Wednesday, December 31, 2008

கடந்து போன வருடமும் நானும்...

கடந்து போன வருடமும்


நானும்...!




ஒவ்வொரு வருடமும் முடியும் போதும் வரப் போகும் புதிய வருடத்தின் வரவை நம்பிக்கையுடன் தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் ஏமாந்து விடுகிறோம். அதற்கு நாட்காட்டியைக் குற்றம் சொல்லிப் பிரயோசனமில்லை. எந்தவொரு நிகழ்வுக்கும் காலம் பொறுப்பாளியில்லை. மனிதனின் செயல்பாடுகள் தான் முழுக்காரணமும். மனிதனுக்காகக் காலம் காத்திருப்பதில்லை. காலத்தோடு பயணிக்கும் விதி தான் உலகில் இருக்கும் எந்த ஜீவனுக்கும். கடந்து செல்லும் பெரும்பாலான வினாடிகள் அர்த்தமற்றவைகளாகவே கழிந்துவிடுகின்றன. காலதேவனின் தினக்குறிப்பில் எமது இழப்புகளும் ஈட்டலும் சமநிலைப்படுத்தப்படாத கணக்குகளாகவே இருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு வருட முடிவிலும் வரப் போகும் புதிய ஆண்டுக்கு வரவேற்பளித்து நம்பிக்கையுடன் எல்லோருக்கும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.

2008ம் ஆண்டில் நான் சாதித்தது என்ன என்று கேட்டு என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. :) நிறைய எழுத வேண்டும் அதுவும் அர்த்தமுள்ளதாக எழுத வேண்டும் என்ற பேராசை மிகுவாக இருந்ததால் எதுவுமே உருப்படியாக எழுதவில்லை இந்த வருடம். நிறையப் படிக்க வேண்டும் என்று விரும்பியும் தமிழ் புத்தங்கள் இங்கு எதுவும் கிடைக்காததால் சொற்ப வாசிப்பே...


இந்த வருடம் புதியனவாய் எனக்கு வாசிக்கக் கிடைத்தவை தமிழில் தமிழ் நதியின் சூரியன் தனித்து அலையும் பகல், பாம்பாட்டிச் சித்தரின் குற்றவுணர்வின் மொழி, நிலாரசிகனின் ஒரு பட்டாம் பூச்சியின் கனவுகள் , மயிலிறகாய் ஒரு காதல் ஆகிய கவிதைத் தொகுப்புகள் மட்டுமே. ஆங்கில புத்தகங்கள் என்று பார்த்தால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாய் பிறந்த நாளுக்கு என் பிராண்நாதர் தன் மனைவி ஏதோ பெரிய கவிதாயினி என்ற இறுமாப்பில் இன்னும் அவளுடைய பார்வை விரியட்டும் என்ற (நல்ல ??) நோக்கில் பரிசளித்த தடிமனான Alissa Heyman தொகுத்தளித்திருக்கும் "The best poems of the English language" என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பும் இன்ன பிற சிறிய புத்தகங்கள் ஒன்றிரண்டு மாத்திரமே கிடைத்தன.

கிரேக்க காவியங்களான ஒடிசியை தமிழில் தேடுகிறேன். இன்னும் கிடைக்கவில்லை. அதே போல தமிழில் வாசிக்க விரும்பிய சில புத்தகங்களும் , குழுமத்தில் வந்த ஞாநியின் "தவிப்பு " பற்றிய விமரிசனத்தின் பின் அதையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அதுவும் இங்கு கிடைக்கவில்லை .

இவ்வருடம் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி தொடக்கப்பட்ட விசேசமும் அதனால் போக்குவரத்து அலைச்சலும், ஆஸ்துமாவின் தீவிரமும் கொஞ்சம் அதிகப்படியாக என்னைக் களைக்க வைத்தவை. கணவருக்கு கையில் ஏற்பட்ட சிறுவிபத்தினால் கொஞ்ச நாள் நல்ல சுவையான சமையல் கிடைக்காததும் கவலைக்குரியவை தான்... :):) (சும்மா..பகிடிக்கு..)

மனதளவில் ஈழத்து நிகழ்வுகளால் நொருங்கிப் போன உணர்வு. அதுவும் என் உறவினர் ஒருவரின் 2 மகன்மாரும் ஒரே நாளில் பள்ளிக்குப் போன போது குண்டு வீச்சில் மரணமான செய்தியில் இவ்வருடம் அநேகமான எல்லாப் பண்டிகைக் கொண்டாட்டங்களும் தவிர்க்கப்பட்டமை.... இந்த ஆண்டு கவலைக்குரியதானது தான்.


பல வருடங்களின் பின் பழையபடி தமிழக மக்களிடம் தமிழீழ ஆதரவு வலுப்பெற்றிருப்பதும், தமிழீழ மக்களுக்காக சீமான் , அமீர் போன்றவர்கள் சிறை சென்றது மெய்சிலிர்க்க வைத்ததும், அதே நேரம் தமிழக அரசியல்வாதி களின் ஈழம் பற்றிய போலி நடிப்புகளில் ஆத்திரப்பட்டு மனதையும் உணர்வையும் காயப்படுத்திக் கொண்டதும் தவிர்க்க முடியாததாய் போகிறது. என் தேசத்து மக்களின் துயர் எப்போது தீருமோ என்று உணர்வுகளால் காயப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழனின் இதயத்திலும் வழியும் குருதியில் ஈயம் காய்ச்சி ஊற்றும் இந்த அரசியல்வாதிகளின் ஈனத்தனத்தை நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இவர்களுக்கும் களத்தில் பலியான எமது பெண் போராளிகளின் சடலங்களை புணந்து இழிவுபடுத்திய இலங்கையின் காட்டுமிராண்டி இராணுவத்தினருகுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை எனக்கு.

எம்மை இழிவு படுத்துவதாக நினைத்து இறந்த பெண் போராளிகளின் சடலத்தை புணர்ந்து தன்னை ஈனமாக்கிய அந்த பேடியின் முகத்தை மறக்க விரும்பவில்லை நான். அவனுடைய முகம் இன்னமும் என் உணர்வில் கூடுதலான சுதந்திர வேட்கையை தான் பொங்க வைக்கிறதே தவிர அஞ்ச வைக்கவில்லை. எனக்கே இப்படியென்றால் களத்தில் இருக்கும் ஒவ்வொரு போராளியின் உணர்வுகளில் சுதந்திர வேட்கை எப்படி ஊற்றெடுக்குமென்று சிந்தித்துப் பார்க்கிறேன். எந்தவொரு உத்வேகமும் அடக்குமுறைகளின் முயற்சிகளை தோற்க்கடிப்பதில் தான் உருவாகிறது. அந்த வகையில் இந்த வக்கிரத்தை கூட நான் என் சகோதர சகோதரி போராளிகளின் வெற்றிக்கான உத்வேகமாகவே கருதுகின்றேன்.


அமெரிக்க அரசியலில் ஹில்லாரி வெற்றிபெற வேண்டுமென்ற என் பிராத்தனை நிராகரிக்கப்
பட்டதில் மனதுக்கு கவலை . அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற அந்தஸ்தை சகல விதத்திலும் தகுதியான , கம்பீரமான , திறமைமிக்க ஒரு பெண்மணியிடம் ஒப்படைப்பதை விட முதல் கறுப்பின அல்லது கலப்பின ஜனாதிபதி என்ற அந்தஸ்துடன் ஒரு ஆணிடம் ஒப்படைப்பதை அமெரிக்க மக்கள் தேர்வு செய்தது ஒருவிதத்தில் எனக்கு ஏமாற்றமே. பெண் சமத்துவம் அமெரிக்காவில் கூட பல விசயங்களில் ஒப்புக்குத் தான். ஹில்லாரியின் மனத் தைரியமும், திறமையும், நம்பிக்கையும் ஒரு நல்ல தலைமைக்கு தகுந்த நடவடிக்கை ஒழுங்கும் வீணாக விழலுக்கிறைத்த நீராகப் போய்விட்டதாகவே உணர்கிறேன். உலகத்தில் தலமைப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அநேகமான பெண் தலைவர்கள் எல்லாருமே மக்களிடம் அனுதாப அலைகளை தமது அரசியல் கட்சிக்கு வாங்கிக் கொடுக்கும் ஓட்டு இயந்திரங்களாகவே மக்களிடம் அறிமுகமாகி அரசியலுக்கு வந்தார்கள். ஸ்ரீலங்காவின் சுதந்திரக் கட்சியினர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவரின் கணவர் படுகொலையில் விதவையான பரிதாபத்தை அரங்கேற்றி அவரை பிரதமராக்கி அரசாட்சியைக் கைப்பற்றினர். ஏற்கனவே விதவையான இந்திரா அம்மையாரை தகப்பனார் நேருவின் மரணத்தின் வாரிசாக காங்கிரஸ் காட்சிக்கு வைத்து அரசாட்சியை கைப்பற்றியது. இரு பெண்களுமே மக்களால் சகிக்க முடியாத ஆட்சிக் கெடுபிடிகளை கொண்டு செலுத்தியதால் மக்களால் தூக்கியெறியப்பட்டனர். பெனாசிர் தனது தகப்பனாரை தூக்கிலிட்ட ஒன்றை வைத்தே தனக்கு சாதகமான பரிதாப அலைகளை சேகரித்தார். ஆனால் ஹில்லாரியின் நிலமை கொஞ்சம் மாறுபட்டது. நம்பிக்கைத் துரோகம் செய்யும் கணவனையோ காதலியையோ தூசு போல் தட்டி விசிறிவிட்டு தன் வாழ்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் அமெரிக்கப் பெண்கள் மத்தியில் கணவன் தனக்கு இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து இழைத்த துரோகத்தை பொறுத்து தொடர்ந்தும் அந்தக் கணவனுடன் வாழும் (ஒரு வகையில் நமது பெண்களைப் போல்) ஹில்லாரியை பலரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்றெ நினைக்கிறேன். இதுவே அனுதாப அலைகளை வாங்கிக் கொடுத்திருக்கும் இந்தப் பெண் இந்தியப் பெண்ணாக இருந்து இந்திய அரசியலில் குதித்திருந்தால்... பாவம் ஹில்லாரி...

ஒலிம்பிக் போட்டிகளை குழந்தைகளுடன் சேர்ந்திருந்து தொலைக்காட்சியில் பார்த்ததில் மகன்மார் இருவருக்கும் மைக்கேல் பெல்ப் சூப்பர் ஸ்டாராக தெரிந்ததும் அவருடைய ரசிகரானதும் , அவரைப் போலவே தாங்களும் நீச்சல் பழகவேண்டுமென்று நாண்டு கொண்டு நிற்பதுவும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

ஒரு தனி விளையாட்டு வீரன் தன் நாட்டுக்கு ஒரே போட்டியில் இத்தனை தங்கங்களை அள்ளிக் கொடுத்து அமெரிக்கர்களின் இதயங்களை மாத்திரமல்ல உலகின் பல்வேறு விளையாட்டு ரசிகர்களின் இதயங்களையும் நிறைத்துவிட்ட மைக்கல் பெல்ப் உண்மையிலேயே சிறந்த சாதனையாளர் தான். குழந்தைத்தனமான பளிரென்ற புன்னகையும், உயர்ந்து நெடு நெடுவென்று , அகன்ற தோள்களுடன், உறுதியான கால்களுமாய் அந்த நீச்சல் வீரன் களத்தில் நிற்கும் அழகே தனி தான்.

ஒரு பிரமாண்டமான சுறா மீனின் ஆவேசமான நீச்சலுக்கு ஒப்பான வீரியத்துடன் அந்த வீரன் தன்னோடு போட்டியிடும் அத்தனை போட்டியாளரையும் பின் தங்கச்செய்த படி நீந்திக் கடக்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் கண்கள் கலங்கி மெய்சிலிர்க்கும் ஒவ்வொரு முறையும் என் மனதில் "எப்போதாவது ஒரு நாள் என் ஈழத்து மண்ணிலிருந்தும் ஒரு வீரனோ வீராங்கனையோ இப்படி எல்லோருடைய கண்களை அதிசயிக்கும் படி விரிய வைக்க மாட்டார்களா ?" என்று ஒரு லேசான ஏக்கம் ஊடுருவாமல் போனதில்லை. அந்த மேடையில் ஒரு தமிழ் வீரனோ வீராங்கனையோ தங்கப் பதக்கம் வாங்கும் அழகை இந்தக் கண்களால் பார்க்க வேண்டும்.

வலையுலகில் 2008ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஷைலஜாவின் தூண்டுதலில் வாரம் ஒன்றுக்கு ஒரு பதிவாவது வலைப்பூவில் எழுத வேண்டுமென்ற சத்தியப்பிரமாணம் தோற்றுப் போனாலும் 23 பதிவுகள் "பரிமாணம் " வலைப்பூவிலும், சில கவிதைகள் "மைத்துளிகள்" வலைப்பூவிலும் எழுதக் கிடைத்தது கொஞ்சம் சந்தோஷம். எல்லாக் குழுமங்களிலும் மைபா பற்றிய பதிவுகளில் முக்கிய பங்கு என்னுடையது என்பதும் குறிப்பிட வேண்டும். (மொக்கை) . அந்த வகையில் பலரை அதிகளவு அலுப்படைய பண்ணிவிட்டேனோ என்னமோ ..அப்படியாயின் மன்னிக்கவும்...ஆனால் மைபா பகழ் பரப்புவதையும் மொக்கை போடுவதையும் தவிர்க்க முடியாது என்னால்.

வழமை போல் தமிழ் சினிமாக்கள் மிகச் சொற்பமே பார்த்தேன். மனதைப் பாதித்தவை என்று பெரிதாக எதுவுமில்லை. பாடல்களும் அப்படியே.. ஆனாலும் "கண்கள் இரண்டால்..." சுப்ரமணியப்ரம் படப் பாடல் அடிக்கடி முணு முணுக்க வைத்தது.

சென்னையில் குழும ஒன்று கூடலில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகளுக்கான பரிசுகள் வழங்க வாய்ப்புக் கிடைத்ததும் ,குழுமத்தின் ஆண்டுமலர் ( 25% கூட எனக்குத் திருப்தியில்லாவிட்டாலும் கூட) வெளியிட்டதும் என்னைப் பொறுத்தவரை இவ்வருடத்தின் முக்கிய நிகழ்வுகள் எனக்கு. குழும நண்பர்களாக சிவ சிவா ஐயா, சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த குமார் ஐயா, நண்பர் ரவீந்திரன் இவர்களை நேரில் சந்திக்க கிடைத்த வாய்ப்பும் மிக முக்கியமானது.

மற்றப்படி பெரிதாக எதுவுமில்லை.... :(:(


glitter-graphics.com

No comments: