Tuesday, April 14, 2009

அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.

அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.ஏப்பிரல் 14ம் திகதி 1865 ஆம் ஆண்டு வாஷிங்கடன் நகரின் பிரபலமான "ஃபோர்ட் தியேட்டரில்" என்ற நாடக நடிகரும், நிறவெறியரும் , ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் பிரிவினைவாதிகளின் அபிமானியுமான ஜோன் வில்க்ஸ் போத் என்பவரால் அமெரிக்க மக்களின் மனதிலும் வரலாற்றிலும் நிரந்தமாக குடியேறிய , அடிமைத் தனத்தை ஒழித்தவருமான அமெரிக்காவின் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்.


அன்றைக்கு ஐந்து நாட்களின் முன்னால் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரிவினைக்காக போராடிய தளபதிகளில் ஒருவரான ஜெனரல்றோபேர்ட் ஈ லீ அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்ட அடையாளமாக தனது பரிவாரங்களுடன் வெர்ஜினியாவின் அப்போமாட்டொக்ஸ் கோர்ட் இல்லத்தில் சரணடைந்திருந்தார்.

1860 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் சார்ந்த அரசியல்கட்சியான குடியரசுக் கட்சி வெற்றி பெற்று ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராக ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தெரிவு செய்யபட்டார். அந்தக் காலங்களில் ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை விரும்பவில்லை. அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே அதைக் கருதினார்கள்.

அடிமைத் தனத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த ஆபிரகாம் லிங்கன் , ஐக்கிய அமெரிக்காவின் அதிபரானதும் , தனது கூற்றுப்படி அடிமைத்தனத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார்.இதன் விளைவாக உள்நாட்டுக் கலவரங்கள் தோன்றியதில் ஆபிரகாம் லிங்கனுக்கு எதிராக நிறவெறியர்களும், அடிமை முறையை ஆதரித்தோரும் கலவரங்களில் ஈடுபட்டனர்.

லிங்கனை சுட்ட போத் என்பவர் அமெரிக்காவின் மரிலாண்டில் 1838 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஆபிரகாம் லிங்கனுக்கும் குடியரசுக் கட்சியின் கொள்கைகளுக்கும் எதிரானவராக உள்நாட்டு யுத்தத்தின் ஆதரவாளியாக இருந்தார், உண்மையில் அவர் 1865 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதியே ஜனாதிபதி லிங்கனை ரிச்மண்ட் , வேர்ஜினியாவுக்கு கடத்திக் கொண்டு போக வேண்டுமென்று தனது ஆறு சகாக்களுடன் காத்திருந்தார். ஆனால் சந்தர்ப்பவசத்தால் அன்று அவர்கள் ஜனாதிபதியைக் கடத்த காத்திருந்த இடத்திற்கு வருகை தரவிருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களின் வருகை இரத்து செய்யப்பட்டதில் போத்தும் அவர்கள் சகாக்களும் ஏமாற்றம் அடைந்தனர். தக்க தருணத்திற்காக இவர்கள் காத்திருந்த நேரம் தான் உள்நாட்டு யுத்தத்திலீடுபட்டிருந்த தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் வலுவிழந்து அவர்களுடைய போர் சரியத் தொடங்கியது, ஈற்றில் அவர்கள் சரணடையவும் செய்தார்கள். இதில் வெகுண்டு போன போத் எப்படியாவது தமது கொள்கையை வலுவாக்க வழி வகையை யோசிக்கலானார். முடிவில் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வொன்றை நடத்தினால் தான் தமது கொள்கையை காப்பாற்றுவதென்பது சாத்தியமாகும் என்று புரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக அன்று 1865 ஆம் ஆண்டு சித்திரை 14ல் ஃபோர்ட் தியேட்டரில் நடைபெற்ற "அவர் அமெரிக்கன் கசின்" என்ற மேடை நாடகத்தை பார்க்க போர்ட் தியேட்டருக்கு வருகை தர இருக்கும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவர்களையும், உப ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜோன்ஸான் மற்றும் மாநிலச் செயலாளர் வில்லியம் எச் சீவார்ட் அவர்களையும் கொலை செய்ய போத்தும் அவரது சகாக்களும் திட்டமிட்டனர்.. ஜனாதிபதியையும் மற்றும் ஜனாதிபதிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் பெரும் கௌரவ அந்தஸ்திலிருக்கும் மற்றைய இருவரையும் கொலை செய்வதன் மூலம் அமெரிக்க அரசை வீழ்த்துவதோடு அடிமை ஒழிப்புக்கு அத்திவாரமிடப்படும் பாரிய சக்தியையும் வேரோடு சாய்த்துவிடலாம் என இவர்கள் எதிர்பார்த்தார்கள்.

அந்த ஏப்பிரல் 14 ,மாலை லூயிஸ் டி.பௌவ்ல் ( Lewis T. Powell) மாநிலச் செயலாளர் ஸ்டீவார்ட் அவர்கலின் இல்லத்தினுள் நுழைந்து அவரை கொலை செய்ய முயன்ற போது செயலாளரும் இன்னும் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அதே சமயம் ஜோர்ஜ் ஏ அட்ஸீறோட் ( George A. Atzerodt,) என்பவர் உப ஜனாதிபதியை கொலை செய்யச் சென்றவர் பதட்டத்தில் இயலாமல் போய் வீழ்ந்தார். அன்று இரவு பத்து மணியாகி சிறிது நேரத்தில் ஃபோர்ட் தியேட்டருக்குள் நுழைந்த கொலையாளி போத் ( Booth) ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமர்ந்திருந்த பிரத்தியேக அமர்கையிருந்த பெட்டி அறைக்குள் நுழைந்து எதிர்பாராத விதமாக லிங்கன் அவர்களின் பின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.

மிகுந்த இரத்தச் சேதமுடன் தலையில் காயம் பட்ட ஜனாதிபதியை தியேட்டருக்கு முன்னால் இருந்த விடுதி வீடொன்றுக்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்தார்கள், அடுத்த நாள் காலை 7:22 நேரத்துக்கு 56 வயதான - அடிமைத் தனத்தை ஒழிப்பதன் மூலம் நிறவெறிக்கு சாவு மணி அடிக்க வித்திட்டு அமெரிக்காவின் வரலாற்றை செம்மையாக்க முயன்ற அந்த மாமனிதர் உயிர் நீத்தார். வன்முறையில் கொலை செய்யப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலையாளி போத் வெர்ஜினியாவின் பௌலிங் கிரீன் என்ற இடத்தில் இரானுவ மற்றும் காவல் அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டார். சுற்றிவளைப்பில் தப்பிக்க இயலாமல் போன போத் தான் இருந்த தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட போது அவர் தங்கியிருந்த மாட்டுத் தொழுவமும் எரிந்து சாம்பலானது் என வரலாறு கூறுகிறது. அவருடன் இருந்த மீதி 8 கலவரக்காரர்களும் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் 4 பேர் தூக்கிலப்பட்டும் மீதி 4 பேர் சிறையிலுமடைக்கப்பட்டார்கள்.

அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் அவர்களின் பூத உடல் மே 4ம் திகதி 1865 ஆம் ஆண்டு இலனோயிஸின் ஸ்பிரிங்ஃபீல்ட் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இத்தனை கால வரலாற்றில் அமெரிக்காவில் பிரபலமான மனிதர்களில் ஆபிரகாம் இலிங்கனைப் போல் ஒட்டு மொத்த அமெரிக்க மக்களின் மனதிலும் குடியேறிய ஒரு மாமனிதர் வேறு எவரும் இல்லை என்றால் மிகையாகாது. ஆனால் அத்தகைய உன்னதமான மனிதர் கடந்து வந்த பாதை என்பது மிகப்பெரிய இடர்களும் , தோல்விகளும் நிரம்பியவை என்பதும் மறுக்க முடியாதது.

  • 1831ல் அவரது வியாபாரம் தோல்வியடைந்தது.
  • 1832 ல் சட்ட சபை தேர்வில் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.
  • 1833ல் இரண்டாவது தடவையாக அவரது வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
  • 1836 நரம்புத் தளர்ச்சியால் நோய்வாய்ப்பட்டார்.
  • 1838 சபாநாயகராக முயற்சித்து தோல்வியைத் தழுவினார்.
  • 1843 & 1848 ல் அமெரிக்க காங்கிரஸில் இடம்பெற முடியாமல் தோற்கடிக்கப்பட்டார்.
  • 1855 & 1858 ல் செனட்டாகவும் முடியாமல் தோற்கடிக்கப்பட்டார்.
  • 1856ல் உப ஜனாதிபதித் தேர்வில் தோற்கடிக்கப்பட்டார்.
இத்தனை தோல்விகளையும் இடர்களையும் எதிர்கொண்டாலும் மனந்தளராத லிங்கன் ஈற்றில்1860ல் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்.