Friday, March 13, 2009

அரசியலில் சரத்குமார்- ஒரு பார்வை.


நடிகர்களை அரசியல்வாதிகளாகப் பார்ப்பது எனக்கு சங்கடமான விசயம். அதுவும் எம்ஜீஆர் மாதிரி ஒவ்வொருவரும் தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டுமென்ற கனவில் வருவது எரிச்சலூட்டுகிறது. எம்ஜீஆர் அளவுக்கு மக்களின் மனதில் இடம் பிடித்தவர்களாகவாவது அடிப்படைத் தகுதிகளாக இவர்களுக்கு இருக்க வேண்டாமோ?

எம்ஜீஆர் தனது உழைப்பில் பல சமூக சேவைகள் செய்தார். ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளல் என்ற பெயருடன் ஆழமாக ஒவ்வொருவரின் நெஞ்சிலும் பதிந்தார். அத்துடன் அந்தக் காலத்தில் அறிஞர் அண்ணாவால் இதயக் கனி என்று அடையாளப்படுத்தப்பட்டார்.

ஆனால் இன்றைய நடிகர்கள்,,...?? அரசியலுக்கு நடிகன் என்ற தகுதியே போதும் என்று நினைப்பது முட்டாள்தனம்.ரசிகர் மன்றங்களை கட்சியாக மாற்றும் உத்தியோடு கொடி அறிமுகப்படுத்துவது, மிஞ்சி மிஞ்சிப் போனால் பிறந்த நாள் அன்று இரத்த தானம் முகாம் நடத்துவது அல்லது தையல் இயந்திரம் வழங்குவது இதைத் தவிர சொல்லும் படியாக சமூகத்துக்கு என்ன . செய்தார்கள் என்று யோசித்தால் உதட்டை பிதுக்குதுவதை தவிர வேறு வழியில்லை.

எம்ஜிஆருக்கு அடுத்த படியாக மக்களிடம் அதிகமாக ஆதரவு பெற்றவர்கள் ரஜனியும் விஜயகாந்தும் தான். இருவரும் எந்த பெரிய கட்சியிலும் உறுப்பினராக சேராமல் தனித்த அடையாளமாக அரசியலில் செயல்பட வேண்டுமென்ற இலக்கு இருவரிடமும் இருந்தாலும் அதை துணிந்து செயலாற்றியவர் விஜயகாந்த் மட்டுமே. கார்த்திக் என்பவர் அரசியலுக்கு வந்த நாளிலிருந்து களேபாரமாக தான் ஒவ்வொரு கூட்டமும் போய்க் கொண்டிருக்கிறது என்பது வேறு விதயம் ..அது ஏன் என்று தான் புரியவில்லை...

இதில் சரத் குமாரும், நெப்போலியனும் சினிமாவில் வில்லன்களாக அறிமுகமாகி, கதாநாயகர்களாக முன்னேறியவர்கள். திமுக கட்சியின் தேர்தல் சமயத்தில் பிரச்சாரகர்களாக செயல்பட்ட தகுதி அடிப்படையில் கட்சியிடம் அடுத்த தேர்தல் காலங்களில் தொகுதி சீட் வாங்கியவர்கள் எனலாமோ? அப்போதும் நெப்போலியன் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாகினார். சரத் குமாருக்கு பாரளுமன்ற எம்.பி பதவி கிடைத்தது .

அதிமுகவில் இருந்த சரத் குமார்அரசியல்வாதிகளுக்கே உரிய சட்டத்தின்படி கட்சி தாவினார். திமுகவுக்கு வந்த அவருக்கு 1998ம் ஆண்டுமக்களவைத் தேர்தலில் நிற்க திமுக வாய்ப்பளித்தது.

திருநெல்வேலியில் போட்டியிட்ட அவர் பெரும் தோல்வியடைந்தார். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கட்சியிலேயேஇருந்தார். 2 தேர்தல்களிலும் திமுகவுக்காக அயராது பிரச்சாரம் செய்தார். பிரபல கட்சிக்கு பிரச்சாரகர்களாகப் போனதுமே இந்த நடிகர்களுக்கு முதலமைச்சர் பதவி பற்றிய கனவு வந்துவிடும் போல் இருக்கிறது. ஆகக் குறைந்தது எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆக வேண்டுமென்ற காய்ச்சல் பிடித்துவிடுகிறது. இதில் சரத் குமாரும் விதிவிலக்கல்ல.

திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை ராதிகாவை இந்த நேரத்தில் தனது மனைவியாக்கினார் சரத் குமார் . அடுத்த சட்டசபைத் தேர்தலில் மனைவி சகிதம் பிரச்சாரம் செய்தார். சன்டிவியின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்தவும் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால், அவரின் கடன் பிரச்சினைகள் தீர்ந்து நல்ல நிலமைக்கு வர தொடங்கினார். மனைவியின் ராடன் நிறுவனமும் சின்னத் திரைச் சானல்களில் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. சினிமாவிலும் கொஞ்சம் கனகச்சிதமான கதாபாத்திரங்கள் கொண்ட நாட்டாண்மை, சூர்யவம்சம் போன்ற படங்களின் வெற்றியும் தமிழ் திரைப்பட சங்கத்தின் உயர் பதவிகளும் அவரை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.

திருநெல்வேலியில் தோல்வியைத் தழுவிய சரத்குமாருக்கு திமுக தலைமை எம்பி பதவி கொடுத்து கௌரவித்தது. ஆனாலும் சரத்குமாரின் அரசியல் பிரவேசத்துக்கான இலக்கு அல்லது நிரந்தரக் கொள்கை என்பது என்னவென்று அவருக்கே குழப்பமான விதயமோ என்னமோ?

பதவி ஆசை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காத்திருக்க வேண்டுமென்ற அடிப்படை பொறுமையின்மை, இந்தக் கட்சியிலிருந்து தான் நான் முன்னேற வேண்டுமென்ற நோக்கில்லாமல் எந்தக் கட்சியாயிருந்தாலும் சரி நான் தேர்தலில் வென்றால் போதுமென்ற சுயநலங்கள் தான் , பக்குவமின்மை போன்றவை தான் அநேகமான அரசியல்வாதிகள் மண் கவ்வ முக்கிய காரணங்களாகின்றன.

அதே போலவே சரத்குமாரின் ஒரு இடத்தில் நிலையாமை தான் அவருடைய அரசியல் சறுக்கலுக்கு முக்கிய காரணம் எனத் தோன்றுகிறது.
திமுக கட்சியின் எம்.பி.யாக பாராளுமன்றத்தில் பதவி வகித்துக் கொண்டே திமுகவை விட்டு அதிமுகவுக்கு கட்சி தாவினார். ஆனால் திமுகவால் கிடைத்த எம்பி பதவியை அவர் இராஜினாமா செய்ய வில்லை. அவரது எம்பி பதவியை கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிக்க திமுக பரிந்துரை செய்யுமளவுக்கு இவரது பதவியாசை இருந்தது.

திரும்பவும் அதிமுக வுக்கு தாவியவரால் அங்கும் நிலைத்து நிற்க முடியவில்லை. வெளியேறினார். திரும்பவும் திமுகவுக்குள் போக எந்த முகத்தை வைத்துக் கொண்டு முயற்சி செய்வது.கட்சித் தாவலில் மூக்குடைபட்டு இப்போது தனிக்கட்சி தொடக்கியுள்ளார்.

எம்ஜிஆருக்கு திண்டுக்கல் தேர்தல் ஒரு திருப்பு முனை எமக்கு திருமங்கலம் தேர்தல் ஒரு திருப்பு முனை என்று பிரச்சாரம் செய்த அவருடைய கட்சி மண் கவ்வியது தான் மிச்சம்.

அரசியலில் எப்போதும் வெற்றி பெற வேண்டும், பதவி அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கில் எந்தக் கட்சி இந்த தடவை ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பில் அந்தக் கட்சிக்கு தாவும் மனப்பான்மையுடன் செயல்படுபவர்கள் உண்மையான அரசியல்வாதிகளே அல்ல. இவர்களின் நோக்கம் அரசியல் அல்ல. பணம் , பதவி மட்டுமே குறி. சரத் குமாரும் அப்படியே!

இதில் பாவம் ராதிகா தான்!!. தந்தையார் எம்.ஆர்.ராதா திமுகவின் உறுப்பினர் மட்டுமல்ல கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பர்; அவர் காலத்தின் பின் திமுக தலைவரை அப்பா என்று அழைக்கும் உரிமையும் நெருக்கமும் கொண்டவர்களாக இருந்தார்கள் ராதிகாவும் ராதாரவியும். ராதாரவி அதிமுக கட்சிக்கு தாவிய பின்னாலும் கூட ராதிகா கலைஞர் குடும்பத்தோடு நெருக்கமாயும், அன்பாயும் இருந்தார். ஆனால் கணவரின் அரசியல் தகிடு தத்தங்கள் அந்த அன்பிலும், நெருக்கத்திலும் பிளவு ஏற்படுத்தியது தான் ராதிகா கண்ட பலன்..

ஆக சரத்குமாரின் அரசியல் வாழ்கை நாட்டாண்மையின் முடிவான உறுதியான நேர்மையான தீர்ப்பாக இல்லாமல் வள வளா கொழ கொழ வாகியதை 754 வாக்குகள் படம் போட்டு காட்டிவிட்டன.. ! பார்க்கலாம் இனி வரப் போகும் தேர்தலில் சரத்குமாருக்கு எத்தனை வாக்குகள் கிடைக்குமென்று அறிவதில் எனக்கு தனிப்பட்ட ஆவல் இருக்கிறது.No comments: