Tuesday, January 27, 2009

ஈழத் தமிழராகவே செத்து தொலையுங்கள்...!!

ஈழத் தமிழராகவே செத்து தொலையுங்கள்...!!

எனக்கு புரியவில்லை....

ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோம் என்கிறார்கள்;
ஆனால் ஈழத்து தமிழ் மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் தூவப்படும் மரண குண்டுகளில் அவர்கள் பெயர்களைப் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். பிணங்களை காப்பாற்றி ஈழத்தில் எதை சாதிக்கப் போகிறார்கள்? பிணந்தின்னிக் கழுகுகளின் இரையே பிணங்கள் தான் என்பதை மறந்துவிட்டு என்ன இது முட்டாள் தனமான கேள்வி?

மரமேறி விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம். அப்பிடி இருக்கு இந்திய அரசாங்கத்தின் ஒப்பனை வசனங்கள். கருணநிதி வயோதிபர் தான். எந்த நேரமும் நோய்வாய்ப்பட வாய்ப்பிருக்கலாம். ஆனால் இந்த நேரம் பார்த்து போய் மருத்துவமனையில் சினிமாவில் வரும் அரசியல்வாதி போலவே படுத்திருக்கிறாரே என்ற நெருடல் இல்லாமல் இல்லை; ஆனாலும் என்ன செய்ய முடியும்? அவரை நம்பியா எமக்கு சுதந்திரம் வேண்டி போராட்டத்தை தொடக்கினோம் அல்லது போராட்டத்தை ஆதரித்தோம்?

ஒருவர் உதவுவதாக அரசியல் கூத்துக் கட்டின போது அவரது முதலைக் கண்ணீரை நம்பியதும் எமது தவறு தான். அவர் உதவவில்லை என்றதும் அவரை தூற்றினாலும் நமது தவறு தான். இந்த தவறுகளை நாம் இன்னொரு தடவை செய்யாதிருக்க முயற்சிக்கலாம் , எங்கள் போராட்டத்தையும் உயிர் அவலங்களையும் இவர்களும் கையிலெடுத்து அரசியல் செய்யாமலிருக்கட்டும்....! எங்களை வைத்து உடன்பிறப்புகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று புளுகாமல் இருக்கட்டும். எங்கள் அவலங்களும் மரண ஓலங்களையும் வைத்து தேர்தலில் வாக்குக் கேட்காமல் இருக்கட்டும். இழந்து போகும் மவுசை திரும்ப தேரில் ஏற்ற எந்த அரசியல் வாதியும் ஈழத் தமிழன் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருக்கட்டும்.

அட விடுங்கப்பா...யாருமே உதவவில்லையென்றே தீர்மானித்துவிட்டோம்... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...? துடிக்க துடிக்க அங்கு சாவது யார் ...? திரைப்பட நடிகர்களா அல்லது பெரிய பெரிய அரசியல்வாதிகளா? வெறும் பொதுமக்கள்..அவர்களுடைய உயிருக்கு என்ன மதிப்பிருக்கிறது? அற்ப உயிர்கள் தானே? மனுசனாய் பிறந்தால் எண்டைக்கோ ஒரு நாள் சாக வேண்டிய விதி தானே? எல்லாரும் ஒன்றாய் செத்து தொலையுங்கோ

. ஒரு வகையில் நிம்மதியடையலாம் சாகும் போது குடும்பத்தோடு சாகிறீர்களே என்று. ஒரு வகையில் பெருமைப்படலாம் பிறந்த மண்ணில் ஈனர்களுக்கு பணியாமல் சுரணையுள்ள தமிழராய் சாகிறீர்களே என்று. ஒரு வகையில் பிராத்தனையுடன் சாகலாம் இன்னொரு பிறப்பிலும் ஈழத்தமிழனாய் பிறந்து மடிய வேண்டும் என்று. ஏன் என்றால் உலகில் தனது இனத்தின் சுதந்திரத்துக்காக இத்தனை போராடியவனும், எத்திக்கிலிருந்தும் எந்த பிரதியுபகாரமும், உதவியும் கிடைக்காது போனவனும் , சர்வதேசத்தால் மனிதாபிமானம் அற்று கைவிடப்பட்டவனும் ஆனால் கடைசி மூச்சு வரை தனி நாட்டின் மகத்துவத்தை முற்றிலும் சரியான புரிந்துணர்வோடு இருப்பவனுமானவன் அல்லவா அந்த தேசத்திலேயே கிடந்து மடியும் ஈழத்தமிழன்? அப்படி ஒரு ஈழத்தமிழனாய் இருப்பது பெருமைக்குரியது, எல்லாவற்றையும் விட...

என் தேசத்தில் இந்தக் கணம் மரணத்தை சுவாசிக்கும் என்னருமை சோதரங்களே... நான் கையாலாகாதவள். உங்களை காப்பாற்ற வழி தெரியாதவள்; உங்களுக்காக என் கண்களில் கண்ணீரை தவிர செலவிட எதுவுமில்லாதவள்; இந்த இழி நினைவே என்னையும் உங்களுடன் வெகு விரைவில் சங்கமிக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகின்றவள். என் மண்ணிலேயே இருந்திருக்கலாம்..உயிருக்கு ஆசைப்பட்டு இப்படி ஓடி வந்ததை விட என்று இப்போது தோன்றுகிறது. அன்னிய மண்ணின் வாசனை அருவெருப்பாக இருக்கிறது இந்த நொடி. அங்கிருந்தாலாவது அந்த மண்ணின் மக்கிகளோடு உக்கிப் போயிருந்தாலும் என் மரணத்தில் ஒரு அர்த்தமிருந்திருக்கும். உயிர் தப்பி இருந்தாலும் அம் மண்ணின் நிகழ்வுகளுக்கு ஒரு சாட்சியாகவேனும் இருந்திருப்பேன். இப்போது இந்த வாழ்கையில் என்ன கண்டுவிட்டேன் என்ரு என்னை நானே கேட்டுப் பார்க்கிறேன். என்னை எனக்கே பிடிக்கவில்லை.





1 comment:

தமிழ் said...

தமிழனாய் பிறந்து உடன்பிறப்புகள்
கண் முன்னே கொல்லப் படுவதைக் கண்டும் கரமற்ற இருக்கும் நிலையில் இருப்பதால் என்னை எனக்கு பிடிக்க வில்லை