Tuesday, March 24, 2009

கோணங்கள்- குறு நாவல்.



கோணங்கள்
(குறு நாவல்)


2

செத்தவீடெல்லாம் முடிஞ்சு வீடு ஓய்ஞ்சு போய் கிடந்தது. அக்கா மட்டும் விசும்பலாக தனது ஆற்றாமையை தீர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அக்காவின் மூன்று பிள்ளைகளும் தமதுஅம்மா அழுவதைப் பார்த்துக் கொண்டு அவளுக்குப் பக்கத்திலேயே முடங்கிப் போய்க் கிடந்தனர். பக்கத்து அறையில் யாருடனும் பேசும் திராணியில்லாமல் தலைக்கு கையை வைத்துக் கொண்டு வெறும் சீமெந்து நிலத்தில் படுத்துக்கிடந்தான் அவன். தூங்க வேணும் என்று தோன்றவில்லை...வெறுமனே கண்ணை மூடிக் கொண்டு , சகல ஓசைகளையும் துரத்திவிட்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல் கிடக்க முயற்சித்து தோற்றுப் போய்க் கொண்டிருந்தான். திரும்ப திரும்ப அக்காவின் பிள்ளைகளின் அழுத முகம் தான் கண்ணுக்குள் வந்து நின்றது. இந்த வினாடி அந்த பிஞ்சு மனங்களில் என்னென்ன யோசனையள் ஓடிக் கொண்டிருக்கோ எண்டு அவன் கற்பனை செய்து பார்க்க விரும்பாமல் அந்த எண்ணத்தை புறந் தள்ளப் பார்த்தான். முடியவில்லை. திரும்ப திரும்ப அவர்களின் அப்பா அப்பா என்ற அவலமான அழுகை தான் காதுக்குள் ஓலமிட்டுக் கொண்டிருந்தது. தங்கச்சி அடிக்கடி மயங்கிப் போவதும், எழும்பியிருந்து சத்தமாக அழுவதுமாக இருந்தாள். திரும்பக் கிடைக்காத இழப்புகளுடன் அவனுடைய இரு சகோதரிகளையும் அவனால் ஏறிட்டுப் பார்கமுடியவில்லை. பணம் பணமா உழைச்சு அவர்களுக்கு தேவையான எல்லாத்தையும் கொடுத்ததாக சந்தோஷப்பட்ட அவனால் இப்ப அதுகள் இழந்ததை திரும்ப எங்கே போய் வாங்கிக் கொடுக்க முடியும்? இலட்சம் இலட்சமாய் விலை கொடுத்தாலும் கிடைக்கக்கூடியதையா இழந்த் போட்டு இருக்குதுகள்? ஐயோ நான் என்ன செய்வன்? ஏன் இந்தக் குடும்பத்துக்கு இப்படி ஒரு தலைவிதி? என்ன வரம் வாங்கிக் கொண்டு வந்ததுகள்? ஏன் இப்படி ஒரு இழிவான நிலை? இந்த நாட்டு கலவரத்தில அப்பாவை பலி குடுத்து , அத்தானை பலிகுடுத்து, தங்கச்சின்ர கற்பு, மானம் எல்லாத்தையும் பறி கொடுத்து...இனி என்ன இருக்கு...நாட்டுக்கு சுதந்திரம் வந்தால் என்ர குடும்பத்தில இழந்த இத்தனையும் எனக்கு திரும்ப கிடைக்கவா போகுது? என்ர குடும்பத்தின்ர நிம்மதியும், சந்தோஷமும் திரும்ப வரவா போகுது? என்ர அப்பாவும் அத்தானும் உயிரோட வரவா போகினம்? போராட்டமாம் போராட்டம்..கண்டறியாத போராட்டம் நடத்தினம்... சனங்களை பலிகிடாக்களாக்கி.... சனங்களை பாதுகாக்க முடியாதவைக்கு போராட்டம் எதுக்கு?

இழப்புகளின் பெறுமதிகள் ஒப்பிடப்படும் போது பொதுவான விடுதலையை விட தனக்குமட்டுமான தேவைகளும் பாதுகாப்பும் மட்டுமே சாதாரண மனிதனுக்கு முக்கியமானதாக இருக்கும். அவனுக்கும் அப்படி தான். நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. என் குடும்பமும் நானும் ஏன் அல்லல்பட வேண்டுமென்ற நியாயப்படுத்தல் மட்டுமே அவனிடம் தேங்கியிருக்கும். தன்னையும் தன்னைச் சுற்றிய சுய வாழ்கையின் நலனையும் கடந்து சமூகத்தின் மற்றவர்களுக்காகவும் சிந்திக்கவும், இழப்புகளை சகிக்கவும் அதிகப்படியான விழிப்புணர்வும், சமூகப்பற்றும் வேண்டும். அந்த அதிகப்படியான சமூக விழிப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இருக்காது. அது அவர்களின் தவறுமல்ல. தன்னையும் தன்னைச் சார்ந்த வட்டத்தையும் மட்டுமே அக்கறைப்படுவது தான் மனித இயல்பு. சமூகப்பற்று போதனையாலோ வற்புறுத்தலினாலோ வர வேண்டியதில்லை. சுய சிந்தனையாலும், தானாக உணரப்படும் மேலான உணர்வினாலும் மாத்திரம் வரவேண்டியது. துரதிஷ்டவசமாக பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்குள்ளான பின்னால் மட்டுமே இந்த உணர்வு வரப்பெறுகிறார்கள். ஒருவகையில் பழிக்குப் பழி வாங்குவது போல். வேறு பலர் தமது இழப்புகளை தாங்கிக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ இயலாமல் பாதிப்புகளுக்கு பழி போட காரணங்களை தேடுகிறார்கள். அவன் இந்த ரகத்தைச் சார்ந்தவன்.

பார்த்து பார்த்து ஒவ்வொருவருக்கும் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களுடன் சூட்கேஸ் இரண்டும் வைச்சது வைச்சபடியே கிடந்தது. அந்தப் பெட்டி நிறையக் கிடந்தது வெறும் சாமான்கள் மட்டுமா? அவனுடைய உழைப்பு; அவனுடைய அக்கறை;அவனுடைய பொறுப்பு; அவனுடைய அன்பு; அவனுடைய பாசம்;அவனுடைய ஆவல்;அவனுடைய ஆசை; ஆனால்... எதுக்குமே பிரியோசனமில்லாமல் போனது போல்...வெறுப்பாக இருந்தது. இந்தக் குடும்பத்தையும் அவனுடைய சொந்தங்களையும் அவன் இனி எதை வைத்து திரும்ப சீர் செய்யப்போகிறான் என்று யோசித்த போது திகிலாக இருந்தது. ஆனால் அவன் சீர் செய்து தானாக வேண்டும். இப்படியே எப்படி விட முடியும்? ல்லாம் இழந்தாச்சு எண்டு குடும்பத்தோடு நஞ்சு குடிச்சா சாகமுடியும்? சாகிற அளவுக்கு அவனும் அவன் குடும்பத்தாரும் என்ன பாவம் செய்தார்கள்? அவனைப் பொறுத்தவரை வாழ வேண்டும். முழுசா இருபத்திரண்டு வருசங்கள்.... அவனுடைய வாழ்கையில் இந்தக் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமெண்டு அவன் பட்ட பாட்டுக்கு என்ன பலன்?அவனுடைய வாழ்கையின் இளமைகாலத்தில் முக்கால்வாசி ஆயுசு வீணாய்ப் போனதாய் இருக்கக் கூடாது. அந்த பனிபிரதேசத்தில் நகக்கணுக்கள் வெடிக்க வெடிக்க , உடல் மரத்துப் போன உழைப்பில், மனதின் ஏக்கங்கள் மட்டும் உடம்பின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் சபலங்களுக்குமாய் அலைந்து கொண்டிருக்க , வெளியில் மிகவும் சாதாரண மனுசனாய்..ஒரு குடும்பத்தின் பொறுப்புமிக்கவனாய் சொந்த மண்ணில் சொந்தங்களைப் பார்க்க வந்ததுக்கு.....இழப்புகளும் பேரிடிகளுமாய் தாக்கப்பட்டு வீழ்ந்து சுக்கலாகிப் போக வேணுமா என்ன?

முடியாது. இதை எப்படியாவது அவன் சரிப்பண்ணியே ஆக வேணும்.. ஆனால் என்னெண்டு சரிப்பண்ணப் போறான் என்ற கேள்விக்கான விடை மட்டும் இருளில் மூழ்கிப் போய் எங்கோ கிடந்தது...

இந்த அசம்பாவிதம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? அவனுடைய வருகை எத்தனை சந்தோஷமயமாய் இருந்திருக்கும் வீட்டாருக்கு? கை நிறைய ஒவ்வொருவரும் அவன் கொண்டு வந்த பொருட்களை வைத்து எவ்வளவு பூரிப்படைந்திருப்பார்கள்? அவனை எப்படி தாங்கியிருப்பார்கள்? சிரிப்பும் கும்மாளமுமாய் வீடே களைகட்டியிருந்திருக்கும். தங்கச்சியின் கல்யாணத்தைப் பற்றி கதைத்திருக்கலாம். அவளுடைய வெட்கத்தை பார்த்து பழிச்சு விளையாடி இருக்கலாம். அத்தானுடன் அரசியல், போராட்டம், அமெரிக்கா வாழ்கை என்று கதைச்சிருக்கலாம். அவனுடைய கலியாணத்தைப் பற்றியும் கதை நடந்திருக்கும்.......... ஆனல் எதுவுமே இல்லாமல் வீடே இருளில்லும் கவலையிலும் அழுகையோடு முயங்கிப் போய் கிடந்தது.

பக்கத்துவீட்டுக்காரர் யாரோ பட்டினிச் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை வெளியிலிருந்து வந்த பேச்சுச் சத்தத்தில் தெரிந்தது. சாப்பாடு கொண்டு வந்தவர்கள் அக்காவையும் பிள்ளைகளையும் சாப்பிடப் பண்ண எத்தனித்துக் கொண்டிருகிறார்கள் என்று விளங்கியது. அக்காவைப் பார்த்தால் பச்சைத் தண்ணி கூட வாயில படாமல் இந்த இரண்டு மூண்டு நாளா கிடக்கிறாள் போல் தெரிந்தது, அக்காவும் பிள்ளையளும் சாப்பிடாமல் அம்மாவும் சாப்பிட்டிருக்க மாட்டா. அவனுக்கே சாப்பிட வேணுமெண்டு உணர்வில்லாமல் இருந்தது என்றால் அக்காவுக்கு எப்பிடி மனம் வரும் சாப்பிட என்று நினைத்துக் கொண்டான் தனக்குள்.

தம்பி வலியில் அரற்றுவது கேட்டது. பக்கத்தில் இருக்கும் ஒரு வயதான கட்டுப்பரியாரி தான் அவனுக்கு வந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். முழங்கால் எலும்பும் , கையும் முறிந்திருக்கு என்று சொல்லியிருந்தார். முதுகெலும்பிலும் நல்லா அடிச்சிருக்கிறான்கள். தம்பியின் முகம் வெடிச்சு , இரத்தம் கண்டிப் போய் பார்க்க சகிக்க முடியாமல் இருந்தான். கண்ணைத் திறந்து அவனால் பார்க்க முடியவில்லை. மூக்கு, சொண்டு என்று எல்லா இடமும் அடிபட்டு வீங்கி வெடிச்சுப் போயிருக்க குருதி வாசனையில் அவனை ஈ மொய்த்துக் கொண்டிருந்தன.

அவன் வந்து முழுசா மூன்று நாட்களாகிவிட்டது. வீட்டில் யாருடனும் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை; பேச மனமும் இல்லை; என்ன பேச இருக்கு? ஏன் நடந்தது? எப்பிடி நடந்தது எண்டு விலாவாரியா விடுப்பு கேட்க இதென்ன பிறத்தியார் வீட்டு சங்கதியா? அவரவர் மூலைக்கு மூலை அழுது கொண்டு கிடந்தார்களே தவிர யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. அம்மாவின் மடியில் தலை வைச்சு படுக்க வேணும் போல இருந்தது. ஆனால் அம்மாவுக்கு கிட்ட போனால் எங்கே உடைந்து போய்விடுவானோ என்ற பயம் அவனுக்கு.

இரண்டு நாளா யாருமே சாப்பிடவில்லை ..யாருக்கும் சாப்பிடவோ எழும்பி நடமாடவோ மனமில்லாமல் அப்படி அப்படியே கிடந்தார்கள். பட்டினிப் பண்டங்கள் பக்கத்து அயல் வீடுகளிலிருந்து வந்தாலும் செத்த வீட்டுக்காக வந்திருந்த சொந்தக்காரர் தான் சாப்பிட்டார்கள். இவர்களை சாப்பிடச் சொல்லிப் பார்த்து அவர்களும் களைத்துப் போனார்கள்.

"பவளம் அக்கா.. இப்பிடியே கிடக்கிறதால என்ன நடக்கப் போகுது...? நடந்தது என்னவோ தாங்க முடியாத கொடுமை தான்..ஆனால் உப்பிடியே பட்டினி கிடந்து , அழுது கொண்டிருந்தால் போனதெல்லாம் திரும்பியா வரப் போகுது? அங்க பாருங்கோ...பச்சைக் குழந்தையள் அதுகள்...மூண்டும்..அதுகளை கவனிக்காமல் கிடக்கிறியளே...பாவங்களெல்லே அதுகள்...? அவன் பாவி வெளிநாட்டில இருந்து எல்லாரையும் பாக்க வந்து..அங்க பாருங்கோ..ரெண்டு நாளா சாப்பிடாமல் கிடக்கிறான். அவனை எழுப்பி எதுவும் சாப்பிடவாவது குடுங்களேன்.."

கூடத்தில் பக்கத்து வீட்டுக்காரர் பட்டினிச் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை வெளியிலிருந்து வந்த பேச்சுச் சத்தத்தில் தெரிந்தது. சாப்பாடு கொண்டு வந்தவர்கள் யாரோ அம்மாவையும் அக்காவையும் சாப்பிட வைக்க எத்தனிப்பது உணர்வில் விளங்கியது. அக்காவைப் பார்த்தால் பச்சைத் தண்ணி கூட வாயில படாமல் இந்த இரண்டு மூண்டு நாளா கிடக்கிறாள் போல் தெரிந்தது, அக்காவும் பிள்ளையளும் சாப்பிடாமல் அம்மாவும் சாப்பிட்டிருக்க மாட்டா. அவனுக்கே சாப்பிட வேணுமெண்டு உணர்வில்லாமல் இருந்தது என்றால் அக்காவுக்கு எப்பிடி மனம் வரும் சாப்பிட என்று நினைத்துக் கொண்டான் தனக்குள்.

அம்மா தீனமான குரலில் ஏதேதோ சொல்லி அழுவது தெரிகிறது.. அவளுடைய குரலில் தான் எத்தனை பலஹீனம்.. எத்தினை துக்கத்தை தான் அவளும் பார்க்கிறது? ஒரே நாளில் இப்படி பலதரப்பட்ட இடியும், பூகம்பமும், எரிமலையுமாய் பொசுக்கிப் போட்டால் வயதான் அவளால் எதையெண்டு தான் தாங்கிக் கொள்ளுறது? அவனாலேயே முடியேலையே...

"சரி..சரி.. இனி என்ன ஆகப் போகுது உதுகளை கதைச்சு...எல்லாம் விதி...இப்படி ஒரு முடிவு வர வேணுமெண்டு எழுதி வைச்சதை எங்களால மாத்தமுடியாது..விடுங்கோ.. இனி மிஞ்சியிருக்கிற வாழ்கையை வாழ வேண்டாமே...?அதுக்கு தெம்பு வேண்டாமே? ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கப் பாருங்கோ..எழும்புங்கோ முதல்ல...போய் அந்தக் குழந்தையளுக்கும், உவன் பெடியனுக்கும் சாப்பிடக் கொடுங்கோ..நீங்களும் சாப்பிடுங்கோ... இந்தக் குடும்பத்தில இனி எல்லாருக்கும் நீங்கள் தான் ஒரு பிடிப்பா இருக்க வேணும்...எழும்புங்கோ சொல்லுறன்..." அந்த யாரோ ஒருத்தரின் வற்புறுத்தலில் அம்மா எழும்பி இருக்கிறாள். அழுகை மட்டும் நிக்கேலை.

" " ஐயோ...என்ர கண்ணால இந்தக் கொடுமையளை எல்லாம் பாக்க வைச்சிட்டு மகராசனா அவர் போய்ட்டார். இன்னும் என்னென்னத்தையெல்லாம் இந்தப் பாவி பார்க்க வேணும் எண்டு எழுதியிருக்கிறானோ இந்த நாசமாப் போன கடவுள்... நான் யாருக்கு என்ன பாவம் செய்தனான்? இல்லை எண்ட பிள்ளையள் தான் யாரிண்ட வாழ்கையில் மண் அள்ளிப் போட்டதுகள் ? ஏன் இப்படி எங்கட வாழ்கையில கொள்ளி போட்டிட்டான் இந்தக் கடவுள்? " அம்மா அரற்றுவதைக் கேட்கமுடியாமல் காது ரெண்டும் செவிடானால் நல்லது போல் இருந்தது அவனுக்கு,

" என்னக்கா செய்யிறது? உங்களுக்கு மட்டுமா இப்படி விதி? இங்க எங்கட மண்ணில அநேகமா எல்லாருக்கும் இப்பிடித் தானே விதி எழுதி வைச்சிருக்கு ? யாரை நொந்து என்ன பிரியோசனம் சொல்லுங்கோ? இண்டைக்கு உங்களுக்கு நடந்தது போல நாளைக்கு எங்களுக்கும் நடக்கலாம். என்ன செய்ய முடியும் சொல்லுங்கோ பார்ப்பம்? என்ன நடக்கும் எது வரும் எண்டு தெரியாத இருட்டு வாழ்கை தான் தமிழனுக்கெண்டாகிப் போச்சு... விடிவு வாற வரைக்கும் தாங்கிக் கொண்டு வாழ வேண்டியது தான்,.,, வேற வழியில்லை,, "

அம்மா மௌனமாக அழுது கொண்டிருந்தாள்.

மோனை..வசந்தி... எழும்பாச்சி... புருசன் செத்திட்டால் வாழ்கை முடிஞ்சு தெண்டு இடிஞ்சு போயிடாதை ராசாத்தி.. அவன் ஸ்ரீதரன் எத்தினை கனவுகளோடை இந்தக் குஞ்சுகளை வளர்த்தவனெண்டு எங்களை விட உனக்குத் தானே தெரிய வேணும்? அவன் இல்லாத இடத்தில இனி நீதானே பிள்ளை இதுகள் மூண்டுக்கும் அம்மாவாயும் அப்பாவாயும் இருந்து வளக்க வேணும்,,? நீ இப்பிடிக் கிடந்தால் என்னாச்சி நடக்கப் போகுது? போனவன் திரும்பி வரப் போறதுமில்லை; உங்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு தீர்வு கிடைக்கப் போறதுமில்லை. உங்களை நீங்கள் தான் எழுப்பி நிப்பாட்ட வேணும். இதுகளை சகிச்சுத் தானாக வேண்டும், எழும்பாச்சி.. நீ எழும்பினால் தான் உன்ர கொம்மாவும் சாப்பிடுவா.. பாவம் மனுசி வயசு போன நேரத்தில சாப்பாடும் இல்லாமல் பட்டினி கிடந்தால் அவவுக்கு இருக்கிற வருத்தத்தில ...எப்ப என்ன நடக்குமெண்டு சொல்லேலாது,, இன்னொரு துக்க காரியத்தை இப்போதைக்கு உங்களாலயும் தாங்க முடியாது... அதான் சொல்லுறன்.. எழும்பி உன்ர கொம்மாவுக்கும் பிள்ளையளுக்குமாவது சாப்பிடு... எழும்பாச்சி...


அக்காவுக்கு தேறுதல் சொல்லிய பெண்ணே திரும்பவும் அம்மாவிடம்.

" அவன் பாவி உங்கள் எல்லாரையும் பாக்கவெண்டு இவ்வளவு தூரத்தில இருந்து வந்திருக்கிறான், அவனும் உங்களோட சேந்து பட்டினியா கிடக்கிறான். அவனுக்காண்டியாவது எல்லாரும் எழும்பி சாப்பிடுங்கோ பாப்பம்.. அந்தப் பெடியையும் போய் கூட்டியாங்கோ பவளம் அக்கா... பாவமெல்லே அவன்... உங்களுக்காண்டியும் இந்தக் குடும்பத்துக் காண்டியும் ஒரு கலியாணம் காட்சி யெண்டில்லாமல் ஒடா தேய்ஞ்சு போனவனுக்கு கொஞ்சமாவது நிம்மதி வர வேண்டாமே? நீங்கள் சுதாகரிக்கப் பழகினால் தானே அவனுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்? அவனும் என்ன செய்வான்,,, இந்தக் குடும்பத்தில யாருக்கெண்டு அவன் அழுகிறது சொல்லுங்னோ பாப்பம்..."

இப்போது அம்மாவின் அழுகையும் அக்காவின் விசும்பலும் இன்னும் அதிகரித்தது. அவர்களைத் தேற்றிய அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியும் இவர்களுடன் சேர்ந்து அழுதாள். அவளுடைய கணவரும் வந்திருக்கிறார் போல் இருந்தது. ...அவருடைய குரலும் கேட்டது.. "ம்ம்ம்..இனி நீயும் துடங்கிட்டியே... அழுது கொண்டு கிடக்கிறவைக்கு ஆறுதல் சொல்லி அவையளை எழுப்பி சாப்பிடக் குடுப்பாய் எண்டு உன்னைக் கூட்டிட்டு வந்தால் நீயும் அவையளோட சேர்ந்து அழ தொடங்கிட்டியே..."

"என்னால முடியேலையப்பா. .தாயா பிள்ளையா பழகினதுகளுக்கு இப்பிடி ஒண்டு நடந்திருக்கு..எத்தினை நேரத்துக்கு காட்டிக் கொள்ளாமல் வெறுமையா பொய்யுக்கு ஆறுதல் சொல்ல சொல்லுறியள் என்னை? கண்ணுக்குள்ள நிக்கிறான் ஸ்ரீதரன்... அவன் பிறந்து முப்பத்தொண்டு கழிய முன்னமே தாய செத்துப் போனாள்.. சின்ன வயசில இருந்து என்ர மடிக்கில வளந்தவன்... அவனை பாடைல அனுப்பிட்டு இருக்கிறமே... வயசான எங்களுக்கு வரப்படாதே இந்த சாவு... அவனுக்கா வர வேணும்? உந்தா..உந்தப் பெட்டைக்கும் அவனுக்கும் கலியாணம் நடந்த நாள் இண்டைக்கும் கண்ணுக்குள்ள நிக்குது.. என்ன மாதிரி உந்த நாட்டுப் பிரச்சினைக்குள்ளும் ஊரை வளைச்சுப் போட்டு நடந்த கலியாணம் அது..? ஐயோ அவள் அகலியாவை பாருங்கோ... மான் குட்டி மாதிரியெல்லே துள்ளிக் கொண்டு திரிஞ்சவள்..? ஒருத்தரை பார்த்து ஒரு சுடு சொல் பேச தெரியுமே அவளுக்கு? அவளை இப்பிடியா நான் பாக்க வேணும்? எனக்கே இப்பிடியெண்டா...இந்த மனுசி என்னெண்டு இதுகளையெல்லாம் தாங்கும்..?"

கொஞ்ச நேரம் கூடத்தில் பழய நினைவுகளிலேயே ஒப்பாரி கேட்டுக் கொண்டிருந்தது. யாரோ இதயத்தைப் பிழிஞ்சு உள்ளுக்குள இருக்கிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்தையும் வடிச்சு எடுக்கிற மாதிரி வலித்தது அவனுக்கு அந்த ஒப்பாரியின் வார்த்தைகள் .சுத்தி சுத்தி அந்த ஒப்பாரி அவனுடைய உழைப்பையும், அவனுடைய வாழ்கையையும் வெறும் சூனியமாக, ஒண்டுக்கும் பிரியோசனமில்லாததாய் உணர்த்திக் கொண்டிருந்தது போல் அவனுக்குத் தோன்றியது..

அழுகையும் , ஒப்பாரியும் அடங்கிய கொஞ்ச நேரத்தில்..அவன் படுத்துக் கிடந்த அறைக் கதவைத் திறந்து யாரோ வரும் அரவம் கேட்டது. யார் என்று பார்க்கும் ஆர்வமில்லாமல் கிடந்தான் இவன். வந்தது அம்மா தான்..

"அப்பு... ராசா.." இந்த வார்த்தைகளுக்காகத் தானே அவன் இத்தனை தூரம் ஓடி வந்தவன்? அம்மாவின் குரலில் அவனுக்குள் அடக்கி வைத்திருந்த கடினமான ஏதோ ஒன்று மெல்ல இளகுவது போல் ஒரு உணர்வு. அவனையறியாமலேயே கண்ணீ காதோரமாய் மெல்ல வழியத் தொடங்கியது.

அம்மா அவனுக்கருகில் குந்தினாள். அவன் அழுவதைப் பார்த்து அவளும் ஓவென்று அழத் தொடங்கினாள். இப்போது தான் அவனுடன் அம்மா மனம் விட்டு அழுகிறாள் என்பது மனதுக்குள் துருத்தியது. அப்பாவின் சாவுக்கும் சேர்த்து தன்னோடு அழுகிறாள் என்பது புரிந்தது. அவனும் உடம்பு குலுங்க வெட்கம் விட்டு அழுதான் சுதந்திரமாக. இத்தனை நேரமும் அவனைக் கட்டியிருந்த ஏதோவொன்று அவிழ்ந்து மனசு லேசாகும் வரை அவன் அழுதான். அம்மாவின் விரல்கள் அவனுடைய தலையை ஆதரவாக வருடிக் கொடுக்க கொடுக்க அவனுடைய நெஞ்சடைத்த துக்கமெல்லாம் வெளியேறிப் போன ஆத்ம திருப்தியில் அவன் குழந்தை போல அழுதான்.

"ஏனம்மா எங்களுக்கு மட்டும் இப்பிடி? அக்காவையும் குடும்பத்தையும் இந்தியாவில போய் இருக்கச் சொல்லலாமெண்டு நினைச்சு வந்தன். தங்கச்சிக்கு கலியாணம் பேசி மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு வந்தன். தம்பியை கனடாவுக்குள்ள எடுப்பிக்க ஏஜன்ஸிக்காரனிட்டை பேசி வைச்சிட்டு வந்தன்...ஆனால் அதுக்குள்ள எல்லாம் தலைகீழா போயிருக்கே...ஏனம்மா? அப்பிடி யாருக்கம்மா நாங்கள் பாவம் செய்தம்? " அவனுடைய கேள்விகளுக்கெல்லாம் அம்மாவிடம் பதில் இல்லை. எல்லாம் விதி என்று சொல்ல அவளுக்கும் பிடிக்கவில்லை.

இந்த மண்ணில் நடக்கும் இந்த நாசங்களும் நீசங்களும், கொலைகளையும், வன்புணர்தலும் சிங்களவன் எழுதின விதி. கடவுள் எழுதியது அல்ல. சிங்கள அரசாங்கம் எழுதின விதியை அவளால் மட்டுமில்லை இந்த மண்ணில் யாராலுமே ஒப்புக் கொள்ள முடியாது.

அம்மா அழுது கொண்டே இருந்தாள். ஏதேதோ சொல்லி அழுதாள்; அரற்றினாள். இருவருக்குமே அந்த அழுகை தேவைப்பட்டது. ஏதோ ஒருவிதத்தில் ஒரு வடிகால் கிடைத்தது போல்...."யார் சொன்னது ஆம்பிள்ளையள் அழக் கூடாது எண்டு?"

மனதில் இருக்கிறதையெல்லாம் அம்மாவிடம் சொல்லி அவனும் அவளைப் போல் வாய் விட்டு குளறி அழுதான்.அழுத களைப்பும் சோர்வும் தீர அம்மாவின் மடியில் படுத்திருந்தான். எவ்வளவோ நிம்மதியாய் இருந்தது. அமெரிக்காவில் வாங்கிப் போட்ட அந்த சிலீப்பி மெத்தை யின் மென்மையில் கிடைக்காத நிம்மதியை அவளுடைய மடி கொடுத்தது... இத்தனை வருடத்தில் அவனுக்கு கிடைக்காத மனச்சாந்தி இப்ப கிடைச்ச மாதிரி இருந்தது. செத்தவீட்டு துக்கமும் , தங்கச்சி சீரழிஞ்ச அதிர்ச்சியையும் கூட கொஞ்சம் அமைதியாக்கின மாதிரி இருந்தது அம்மாவின் மடி. நிம்மதியாக கண்ணிலிருந்து கண்ணீர் கன நேரமாய் வழிந்து கொண்டிருந்தது.. மனதுக்குள் நினைத்துக் கொண்டான் " இன்னொரு தரம் எல்லாத்தையும் சரி செய்வன்"

எல்லாம் சகசமாகி விடுமா என்று ஒரு ஏக்கம் மனதில் இல்லாமல் இல்லை. அக்கா பழையபடி சிரிச்சுக் கதைப்பாளா என்று யோசித்தான். தங்கச்சிக்கு எதிர்காலம் என்று ஒன்று இனி இருக்கா என்று பயந்தான். தம்பியை என்ன செய்யிறது என்று தெரியேலை... எல்லாம் சரியாகி தலை நிமிர இன்னும் எத்தினை காலம் எடுக்குமோ என்று திகிலாக இருந்தது. இந்த மூன்று பிள்ளையளையும் வைச்சு கொண்டு அக்கா எப்பிடி வளர்க்கப் போறாள்? எப்பிடி இந்த நாட்டில வாழப் போறாள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. இந்த மண்ணில் இனியும் இவர்கள் இருந்தால் இன்னும் என்னென்ன இழப்புகளை அவன் சந்திக்க வேண்டி வருமோ என்று நினைச்சுப் பாக்க அவனுக்கு நெஞ்சு வலித்தது. இன்னொரு இழப்பை அவனால் தாங்க முடியாது.


{நன்றி : ஓவியம்,.tamilnation.org/art/struggle/tro.htm}

(தொடரும்)

glitter-graphics.com

No comments: