Sunday, February 15, 2009

இப்படியும் ஒரு வாழ்த்து!!

ஜனவரி 30ம் திகதி!!

போன வருடம் முதல் ஆளாக வாழ்த்து போட்டவள் நான்! ஆனால் இந்த வருடம் அந்த திகதி வந்து போனது கூட இரண்டு வாரம் கழித்து தான் மண்டையில் உறைக்கிறது. பிப்ரவரி மாதத்தில் 30 ம் திகதி இல்லையே அப்ப எந்த 30ம் திகதி என்று என்னுடைய போன வருட டயறியை திருப்பிப் பார்க்க 15 நாள் ஆகியிருக்கிறது எனக்கு. அதற்குள் சிலரின் பிறந்த நாளுக்கும் திருமண நாளுக்கும் கூட குழுமங்களில் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறேன் என்றால் என்னை என்ன சொல்வது...?

சரி 30ம் திகதி அன்று ஏன் மறந்து போனது? 25ம் திகதி தொடங்கிய கல் மடுக்குள
உடைப்பு செய்திகளின் பரப்பரப்பிலிருந்து மீளமுன் 300 பேர் பலி அதில் எனது
நெருங்கிய உறவினர் சிலர் ..அப்படியே முத்துக்குமார் தீக்குளிப்பு, 27ம் திகதி
எனது பெரியப்பா மரணம் ஜேர்மனியில், அவரின் ஈமக்கிரியைகளுக்காக அம்மாவும் தம்பிமாரும் 30ம் திகதி தான் பயணமாகிறார்கள் , அதன் நிமித்தம் ஆயத்தப் பணிகளிலும், பெரியப்பாவுக்கான கண்ணீர் அஞ்சலி எழுதுவதிலுமாக அந்த நாட்கள் முழுவதும் நான் நானாக இல்லை... அவரது கிரியைகள் 2ம் திகதி நடந்து முடியும் வரை இங்கிருந்து தொலைபேசி மூலமே பெரியம்மாவுடன் பேசுவதும், அவரை ஆறுதல்படுத்த இயலாமல் தேம்புவதுமாய் மூளையும் மனமும் ஒரு கட்டத்தில் மிகவும் மரத்துத் தான் போய்விட்டது. அதை விட தனிப்பட்ட கழிவிரக்கம் , 1988ம் ஆண்டுக்குப் பின் பெரியப்பாவை சந்திக்கவேயில்லை நான். இனிமேல் அவர் முகத்தை பார்க்கவும் முடியாது என்ற நிலை; அமெரிக்க இமிகிரேஷன் மூலம் அங்கு போய்வர அனுமதி கேட்டு முயன்ற முயற்சிகளின் தோல்வியில் மிகவும் சோர்ந்து போனேன். அப்படி தான் இந்த 30ம் திகதி மறக்கடிக்கப்பட்டு விட்டது.

சரி அட்லீஸ்ட்.... காலம் கடந்து நினைவுக்கு வந்தது பிப்ப்ரவரி ஆரம்பத்திலாவது
வந்திருக்கக் கூடாதா?

இப்படி மறந்து போயும் கூட , அதே நபருக்கு இது வரை குழுமத்தில் பின்னூட்டமும் , 2 தனிமடலும் அனுப்பியும் நினைவுக்கு வராமல் இப்போது புதினம்.காமில் இந்த பிறந்த நாளுக்கு சம்மந்தமேயில்லாமல், சிங்கள இராணுவத்தினர் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு கட்டளை பிறப்பித்திருப்பது பற்றிய செய்தி வாசித்துக்
கொண்டிருக்கும் போது ஏனோ மூளைக்குள் துருத்திக் கொண்டு வந்துவிட்டது.... "மடச் சாம்பிராணி ஆசிப் அண்ணாவின் பிறந்த நாள் எப்ப?" என்று..

மார்ச் 30ம் திகதியாக இருக்க வேண்டும் என்று பிராத்தித்துக் கொண்டு டயறியை
புரட்டினால் ம்ஹும்...ஜனவரி30ம் திகதி வந்து போய்விட்டேன் என்று என்னைப்
பார்த்து நக்கலாக சிரிக்கிறது. :(:(

மனதுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது ஆசிப் அண்ணா! மன்னிக்கவும்.
வாழ்த்து எப்ப சொன்னாலும் வாழ்த்தில் உண்மையான அன்பு இருந்தால் போதும் என்று நினைத்து தான் இப்போது இந்த தாமதமான வாழ்த்தை அனுப்புகிறோம்.!!

*30.01.2009 அன்று அன்புக்குரிய ஆசிப் அண்ணா அவர்களின் பிறந்த நாள் ! அண்ணா தன் வாழ்வில் சகல நலன்களும் ,வளங்களும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களை
தெரிவிக்கிறோம்.!!!! *