Saturday, December 27, 2008

வாடைக்காற்று.

வாடைக்காற்று.


மருத்துவர் ஆனால் எனக்குத் தெரிந்து வாடைக்காற்று என்ற படத்தின் இரண்டு கதாநாயகர்களில் ஒருவர் என்ற ரீதியில் அறிந்த இந்திரக்குமார் அவர்களின் மறைவு ஏற்படுத்திய பழைய நினைவுகளின் பாதிப்பில் இதை எழுதத் தொடங்குகின்றேன்.

எத்தனையோ நினைவுகளை மீட்டுக் கொண்டு வரும் பதிவு இது. என்னுடைய சிறிய வயதில் மனதைப் பாதித்த படங்களில் இன்று வரை மனதை விட்டு அகலாத படம் இது. நான் முதல் முதல் வாசிச்ச நிலக்கிளி நாவலும் , வாடைக்காற்றுப் படமும் அற்புதமானவை. வாடைக்காற்றுப் படத்தைப் பார்த்த பின் தான் நாவலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாடைக் காற்று நாவலைப் பற்றியும், அந்த நாவலை எழுதிய செங்கையாழியன் அவர்களைப் பற்றியும் விலாவாரியாக சகோதர் கானாப் பிரபா அவர்கள் தமது மடத்து வாசல் பிள்ளையாரடி வலைப்பதிவில் எழுதிவிட்டதால் அதைவிட பெரிதாக நான் என்னத்தை எழுதப் போகிறேன்..என்பதால் இங்கு அதைப் பற்றி எழுத நான் முனையவில்லை. :) அதே போல் வாடைக்காற்றுத் திரைப்படத்தைப் பற்றியும் எழுதிவிட்டதால் எனக்கு அதிலும் எதுவுமில்லை எழுத.... ஆனாலும்....வாடைக்காற்று பற்றிய என்னுடைய கருத்தையும் பதிய விருப்பமாயிருக்கிறது.

அப்போது எனக்கு 13 வயது இருக்கும். பள்ளிக்கூடத்தில் எனது சிநேகிதிகளுக்கு புதிதாக வந்த திரைப்படக் கதையை விலாவாரியாக சொல்லும் முதல் ஆளாக நான்னிருப்பதற்கு காரணம் எனது அப்பா தான். என்னுடைய அப்பாவும் அம்மாவும் நல்ல சினிமா ரசிகர்கள். அப்பா சிவாஜி ரசிகர்; அம்மா எம்.ஜி.ஆர் , ஜெமினி ரசிகை. சிவாஜி எப்பவும் அழுமூஞ்சி என்பது அம்மாவின் கருத்து. அப்பாவுக்கு சிவாஜியின் நடிப்பில் ஒரு அசாத்திய மரியாதை. அப்பாவுக்கு பிடித்த எல்லாம் எனக்கும் பிடிக்கும். அப்படித் தான் ஒரு நாள் அப்பா சொன்னார் "எங்கட சிலோன் தமிழ் படம் ஒன்று வந்திருக்கு.. நல்ல படமாம். போய் பார்ப்பம்" என்று சொல்லிக் கூட்டிக் கொண்டு போனார். அது தான் "வாடைக் காற்று" திரைப்படம்.

நான் உங்கள் தோழன், கோமாளிகள், அனுராகம் என்றெல்லாம் இலங்கைத் திரைப்படங்கள் பார்த்த போதிலும் இந்த வாடைக்காற்று மனதில் பதிந்த மாதிரி அவை எந்தத் தாக்கத்தையும் எனக்கு தரவில்லை. பிலோமினாவின் அநியாயமான பரிதாபமான முடிவும், விருத்தாசலத்தின் வாழ்கையில் கிடைத்த ஏமாற்றமும் படம் முடிந்து வெளியில் வந்த பின்பும் யாருடனும் கதைக்க முடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்தது இப்பவும் நினைவு இருக்கிறது. அநேகமாக சிவாஜி படங்களில் தான் இப்படி ஒரு அவஸ்தை எனக்கு வரும். அவை தவிர்ந்து வாடைக்காற்றிலும் , பாலைவனச்சோலையிலும் தான் இந்த உணர்வு...

கவலைகள் அறியாத சின்ன வயதில் பார்த்த படம் என்பதால் விருத்தாசலம் ஏமாந்ததற்கு காரணமான மரியதாஸ் மேலும், காதலுக்காகவும் காதலனுக்காகவும் காத்திருந்த பிலோமினாவின் வாழ்கை துயரமாகவே முடிந்ததற்கு காரணமான சுடலைமுத்துவையும் இன்று வரை மன்னிக்கமுடியவில்லை என்னால். :)

ஆனால் படத்தில் கதாநாயகர்கள் இருவரையும் விட விருத்தாசலமாக வரும் பாலச்சந்திரன் அவர்களும் சுடலைமுத்துவாக வரும் ஜவாஹரும் சிறப்பாக நடித்திருந்தார்கள் என்பது எனது கருத்து. ஆனால் யேசுரட்ணம் அவர்களுக்கு தான் சிறந்த துணை நடிகர் விருது கிடைத்திருந்தது ஏமாற்றமாக இருந்தாலும் இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள திரைப்படக் கலைஞர்களுக்குள் ஒரு தமிழருக்காவது சிறப்பு விருது ஒன்றாவது கிடைத்ததே என்று அந்த நேரத்தில் திருப்திப்பட்டுக் கொண்டோம்.. :)

தென்னிந்திய திரைப்படக் கதாநாயக, நாயகிகளுக்கு முற்றிலும் வித்தியாசமான உருவத் தோற்றமும், வசன உச்சரிப்பும், பேச்சு வேகவும்,நடிப்புப் பாணியுமாய் எமது கலைஞர்களை அந்தக் காலத்து சிவாஜி, எம்ஜிஆர், கமல் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தான்...

எப்போதுமே கனவுகள் வர்ணங்களாகத் தான் இருக்கும் , கறுப்பு வெள்ளைப் படங்களில் கூட கதையும் கதாநாயக நாயகிகளும் கூட தேவலோகம் மாதிரியும் தேவ தூதர்களாயும் தேவதைகளாயும் தான் தெரியும். அப்படியே பார்த்துப் பழகி கனவுகளில் சஞ்சரித்த எமது இளைஞர்களுக்கு இந்த கறுப்பு வெள்ளையில் வந்த வெறும் வெள்ளை மணலும், கனவுக் காட்சிகளும் பல டிசைனில் ஆடையணிந்து ஒரு பாடலிலேயே வரும் கதாநாயகிகளும் இல்லாதது பெருத்த ஏமாற்றம் தான்...

வாடைக்காற்றுப் படத்தின் பின்னால் தான் அன்னக்கிளியும் , பாரதிராஜாவின் பதினாறு வயதினிலேயும், எமது மண்ணில் வந்தது..ஆனால் அதற்கு முன்னமே இனப்பிரச்சினையும் போரும் வந்து விட்டது. சூழலும் , நாமும் மாறிவிட்டோம்.... :(

1 comment:

பாரதிநேசன் said...

அன்பின் சுவாதி சுவாமி,
இணையத்தில் வாடைக்காற்று தொடர்பான தேடலில் உங்கள் பக்கத்திற்கு வந்தேன். நீங்கள் இரக்க்கப்பட்ட ஒருபாத்திரமான விருத்தாசல்ம் பாத்திரமாக திரைப்படத்தில் நடித்தவன் நான் என்ற் வகையில் உங்கள் கட்டுரை எனக்கு பழைய நினைவுகளில் ஆழ்ந்துபோக வைத்திருக்கிறது. நன்றி. முடியுமானால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்
அன்புடன்
கே.எஸ்.பாலச்சந்திரன்