண்டும். அதற்கு ரசிகர்களும் கொஞ்சம் உழைக்க வேண்டும்.''

''உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக் குழுவினருடன் பணியாற்றிய இருக்கிறீர்கள். இந்த அனுபவத்தின் பின்னணியில் உலக இசையில் தமிழிசையின் இடம் என்ன என மதிப்பிட முடியுமா?''

''சந்தேகமே இல்லாமல், உலகிலேயே மிகத் தொன்மையான இசை தமிழிசை தான். நான் தமிழன் என்பதால் இதைச் சொல்லவில்லை. ஐயாயிரம் வருஷத்துக்கு மூன்னால் இருந்தே தமிழிசை பாடப்பட்டு வந்திருக்கிறது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் பழங்குடியின மக்களிடமும், கேரளாவில் சாதாரண மக்களிடமும் அந்த பழங்காழ இசையின் எச்சங்களும் சுவடுகளும் இன்றும் இருக்கிறது. நீலகிரி மலையில் வசிக்கும் இருளர்கள் வாசிக்கும் புல்லாங்குழலின் ஓசை தோடி ராகம் தான். கிரேக்கம், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பழங்கால இசைகளில் தமிழிசையின் கலப்பு இருக்கிறது. மக்கள் இடம்பெயர்ந்து குடியேறியது, கண்டங்கள் நகர்வு போன்ற பல காரணங்களால் இது நடந்திருக்கலாம். ஐரோப்பாவில் உள்ள சில நாட்டுப்புற இசைகள் கிட்டத்தட்ட தமிழிசையைப் போல இருக்கின்றன.''

''ஈழத்தில் நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டே வரும் பிரச்னை குறித்து...''

''சின்ன வயதில் படிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டதுதான். அன்று, விரைவில் என் சொந்த ஊருக்கு திரும்புவேன்; அப்பா, அம்மா, உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வேன்; என் பள்ளித் தோழர்களுடனும் பால்ய கால நண்பர்களுடனும் தெருப் புழுதி கிளம்ப விளையாடிய என் தாய் மண்ணை முத்தமிடுவேன் என்றுதான் நினைத்தேன். ஆனால், இன்று வரைக்கும் யாழ்ப்பாணம் திரும்ப முடியவில்லை. இடையில் ஒரே ஒரு முறை மட்டும், கச்சேரி செய்வதற்காக கொழும்பு சென்றேன். அந்த ஒருமுறைதான் இலங்கையைப் பார்த்ததும். 1987 அக்டோபர் 19ஆம் தேதி நடந்த ராணுவத் தாக்குதலில் என் அப்பாவும் தங்கையும் இறந்துவிட்டார்கள். அவர்களின் இறுதிச் சடங்குக்குகூட என்னால் செல்ல முடியவில்லை.

''நார்வே முயற்சியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை ஒரு நம்பிக்கையைத் தந்தது. சமீபமாக அதிலும் அடி விழுந்திருக்கிறது. இப்போது, இலங்கையில் நடக்கும் யுத்தம் மிகவும் துரதிஷ்டவசமானது. தாய்லாந்தில் 2001இல் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, 'peace for paradise' என்ற ஆல்பத்தை நான் வெளியிட்டேன். மிகப்பெரிய வரவெற்பைப் பெற்றது அந்த ஆல்பம். 'தாய்லாந்திலே அமைதி பேச்சு ஆனது... தாய் நாட்டிலே இன்பம் பெருகிப் போனது... தாய்த் தமிழ் தலைவர்கள் சிங்கள அமைச்சர்கள்... தூய உள்ளத்துடன் மனம் நிறைந்த பேச்சு... மனதில் நிம்மதி ஆச்சு....' என அதில் ஒரு பாடல் வரும். இப்போது அந்த மன அமைதி பாடலில் மட்டும்தான் இருக்கிறது. உலகம் முழுக்க எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்து, என் தாய்நாட்டினர் புலம்பெயர்ந்து வசிக்கும் இடங்களுக்குச் சென்று, 'peace for paradise' பாடல்களை மீண்டும் பாடவேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். ஒரு இசைக் கலைஞனாக என் தாய்நாட்டு அமைதிக்கு என்னால் இயன்ற பங்களிப்பு இது''

சந்திப்பு: தளவாய் சுந்தரம்
நன்றி : என்.சுரேஷ், பண்புடன் குழுமம்.


*********************************************

இலண்டன் சிவகுருநாதப் பிள்ளை அவர்களின் தமிழ்வாழ்க்கை


சைவமும் தமிழும் இரு கண்களெனக் கொண்ட குடும்பத்தில் தோன்றியவர்
சிவகுருநாதப் பிள்ளை.சிவா பிள்ளை என அறிஞர் உலகால் அழைக்கப்படும் இவர் வாழ்வது என்னவோ இலண்டன் மாநகராக இருந்தாலும்,பணிபுரிவது கோல்டுசுமித் பல்கலைக்கழகமாக இருந்தாலும் நினைவுகள் என்னவோ சிற்றூர் வாழ்க்கையைச் சிந்தித்துக் கொண்டுள்ளது. பிள்ளை என்பது நாம் நினைப்பது போல் சாதிப்பட்டமாக நினைக்க வேண்டாம்.அவர்களின் குடும்பப் பெயராக
நிலைத்துவிட்டது.

கணிப்பொறித்துறையில் தொடக்க காலம் முதல் கவனம் செலுத்தி வருபவர்.
கணிப்பொறி யைக் கற்று காசு பார்க்கும் சராசரி இளைஞர்களைப் போல் அல்லாமல் தம் மொழிக்கும், இனத்திற்கும் கணிப்பொறியைப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தவர். அதனால்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கணிப்பொறியைக் கற்று அதன் வழியாகத் தமிழ் மொழியை அதில் புகுத்தித் தமிழ்க்கல்வியை எளிமைப்படுத்தியவர்.அயலகச்சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை.காய்ந்த மரத்தில் கட்டாரி வீசுவதற்குச் சமம்.

மொழியாலும் பழக்கவழக்கங்களாலும் அயல்நாடுகளில் பிரிந்து கிடக்கும் மழலைச் செல்வங்களுக்கு அவர்களின் முன்னோர்களின் மொழியை அறிமுகம் செய்வதும் அவர்களின் பண்பாட்டை நினைவூட்டுவதுமான பணியில் சிவப்பிள்ளை அவர்கள் ஈடுபட்டுள்ளார். இவர்தம் வாழ்க்கையை அறிவதன் வழியாகத் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி வரலாற்றின் சில பகுதிகள் வெளிச்சம் பெறும்.

அறிஞர் சிவகுருநாதப் பிள்ளை அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில்
1942 மே 9 இல் பிறந்தவர்.பெற்றோர் சிவ.கணபதிபிள்ளை, நாகம்மா. யாழ் இந்துக் கல்லூரியில் 19 அகவை வரை கல்வி பயின்றவர். பிறகு நம்மூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி போல் இலங்கையில் உள்ள மாணவ ஆசிரியர்
பயிற்சியை (teacher training) கோப்பாய்க் கிறித்தவக்கல்லூரியில்
பயின்றவர். பொறியியல் படிப்பைக் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில்
பகுதி நேரமாகப் பயின்றவர்.இலங்கையில் தமிழ் மாணவர்கள் படிப்பதில் இருந்த
இடையூற்றின் காரணமாகவும் செல்வச்செழிப்பின் காரணமாகவும் இலண்டனுக்கு 1967 இல் படிக்கச் சென்றார். Diplomo in Mecanical Enginering பயின்றார்.

பட்டறிவு இல்லை என்பதால் அங்கும் சரியான பணி கிடைக்கவில்லை. தொழில்நுட்ப உதவியாளராகப் பகுதிநேரப் பணியில் ஈடுபட்டார்.
பகுதிநேரமாக ஆர்வம் காரணமாக கணிப்பொறி,தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை முடித்தார். நாட்டிங்காம் பல்கலைக்கழகம் இவர் கல்வி வளர்ச்சிக்குப்
பெரிதும் பயன்பட்டது. பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் கணிப்பொறி
ஆய்வாளராக(1977-1980) பணி புரிந்தார்.

1980 இல் கோல்டுசுமித் பல்கலைக்கழகத்தில் பணியேற்றார்.அந்நாளில்
கணிப்பொறி என்பது இன்று நாம் பயன்படுத்தும் மடிக்கணினி போலவோ,மிசைக்கணினி
போலவோ சிறிய அமைப்பில் இருக்காது.அது பெரிய அளவில் 'மெசின்'போல்
இருக்கும். சில நிறுவனங்களின் கணிப்பொறி என்பது ஒரு கட்டடத்தில்
இருக்கும் பல பொறிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.அதன்பிறகே பல வடிவ
வளர்ச்சியைக் கணிப்பொறி கண்டுள்ளது.1947 இல் கணிப்பொறி சில
குழுமங்களில்தான் இருந்துள்ளது.

1980 இல் கணிப்பொறி இவர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகம்
ஆனது.இவர் கணிப்பொறி பயிற்றுவிக்கும் பணியில் இருந்தார்.1985 இல்
ஆசிரியர்களுக்குக் கணிப்பொறி யைப் பயிற்றுவிக்கும் பணியில்
ஈடுபட்டிருந்தார்.

1984 முதல் இலண்டனில் தாய்மொழியைக் கற்பிக்கும் விழிப்புணர்ச்சி
ஏற்பட்டது. எட்டு மொழிக்கு இவ்வாய்ப்பு அமைந்தது.தமிழ் கற்பதற்குப்
பலரும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். தொடக்கப்பள்ளிகளில் தமிழைக்கணிப்பொறி வழியாகக் கற்பிக்கும் விழிப்புணர்ச்சி பல இடங்களில் ஏற்பட்டது. 1995 இல் இம்முயற்சி தொடங்கப்பட்டது.

1997-98 இந்தியாவில் உத்தமம் என்ற அமைப்பு தமிழைப் பயிற்றுவிக்கும்
வழிமுறைகளை உரைத்தது. இலண்டனில் 2003 இல் புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.பல இனத்தவர்களும் தங்களின் சமூக மொழிக்கு முதன்மை வேண்டும் என வாதிட்டனர். இங்கிலாந்தில் 310 மொழிகள் பேசப் படுகின்றன.25 மொழிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர். இம்மொழி களுள் 12 மொழிகள் தேர்ந்தெடுக்கப்பெற்று, மொழியை அதன் கட்டமைப்பு அடிப்படையில் இவ்வாறு தான் கற்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்து கற்பிக்க முயன்றனர்.

தமிழ்மொழியை யாரும் விரும்பாததால் தமிழ் கற்பதற்கு வாய்ப்பு இல்லாமல்
போனது. சிவப்பிள்ளை அவர்களின் நண்பர் நிறுவனம் ஒன்றில் 25 மாணவர்கள்
தமிழ் கற்கும் சூழல் உருவாக்கப்பட்டு தமிழ் கற்பதற்கு உரிய வாய்ப்பு
இங்கிலாந்தில் இவரால் பெறப்பட்டது.இன்று 75 மாணவர்கள் தமிழ் கற்கின்றனர்.

தமிழ் மாணவர்கள் எளிதாகத் தமிழ் மொழியைக் கற்கப் பல ஆய்வுகளைச் செய்து
குறுவட்டுகளை,நூல்களைச் சிவகுருநாதப் பிள்ளை அவர்கள்
உருவாக்கியுள்ளார். காண்பொளி(வீடியோ) வழியாகத் தமிழ் கற்பிப்பது என்ற
அடிப்படையில் இவர் பல ஆய்வுளைச் செய்து வருகின்றார். இவர்தம் தமிழ்க்
கல்விப் பணியைப் பாராட்டி இங்கிலாந்தில் இவருக்கு EAL என்னும் உயரிய
விருது வழங்கப்பட்டது. மின் வெண்பலகை வழி கற்பிக்கும் INDIRECTIVE WHITE
BOARD முறையைக் கண்டுபிடித்துள்ளார்.

சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் 1975 இல் ஞானபூபதி அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.மூன்று பெண்மக்கள் இவர்களுக்கு இலண்டனில் உள்ளனர். இவர்தம் துணைவியார் இலண்டனில் கணக்காளராகப் பணிபுரிகின்றார்.

இளம் வயதில் குறும்புக்காரச் சிறுவனாக இருந்த சிவப்பிள்ளை சுவாமி
சச்சிதானந்தர் அவர்கள் இலங்கைக்கு வந்ததும் அவரிடம் யோகா முதலிய கலைகளைக் கற்றுக்கொண்டார். இச் சச்சிதானந்தர் நடிகர் இரசினிகாந்து அவர்களின் குரு என்பதும் பாபா படம் முதல்நாள் திரையிட்டபொழுது முதற்காட்சி காண வந்து இறந்தவர் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டிய செய்தியாகும். 1953 இல் சச்சிதானந்தர் மேல் ஏற்பட்ட ஈடுபாடு இன்றுவரை குறையாமல் இவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவப்பிள்ளையின் குடும்பம் இலங்கையில் மிகச்சிறந்த செல்வச்செழிப்பிலான
குடும்பம். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். எனவே இலண்டன் சென்று
படிக்கும் வாய்ப்பு அமைந்தது.இவர்தம் பெரியப்பா குடும்ப மரபுகளை
மீறாதவர்.இவர்தம் முன்னோர்கள் கட்டைத்திராய் என்ற ஊரில் கட்டிய
முத்துமாரியம்மன் கோயில் புகழ்பெற்றது.தங்கைகள் இக்கோயிலையும் நில
புலங்களையும் பார்த்துக்கொள்கின்றனர்.

சிவப்பிள்ளை இனச்சிக்கல் காரணமாக இலங்கைக்ககுச் செல்ல முடியாத
நிலை.இவரின் அம்மா இறந்த ஒரு மணி நேரத்தில் அப்பாவும் இறந்துவிட்டார்
இவர்களை அடக்கம் செய்யச் செல்லமுடியத நிலை சிவப்பிள்ளைக்கு
ஏற்பட்டது.எனவே இவரின் உடன் பிறந்த தங்கைகள் இவரின் பெற்றோரை அடக்கம் செய்தனர்.

சிவப்பிள்ளை அவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம்,சிங்களம்,சமற்கிருதம்
உள்ளிட்ட மொழிகள் தெரியும்.1990 இல் பெரும் பொருள் வளத்துடன் இருந்த
சிவப்பிள்ளை அவர்கள் நண்பர்களுக்கு உதவச்சென்று மிகப்பெரும் பொருள்
இழப்பிற்கு ஆளானார். இலண்டனில் இருந்த பல வீடுகளை விற்றார்.விடுமுறை
நாட்களில் மகிழ்வுந்து ஓட்டியும்,பிற பணிகளைச் செய்தும் இழந்த செல்வத்தை
மீட்டார்.மரக்கறி உணவுகளை விரும்பி உண்ணும் சிவப்பிள்ளை அவர்கள் சிவ
மதத்தில் மிகுந்த நம்பிக்கைகொண்டவர்.

பல நாடுகளுக்குச் சென்று தமிழ்க்கல்வி பயிற்றுவிப்பது தொடர்பில் பல
கட்டுரைகளைக் கருத்தரங்குகளுக்கு வழங்கியவர்.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வந்துசெல்லும் சிவப்பிள்ளைக்குத் தமிழகக் கோயில்களைக் கண்டு வழிபடுவது பிடித்தமான செயலாகும். சிவப்பிள்ளை இலண்டன் மாநகரில் இருந்தாலும் தம் தாய்நாடான இலங்கைக்குச் சென்று தம் வயல் வரப்புகளில் காலார நடந்து, சேற்றிலும் ஆற்றிலும் புரளவேண்டும் என்பதையே விரும்புகிறார். தமிழ்க்கல்வி வரலாற்றில் பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளதால் என்றும் நினைவுகூரப்படுவார்.

நன்றி : மதிப்புக்குரிய மு. இளங்கோவன் அவர்கள்
http://muelangovan.blogspot.com/

********************************************

முனைவர் கா.சிவத்தம்பி அவர்களின் தமிழ் வாழ்க்கை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டுபெயர்களை
அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர்.மற்றவர்
கா.சிவத்தம்பி.தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த
இவர்கள்அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி
மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின்
சிறப்பை முன் வைத்தவர்கள்.

மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருதமொழி இந்தியா முழுவதும்
பரவியிருந்தமொழி எனவும் இலக்கண,இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு
வழங்கியமொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும்
சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ்
இலக்கியங்கள்கிரேக்க,உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை
உடையது,சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் நிறுவிக்காட்டிச் சங்க
நூல்கள் மேற்குலகில்கவனம்பெற உழைத்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி எனும்
இருவரும் என்றும் தமிழர்களால் நன்றியுடன் போற்றத்தக்கவர்களே.

க.கைலாசபதி கிரேக்க வீரநிலைக் கவிதைகளுடன் சங்க இலக்கியங்களை ஒப்பிட்டு
ஆய்வுசெய்து 1966 இல் Tamil Heroic Poetry (தமிழ் வீரநிலைக் கவிதை)
என்னும் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்றவர். கா.சிவத்தம்பி அவர்கள் 1970 இல் பண்டைய தமிழ்ச்சமூகத்தில்
நாடகம் (Drama in Ancient Tamil Society) என்னும் தலைப்பில் ஆய்வேடு
வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவ்விரு
ஆய்வேடுகளும் உலக அளவில் அனைவராலும் மதிக்கப்படும் ஆய்வுத்தரத்தன. ஈழத்து
இரட்டை அறிஞர்களான இவ்விரு அறிஞர்களுள் கா.சிவத்தம்பி யின் வாழ்வையும்
இலக்கியப் பணிகளையும் இக்கட்டுரை நினைவுகூர்கிறது.

கா.சிவத்தம்பி இளமை வாழ்க்கை

கா.சிவத்தம்பி அவர்கள் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள கரவெட்டி
என்னும் ஊரில் 1932,மே பத்தாம் நாள் பிறந்தவர்.பெற்றோர்
கார்த்திகேசு,வள்ளியம்மை அவர்கள். தந்தையார் பண்டிதராகவும் சைவப்
புலவராகவும் விளங்கியவர். எனவே சிவத்தம்பி அவர்களுக்கு இளமையில்
கல்வியார்வம் தழைக்க வாய்ப்பு மிகுதியாக இருந்தது.கரவெட்டி விக்கினேசுவரா
கல்லூரியில் தொடக்கக் கல்வியையும்,கொழும்பு சாகிராக் கல்லூரியில்
இடைநிலைக் கல்வியையும் கற்றவர்.இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில்
இளங்கலை(1956), முதுகலைப்(1963) பட்டங்களைப் பெற்றவர்.1970இல்
பர்மிங்காம் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவர் பர்மிங்காம்
பல்கலைக் கழகத்தில் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வேடு பலதுறைச்செய்திகளை
உள்ளடக்கி வெளிவந்த ஆய்வேடாகும்.

தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றி விரிவாக ஆராயும் இவர்தம் ஆய்வேட்டில்
கிரேக்க நாடகங்களின் தோற்றம்,வளர்ச்சி,தன்மைகள்
விளக்கப்பட்டுள்ளன.அதுபோல் தொல்காப் பியம்,சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்
உள்ளிட்ட நூல்கள் கல்வெட்டுகள், நாணயங்கள் உள்ளிட்ட தரவுகளை உட்படுத்தி
தம் ஆய்வை சிவத்தம்பி நிகழ்த்தியுள்ளார். எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு
ஆய்வுகளை எளிமைப்படுத்தி முனைவர் பட்டம் பெறும் இக்காலச் சூழலில்
இவ்வாய்வேட்டின் தரவு தொகுப்பு,வகைப்படுத்தல்,ஆய்வு செய்தல் ஆங்கிலத்தில்
எழுதுதல் எனப் பல கட்டங்களைத் தாண்டியே இவர் ஆய்வு நிகழ்ந்துள்ளது.தமிழக
வரலாறு, சமூக அமைப்பு உள்ளிட்ட பல தகவல்கள் இவ்வாய்வேட்டில்
விளக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட ஆய்வேடு பத்தாண்டுகளுக்குப் பிறகு
திருத்தங்களுடனும் கூடுதல் செய்திகளுடனும் 1980 அளவில் புது நூற்றாண்டுப்
புத்தக நிறுவனத்தின் வழியாக வெளிவந்தது.அந்த நூல் தமிழக அரசின் சிறந்த
பரிசினையும் பெற்றது.25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேராசிரியர்
அம்மன்கிளி முருகதாசு அவர்களால்(சிவத்தம்பி அவர்களின் மாணவர் இவர்)
மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

சிவத்தம்பியின் ஆய்வேடு வெளிவந்த பிறகு தமிழின் மிகப்பெரிய துறைகளுள்
ஒன்றாக இருக்கும் நாடகத்துறை பற்றிய விழிப்புணர்ச்சி ஈழத்தில்
ஏற்பட்டது.பாடத்திட்டங்களில் நாடகம் முதன்மை இடம்பெற்றது.பல மாணவர்கள்
நடிக்கவும் ஆராயவும் இத்துறையில் புகுந்தனர்.தமிழ் நாடகம்
இவ்வாய்வேட்டின் வருகைக்குப் பிறகு ஈழத்தில் மறுமலர்ச்சி பெற்றது
எனலாம்.தமிழகத்து அறிஞர்களும் நாடகத்துறையில் கவனம் செலுத்த இந்த நூல்
ஒரு காரணமாக அமைந்தது.

சிவத்தம்பி தொடக்கத்தில் கொழும்பு சாகிராக் கல்லூரியல் ஆசிரியராகப்
பணிபுரிந்தார்.1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பதினேழு
ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள்
மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்
பணிபுரிந்தார்.சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து,செர்மனி
உள்ளிட்ட பல நாடுகளின் கல்வி நிறுவனங்களில் வருகைதரு பேராசிரியராகப்
பணிபுரிந்தவர்.அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கல்வி நிறுவனங்களின்
அழைப்பின்பேரில் சிறப்புரைகள் வழங்கித் தமிழாய்வுப் புலத்தில்
ஆக்கப்பணிகள் புரியும் கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை
வியப்பளிக்கிறது.தமிழ்ப்பேராசி
ரியராகவும்,பன்மொழி அறிஞராகவும்,கலை
விமர்சகராகவும்,சிந்தனையாளராகவும்,அரசியில் அறிவு நிரம்பியவராகவும்
விளங்குபவர்.

கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை

கா.சிவத்தம்பி அவர்கள் மார்க்சியநோக்கில் திறனாய்வு செய்பவர் என்பது
ஆய்வுலகம் நன்கு அறிந்த ஒன்றாகும்.ஆனால் அவர் மிகச்சிறந்த நடிகர்
என்பதும்,நாடக எழுத்தாளர் என்பதும் பலநாடகங்களை
எழுதியவர்,இயக்கியவர்,நடித்தவர் என்பதும் தமிழுலகம் பரவலாக அறியாத
ஒன்றாகும்.இலங்கையின் நாடக மரபுகளை மீட்டெடுத்த வித்தியானந்தன்,
சிவத்தம்பியின் பணிகளை ஈழத்து அறிஞருலகம் நன்றியுடன் நினைவு கூர்கிறது.

தமிழ் நாடக வளர்ச்சியில் கா.சிவத்தம்பியின் பங்களிப்பு மிகப்பெரியது என
மௌனகுரு குறிப்பிடுவார்.கூத்து,நாடக,அரங்கியல் சார்ந்த செய்திகளைப் பாடத்
திட்டத்தில் கொண்டு வந்தவர் கா.சிவத்தம்பி அவர்கள்.பல கல்லூரி,
பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்களில் இவர் இடம்பெற்ற பொழுதெல்லாம்
இவர் தரமான பாடத்திட்டங்கள் அமைய உதவியுள்ளார்.
பல்கலைக்கழகப்பணிக்காலத்தில் பல மேடை நாடகங்களில் நடித்தவர்.வானொலி
நாடகங் களிலும் நடித்துள்ளார்.

இலங்கையர்கோன் எழுதிய 'விதானையார் வீட்டில் ' தொடர்நாடகத்தில் இவர்
முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்.இவரின் நடிப்பு இவருக்கு நல்ல புகழை
ஈட்டித்தந்தது. கைலாசபதியும் இந்நாடகத்தில் நடித்ததாக அறியமுடிகிறது.

நாட்டார் இயல் ஆய்வுகளில் கா.சிவத்தம்பி அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.
முல்லைத் தீவில் இவர் ஏற்பாடு செய்திருந்த நாட்டாரியல்விழா அனைவராலும்
நினைவு கூரத்தக்கது. நாடகம்,கூத்து இவற்றின் ஊடாகத்தமிழ்
மக்களை,தமிழர்களின் பண்பாட்டை அறிய
முனைந்தவர்.யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் இவர் நுண்கலைத் துறைத்தலைவராகப்
பணிபுரிந்தபொழுது பல்வேறு நாடக முயற்சிகள் வளர்முகம் கண்டன.யாழில்
புதியநாடக மரபு உருவானது.ஈழத்துப்பகுதியில் நடிக்கப்பெற்ற கூத்துகளின்
வழியாக புதிய நாடக மரபுகளைக் கட்டமைக்கும் முயற்சியில் சிவத்தம்பி
முன்னின்றார். வன்னிப்பகுதியில் வழக்கத்தில் இருந்த கூத்துகள் உள்ளிட்ட
பிற கலைகளை வளர்க்க மாநாடு,கருத்தரங்குகளை நண்பர்களின் துணையுடன்
செய்தவர்.

மௌகுருவின் இராவணேசன் என்னும் புகழ்பெற்ற நாடகம் சிறந்தவடிவம் பெற்றதில்
சிவத்தம்பிக்குப் பெரும் பங்கு உள்ளதை மௌனகுரு
குறிப்பிடுவார்.கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் இடம்பெறும் இராவணனின்
பாத்திரப்படைப்பை விளக்கி,இராவணன் பாத்திரத்தைக்
கோபம்,வெட்கம்,ஏளனச்சிரிப்பு இவற்றைக் கொண்டு மிகச்சிறப்பாக வடிவமைக்க
சிவத்தம்பி உதவியதை மெனகுரு நன்றியுடன் நினைவுகூர்வர். கா.சிவத்தம்பி
மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதில் வல்லவர்.இவர்தம் வகுப்புகள் நான்கு மணி
நேரம்வரை நீண்டுவிடுமாம்.அவ்வளவு நேரமும் மாணவர்கள் ஆர்வமுடன் அமர்ந்து
படித்துள்ளனர்.

தொல்காப்பியம். அகத்திணை மரபுகள்,நாடகம் பற்றி பாடம் நடத்துவதில்
கா.சிவத்தம்பி அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டாம்.

தமிழ்இலக்கியம்,சமயநூல்கள்,சமூகவியல்,மானிடவியல்,அரசியல்,வரலாறு,கவின்கலைகளில்நல்ல
புலமைபெற்றிருந்த கா.சிவத்தம்பி அவர்கள் இத்துறை சார்ந்த
திறனாய்வுக்கட்டுரைக ளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.இத்துறை சார்ந்து
பல இடங்களில் பேசியுள்ளார். இவர் கட்டுரைகளை நூல்களைக் கற்றவர்களும்
இவரிடம் நேரடியாகக் கற்றவர்களும் இவர் வழியில் ஆய்வுகளை மேற்கொள்வது
ஒன்றே இவரின் அறிவுத் திறனுக்குச் சான்றாக அமையும். இவரின் மாணவர்கள்
இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளனர்.

தமிழகத்துப் பல்கலைக் கழகங்கள்,கல்வி நிறுவனங்களுடன் நல்ல தொடர்பில் உள்ள
கா.சிவத்தம்பி அவர்கள் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள்,கல்வியளர்கள்,
இளைஞர்களுடன் நல்ல உறவுகொண்டவர்.அவர்களின் நூல்களைக் கற்று நூல்குறித்த
சிறப்புகளை எடுத்துரைத்துப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டவர்.
தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்கள்,கலைவிழாக்களை நன்கு உற்று நோக்கி
விமர்சிப்பவர்.ஈழத்து அரசியல் எழுச்சியில் இவரின் கருத்துகள் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

சிவத்தம்பியின் தமிழ்ப்பணிகளை மதிக்கும் முகமாக இவருக்குத் தமிழக அரசு
திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.இலங்கை சப்பானிய
நட்புறவுக்கழக விருது பெற்றவர்.2000 இல் இவர் பெயர் உலக அளவிலான
புலமைப்படியலில் இடம்பெற்றுள்ளது. பல அமைப்புகள் இவருக்குப் பரிசில்கள்
பாராட்டுகள் வழங்கியுள்ளன.கா.சிவத்தம்பி அவர்களின் எழுபத்தைந்து அகவை
நிறைவையட்டி அவரின் அன்பிற்கு உரியவர்கள் பல விழாக்களை எடுத்துக்
கொண்டாடியும் அவர்களின் அன்பு வெளிப்படும்படி நூல்கள் வெளியிட்டும்
கருத்தரங்குகள் நிகழ்த்தியும் அவரின் தமிழ்ப் பணிகளை மதித்தனர்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுடன் பழகியவர்கள் பயின்றவர்களின்
பங்களிப்புடன் கானா பிரபா அவர்கள் பேராசிரியரின் பலதுறைப் பங்களிப்புகளை
ஒலிப்பதிவு செய்து வானொலி வழியும் இணையம் வழியும் உலகம் முழுவதும்
பரப்பியுள்ளது மற்றவர்களுக்கு அமையாத பெருஞ்சிறப்பாகும்.இவ் வானொலி,இணைய
ஒலிப்பதிவில் பேராசிரியரின் மாணவர்கள், அன்பிற்குரியவர்களான அம்மன்கிளி
முருகதாசு, மௌனகுரு, பாலசுகுமார், வீ.அரசு ஆகியோரின் உரைகள்
பேராசிரியரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.

கா.சிவத்தம்பி அவர்களின் பணிகள் செப்பமுடன் நடைபெறுவதற்குக் காரணம்
அவரின் துணைவியார் ரூபவதி நடராசன் அவர்களாவார்.பேராசிரியரின் பணிகளுக்கு
ஒல்லும் வகையிலெல்லாம் உதவியது இவரே. எழுத்துப்பணிகள், ஆய்வுப்
பணிகள்,குடும்பப் பொறுப்புகளில் அம்மையார் பல வகையில்
துணைநின்றவர்.இவர்களுக்கு கிரித்திகா, தாரிணி,வர்த்தினி என்னும் மூன்று
மக்கள் செல்வங்களாவர்.பேராசிரியரின் முதல் நூல் மார்க்கண்டன்
என்பதாகும்.

தமிழ்ச்சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்(1966) என்ற இவரின் நூல்
அனைவராலும் பேசப்படும் ஒன்றாகும்.தமிழ்மொழி, இலக்கியம்,கவின்கலைகள்,
சமூகம், மானுடவியல், அரசியல் சார்ந்த பல நூல்களை மார்க்சியப் பார்வையில்
எழுதியுள்ள சிவத்தம்பி அவர்கள் தமிழ் ஆராய்ச்சி உலகில் புதிய வீச்சுகளை
வழங்கியவர் எனில் மிகையன்று.இவர்தம் ஆய்வுப் போக்குகளைத் தாங்கி அடுத்த
தலைமுறை ஆய்வாளர்கள் சிவத்தம்பியின் பணிகளைத் தமிழுலகில் நிலைநாட்டுவர்.

கா.சிவத்தம்பி அவர்களின் நூல்களுள் சில :

1.இலங்கைதமிழர் -யார்,எவர்?
2யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
3.தமிழில் இலக்கியவரலாறு
4.இலக்கணமும் சமூக உறவுகளும்
5.மதமும் கவிதையும்
6.தமிழ் கற்பித்தலில் உன்னதம்
7.தமிழ்ப்பண்பாட்டில் சினிமா
8.தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி
9.ஈழத்தில் தமிழ் இலக்கியம்
10.யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல்
11.சுவாமி விபுலானநந்தரின் சிந்தனைநெறிகள்
12.திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு
13.தமிழ் கற்பித்தல்
14.தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா(பாட விமர்சனவியல் நோக்கு)
15.தமிழின் கவிதையியல்
16.தொல்காப்பியமும் கவிதையும்
17.உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.1851-கி.பி.2000)
18.சசியாக்கதை
19.யாழ்ப்பாணம் சமூகம்-பண்பாடு,கருத்துநிலை

முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன

நனி நன்றி:
தமிழ் ஓசை நாளேடு,களஞ்சியம்,அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் வரிசை 5

No comments: