Friday, March 13, 2009

தீக்குளிப்புகள்!!


சகோதரி புதிய மாதவி அவர்கள் எழுதிய வீர வணக்க வரலாறு என்ற பதிவை படித்த பின் என்னாலும் இதை எழுதாமல் இருக்க இயலவில்லை. முத்துக் குமாரின் தீக்குளிப்பு, ஜெனிவாவில் முருகேசனின் தீக்குளிப்பு என்று தொடங்கி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன ஈழத்தமிழருக்கான தீக்குளிப்புகள் எத்தனையோ நடந்தும்,அவற்றால் மனதுக்குள் கொதித்துப் போனாலும் வெளியில் எனது கருத்துகளை இதுவரை நான் வெளிக்காட்டியதில்லை. இத் தகைய தீக்குளிப்பு நிகழ்வுகளை முற்றிலும் எதிர்ப்பவள் நான். என்னால் இத்தகைய முடிவுகளை எதிர்கொள்ள இயலவில்லை. ஆனால் அவர்களது அந்த முடிவை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை . எந்த எதிர்பார்ப்பும் , இலாப நோக்கமுமின்றி எமக்காக தம்முயிரை ஈகையாக்குவதாக நினைத்து எரிந்து கரிக்கட்டையாகிப் போனவர்கள் அவர்கள். அவர்களைப் பொறுத்தவரை ஈழப் போரில் அவர்களும் தம்மை ஒரு போராளிகளாகவே கருதியிருக்கிறார்கள். தமது பங்களிப்பாக தமது மரணத்தை தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் தமது மரணம் எத்தனை நாள் சமூகத்தில் தாக்கத்தை விளைவிக்கும், அதற்கு என்ன பலன், எந்த வகையான தீர்வு கிடைக்கும் என்ற கேள்விகளை தமக்கு தாமே கேட்டுக் கொள்ளாமல் தன்னிச்சையாக இது தான் சரியான வழி என்று தீர்மானித்து செயல்பட்டுவிடுகிறார்கள்...

அது அவர்கள் குற்றமல்ல....

தீக்குளிப்பு என்பது தற்கொலையின் ஒரு வடிவம் தான். ஆனால் தமக்கான தீர்வாக இல்லாமல் சமூகத்தில் நடக்கும் அவலத்தை பொறுக்க இயலாமல் மரணிக்கும் இந்த மனிதர்களை விமர்சிக்க நான் யார்? அவர்கள் மரணித்த பின்னும், அவர்களுடைய எதிர்பார்ப்பை செயலாக்க முடியாத இழி நிலையிலிருந்து இன்னொரு மனிதனின் அதே முடிவையும் தடுக்க வழி தெரியாத கையறு நிலையிலிருந்தும் விடுபட இயலாத கையாலாகாத நான் அவர்களை முட்டாள்களாகவும் கோழைகளாகவும் சித்தரித்து எனது அறிவு ஜீவித்தனத்தை வெளிக்காட்ட நினைப்பது எனது திரைமறைப்பின் கேவலம்.

இந்த மனிதர்கள் --- ஈழத்தமிழருக்காக தீக்குளித்த மனிதர்கள் மட்டுமல்ல, தனது அரசியல் தலைவனுக்காக தீக்குளிக்கும் மனிதர்களையும், நடிகர்களுக்காக எதையும் செய்ய துணியும் ரசிகர்களையும் கூட சேர்த்து தான் சொல்கிறேன்...இப்படிப்பட்ட மனிதர்களை எந்த வகையில் சேர்ப்பது? இவர்களுக்கென்ற ஒரு குடும்பம், இவர்களுக்கென்று கனவு, ஆசை, இலட்சியம் எதுவும் இவர்களைப் பற்றியதாயிருக்காதா? அவற்றை எல்லாம் அலட்சியப்படுத்தி, அவற்றை மிஞ்சிய பொது அக்கறை இவர்களிடம் ஆழமாக ஊன்றிப் போவது எப்படி ?

மிகவும் இரக்க குணமும், தமிழினப்பற்றும், ஈழத்து மக்களின் அவலங்களை இணையத்திலும் ஊடகங்களிலும் பார்த்து பார்த்து மனம் பேதலித்து, எதுவும் செய்ய முடியவில்லையே என்று ஏங்கி, ஏதாவது செய்தாக வேண்டுமென்று வேட்கை மிகுந்து, என்ன செய்வது என்ற இலக்கு தெரியாத பலவீனமும், இயலாமையும் முனைப்பாகும் போது மன உளைச்சல் இவர்களைப் போன்ற இளைஞர்களை ஆட்கொள்கிறது.

அது அவர்கள் குற்றமல்ல.....

தொடர்ந்து அரசியல்வாதிகள் ஏதாவது வழி செய்வார்கள் என்று ஒவ்வொரு கட்சித் தொண்டனும் தனது தலைவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது , அந்த தொண்டன் தன்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றப்படுகிறது என்று உணரும் கணத்தில் பொறுக்க முடியாத மனநிலையில் ஆவேசத்தில் தீக்குளிப்பு , போராட்டம், பொது இடங்களை நாசப்படுத்தல் என்று கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சி வேகத்தை தேர்வு செய்கிறான்.

அது அவர்கள் குற்றமல்ல...

தாம் தேர்வு செய்யும் முடிவானது சமூகத்தில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பில் உயிரோடு இருந்து சாதிக்காமல் இன்னொருவர் தலையில் பொறுப்பை சுமத்தி விட்டு முற்றாக தமது உயிரை கொடுத்துவிடுவது சமூகத்தைப் பொறுத்தவரை முட்டாள்தனம் தான். ஆனால் பாவம் அவர்களைப் பொறுத்தவரை அது தான் அவர்களால் செய்ய முடிந்த கடமை. அது தான் அவர்களது போராட்டத்தின் உச்சக்கட்ட முடிவு.

அது அவர்கள் குற்றமல்ல......!

ஈழத்தமிழர் பிரச்சினையில் முத்துக்குமார், முருகேசன் இருவரின் தீக்குளிப்புக்கும் உலகம் கொடுத்த முக்கியத்துவம் தொடர்ந்து நிகழ்ந்த மற்ற எந்த தீக்குளிப்பு மரணங்களுக்கும் வாய்க்கவில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தாலும் இன்னமும் இப்படியான நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவில்லை, இருக்கப் போவதுமில்லை. நடக்கப் போகின்றன என்பதும் அதை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் மேற்பார்வையாளர்களாக நாம் இருக்கிறோம் என்ற அவமானத்துடனும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வில் குறுகிப் போகிறோம்.

முத்துக் குமாரும், முருகேசனும் தமது ஈகைக்கு முன் மிகவும் தெளிவான மனநிலையில், மிகவும் தீவிரமாக நான் இன்னது தான் செய்யப் போகிறேன், எனது மரணத்தின் பின் எனது நோக்கத்தை இவ் உலகம் காணும் போது எனது மரணத்திற்கான இலக்கை நான் அடைந்துவிடுவேன் என்று நம்பினார்கள். அதனாலேயே மிக நீண்ட மரண சாசனத்தை எழுதி வைத்தார்கள். இருவரின் எழுத்திலும் அவர்கள் மிகுந்த துல்லியமாக பிரச்சினையை வெளியுலகுக்கு விளக்கப்படுத்த முனைந்திருந்தது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அவர்கள் இருவரும் தமது மரணத்தை மிகவும் துல்லியமாக திட்டமிட்டு தெளிவாக புரிய வைக்க இடம், பொருள் , காரணம் போன்றவற்றை மிகச் சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். Pre-medicated sucide என்று சொல்லக் கூடிய தகுதியுடன் இவர்களது தற்கொலை நிகழ்வு இவர்களால் நடந்தேறியது. உலகமே பார்த்துக் கொண்டிருந்தும் , தடுக்கவியலாத சூழலில் இவர்கள் தம்மை தீக்கிரையாக்கினார்கள். ஆனாலும் என்ன பலன்?

ஊடகத்தின் தலைப்புச் செய்தியாகி ஊடகங்களின் வியாபாரத்தை கொஞ்ச நாள் பெருக காரணமானதை தவிர அவர்கள் எதிர்பார்த்த தீர்வுகள் கிடைத்ததா? இல்லை! இவர்களுடைய உயிரின் மதிப்பு என்ன என்ற கேள்வி என்னிடம் தங்கியிருக்கிறது. இந்த உலகமும், சம்மந்தப்பட்ட அரசாங்கங்களும், ஐநாவும், ஊடகங்களும், என்னுடைய கேள்விக்கு எப்போதாவது சரியான விடையைத் தருமா ?????

இவர்கள் இருவரின் பின்னால் நிகழ்ந்த ஒவ்வொரு தீக்குளிப்பும் இவர்களுடைய தீக்குளிப்புக்கு ஈடானது அல்ல என்பது வேதனையான விதயம் தான் எனினும் அந்த மரணங்களில் பலியானவை அத்தனையும் விலை மதிப்பற்ற மானுட உயிர்கள். ஒரு தாயின் மகனோ, ஒரு மனைவிக்கு கணவனோ, ஒரு தந்தையோ அல்லது ஒரு சகோதரனோ தான் இப்படி வெந்து சாம்பலாகியிருக்கிறான். எம்மைப் போல் ஒரு சகமனிதன் தனது சாவு புனிதமானது, போராட்டத்துக்கீடானது என்ற மனநிறைவுடன் செத்து மடிந்திருக்கிறான். இதை விட உயிரோடு இருந்து சாதித்திருக்கலாம் என நாம் சொல்கிறோம்..ஆனால் அவர்களால் அது இயலவில்லை. மனதின் பலவீனம் அவர்களை தரித்திருக்க அனுமதிக்கவில்லை என்பது தான் பரிதாபத்துக்குரிய விதயம்.

சமூகத்தில் இத்தகைய பலவீனங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆனால் இவர்களைப் போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் இத்தனை பாரிய ஜனப்பெரு வெள்ளத்தில் கண்டுபிடித்து அவரை அவரது மனதில் இருக்கும் அந்த பலவீனத்தையோ அல்லது அந்த நோக்கத்தையோ போக்க வேண்டும் என்பது மிக மிக கடினமான விதயம். ஆனால் கட்டாயமாக செய்யப்பட வேண்டியதும் அது தான்!! அதற்குள் எத்தனை வீர வணக்க நிகழ்வுகள் ஏற்பாடாகுமோ ...??





No comments: