Friday, October 3, 2008

திருவாளர்.பூர்ணம் விசுவநாதன் அவர்கள்.

பிரபல மேடை நடிகரும், சினிமா நடிகருமான திரு. பூர்ணம் விசுவநாதன் அவர்கள் இறைபதமேவினார்.


அற்புதமான கதாபாத்திரங்களில் தனது மென்மையான நடிப்பால் மிளிர்ந்த திரையுலகத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான திரு.பூர்ணம் விசுவநாதன் அவர்கள் இன்று அக்டோபர் 1ம் திகதி இந்திய நேரப்படி மாலை 3:30 மணியளவில்அப்பலோ மருத்துவமனியில் உயிர் நீத்தார் என்ற செய்தியை இந்தியா கிலி ட் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

1945ஆம் ஆண்டு ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பணியைத் தொடங்கிய அன்னார் மிகவிரைவிலேயே சினிமா ஊடகத்தினரின் கவனத்தை தனது வித்தியாசமா தமிழ் உச்சரிப்பின் மூலம் ஈர்த்தார். பல திரைப்படங்களிலும் அவரது கதாபாத்திரங்கள் பெண்களின் அனுதாபத்தை பெற்றுவிடும் வகையிலேயே அமைந்திருக்கும். அதே நேரம் தில்லு முல்லு படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் வந்து ரஜனிகாந் அவர்களுடனும் , தேங்காய் சீனிவாசன் அவர்களுடனும் இணையாக நகைச்சுவையாக மிளிர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. மஹா நதி என்ற திரைப்படத்தில் கமலஹாசனுடன் சிறையிலும் , பின்னால் கமலின் மகளை விபச்சார விடுதியிலிருந்து காப்பாற்றும் காட்சியிலும் அன்னாரின் உணர்ச்சிமயமான நடிப்பு மிகவும் அருமையாகவும் இருக்கும். அதே போல் "ஆசை " திரைப்படத்தில் தான் அதுவரை மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்த தனது மருமகனே தன் மகளை கொலை செய்தவன் என்பது தெரிய வரும் போதும் அவனை தன்னுடன் சேர்த்து தீ வைத்துக் கொல்லும் போதும் அவரின் மாறுபட்ட நடிப்பின் பரிமாணத்தைக் காணக் கூடியதாக இருக்கும்.

இயல்பான அவரது நடிப்பில் பரிமளித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்வையாளனின் மனதில் அவர்களது குடும்பத்து அங்கத்தினரைச் சந்திக்கும் உணர்வை தூண்டி விடும் சிறப்பானவையாக வெளிப்பட்டவை என்பதை மறுப்பதற்கில்லை.

திருவாளர். பூர்ணம் விசுவநாதன் அவர்கள் அஞ்சலி, புது புது அர்த்தங்கள், கேளடி கண்மணி , ஆசை, தில்லு முல்லு, மஹாநதி, வறுமையின் நிறம் சிகப்பு, மூன்றாம் பிறை, ஆண் பாவம் உள்ளிட்ட பல திரைப் படங்களில் நடித்திருக்கிறார் . இத்தகைய நல்ல கலைஞரின் மறைவினால் துயருறும் அவரது கூம்பத்தினருக்கும் கலையுலகத்தினருக்கும் எமது அனுதாபங்கள்.

அவருடைய இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு மனநிம்மதியையும் இந்த இழப்பை தாங்கும் சக்தியையும் வழங்கவும் அவரது ஆன்மா சாந்தி அடைய வும் இறைவனைப் பிராத்திப்போமாக.

No comments: