பெனாசிர் பூட்டோ

இஸ்லாமிய அரசுகளில் அரியணை ஏறிய முதல் பெண் அரசியல்வாதி என்ற வகையில் பெனாசிர் பூட்டோ அவர்களை எனக்கு பிடிக்கும். கடுமையான மதக் கட்டுப்பாடுகளும் கோட்பாடுகளும் கொண்ட இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து ஒரு பெண் பிரபலமானதும், பிரதமரானதும் பிரமிக்க வைத்தது. உலகின் முதல் பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா என்று சரித்திரம் சொல்லும் போது ஆகா எமது பிறந்த தேசத்துக்கு இந்த வகையில் ஒரு பெருமை கிடைத்திருக்கிறது என்று எனது சிறிய பிராயத்தில் மிகவும் பெருமைப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் பிரதமாரான பின்னணியில் அரசியல் சூட்சியும், மத வெறியும் , இனத் துவேஷமும் அஸ்திவாரமாக இருந்தது என்ற உண்மை பின்னாளில் நான் வளர்ந்து வரலாறு சரியாக புலப்பட்ட போது அந்த பெருமை தூள் தூளாக உதிர்ந்துவிட்டது.
ஆனால் பெண் என்ற வகையில் ஸ்ரீமாவோவினதும், இந்திரா காந்தி அம்மையாரினதும், பெனாசீர் பூட்டோவினதும் வெற்றிகளையும், அதற்காக அவர்கள் மேற்கொண்ட தைரியமான காய் நகர்த்தல்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. மூவரிடம் எனக்கு பிடித்த ஒற்றுமைகள் அவர்களுடைய துணிச்சலும், தைரியமும், தன்னம்பிக்கையும் தான்.
சாதாரணமாகப் பெண்கள் ஏதாவது ஒரு இழப்பில் அல்லது நட்டத்தில் பயந்துவிடுவார்கள். பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது என்று நினைப்பார்கள். சமூகத்திற்கான பங்களிப்பை விட குடும்பத்திற்காக தம்மை அர்ப்பணிப்பதில் பிறவிப்பயனை அடைந்துவிட்டதாக தன்னைத் தானே திருப்திப்படுத்திக் கொள்ள முனைவார்கள். இவையெல்லாவற்றையும் கடந்து தனது அறிவு சொல்லும் முடிவை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு எந்த எதிர்ப்புகளையும் தன்னால் சமாளிக்க முடியுமென்ற துணிச்சலுடன் எந்தப் பெண் தனது வழமையான வட்டத்தை விட்டு விலகிச் செல்ல முயல்கிறாளோ அவள் சமூகத்தின் வெளிச்சப்பரப்புக்குள் பேசப்படும் நட்சத்திரமாக அல்லது தூற்றப்படும் சகடாக உருவெடுக்கிறாள்.
இன்றைய கால கட்டத்தில் பிரபலமான பெண்கள் எல்லோருமே தமது சொந்த வாழ்கையில் பல இடர்களையும், துயர்களையும் எதிர்த்து பல போராட்டங்களுடன் வெளிச்சத்துக்கு வந்தவர்கள் தான். அந்த வகையில் , பாகிஸ்தானின் முக்கிய பெருந்தலைவர் ஒருவரின் மகளாக பிறந்திருந்தும், மேலை நாடுகளில் உயர் கல்வி கற்றிருந்தும் கூட பெனாசிர் பூட்டோவும் தன்னளவில் பல எதிர்ப்புகளையும், இடர்களையும், துயர்களையும் கடந்து பாகிஸ்தான் நாட்டின் அதிபராக வந்தார்.
அரசியலில் ஜனநாயகம் என்ற முகத்தை அலங்கரித்து மக்களிடம் நெருங்க முற்பட்ட அவருக்கு ஒரு வகையில் தோல்வி என்று தான் சொல்ல வேண்டும். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டார் என்பது போல் மக்கள் கொடுத்த அதிபர் என்ற வரத்தை பெனாசிரின் கணவர் செய்த ஊழல்கள் பெனாசிரை பதவியிறக்க வழி செய்தது. பலவிதமான அடக்கு முறைகள், நாடுகடத்தல், வீட்டுக் காவல், மரணங்கள் என்று எத்தனையோ அனுபவித்தும் கூட துவண்டுவிடாமல் மீண்டும் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் நாட்டிற்கு திரும்பிய அந்தப் பெண்னின் செயலை முட்டாள்தனம் என்பதா அல்லது துணிச்சல் என்பதா? புரியவில்லை. ஆனால் பிரமிக்க வைத்தது.
நாடுகடத்தப்பட்ட பெனாசிர் பாகிஸ்தானில் நடக்கவிருந்த பொதுத்தேர்தலில் பங்கேற்பதற்காக கடந்தாண்டு மீண்டும் பாகிஸ்தான் வந்தடைந்தார் . தனது உயிருக்கு தகுந்த பாதுகாப்பற்ர நிலையில் தான் நாடு செல்வதாக அவர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார். ராவல்பிண்டி என்ற இடத்தில் கடந்தாண்டு இதே தினத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அடுத்த சில நொடிகளில் அங்கு தற்கொலைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் பெனாசிர் உயிரிழந்தார்.
பெனாசிரின் மரணம் பற்றிய விசாரணை எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை. எனினும் அவரது மரணத்தின் மூலம் அவரது குடும்ப அங்கத்தினர்கள் தலைமைப்பதவிகளை தாவிப் பிடித்துவிட்டார்கள். அனுதாப அலைகளின் வீச்சில் அவரது கட்சி அரியணை ஏறிவிட்டதுமல்லாமல் பத்துவீதக்காரன் என்று பட்டப் பெயரில் கிண்டலடிக்கப்பட்ட ,அதே லஞ்சம் வாங்கிய ஊழல் பேர்வழி என்று குற்றஞ்சாட்டப்பட்ட பெனாசிரின் கணவர் இன்று மனைவியின் மரணம் கொடுத்த லாபமாக அதிபர் பதவியில் பிரகாசிக்கிறார். 19 வயதுச் சிறுவனான பெனாசிரின் மகன் அவரது கட்சியின் தலைமைப் பீடத்தில் இருத்தப்பட்டிருக்கிறார்.
ஆக பெனாசிரின் மரணம் பாகிஸ்தான் நாட்டில் இப்படித் தான் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றப்படி சொல்வதற்கென்று விசேசங்கள் இருப்பதாக தெரியவில்லை...
No comments:
Post a Comment