Friday, March 27, 2009

கோணங்கள் - குறு நாவல்


கோணங்கள்
(குறு நாவல்)


3

இந்த ரெண்டு நாளாகத் தான் அக்கா எழும்பி நடமாடுகிறாள். ஆனாலும் அவனால் அவளின் முகத்தை சரியாக நிமிர்ந்து பார்க்கும் திராணி இருக்கவில்லை. பார்த்தால் எங்கே தான் மறுபடியும் உடைந்து போய்விடுவேனோ என்ற உணர்வில் அவன் அமுங்கிப் போய் அக்காவை தவிர்த்தான். பொழுதுகளின் முக்கால்வாசி நேரமும் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். வெளியில் எங்கும் போகப் பிடிக்கவில்லை என்பதை விட போக பயமாய் இருந்தது என்பது தான் சரி. எங்க எங்க நிண்டு சுடுவாங்களோ எண்ட பயம்.

இந்த ஊரும் புதுசு அவனுக்கு. தின்னவேலி என்றால் பரவாயில்லை.. தெரிஞ்ச இடம்.. கொஞ்சம் வெளில மன ஆறுதலுக்காவது போய் காலாற நடந்து வரலாம். ஆனால் இப்பத்தைய நிலமையில் அங்க இதைவிட மோசமாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். மனதுக்குள் புழுங்கிப் போனவனுக்கு வெளியில் காற்று வாங்கி என்னவாகப் போகிறது என்றிருந்தது.

அப்போது தான் மத்தியானச் சாப்பாடு என்ற பெயரில் சாப்பாட்டைக் கிளறிவிட்டு வந்திருந்தான். முன்பக்க விறாந்தையில் ஒரு பெரிய பழைய கால பிரம்புச் சாய்வு நாற்காலி இருந்தது. அவனுடைய அப்போதைய மன ஆறுதலுக்கும், உடல் சோர்வுக்கும் அந்த சாய்வு நாற்காலி தேவைப்பட்டது. அதில் சாய்ந்து கண்ணைம் மூடிக் கொண்டிருந்தால் மனது மட்டும் ஒரு நிலையில் இல்லாமல் பத்தையும் பலதையும் யோசித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று சர சர வென்ற காலடி ஓசையில் சட்டென்று கண்விழித்துக் கொண்டான். ஒரு பெண் படபட வென வீட்டிற்குள் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் மௌனமாக "வாங்கோ" என்று தலையை ஆட்டி வரவேற்றார் பக்கத்து வீட்டுப் பெண்மணி.. அந்த பெண்மணியும் அவரது குடும்பத்தினரும் தான் ஒட்டுறவாய் ஒத்தாசையாய் இத்தனை நாளும் கூடப் பிறந்த சகோதரங்கள் மாதிரி உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.


வந்த இளம் பெண் " அகல்யா எங்க?" என்று கேட்டுக் கொண்டு வந்தாள். அவளுடைய குரலில் ஏதோ இனம் தெரியாத அதிர்வு அவனை கட்டிப் போட்டது போல் இருந்தது. ஊதிவிட்டால் விழுந்துவிடும் தோரணையில் மெல்லிய அந்த தேகத்தில் அவளுடைய குரலின் கம்பீரம் பொருத்தமில்லாமல் இருந்தாலும் எதிராளியை பணிய வைக்கும் தோரணை தெரிந்தது. வெயிலில் கறுத்து போன தோட்டத்து வேலையில் இருக்கும் பெண்களைப் போல் அவளுடைய நிறம். இறுக்கிப் பின்னின தலைமுடியை மடித்துக் கட்டியிருந்தாள். ஒரு கணம் அவனைத் திரும்பிப் பார்த்த அவளுடைய பார்வையில் தெரிந்த தீட்சண்யம் அவனை என்னவோ செய்தது.

"எந்த அறைக்கில கிடக்கிறாள்?" திரும்பவும் அந்த அயல்வீட்டுப் பெண்ணிடம் அகல்யாவைப் பற்றிக் கேட்டாள்.

அந்தப் பெண்மணி தங்கச்சி முடங்கிக் கிடந்த அறையைச் சுட்டிக் காட்ட பட பட வென்று உள்ளே போன அந்த யுவதி திரும்பி 'வெளில அடுப்பு மூட்டினபடி கிடக்கே?" என்று கேட்க அந்த அயல்வீட்டும் பெண்மணி "ஓம்" என்றாள்.

" அப்ப கிடாரத்தில கொஞ்சம் தண்ணியை கொதிக்க வையுங்கோ. வாரன்" என்று கட்டளை போட்டுவிட்டு திரும்பி அகல்யா இருந்த அறைக்குள் போனாள்.

"யாரிது? என்று கேட்டான் இவன்.

"இது.. போராளி கமலினி. உங்கட குடும்பத்துக்கு தெரிஞ்ச பிள்ளை"

"இங்க ஏன் வந்திருக்கிறா?"

"அகல்யாவிண்ட நிலமையைக் கேள்விப்பட்டிருக்கிறா போல..அதான் வந்திருக்கிறா பாக்க.."

அவனுக்குள் சொல்ல முடியாத ஆத்திரம் வந்தது.

"இவளவையோட என்ன தொடர்பு எங்கட வீட்டாக்களுக்கு? அதால தான் ஆமிக்காரன் இங்க வந்து நாசம் செய்திட்டு போனவனே?"

"அப்பிடி இல்லை தம்பி... இவையோட தொடர்பு இருந்தாலும் சரி இல்லையெண்டாலும் சரி இங்க அவங்கள் எந்த நேரத்திலயும் யாரிண்ட வீட்டுக்குள்ளயும் புகுந்து அட்டகாசம் செய்வாங்கள்..

"என்ன கதைக்கிறியள்..? இப்பவே இவ்வளவு நாசம் நடத்தியிருக்கிறவங்கள்... இந்த வீட்டுக்கு போராளியள் வந்து போகினமெண்டால் சும்மா விடுவாங்களே?" என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அந்தப் பெண் மௌனமாக நின்றாள்.

"உந்தப் பெடியனுக்கு சொல்லி விளங்கப்படுத்தவேலாது" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அவனுடைய தரப்பின் முக்கியத்துவம் நாட்டை விட தன் குடும்பத்துக்கு மட்டுமே. நாட்டு விடுதலைக்காக போராளிகள் உயிரிழப்பது போரின் சகசமான விசயம். ஆனால் பொதுமக்கள் ஏன் சாக வேணும் என்பது தான் அவனுடைய வாதம். பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத பட்சத்தில் போர் தேவையா என்பது அவனுடைய கேள்வி... இத்தனையையும் விட மேலான காரணங்கள் மறு தரப்பில் இருந்தாலும் அதையெல்லாம் அவன் தன்னுடைய சொந்த இழப்புகளுக்கு ஈடாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அப்படியொரு மனநிலையிலும், போராட்டத்தைப் பற்றிய புரிதலோ, பக்குவமோ, இழப்புகளை சகிக்கும் வல்லமையோ இல்லாத , மனதளவில் வெகு பலஹீனமான பெரும்பான்மையான மக்களில் ஒருவனான அவனால் ஒரு போராளி தன் வீட்டுக்குள் சர்வ சாதாரணமாய் நடந்து போவதை ஜீரணிக்க முடியவில்லை. போராளிகளை விட அவன் இராணுவத்தினருக்கே பயந்தான். போராளிகளுக்கு ஆதரவாய் இருந்தால் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற உணர்தல் மட்டுமே மூளையில் துருத்திக் கொண்டு நின்றது. சடாரென்று எழுந்து ஆவேசமாக உள்ளே போராளி கமலினியை தொடர்ந்தான்.

அவன் அவளை அணுகுவதற்குள் கமலினி அகல்யா இருந்த அறைக்குள் நுழைந்திருந்தாள். அவனுக்கு உள்ளே போக மனமில்லாமல் தயங்கி வெளியேயே நின்றிருந்தான். எப்படி வசந்தியின் முகத்தை விதவை என்ற நினைவுடன் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லையோ அதே போல் கற்பழிக்கப்பட்ட தங்கச்சி அகல்யாவையும் அவனால் நேரிடையாக பார்க்க முடியவில்லை,

அகல்யா அம்மாவின் வயிற்றிலிருக்கும் போதே அவன் வெளிநாடு போய்விட்டான். தங்கையின் முகத்தைப் பார்க்காமலேயே தங்கையைப் படத்திலேயே ஒவ்வொரு பருவத்திலும் பார்த்து பார்த்து வந்திருந்தான். அவளுடைய பிறந்தநாள்களுக்கெல்லாம் அவளுக்கு பணம் பிறம்பாக அனுப்பி வைப்பான். அவளுடைய சாமத்திய வீட்டை அந்த அயலிலேயே பெரிசா செய்வித்தான். வீடியோ, படம் என்று தடல் புடலாக எடுப்பிச்சான். தங்கச்சியை விதம் விதமா அரை தாவணி, முழுச் சீலை, சுடிதார் என்று அலங்கரிச்சு படம் எடுத்து அனுப்பியிருந்தாள் அம்மா.

அப்படி மனதுக்குள் தன்னுடைய குழந்தையாகவே வளர்ந்த பெண்ணை- தன்ர தங்கச்சியை அவனால் கற்பிழந்த பெண்ணாய் முகம் எடுதுப் பார்க்க முடியவில்லை. அவள் ஒரு பாவமும் செய்யாதவள். அவளுக்கு ஏன் இந்த நிலை வர வேணும் என்று நினைத்து நினைத்துப் புளுங்கிப் போயிருந்த அவனுக்கு அறைக்குள் சட்டென்று நுழைந்துவிட மனம் வரவில்லை. தங்கச்சின்ர முகத்தை எப்பிடி பாக்கிறது ?" என்ற வேதனையுடன் கதவருகிலேயே தயங்கி போய் நின்றான்.

"அகல்யா...ஏய் அகல்யா! எழும்படி...எழும்பு பார்ப்பம்..." உள்ளே கமலினி சருகு போல் கருகி கசங்கிக் கிடந்த அகல்யாவை அதட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

"என்னது ..இவள் இப்பிடி அதட்டுறாள்? அவள் கிடக்கிற கிடையைப் பார்த்து ஒரு கரிசனமோ பரிதாபமோ இல்லாமல் ஏன் இப்படி சத்தம் போடுறாள்?" என்று மனதுக்குள் எரிச்சலாக இருந்தது வெளியில் நின்ற அவனுக்கு.

"அகல்யா ..எழும்படி...நான் கமலினி வந்திருக்கிறன்...எழும்பு..இஞ்சை பார்..என்னைப் பார் ஒருக்கா.. எழும்படியப்பா...எத்தினை நாளைக்கு இப்படியே கிடக்கப் போறாய்..எழும்பியிரு..."

வெளியில் நின்ற அவனுக்கு கமலினி மீது ஏனோ கோபம் கோபமாய் வந்தது. தங்கச்சியின் இழப்பும் , நோவும், வருத்தமும் இவளுக்கு தெரியேலையா? என்ன பொம்பிளை இவள்? வாறவை போறவை எல்லாம் தங்கச்சியைப் பார்த்து கவலைப்பட்டுக் கொண்டு போகினம்...இவள் என்னடாவெண்டால்.... என்று நினைத்துக் கொண்டான். உள்ளே தங்கையின் விசும்பல் ஒலி துல்லியமாகக் கேட்ட போது மனதைப் பிசைந்தது இவனுக்கு.

உள்ளே அறையில் கமலினி அகல்யாவை கைத் தாங்கலாய் எழும்பி உட்கார வைத்தாள். அகல்யாவின் துறு துறுப்பெல்லாம் அறிந்தவள் கமலினி. முந்தி தின்னவேலியில பக்கத்து பக்கத்து வீட்டில இருந்தபோது அவளோடு வளர்ந்த சிநேகம் கமலினியோடது. அகல்யா நல்ல அழகு. துரு துருவென்ற கண்ணும், துடியாட்டமுமாய் எப்பவும் வண்டு மாதிரி சுழண்டு கொண்டு தானிருப்பாள்.அவளை இப்ப இந்தக் கோலத்தில் பாக்க கமலினியால் பொறுக்கமுடியவில்லை.

அநியாயமாய் ஒரு அழகான பூவை கசக்கி போட்ட காட்டுமிராண்டிகளை கண்ட துண்டமாய் வெட்டி காக்கைக்கும் நரியளுக்கும் போட வேணும் போல் கமலினிக்குள் ஒரு வெறி ஏறிக் கொண்டிருந்தது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத இறுகிய முகமும் மனமுமாய் போயிருந்தது அவளுடைய சுபாவம்..

அவளுக்கு இப்போதெல்லாம் அழுகையே வருவதில்லை. அவள் அனுபவிச்ச வேதனைகளாலும், இழப்புகளாலும் கண்ணீர் வற்றிப்போய் மனம் பாலைவனமாகி வரண்டு போய்ட்டுது. கமலினி ஒரு தனி தீவு மாதிரி.
அவளுடைய குடும்பமே இந்திய அமைதிப்படையினரால் அழிந்த போது, அவள் கற்பழிக்கப்பட்ட போது அவளுக்கு வெறும் பத்து வயது தான் . கெடுக்கப்பட்டது தெரியாமல் தன்னை ஆமிக்காரன் என்னவோ கொடுமை செய்யிறான் என்று நினைச்சு துடிச்சுக் கொண்டு கிடந்த அந்த நாள் இண்டை வரைக்கும் அச்சுப் பிசகாத கொடூரமான உணர்வாய் மிஞ்சிக்கிடக்கிறது.. அந்தப் பயமும், இயலாமையும் இப்ப கோபமாயும், வெறியாயும் மாறியிருந்ததே தவிர அந்த சம்பவத்தின் தாக்கம் கடுகளவு கூட குறையாமல் இன்று வரை இருக்கிறது.

அனாதையாய் அவள் நின்ற நேரத்தில் அகல்யாவின் அப்பா தான் அவளைக் காப்பாற்றி தன் குடும்பத்தாரோடு இங்க சாவச்சேரிக்கு அனுப்பி வைச்சவர். இவர்களோடேயே அவள் இருந்து வந்தாலும் அவளால் அவள் பட்ட கஷ்டங்களை, இழப்புகளை , வலிகளை மறக்க முடியாமல் ஒரு நாள் இரவு கிளம்பிப் போனவள் தான்... அப்பப்ப வருவாள் ..அவளுக்கென்று இவையளை விட்டால் யார் இருக்கினம். இப்ப அவையளுக்கே இவளுடைய ஆறுதல் தேவைப்பட்டிருக்கிற சந்தர்ப்ப சூழ்நிலையாப் போட்டுது. ஆனால் இதெல்லாம் வெளிநாட்டில் இருந்து வந்த இவனுக்கு என்ன தெரியும் பாவம்...

கமலினிக்கும் இதே கொடுமை தான் நடந்துது. ஆனால் அவள் அப்ப சின்னப்பிள்ளை. வயசுக்குக் கூட வரேலை. ஆனால் வலியும் வேதனையும் இருந்தது. எல்லாரும் குடும்பத்தில செத்துப் போட்டினமே... எனக்கு மட்டும் ஏன் சா வரேலை? ஏன் அவங்கள் என்னையும் என்ர குடும்பத்தோட சேர்த்து சுட்டுப்போட்டுப் போயிருக்கலாமே என்று பலநாள் நினைத்து நினைத்து அழுதிருக்கிறாள் அந்த நேரங்களில்.

அம்மாவும் அப்பாவும் இல்லாமல் தான் அனாதையாய் பக்கத்துவீட்டுக்காரரோடு இருக்கிறமே என்று நினைத்து நினைத்து வெதும்பியிருக்கிறாள். செத்தவீடு செய்யமுடியாமல் ரெண்டு சாக்குக்குள்ளே அப்பாவையும் அம்மாவையும் அடைசி , சின்னத் தம்பியையும் அம்மாவின்ர சாக்குக்குள்ளேயே போட்டுக் கொண்டு போனதை இன்னும் அவளால் மறக்க முடியவில்லை. எங்க கொண்டு போய் எரிச்சினம் , எப்பிடி எரிச்சினம் என்று அவள் கேட்கேலை. கேட்க விரும்பேலை.

எத்தினையோ நாள் அந்த சாக்கு மூட்டையள் கனவில வர, கத்திக் கொண்டும் பினாத்திக் கொண்டும் அழுதிருக்கிறாள். அதன் பின் ஒரு ஆறு வருசம் இப்பிடியே அகல்யாவின் குடும்பத்தோடு இருந்து ஒரு நாள் திடீரென்று காணாமல் போனாள். போராளியாய் இரண்டு கள யுத்தம் கண்டுவிட்டாள். அவள் கையால் ஒவ்வொரு இரானுவத்தினனும் சாகும் போது சொல்லிக் கொள்வாள் "இது என்னை நீங்கள் உயிரோட விட்டிட்டுப் போன முட்டாள்தனத்திற்காகவும் இன்னொரு கமலினி உருவாகாமல் இருக்கவும்" என்று. ஆனால் நாட்டில் கமலினிகள் நிறையப் பேர் உருவாகிக் கொண்டு தானிருந்தார்கள்.

இப்ப அகல்யாவும் கிட்டத் தட்ட அவளைப் போலவே .... கற்பையும் இழந்து..அதுவும் கல்யாணம் கட்டுற ஆசையளும் கனவுகளுமாய் இருந்த நேரத்தில இப்பிடி நாயள் வந்து மேய்ஞ்சு போட்டு போயிருக்குதுகளே..இனி இவளை எப்படி ஆறுதல் படுத்த முடியும் என்று உள்ளுக்குள் மலைப்பாய் இருந்தது கமலினிக்கு.. ஆனால் அகல்யாவை எப்படியாவது தேற்றி, ஆசுவாசப்படுத்த வேண்டும். இப்படியே அவளை துவண்டு போக விட்டால் அவள் நாளைக்கு ஒண்டு கிடக்க ஒண்டு செய்து போடுவாள் என்று கமலினி நிச்சயமாய் நம்பினாள்.

"என்னடி அழுது கொண்டிருக்கிறாய். .சீ...நிப்பாட்டு இந்த அழுகையை...எதுக்கு நீ அழ வேணும்...? இப்ப என்ன நடந்திட்டுது எண்டு அழுகிறாய்? "

ஒரு இக்கட்டான சூழலில் மனதால் காயப்பட்டு துவண்டு போயிருக்கும் ஒருவரை ஆறுதல் சொல்லி, புத்தி மதி சொல்லி தேற்றுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் திட்டியோ அல்லது திசை திருப்பியோ துயரப்பட்ட்வர்களின் கவனத்தை திசை திருப்புபவர்களும் இருக்கிறார்கள். கமலினியைப் பொறுத்தவரை அவள் இரண்டாவது ரகம் தான். ஆனால் அவனோ வெளியில் ஆவேசமானான்.

"இன்னும் என்ன இருக்காம் இவளுக்கு நடக்கிறதுக்கு?யாரிவள்...என்ர தங்கச்சியை வந்து உலுப்பிக் கொண்டிருக்கிறாள்..அவளை நிம்மதியா இருக்கவிடாமல் ...."

இவனுடைய ஆவேசத்தை அதிகமாக்குவது போல் கமலினி உரத்த சத்தத்தில் அகல்யாவை ஏசிக்கொண்டிருந்தாள்

"ஏய் அகல்யா....எதுக்கடி இப்ப அழுகிறாய்? என்ன நடந்திட்டுது எண்டு அழுகிறாய்? நீ இப்படியே வாழ்நாள் பூரா அழுதுகொண்டே இருக்கப் போறாய்? "

"ஏனடி நான் இன்னும் சாகாமல் இருக்கிறன்?"

"எதுக்கடி நீ சாக வேணும். உன்னைச் சீரழிச்சவன்களை தான் சாகடிக்க வேணும். தமிழச்சியளில கை வைச்சால் உயிரோட இருக்கேலாது எண்டு தெரிய வேணும் அவங்களுக்கு.. அதை விட்டிட்டு சாக வேணும் எண்டு சொல்லுறியே.. வெட்காயில்லை உனக்கு?"

"அவங்களை சாகடிக்கிறதால நான் இழந்தது எனக்கு திருப்ப வரவா போகுது...? என்ர வாழ்கையே நாசமாப் போச்சே..."

"சீ..வாயை மூடு... எதடி வாழ்கை? உன்ர மூத்திர வாசலில இருக்கிற கன்னித் திரையா வாழ்கை? ஏண்டி முட்டாளா நீ? வம்பில பிறந்த நாயள் ஏதோ வீரத்தனம் காட்டினமாதிரி பொம்பிளையளிட்ட தங்கட கைவரிசையை காட்டிட்டு போய்ட்டான்கள் எண்டதுக்காக கால காலத்துக்கும் அழுது கொண்டு இந்த இருட்டு மூலைக்கிள கிடந்து அழுது கண்ணீர் வடிச்சுக் கொண்டிருக்கப் போறீயே...அதுக்கா பிறந்தனீ...? எழும்பி உடம்பு நோ போக நல்ல சுடு தண்ணில ஒட்டின சகதியை கழுவுற மாதிரி கழுவிட்டு தலைக்கு குளிச்சிட்டு வா. அந்தக் குளியலோட அண்டைக்கு நடந்த கசடைக் கழுவுப்பட்டுட்டுது எண்டு நாளையில இருந்து புதுசா வாழப் பழகு....எழும்பி இரு.."

வெளியில் நின்ற அவனுக்கு கொஞ்சம் திகைப்பாய் இருந்தது. இந்த பொம்பிளையள் இப்ப எப்பிடியெல்லாம் யோசிக்குதுகள்? எத்தனை சாதாரணமா எடுக்கச் சொல்லுறாள் இவள்...ஊத்தையை கழுவிப் போடுற மாதிரி நடந்த கொடூரத்தை தலை முழுகலோட மறக்கச் சொல்லுறாளே...இது சாத்தியமாகுமா? அவளுக்கென்ன ...நல்ல வசனமா சொல்லிட்டுப் போவாள்..எல்லாம் அவளவைக்கு வந்திருந்தால் தெரியும்...

பொறுக்க முடியாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக திரும்பி அவனை முறைத்தாள் கமலினி... நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியேலையோ எண்ட மாதிரி இருந்தது அவளுடைய பார்வை. அவன் உள்ளே போன போது கமலினியின் தாங்கலில் எழும்ப முயன்று கொண்டிருந்தாள் அகல்யா. அவளால் முடியவில்லை. தொடைகள் இரண்டிலும் பயங்கர வலி. இடுப்புக்கு கீழே பச்சை இறைச்சியாய் வலித்தது... கால்கள் இரண்டும் மரத்துப் போனது போல் அவளால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. ஆனால் கமலினி அவளை எழுப்பி நிற்க வைக்க பிரயத்தனப்பட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை.

"ஏன் அவளை கரைச்சல் குடுக்கிறியள்... வந்தால் பார்த்திட்டு போறது தானே?" என்றான் வெறுப்பாக...

"அதைச் சொல்ல நீர் ஆர்?" நெருப்புத் துண்டங்களாய் வார்த்தைகள் அவனை நோக்கி வர அவனுக்கு சினமெடுத்தது.

"நான் அவளிண்ட கூடப் பிறந்த அண்ணன்"

அகல்யாவைப் பார்த்து அவளுக்கு நடந்த கொடுமையைப் பார்த்து இருவருமே கொதித்துப் போயிருந்தனர்; இருவருக்குமே எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையின் உச்சக்கட்ட கோபமும் வெறுப்பும் மண்டிய மனப்பான்மையிலிருந்தனர். இருவருமே வெவேறு கோணங்களில் அகல்யாவுக்காக மனதார கஷ்டப்பட்டார்கள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் மனப்பான்மையில் இருக்கவில்லை.

"ஓ..நீர் தானே வெளிநாட்டில இருந்து வந்த அண்ணன்...?" அவளுடைய ஏளனம் இன்னும் அவனுக்குள் சினத்தை மூட்டியது. வெளிநாடு என்றால் என்ன ஏளனம் இவளுக்கு?

"சரி இப்ப என்னத்துக்கு இங்க வந்து கத்துறீர்.....நான் இப்ப என்ன அவளுக்குக் கரைச்சல் குடுத்தன் எண்டு இங்க வந்து நிக்கிறீர்? இல்லை தெரியாமல் கேட்கிறன்... அவளை சீரழிச்சுப் போட்டிட்டுப் போய் ஒரு கிழமையாகப் போகுது ..ஒருத்தருக்கு தன்னும் அவளை எழுப்பிக் கிழுப்பி இருத்தி வைப்பம் எண்டு எண்ணமில்லை...சரி செத்தவீட்டுக் கவலையில அம்மாவும் அக்காவும் இருப்பினம் எண்டால் இந்த வீட்டில இத்தினை பேர் சொந்தக்காரர் எண்டும் அயலட்டையெண்டும் வந்து நிக்கினம் போகினம்..அதில ஒரு பொம்பிளையளுக்கும் இவளுக்கு ஏதாவது செய்ய வேணுமெண்டு தெரியேலை.. . எல்லாரையும் போல என்னையும் இவளை வந்து எட்டி விடுப்புப் பார்த்திட்டு உச்சுக் கொட்டிட்டுப் போகச் சொல்லுறீரே...?அப்பிடியெல்லாம் போறதுக்கு நான் ஒண்டும் மனச்சாட்சி இல்லாதவளில்லை....இஞ்சை என்ன அவளை வைச்சு பொருட்காட்சியே நடத்துறீங்கள் ? வந்து பார்த்திட்டு போ எண்டுறீர்"

கமலினியின் வார்த்தைகளில் நொருங்கிப் போனவனாய் அவன் அகல்யாவைப் பார்த்தான். அவனுக்கு அங்கு அனுப்பி வைத்த அவளுடைய படங்களில் அவன் பார்த்த தங்கச்சிக்கும் இப்ப இங்க இருக்கிற தங்கச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எண்ட மாதிரி ..வாடிப் போய் இருந்தாள் .. என்ன மாதிரி பௌர்ணமி நிலவாய் பளீரென்று பிரகாசமாய் சிரிச்சபடி படங்களில இருந்தவள்..இப்ப என்னமாதிரி ..முகமெல்லாம் கண்டி கருத்துப் போய் .. அறுவான்கள் அடிச்சிருப்பாங்களோ இவளை...கண்ணுக்கடியிலும் முகவாய்கட்டையிலும் வீங்கி கருப்பா ரத்தம் கண்டிபோயிருந்தது. என்ன மாதிரியெல்லாம் துடிச்சாளோ என்று நினைத்துப் பார்த்து அனுமானிக்க முடியாமல் , அனுமானிக்க விரும்பாமல் தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

ஒரு வகையில் கமலினி சொல்வதும் சரி தான் என்று தோன்றியது. இத்தினை நாளும் வாறவை போறவை எல்லாம் வந்து அறைக்குள் இவளை எட்டி எட்டிப் பார்த்திட்டு ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டு தான் போயினம். அகல்யாவுக்கு முன்னாலேயே "இனி என்ன செய்யிறது அவளின்ர விதி இது தான் எண்டாகிப் போச்சு...யாரால என்ன செய்ய முடியும்..என்ன பாவம் செய்து பிறந்தவளோ இவள்?" எண்ட மாதிரி கதையள். சிலர் உண்மையாவே கவலைப்பட்டாலும் இந்த மாதிரி வார்த்தைகளில் நொருங்கிப் போவது என்னவோ அகல்யாவும், அம்மாவும் தானே....?

"மனச்சாட்சியும் மண்ணாங் கட்டியும்.. ஏன் இந்த நிலை எங்களுக்கு வர வேணும்...கண்டறியாத போராட்ட மெண்டு நீங்கள் ஆடுறதால தானே சும்மா இருக்கிற நாங்களெல்லாம் அநியாயமாய் செத்துக் கொண்டிருக்கிறோம்." அடக்கி வைத்திருந்த அவனுடைய முழு ஆத்திரத்தையும் கொட்டிவிட கமலினி வாகாக மாட்டிக்கொண்டாள். ஆனால் அவனுக்கு கமலினியின் குணம் தெரியாமல் வாயைக் கொடுத்துவிட்டான் என்று அந்தக் கஷ்டமான மனநிலை யிலும் அகல்யா நினைத்துக் கொண்டாள்.

"கதைக்கிறதை கொஞ்சம் யோசிச்சுக் கதையுங்கோ.. ஏதோ செத்தவீட்டுக் கவலையிலயும், இவள் அகல்யாவாலயும் கவலைல இருக்கிறியள் எண்டதால தான் உங்கட கதைக்கு நான் ஏதும் சொல்லி வார்த்தை வளக்க விரும்பேலை... ஆனால் ஒண்டு..எங்கட போராட்டத்தைப் பற்றி குற்றம் சொல்லவோ விமர்சனம் செய்யவோ வெளிநாட்டுக்காரருக்கும் சரி , வெளிநாட்டில இருந்து கொண்டு இங்க விடுப்புப் பாக்கிற எங்கட ஆட்களுக்கும் சரி எந்த உரிமையும் இல்லை கண்டியளோ?" முகத்திலடித்தாற் போல் வார்த்தைகளால் விளாசின அந்த மெல்லிய பெண்ணை ஒரு கணம் வாயடைத்துப் போய் பார்த்தான்.

"உரிமையில்லையோ...ஏன் உரிமையில்லை... இந்தப் போராட்டத்தில எந்த சம்மந்தமுமில்லாத என்ர குடும்பத்தில அப்பாவை சாககொடுத்தாச்சு; என்ர அக்காவை விதவையாக்கியாயாச்சு; என்ர தம்பியை அடிச்சு முடமாக்கி யாயாச்சு..;என்ர தங்கச்சியை.... என்ர தங்கச்சியை ..உயிரோடையே சாக்காட்டியாச்சு...இத்தனை இழப்பும் எங்களுக்கேன் வர வேணும்? இதுக்கு மேலே என்ன உரிமை வேணும் கதைக்க...? எனக்கு கேக்க உரிமையிருக்கு. நிண்டு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உங்கட ஆட்களுக்கு இருக்கு.. "

"அதே கட்டாயம் உங்கட குடும்பத்தை சீரழிச்ச சிங்களவனுக்கும் இருக்கு தானே? ஏன் இதே ஆவேசத்தை உங்களால சிங்கள இராணுவத்திட்ட காட்ட முடியேலை? ஒரு சிங்கள இராணுவ வீரனை வழி மறிச்சு கேள்வி கேளுக்கோவன் ஆம்பிள்ளயள் எண்டால்.. அவனிட்ட கேட்க முடியாததை என்ன தைரியத்தில எங்களைப் பாத்துக் கேட்கிறியள்? அவங்களைப் போல நாங்களும் ஆயுதங்களோட தானே திரியிறம்.. ஆனால் உங்களால பயமில்லாமல் எங்களை கேள்வி கேட்க முடியுது...தானே? எப்பிடி? ஏன் எண்டால் நாங்கள் தேவையில்லாமல் எந்த உயிரிலையும் கை வைக்க மாட்டம் எண்டு உங்களுக்கு தெரியும். அந்த தைரியம் .. நாங்கள் களத்தில மட்டும் தான் ஆயுதத்தில கை வைப்பமெண்ட நிதர்சனம் உங்களிட்ட இருக்கு. கேள்வி கேட்கிறவைக்கு நியாயமான பதில் சொல்ல எங்களால முடியும் எண்ட தைரியம் எங்களிட்டை இருக்கு.. "

"அவங்களிட்ட கேள்வி கேட்டால் அவன் உங்களோட கதைக்கமாட்டான். அவனிட்ட துவக்கு கதைக்கும். அடியும் உதையும் வாங்கி முடமாகி வருவியள் அல்லது பிணமாகப் போவீயள்...அந்தப் பயம் தான் உங்களால அவங்களிட்ட போய் நியாயம் கேட்க முடியேலை. .எங்களிட்டை காட்டுறியளோ உங்கட இயலாமையை?"

“உதென்ன நினைப்பு உங்கட இழப்புகளை நாங்கள் என்னமோ அக்கறைப்படாத மாதிரியும், அலட்சியப்படுத்திற மாதிரியும் ?. ஒவ்வொரு மரணிப்பும், இழப்பும் எத்தினை பெரிய கொடுரமெண்டது எங்களை விட வேற யாருக்கும் தெரிஞ்சிருக்க நியாயமில்லை. இழப்பும், மரணிப்பும் உங்கட குடும்பத்தில மட்டும் தான் எண்டில்லை... ஈழத்தில இருக்கிற ஒவ்வொரு தமிழ் குடும்பமும் ஏதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கு. ஏன் இந்த பாதிப்பு நடக்குது எண்டு நினைக்கிறியளே தவிர இந்த பாதிப்பு ஏன் நடக்க துவங்கினது எண்ட ஆரம்பத்தை மறந்திட்டியள்."

"நான் ஏன் அதையெல்லாம் யோசிக்க வேணும். ? என்ர குடும்பத்தைப் பற்றி தான் எனக்கு கவலை,"

“'உங்கட குடும்பம் மட்டும் தான் ஈழத்தில இருக்கிற குடும்பம் எண்டில்லை. இங்க இருக்கிற ஒவ்வொரு ஈழத் தமிழனும் அவனிட்டை வருங்கால சந்ததியும் தனக்கெண்ட ஒரு சொந்த பூமியில வாழ வேணும். இன்னொரு வனிண்ட இரவல் நிலத்தில அகதியா புகலிடம் தேடி ஓடுறதுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேணும். அதுக்காக நடக்கிற போராட்டம் இது. இதைப்பத்தி காசு சேக்கிற ஒரே ஒரு நோக்கத்தில வெளிநாடு போய் இங்க நடக்கிற போரை சாக்கா வைச்சு அதில பாதிக்கப்பட்டனான் என்று கதை சொல்லி அகதி எண்டு முத்திரை குத்தி வெளிநாட்டுக்காரனிட்ட ஓசில காசு வாங்கி வாழுற வாழ்கைக்காக போனவை கதைக்கிறதுக்கு நியாயமில்ல. ஒரு வகையில் அவையெல்லாம் பிச்சைக்காரருக்கு சமன் எண்டு நான் சொன்னால் உம்மால என்ன பதில் சொல்ல முடியும்?”

“உம்ம போல ஓடிப் போனவையளுக்காக நாங்கள் போராடேலை. இது தான் என்ர தேசம்; இந்த மண்ணில தான் நான் வாழ வேணும்; என்ர பரம்பரை வாழ வேணும், நான் செத்தாலும் இந்த மண்ணில தான் சாக வேணுமெண்டு இஞ்சை இத்தனை பயங்கர போர் நடந்தாலும் மண்ணை விட்டிட்டுப் போக மனமில்லாமல் இருக்குதுகளே...இந்த சனங்கள்..! அந்த சனங்களுக்காகவும் அதுகளின்ர சந்ததிகளுக்காகவும் தான் போராடுறம். நாளைக்கு வரப் போற சந்ததி தலை நிமிர்ந்து சொந்த நாட்டில் பிறக்கும் சுதந்திர தமிழ் பிள்ளையாய் இருக்க வேணுமெண்ட காரணத்திற்காக போராடுறம்"

அவனுக்கு ஆத்திரமும் ரோஷமும் பொத்துக் கொண்டு வந்தது. இத்தனை கஷ்டப்பட்டு அங்க பனிக்கிளயும், குளிருக்குள்ளேயும் நகம் வெடிக்க வெடிக்க வேலை செய்து சம்பாதிக்கிறன்..இவள் என்னடாவென்றால் என்னை அகதிக்காசு எடுக்கிற பிச்சைக்காரன் எண்டு ஏளனம் செய்யிறாளே என்று வெகுண்டான்.

"நான் இருக்கிறது அமெரிக்காவில . கனடா , ஜேர்மனில தான் அகதிக் காசு . அமெரிக்காவில அப்பிடியில்லை தெரிஞ்சுதே.. அகதி யெண்டாலும் சரி, அமெரிக்கன் எண்டாலும் சரி அங்க உழைச்சாத் தான் காசு..பனிக்கிளயும், குளிருக்குள்ளயும் தோல் வெடிக்க கஷ்டப்பட்டு என்ர குடும்பத்துக்காக சம்பாதிக்கிற என்னைப் பார்த்து பிச்சைக்காரன் எண்டு எப்பிடி சொல்லுவீர்?"

"நீர் அமெரிக்காவில இருக்கிறதால உழைக்கிறீர். ஆனால் அமெரிக்காவுக்கு எப்பிடிப் போனீர்? அங்க அந்த நாட்டில இருக்கிற உரிமை எப்பிடிக் கிடைச்சுது? அகதியெண்டு தானே ?? வெளிநாட்டில இருக்கிற அத்தனை தமிழனும் போரிண்ட பாதிப்பில ஓடிப் போனவையோ அல்லது உழைப்புக்காண்டியும், காசு சேர்க்கிறதுக்காண்டியும் போனவையோ? உண்மையான அகதியள் எண்டால் இங்க செஞ்சோலை எண்டு ஒரு இடம் இருக்கு.. போய் பாரும்..அங்க இருக்கிற சீவன்கள் அகதியள் மட்டுமில்லை. .அனாதையளும் கூட. இல்லாட்டில் இந்தியாவில இராமேஸ்வரம் மண்டபம் அகதி முகாமில போய் பாரும்.. அங்க இருக்கிறவை தான் உண்மையான அகதியள்..கண்டியளோ? ஏஜன்ஸிக்காரனுக்கு இலட்சம் இலட்சமாக காசு கட்டி வெளிநாட்டுக்கு போறவை அகதி மாதிரி நடிக்கிறவை. அவை இந்த போரை சாக்கா வைச்சு காசு சம்பாதிக்கிறவை. அவையளுக்கு கூட ஒரு வகையில எங்கட போராட்டம் தேவைப்படுது. இங்க போர் நிண்டா அங்க இருந்து அவன் உங்களையெல்லாம் அனுப்பினால் நீங்கள் எங்க போவியள்? உங்களுக்கு போக்கிடம் வேற எது? "

அவன் மௌனமானான். உண்மை தான் அவன் அங்க பத்து வருசத்துக்கும் மேல அகதி எண்ட பெயரில தானே இருந்தவன். இந்த குடியுரிமை அந்தஸ்து இப்ப தானே கிடைச்சுது? இல்லாட்டில் நாட்டில போர் முற்றா முடிஞ்சுது எண்டு தீர்மானம் வந்திருந்தால் அவனுக்கு ஏது அகதி அந்தஸ்து? இப்ப அவன் அகதில இருந்து அமெரிக்க குடிமகனாக மாறியது நல்லதாப் போச்சுது என்றுபட்டது அவனுக்கு.

"இந்தப் போர் உயிரை அழிச்சு நடத்துற வேள்வி; இதில வியாபாரம் இல்லை; இலாபம் இல்லை; வருமானம் இல்லை எங்களுக்கு; காட்டுக்குள்ளயும், காவலரண்களிலயும் நித்திரையில்லாமல் நடத்திற போராட்டம். எங்கட உழைப்பும் சரி , கனவும் சரி தனி நாடு மட்டும் தான்.”
“எங்களைப் பொறுத்தவரை எங்களிட்டை இருக்கிற ஒரே ஒரு இலக்கு இழந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய சொந்த மண்ணை மீட்டு எடுக்கிறது மட்டும் தான். போராட்டம் தொடங்கேக்கிலை என்ன காரணத்துக்காக தொடக்கப்பட்டதோ அதே காரணத்தை சாதித்துக் காட்டி தமிழனுக் கென்று ஒரு தனிநாட்டை கட்டியெழுப்பிக் காட்டுவம். அதுவரைக்கும் உங்களைப் போல ஆட்கள் இப்படியே கதைச்சுக் கொண்டு தானிருக்கப் போகினம். தாராளமா கதைச்சுக் கொண்டிருங்கோ. .உங்கட இந்த மாதிரியான விசர்தனமான விமர்சனங்களால் போராட்டத்தின் அத்திவாரத்தை சாய்க்க முடியாது கண்டியளோ?"

"கிழிச்சியள்..கடைசி தமிழன் சாகிறவரைக்கும் தான் உங்கட போராட்டம். .எல்லாரையும் சாக்காட்டின பிறது தமிழ் ஈழம் எண்டு ஒண்டு எதுக்கு?"

கமலினிக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அகல்யாவிடம் திரும்பி "உன்ர கொண்ணனுக்கு என்ன விசரே? ... உந்த மாதிரி விசர் கதயளுக்கு எல்லாம் பதில் சொல்ல நான் இஞ்சை வரேலை சரியே...முதல்ல நீ எழும்பி வா..வந்து குளி, உடுப்பை மாத்து.. வெளில வந்து காத்தாட இரு" என்று சொன்னபடி அகல்யா எழுந்திருக்க கை கொடுத்து தூக்கினாள்.

போகிற போக்கில் "குடும்பத்தை நேசிக்கிறது பிழையில்லை. ஆனால் இந்தக் குடும்பத்தை மாதிரி தான் உங்கட மண்ணும். அதையும் கொஞ்சம் மதிக்க வேணுமெண்டு உணர்வு இருக்கிறவைக்கு மட்டும் தான் தன்ர தேசத்துக்கும் இனத்துக்கும் விடுதலை எத்தினை முக்கியமெண்டு விளங்கும். உங்கள மாதிரி ஆட்களுக்கு அந்த உணர்வு கடைசி வரை வரவே வராது." என்று அவனைப் பார்த்து சொல்லிக் கொண்டு அகல்யாவை கைத் தாங்கலாக அழைத்துக் கொண்டு போனாள் கமலினி. அவளுக்கு பதில் சொல்ல வாயெடுத்தவன் அவள் தன்னை அலட்சியப்படுத்திக் கடந்து போவதை ஆத்திரமுடன் பார்த்துக் கொண்டு மௌனமாகினான்.

திரும்பவும் அந்த சாய்மனைக் கதிரையில் போய் சாய்ந்து படுத்தான். கண்களை மூடி நிம்மதியாக வேறு எதையாவது யோசிக்க முயன்று தோற்றுப் போனான். திரும்ப திரும்ப கமலினி சொன்ன அந்த வார்த்தைகள் தான் மூளைக்குள் சுற்றிக் கொண்டு நின்றன. தன்ர குடும்பத்தை நேசிக்கிற மாதிரி தன்னால வேற எதையும் நேசிக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தான். அவனுக்கு என்னவோ அது சாத்தியமான விசயமாகத் தெரியவில்லை. இண்டைக்கு ஒருத்தியை கலியாணம் கட்டினான் எண்டாலும் அவளைக் கூட அவனால் தன்னுடைய அம்மா, அக்கா, தங்கச்சியை நேசிக்கிற மாதிரி நேசிக்கவோ அன்பு காட்டவோ முடியும் என்று தோன்றவில்லை. கலியாணம் பத்தின கனவுகள் அவனுக்கு இப்ப எல்லாம் வருவதில்லை. முகமே தெரியாத ஒரு பெண்ணை மனைவியாக உருவகப்படுத்தி, கற்பனையில் புணர்ந்து, கனவில் குடும்பம் நடத்தி சீ என்று போய்விட்டது அவனுக்கு, அங்க அமெரிக்காவில் இரவு பகல் பாராமல் ஒண்டுக்கு ரெண்டு வேலை செய்திட்டு அறைக்கு திரும்பினால் உடம்பில் இருக்கிற ஒவ்வொரு தசை திசுவும் பச்சை இறைச்சியாய் நோகும். அந்த நோ போக கொஞ்சம் டீவாஸ் உள்ள போட்டுவிட்டு , எதையாவது சாப்பாடு எண்ட பேரில் கொறிச்சுப் போட்டு அப்படியே குப்பிற விழுந்தால் அடுத்த நிமிசம் நித்திரைக்குள் போக தான் சரியா இருக்கும். அதையும் மீறி அப்பப்ப தலையை நீட்டுற அவனுடைய உடம்பு தேவையை சமந்தா வந்தாளெண்டால் போதும் ..இப்படி அப்பப்ப தீர்த்துக் கொள்ளும் காமத்தில் தன்னுடைய உடல் தேவையையும், இளமையையும் திருப்திப் படுத்திக் கொள்வதில் கல்யாணத்துக்கு இருந்த முக்கியத்துவம் இல்லாமல் அடிபட்டுப் போனது அவனுக்கு.... இந்த காமதுக்காக மட்டும் தானே ஒரு கலியாணம் வேணும்? அந்த கலியாணத்தால தானே பிள்ளையள் , குட்டியள் எண்டு பெருகி அதுக்கு குடும்பமெண்டு பேரும் வைக்க வேணும்?.... அவனை உருவாக்கின குடும்பத்துக்கான முக்கியத்துவம் போய் அவன் உருவாக்கின குடும்பத்திண்ட முக்கியத்துவம் முன்னுக்கு வர...இரண்டுக்கும் சேர்த்து உழைச்சுக் கொண்டே அவன் வாழ்கை போய்க் கொண்டிருக்கும்...இது தான் இப்ப வெளிநாடுகளில உழைக்கிறதுக்கெண்டு வந்த ஒவ்வொரு தமிழனின் வாழ்கை மரபா போச்சு... குடும்பம் எண்டது அன்பான உறவுகளின் பங்கேற்பு என்பது என்னவோ அவனுடைய அப்பா, அம்மா, சகோதரங்களோட மட்டுப்படுத்தப்பட்டதாகி விட்டது அவனுக்கு. அது சுய நலமாக தெரிந்தாலும் அந்த சுய நலத்தில் அவன் யாரையும் நஷ்டப்படுத்தவில்லை. ... .யாருடைய குடியையும் கெடுக்கேலை என்பது அவனுடைய வாதம்.

கமலினி சொன்ன ஒரு வசனம் கூர்மையாக மனதில் ஆணி அடித்த மாதிரி இருந்தது. வலித்தாலும் கூட ஒரு வகையில் அவன் அந்த வலியை ஏற்றுக் கொள்ளத் தயாராகத் தான் இருந்தான்..

"உன்ர வாழ்கை என்ன உன்ர மூத்திர வாசலிலயே இருக்கு?"

என்ன ஒரு ஆணித்தரமான கேள்வி? ஒரு பொம்பிளப் பிள்ளையின்ர வாயில வரக் கூடிய வார்த்தைகளா எண்டு யோசிச்சுப் பார்த்தான். கொஞ்சம் அருவருப்பாயும் இருந்தது..ஆனால் அப்படி சொல்லவும் ஒரு துணிவு வேணுமெண்டும் தோன்றியது. அந்தக் கேள்வியில் என்ன பிழை என்று யோசிக்க வைத்தது. அகல்யாவுக்கு நடந்தது ஒரு கொடுமை; அவளுக்கெதிராக நடந்த ஒரு வன்முறை அது; அவளின்ர விருப்பத்துக்கு மாறா நடந்த ஒரு பலாத்காரத்துக்கு அவள் எப்பிடி பொறுப்பாக முடியும் ? வன்புணர்தலால் அவளுக்கு என்ன நடந்துவிட்டது? ஒரு விபத்து நடந்தால் கிடைக்கிற வலியும் நோவுமாய் ஏன் நினைக்கக் கூடாது. விபத்தில ஒரு காலோ , கையோ போனாலும் பரவாயில்லை உயிர் தப்பினால் போது மெண்டு நினைக்கிறதில்லையா..அது மாதிரி இங்க பறிபோனதையும் ஒரு ஊனமாக எடுத்தால் தான் என்ன? ஊனத்தோட மனுசர் வாழுறதில்லையா என்ன? காலப் போக்கில் இந்த ஊனத்தை மறந்தால் தான் என்ன? அல்லது இதை ஊனமாக தான் ஏன் நினைக்க வேணும்? கமலினி சொன்ன மாதிரி இப்ப அங்க அவள் தலைக்கு ஊற்றிக் குளிக்கிறதோடேயே கழுவிப் போற ஊத்தையாவே போகட்டுமேன்....? ஒரு நாள் நிகழ்வில முழு வாழ்கையையும் தொலைக்க வேணுமா என்ன? இப்படி பலதரப்பட்ட கேள்விகளின் குடைச்சலுடன் கண்ணை மூடிக் கொண்டிருந்தான் அவன்.


கொஞ்ச நேரத்தில் அகல்யாவை குளிக்க வார்த்து கூட்டிக் கொண்டு வந்தாள் கமலினி. இப்ப கமலினியின் துணை இல்லாமல் மெதுவாக அகல்யாவே நொண்டிக் கொண்டு நடந்து வந்தாள். சுடு தண்ணில குளிச்சது கொஞ்சம் உடல் நோ போன மாதிரி இருந்தது. எதோ உடம்பு முழுக்க ஒட்டியிருந்த கசடும், வலியும் கழுவிவிட்ட மாதிரி அகல்யாவின் முகம் வெளிச்சமாய் இருந்தது போல் அவனுக்கு தெரிந்தது. அறை வாசலில் சாஞ்சு கொண்டிருந்த அம்மாவை பார்த்து கமலினி " அம்மா ..கொஞ்சம் சூடா தேத்தண்ணி ஏதும் குடிக்க குடுங்கோ இவளுக்கு.." என்றாள்.

அம்மா மௌனமாக எழும்பி சமையலறைக்குள் போனாள். திரும்பவும் தனது இருட்டு அறைக்குள் போக எத்தனித்த அகல்யாவை "ஏய்..எங்க போறாய் அங்க? இஞ்சை வந்து இங்க இரு...காத்துப்படுற மாதிரி... " என்று அதட்டினாள் கமலினி.

"என்னை விடடி ..நான் போய் படுக்கப் போறன்..எனக்கு இங்க இருக்க மனம் வரேலை..என்னவோ மாதிரி இருக்கு"

"விசர் கதை கதைக்காமல் ..இஞ்ச வந்து உதில இரு....என்னத்துக்கு பயப்பிடுறாய்? ஊர் சனம் விடுப்பு பார்ப்பினை எண்டா? பாத்தா பாத்திட்டு போகட்டுமேன்...அவை என்னத்தை தான் விடுப்புப் பாக்கேலை சொல்லு...?உனக்கென்ன..? நீ ஏன் கவலைப்படுறாய்? உன்னில என்ன பிழையெண்டு நீ பயப்பிடுறாய்..? வந்திரு"

அவனுக்கு அகல்யாவைப் பார்க்க கவலையாக இருந்தது.. வெறும் இருபத்தி ஒரு வயதுப் பெட்டைக்கு இப்பிடி நடந்து போச்சே..ஒரு கலியாணம் கட்டி , குடும்பம், பிள்ளை குட்டி எண்டு இவளால இனி வாழ முடியுமா? தனி மனுச விசயமாக வாழ்கை இருந்தால் பரவாயில்லை. ஆனால் கலியாணம் எண்டது ரெண்டு பேர் சம்மந்தப்பட்டதாச்சே... கெடுக்கப்பட்டவள் எண்டு தெரிஞ்சு எவன் வந்து கட்டுவான் இவளை? எப்பிடி இவளை நான் கரையேத்தப் போறன்?

அம்மா கொடுத்த தேத்தண்னியை அகல்யா குடித்துக் கொண்டிருக்க அவளுடைய தலை முடியை துவாயால் தட்டி காயப் பண்னுவதிலும் , ஒரு கிழமையாய் சீவாமல் இழுக்காமல் கிடந்து பொச்சு மட்டை மாதிரி சிக்கிப் போயிருந்த அவள் தலைமுடியிலிருந்து சிக்கு எடுத்து தலை பின்னிவிட முயற்சித்துக் கொண்டிருந்தாள் கமலினி. கமலினியின் உரிமையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எப்பிடி இவளோட அவனுடைய குடும்பத்தாருக்கு பழக்கம் வந்துது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை...

"வா..உள்ள போவம்" என்று அகல்யா கமலினியைக் கேட்டாள்.

"ஏன்? அந்த இருட்டு அறைக்கிள கிடந்து புளுங்காமல்..வெளில இரு.. நீ பயப்பிடுற அளவுக்கு ஒண்டும் நடக்கேலை...சரியே..? முதலில உன்ர பயத்தை துரத்து ...மற்றைவையப் நினைச்சு பயப்பிடுறதையும் வெட்கப்படுறதையும் முதலில நிப்பாட்டு... வாழ்கையை ஒரே சொர்கமா நினைச்சு வாழ முடியாதடி..அதுவும் எங்கட மண்ணில..இருக்கிற பொம்பிளையளால முடியவே முடியாது. இஞ்ச பார்.. இந்த தலைல இருக்கிற சிக்கெடுக்கவே எத்தினை கரைச்சலா இருக்கெண்டு... அப்ப வாழ்கையெண்டால்..என்ன சும்மாவே...?" எண்டு அதட்டினாள் கமலினி.

"உங்களுக்கென்ன? நீங்கள் நல்லாத் தான் வசனம் பேசுறியள்...இது மாதிரி அனுபவிச்சுப் பார்த்தால் தான் தெரியும் உங்களுக்கு அந்த வலியிம், வேதனையும்.... ஆனா... அனுபவிக்கிறது நாங்கள் தானே?.." அவனுடைய குமுறலை முறைத்துப் பார்த்தாள் கமலினி. அவளுடைய பார்வை பலவிதமான இழைகளைக் கொண்ட மொத்த குவியலாய் உணர்ந்தான். தன்னை அவள் ஒரு கேவலமான ஒரு பலஹீனனாக கணக்கிடுவதாக நினைத்துக் கொண்டான். அதனாலேயே அவளுக்கு தமது நிலையை உணர முடியவில்லை என்று உள்ளுக்குள் சீற்றமாக இருந்தது.

"இது வசனமில்லை... அனுபவம். நீங்கள் போராளியளைப் பத்தி என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறியள் என்டு தெரியேலை. எனக்கும் சரி என்னைப் போல போராடுற மத்தவையும் யார்? உங்களையும் உங்கட சகோதரங்களையும் போல இளம் சந்ததியினர் தான்.நாங்களும் உங்களை மாதிரி ஒரு தாய் தேப்பனுக்கு பிறந்த பிள்ளையள் தான்.. எங்களுக்கும் உங்களைப் போல தான் சதையும் ரத்தமும் எலும்பும் தோலுமிருக்கு. உங்களுக்குள்ள இருக்கிற அத்தனை உணர்சியும் எங்களுக்கும் இருக்கு..நாங்களொண்டும் மரக்கட்டையளோ இயந்திரங்களோ இல்லை...நாங்களும் மனிசர் தான்.. நீங்கள் இப்பிடி சீரழிய நாங்கள் என்ன சொகுசா அரண்மனையில இருந்து கொண்டு வேளா வேளைக்கு விருந்து சாப்பிட்டுக், குடிச்சுக் கும்மாளம் போட்டுக் கொண்டிகிருக்கிறமே?களத்தில நிண்டு அனாதை மாதிரி எரிஞ்சு பொசுங்கி செத்துப் போனவங்கள் எல்லாம் நினைச்சால் உங்கள மாதிரி வெளிநாட்டுக்குப் போய் அகதியெண்டு பதிஞ்சு காசெடுத்து ஊருக்கு அனுப்பி தானும் வாழத் தெரியாத மடையன்களே? அவங்களுக்கு காதல் வரப்படாதே? கலியாண ஆசை இருக்கக் கூடாதே? குழந்தை , குடும்பமெண்டு கனவு காண முடியாதே?அதுகள் எல்லாத்தையும் விட்டிட்டு காட்டுக்குள்ள வாழ்ந்து களத்துல சாக வேணுமெண்டு ஒரு போராளியா போக வேணுமெண்டு ஒரு தமிழ் பெடியனோ பெட்டையோ இயக்கத்துக்கு போறதுகள் எண்டால் அந்த ஆசையளையும் கனவுகளையும் விட பெரிசா இந்த மண்ணுக்கு சுதந்திரம் வேணுமெண்ட உணர்வில போகுதுகள்..தெரியுதே...? அந்த சுதந்திரம் கிடைக்கிறதுக்கு தங்கட பங்களிப்பை செய்ய வேணுமெண்டு போகுதுகள்.

"என்ன கேட்டனீயள்... உங்கட வலியும் வேதனையும் எங்களுக்கு தெரியாதோ? போராட்டத்தில தமிழனுக்கு எண்டு தனி நாடு வேணுமெண்டு குரல் குடுக்கிற ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒருவிதத்தில உங்களை போல வலியும் வேதனையும் அனுபவிச்சவன் தான். என்ன வித்தியாசம் நாங்கள் அனுபவிச்ச வலியும் வேதனையும் எங்கட சந்ததிக்கு வரக் கூடாதெண்டு பொது நல நோக்கில நாங்கள் போராட இயக்கத்துக்குப் போனம். நீங்கள் உங்கட வட்டத்துக்குள்ள மட்டும் நிண்டு கொண்டு சுயநலமா மற்றவைய குற்றம் சாட்டுறீங்கள்..." என்று சொன்னவள் சடாரென்று குனிந்து தனது கால்சட்டையின் கீழ் பாகத்தை சுருட்டி மேலே இழுத்து தனது காலைத் திருப்பி அவனிடம் காட்டினாள்..

"இதைப் பாருங்கோ... "

காலில் பெரிய வெட்டு அடையாளம் பிளந்து போய் ஒட்டுப் பட்டது போல் கருப்பாய் வடுவாய் தெரிந்தது. அந்த புண் காய்ந்து போனதாயிருந்தாலும் கூட அவனுக்கு பார்க்க சகிக்க முடியாமல் இருந்தது.

"இது ஒரு உதாரணம். ...இதுக்கு மேலயும் தனிப்பட்ட முறையில நான் எவ்வளவோ அனுபவிச்சிருக்கிறன்.. .ஆனால்..அதெல்லாம் சொல்லி நியாயப்படுத்தவோ , அடையாளம் காட்டவோ வேணுமெண்ட அவசியம் எந்தப் போராளிக்கும் இல்லை. அவனுடைய போராட்ட உணர்வுக்கு பலமான காரணங்கள் அத்திவாரமா இருக்கு. அந்த உணர்வுகளை யாரும் விமர்சனம் செய்யலாம் லேசா... ஏனெண்டால் நீங்கள் சொன்ன மாதிரி அவையவை அந்தந்த இடத்தில இருந்தால் தான் தெரியும்... நீங்கள் உங்கட இடத்தில இருந்து கொண்டு எங்களைப் பத்தி ஊகிக்கக் கூடாது. கொஞ்சம் உங்கட உணர்வுகளை நகர்த்தி மற்றவைன்ர இடத்திலயும் இருந்து பார்க்கத் துடங்குங்கோ.... உங்கட உணர்வு வித்தியாசமா இருக்கும் அப்ப... முதலில இவள் அகலியாவிண்ட நிலையில இருந்து பார்க்கத் துடங்குங்கோ...."
என்றவள் கொஞ்ச நேரம் அமைதியா இருந்துவிட்டு... தொடர்ந்தாள்...."ஒரு பொம்பிளையை அவளின்ர சம்மதமில்லாமல் கொஞ்சப் பேர் வந்து வன்முறையா அவளை நாசமாக்கிட்டாங்கள் எண்டால்... அதோட அவளிண்ட வாழ்கை முடிஞ்சுது எண்டு மற்றவை மாதிரி நீரும் நினைச்சா அது முட்டாள் தனம். உண்மையாவே அவளுக்கு நல்லது நடக்க வேணுமெண்டு நினைச்சால் அவளை பழைய மாதிரி மாத்துற வழியைப் பாரும், எதிர்காலம் எண்ட ஒண்டு அவளுக்கும் மத்தவைய போல இருக்கு எண்டு நீர் தான் அவளுக்கு தைரியம் குடுக்க வேணும். இன்னொரு பக்கத்தை குற்றம் சாட்டிறதால வாழ்கைல உமக்கான பக்கத்தின் கடமையும் முடியப் போறதில்லை.. எந்த நல்ல தீர்வும் கிடைக்கப் போறதில்லை.. இனி என்ன செய்யலாமெண்டு தான் நினைக்க வேணும். எந்த சகதிக்குள்ள இருந்தாலும் வெளில வரத் தான் வேணுமே தவிர அதுக்குள்ளயே கிடந்து தாண்டு போக நினைக்கிறது முட்டாள்தனம். அவ்வளவு தான் சொல்ல தெரியும் எனக்கு.."

அவன் மௌனமாக இருந்தான். பதில் பேச வேண்டும் போல் தோன்றவில்லை, அவள் சொல்வது அத்தனையும் சரியாகவே பட்டது, அகல்யாவை வாழ வைக்க வேணும்.என்ர தங்கச்சியை இழந்து விடக் கூடாது. எங்கேயாவது கூட்டிக் கொண்டு போய் அவளை வாழ வைச்சே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

"சரி நான் வந்து கன நேரமாப் போச்சுது.. நான் வாறன் அகல்யா..அம்மா இருங்கோ வாறன் என்ன...அக்காவிட்ட சொல்லுங்கோ" என்றவள் கடகடவென அவனைக் கடந்து நடந்து முன்னால் பாதையை விட்டு மறைந்தும் போனாள்...

அவன் பிரமைபிடித்தவனாய் அவள் போன பாதையை பார்த்துக் கொண்டிருந்தான்... அவளுக்கிருக்கும் பார்வைக் கோணத்துடன் தன்னுடையது எத்தனை மாறுபாடானது என ஒப்பிட்டுப் பார்த்தான். ஆனால் அவளைப் போல் தன்னால் மாறமுடியாது என்பது மட்டும் திட்டவட்டமாக அவனுக்கு புரிந்தது. அதே சமயம் அவளையோ அவளைப் போன்றோரையோ விமர்சனம் செய்ய தன்னுடைய நிலைப்பாடு தகுதியானதா என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"பாவம் அது... அனாதை யாக்கிட்டாங்கள் அவளையும்.. ஆனால் அது எங்களைத் தான் தன்ர குடும்பமா நினைச்சு வந்து போகுது" என்று அம்மா சொல்ல மனதுக்குள் சுரீரென்றது..

"அனாதையா? " அவனுடைய ஒற்றைக் கேள்வியில் கமலினியின் வாழ்கைக் கதை முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டிய நிலையில் அம்மா இருந்தாள்.

"ஓம் ராசா....அங்க தின்ன வேலியில எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருந்த பொருக்கர் குடும்பத்தை மறந்திட்டியே. . அதுகளின்ர பிள்ளையடா இது.."

"யாரு...நளாயினியா..? அந்தப் பிள்ளையா இது...? அப்ப ஏன் அவளிண்ட பெயரை கமலினி எண்டு இந்த அன்ரி சொன்னா ?என்னம்மா சொல்லுறீங்கள். .அனாதையெண்டு... அப்ப பொருக்கர் குடும்பம்...?"

"ம்ம் நளாயினி தான்... கமலினி இயக்கப் பெயர்..உன்ர கொப்பா செத்த மூட்டம் தான் பொருக்கர் குடும்பம் முழுதையும் சாக்காட்டிட்டாங்கள்... பச்சைக் குழந்தை இவளின்ர தம்பி...4 வயசிருக்கும்..அதைக் கூட சுட்டுச் சாக்காட்டினவங்கள். இந்தப் பெட்டைக்கு அப்ப என்ன பத்து வயசு தான்... சின்னப் பிள்ளை; சாமத்தியப் படக் கூட இல்லை.. அவளைப் போய் கெடுத்துப் போட்டு குற்றியுரும் குலையுயிருமா விட்டிட்டுப் போனாங்கள் பாவியள்..”
“.அந்த நேரம் ஊர் முழுக்க ஒரே செல்லடி... வெளில போய் சவபெட்டி கூட வாங்க முடியாத நிலை... ஊரே பிண நாத்தமடிக்கும்...செத்துப் போனதுகளைத் தூக்கி போட்டு எரிக்கக் கூட ஆளில்லாமல் இருந்த குடும்பங்கள்.. குடும்பத்தோட செத்துப் போனதுகள்; கலியாண வீட்டில புதுசா கலியாணம் கட்டினதுகள் எண்டு செத்த வீடுகளா கிடந்திச்சு ஊர்...பொருக்கர் குடும்பமெண்டால் என்னமாதிரி பணக்காரரெண்டு தெரியும் தானே? ஆனா கடைசில அதுகளை தூக்கிப் போடக் கூட நாதியில்லாமல் பெட்டி இல்லாமல் சாக்குக்குள்ள போட்டுக் கொண்டு போய் எரிச்சதெண்டால் யோசிச்சுப் பார் அந்த நேரம் நாங்கள் என்ன பாடெல்லாம் பட்டிருப்பமெண்டு... இந்தப் பெட்டையை உங்கட கொப்பா தான் வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வந்து எங்களோடை இங்க அனுப்பி வைச்சிட்டு ரெண்டு மூண்டு நாளில எல்லாத்தையும் சரி பண்ணிக் கொண்டு வாரன் எண்டு சொன்னவர்... ம்ம்ம்.. அது தான் நாங்கள் அவரைக் கடைசியா பாத்தது...அப்பவும் இது தான்..இப்பவும் அதே நிலை தான்..அப்ப அவள்....இப்ப உன்ர தங்கச்சி;;அப்ப உன்ர கொப்பர் இப்ப உன்ர கொத்தார்...இது தான் இங்க..என்ன வித்தியாசம்..அப்ப இந்தியா இராணுவம்..இப்ப சிங்கள இராணுவம்..அது தான் மாறிப் போயிருக்கு..எங்கட நிலமை இன்னும் அப்பிடியே தான் இருக்கு"

"உந்தப் பெட்டையும் எங்களோட குடும்பத்தில ஒருத்தியா ஆறேழு வருசமா இங்க தான் இருந்தாள். அடிக்கடி கனவில அழுது கொண்டும் கத்திக் கொண்டும் எழும்பி இருப்பாள். அவளால அண்டைக்கு நடந்ததை அவ்வளவு லேசில மறக்க முடியுமே? அந்த பிஞ்சு வயசில பார்க்கக் கூடியதையா அவள் பார்த்தவள் , அனுபவிச்சவள்..? தம்பிக்காரனில அந்த மாதிரியெல்லே பாசமா இருந்தவள்...? தாயையும் தம்பியையும் ஒரு சாக்குக்குள்ள போட்டுக் கட்டேக்கில அந்த நிலையிலயும் அவள் கதறினதை எண்டைக்கும் என்னால மறக்க முடியாது ராசா...அனுபவிச்ச அவளுக்கு எப்பிடி இருக்கும்....சொல்லு...திடீரெண்டு ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் போய்ட்டாள்... ஊர் முழுக்க தேடித் திரிஞ்சம். யாரும் ஆமிக்காரங்கள் கொண்டு போயிட்டாங்களோ அல்லது இங்க எங்கட நாயளுக்குள்ளயே காட்டிக் குடுக்கிறதுகளும், கூலிப்படையளும், சிங்களவனுக்கு கோவணம் தோய்க்கிற கழிசடையளும் இருக்குதுகளே...அவங்கள் தான் தூக்கிக் கொண்டு போய்டாங்களோ எண்டு நெஞ்சிடிச்சுக் கொண்டு இருந்தன்.. எங்கயாவது அடையாளம் தெரியாத பெட்டையள் செத்துக் கிடக்குதுகள் எண்டு கேள்விப்பட்டால் ஓடிப் போய் பார்ப்பன்... பிறகு தான் தெரிஞ்சுது ...இயக்கத்துக்குப் போட்டாளெண்டு....." அம்மா சொல்லிக் கொண்டே போக அவன் விக்கித்துப் போய் இருந்தான். எத்தனை சாதாரணமாய் அவளை விமர்சனம் செய்த்திருக்கிறேன் என்று நினைத்து வெட்கிப் போனான் தனக்குள். உனக்கு என்ன தெரியும் என்னுடைய வலியும் வேதனையுமெண்டு எத்தினை இளக்காரமா கேட்டான்..
அவள் அனுபவித்த வேதனையை விடவா தன்னுடையது இருக்கும் என்று ஒப்பீடு செய்யக் கூட இப்போது கூசிப் போயிருந்தான்.

(தொடரும்)


glitter-graphics.com

No comments: