Wednesday, April 15, 2009

பெண்ணியமும் தமிழீழப் பெண்களும்.!

பெண்ணியமும் தமிழீழப் பெண்களும்.!
(மகளிர் தினத்தை முன்னிட்டு விகடன்.காமின் சக்தி-09 சிறப்பிதழில் பிரசுரிக்கப்பட்டது.)

மகளிர் தினம் என்ற ஒன்று வருடா வருடம் வருவதும் அந்த நாளில் மட்டும் பெண்கள் பற்றிய பார்வை வார்த்தையளவில் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் வந்து வியாபாரமாவதும், எழுதியவர்களை விளம்பரமாக்குவதுமாய் இருந்துவிட்டு அடுத்த மார்ச் 8 வரை காத்திருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்பகாலத்தில் புருவங்களை நெரித்த பெண்னியம் பற்றிய ஆராய்வும் போராட்டங்களும், மகளிர் பற்றிய மதிபீடு அல்லது கருத்துச் சமர்ப்பிப்பு என்பது பற்றி எழுதுவது கூட ஒருவகையில் இப்போதைய காலகட்டங்களில் ஆண்களின் முகச்சுளிப்பை அதிகமாக்குவதாகிவிட்டது மட்டுமல்லாமல் பெரும்பான்மையான ஆண் வர்க்கத்தினருக்கு எரிச்சலூட்டுவதுமாக அமைந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால்...

உண்மையில் பெண்ணியம் பற்றிய ஆராய்வும் , முனைப்பும் எழுத்தளவில் தான் நிற்கிறது. செயற்படுத்தவோ சாதிக்கவோ முனைவது சொற்பமே. ஏனெனில் பெண்கள் சார்ந்த இந்த போராட்டத்தில் பெண்களே முன்வராத பட்சத்தில் மழுங்கடிக்கப்பட்ட ஒரு செயற்பாடாக மட்டுமே பெண்ணியம் இருக்கும்.

சமூகத்தின் ஏதோ ஒரு காரணத்தினால் அல்லது , காரணியால் காயப்பட்ட , சமூகளவில் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனோ அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரோ அதே பாதிப்பு தன்னைப் போல் அல்லது தம்மைப் போல் இன்னொருவருக்கு வருவதை தடை செய்ய வேண்டும் என்ற சமூக அக்கறையின் உந்துதலில் காரணங்களையும் காரணிகளையும் எதிர்பவர்கள் அல்லது அழிப்பவர்களே போராளிகள் !சமூகப் பிரக்ஞை உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒருவகையில் போராளியே! அந்த நிலையில் பெண்ணினத்துக்கான போராளிகளும் சரி போராட்டமும் சரி மிகக் குறைவு என்றே கொள்ள வேண்டும் ; எந்தக் கலாச்சாரத்திலும் பெண்ணினம் வெளிப்பூச்சுக்கு பகட்டாக தெரிந்தாலும் காலம் காலமாக சுதந்திரம் மறுக்கப்பட்ட , ஒடுக்கப்பட்ட இரண்டாம் நிலை பிறப்பாக தான் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் துன்புற்றுக் கொண்டிருக்கிறது.

பெண்ணியம் என்பது கூட பல்வேறு தளத்தில் ஆராயப்பட்டு வரும் பாரிய சமூக தீர்வுக்கான ஒரு போராட்டம் தான். பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் குறிப்பிடுகிறார். இவற்றினடிப்படையில் எந்த நாட்டுக் கலாச்சாரத்தை உற்று நோக்கினாலும் பெண்ணடிமைத்தனம் என்பது இன்னமும் வெறித்தனமாய் வளர்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம் என்பது நிதர்சனம். பெண்ணடிமைத்தனம் என்பது ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்டத் தவறுவதில்லை. எத்தனையோ போராட்டங்களின் பின்னாலும் கூட இன்று வரை உலகில் பெண்ணடிமைத் தனத்தை களைந்தெறிய முடியவில்லை என்பது வருத்தத்துக்குரிய விதயமே. அதிலும் முக்கியமாக தமிழ்கலாச்சாரத்திலும் , இசு்லாமிய மதக்கலாச்சாரத்திலும், சீனம், யூத இனக் கலாச்சாரங்களிலும் பெண்ணடிமைத்தனம் என்பது தலைவிரித்தாடுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

"பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்." -
-வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இந்த வாசகங்களை ஒரு நாள் இணையத்தில் படித்த போது மனதுக்குள் பெண்ணியம் பற்றிய என்னுடைய ஆய்வுகள் அதுவரை தராத உணர்வுகளை தட்டியெழுப்பி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தமிழீழப் பெண்களின் இன்றைய காலகட்ட வாழ்கை சூழலில் பெண்ணியம் என்ற பாரிய தர்க்கம் எத்தகைய பரிமாணத்தில் இருக்கும் என்ற ஒரு ஆராய்வு எனக்குள் ஏற்பட்டது. அதன் விளைவில் உருவான தனிப்பட்ட என்னுடைய கருத்து தான் இந்த பதிவு.

குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தினடிப்படையில் பெண்ணியம் சார்பான ஆய்வுகளை எடுத்துக் கொள்ளுமிடத்து எமக்கே புளித்துப் போய்விட்டது .. சீழ்கட்டிய ரணம் ஆறாத நிலையில் மூடிய அயறுடன் இருக்கும்..தப்பித் தவறி அதை சொறிந்து பாருங்கள்..நாற்றமடிக்கும்... அப்படி ஒரு நிலையில் தான் இன்றைய தமிழ் பெண்களின் வாழ்கை வட்டம் பெண்ணியம் என்ற் ஆராய்வில் இருக்கிறது. மாறிவிட்டது போல் தோற்றமளிக்கும் பெண்ணினத்தின் விதி எந்த வொரு பெண்ணியத்தின் கோட்பாட்டிற்கும் சரியாக பொருந்தமுடியாமல் தான் இன்றளவிலும் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் தமிழீழமும் அதன் போராட்டமும் முனைப்பாகியிருக்கிறது. உலகப் போராட்ட வரலாறுகளில் பெண்களின் பங்கு என்பது பண்டைய காலத்திலிருந்தே இருக்கிறது தான் என்றாலும் தமிழீழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு என்பது என்னைப் பொறுத்தவரை கண்ணுக்கு முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்கால சரித்திரம் என்பதால் முக்கியத்துவமானது எனக் கருதுகிறேன். அத்துடம் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளவில் பேசப்படுமளவுக்கு இன்றைய தமிழீழப் போராட்டமும், பெண் போராளிகளும் முன்னேறியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

கேட் மில்லட் என்னும் பெண்ணிய ஆய்வாளர் குறிப்பிடும் பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் தமிழீழப் பெண்களை பொருத்திப் பார்க்கிறேன்..


தமிழீழப் பெண்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால்.... ஒரு காலத்தில் கணவர் வேலைக்குப் போனால் வீட்டைப் பராமரிக்கும் குடும்பத்தலைவிகளாக பெரும்பாலான பெண்கள் இருந்தார்கள். ஆனாலும் ஆசிரியத் தொழில் உட்பட மருத்துவத்துறையில் தொடங்கி கூலித் தொழிலாளிகள் வரை பெண்கள் இருந்தார்கள். இலக்கியம் முதல் கைத்தொழில் வரை அவர்கள் கை வலுத்திருந்தது. ஆனாலும் குடும்பம் என்ற வட்டத்துக்குள் கணவனுக்கு அடங்கிய மனைவியாக இரண்டாம்தர வர்க்கமாகவே வாழ்ந்திருந்தாள். இப்போது அவர்களுடைய வாழ்கை என்பது சூழல், களம் , தரம் என்று சகல கோணங்களிலும் முரணானதும், மாறுபட்டதுமானதாகியிருக்கிறது.

தற்காலச்சூழலில் தமிழீழப் பெண்களை புலம் பெயர்ந்தவர்களாயும், புலத்திலிருக்கும் குடும்பப் பெண்களாயும், போராளிகளாயும் வகைப்படுத்தலாம். தமிழீழப் பெண்கள் குடும்பப் பெண்களாயும் , போராளிகளாயும் இரு வேறுபட்ட வாழ்வியலில் தம்மைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். குடு்ம்பப் பெண்களைப் பொறுத்தவரை புலம் பெயர்ந்தவரகளாயும், புலத்தில் தரித்திருப்பவர்களாயும் இரு மாறுபட்ட வாழ்க்கைச் சூழலில் அவர்களது வாழ்கை நடக்கிறது.அவர்களுடைய குடும்ப வாழ்கையின் அடித்தளம்வலிமைவாய்ந்ததாக இருக்கிறதா அல்லது நவீன பெண்ணியத்தின் சுதந்திரம் என்பதன் வரையறைக்குள் தம்மைப் பொருத்திக் கொள்ளும்படியான நிலையில் அவர்கள் இருக்கிறார்களா என்பது ஒரு கேள்வி. போராளிகளாக தமது பாதையை தேர்ந்தெடுத்த தமிழீழப் பெண்களால் உளவியல், கருத்தியல் , சமூகவியல் என்பவற்றில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது இன்னொரு கேள்வி. இரு வர்க்கப் பெண்களும் பெண்ணியத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களாகிறார்களா அல்லது வேறுபடுகிறார்களா என்பது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய வினா!


சமூகத்தைப் பொறுத்தவரை தமிழ் கலாச்சாரத்தில் பாலியல் அடிப்படையிலான வேற்றுமை பலவீனத்தால் இன்றும் பெண்கள் இரண்டாம் தரத்தில் தான் இருக்கிறார்கள் என்றால் தமிழீழத்தில் போராளிகளாக மாறியிருக்கும் பெண்கள் அதை மறுதலிக்கிறார்கள்.ஆணுக்கு சமமாக கனரக ஆயுத கையாளலும், போராட்டக் களங்களும் அவர்களுக்கு அத்துப்படி. அது மட்டுமல்ல பல ஆயிரக்க கணக்கான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் எதிரியுடன் சில நூற்றுக் கணக்கான போராளிகளாக தாக்குதலில் ஈடுபடுவதும்,தனிப் பெண்கள் படையணியாக களத்தில் போராடுவதும், எதிரியின் ஆயுதபலத்துடன் ஒப்பிடும் போது பலம் அல்லது தரம் அல்லது எண்ணிக்கையில் குறைந்த ஆயுதங்களைக் கொண்டே அவர்கள் எதிரியை முற்றுக்கையிடுவதும், முறியடிப்பதும், மரணம் என்ற விரும்பத்தகாத முடிவை தீர்மானமாக எதிர்பார்த்தபடி களம் புகுவதுமாய் , மரணத்தைக் கடந்து திரும்ப வருவது அல்லது மரணிப்பது என்ற பாதையில் அவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பெரும் அடையாளமாக மானுடம் என்ற ஒன்றை மட்டுமே நிரூபிப்பதாக நம்புகிறார்கள். போராட்டக் களத்தில் பெண் போராளி் ஆணா பெண்ணா என்ற பாலியல் வேறுபாட்டடிப்படையில் தரம் பிரிக்கப்படாமல் எந்தக் களத்தில் எத்தனையாவது நிலைக்கு தகுதியானவர் என்று அவரது போராட்டத் திறமையை வைத்தே தேர்வு செய்யப்படுகிறார். இங்கே பாலியல் அடையாளம் காணாமல் போய்விடுகிறது .

ஆனால் குடும்பப் பெண்ணாக வாழும் தமிழீழப் பெண்ணின் வாழ்நிலைச் சூழல் போராளிகளிடமிருந்து முற்றிலும் முரணானதாகவே இருக்கிறது. வழமையாகக் கணவனின் உழைப்பில் குடும்பம் நடத்தும் பெண்கள் இருந்த காலங்கள் மலையேறிப் போனாலும் கூட, தமிழீழத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான ஆண்கள் இன வெறியின் துடைத்தொழிப்பில் கொல்லப்பட்டும், போராளிகளாக தமது வாழ்கையை தேர்வு செய்வதாலும் பல குடும்பங்களில் பெண்களே உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் இருக்கிறார்கள். தொழில் ரீதியாக பார்க்குமிடத்து கூலி வேலையிலிருந்து கணனித் துறை வரை பெண்கள் வியாபித்திருந்தாலும் ஒரு வரையறைக்குட்பட்ட வாழ்கையே அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அப்படியே பரந்த நோக்கில் சுதந்திரப் பெண்ணாக கல்வி கேள்விகளில் சிறந்தவளாக தன்னை நிலை நிறுத்தினாலும் ஆண் என்ற அடையாளத்துடன் வரும் இராணுவ வல்லூறுகளிடமிருந்து தப்பி வாழ வழி தேடும் நிம்மதியற்ற வாழ்கைச் சூழல் தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

இன்றளவேனும் தமிழீழத்தில் கல்யாணமாக வேண்டிய பெண்கள் சீதனம் கொடுத்து தான் வாழ வேண்டும் என்ற நிலை இன்னமும் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்பது மறுக்க முடியாத இன்னொரு உண்மை. வெளிநாடுகளில் உழைக்கப் போன ஆண்கள் மனைவி என்ற வம்ச விருத்திக்கான உறவுக்கு மட்டும் தாய் நாட்டில் பெண் எடுக்க தலைப்படுவதும், வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற அதிகபட்ச தகுதிக்கு விலை பேசும் ஒரு வியாபாரமாகவே கல்யாணத்தின் முதல்கட்டம் இன்று வரை இருப்பதும் கசப்பான உண்மையே. அதே நேரம் வெளிநாட்டில் புலம் பெயர்ந்த தமிழ் பெண்ணை தாய் நாட்டிலிருக்கும் ஒரு ஆண் கல்யாணம் செய்யும் போது வெளிநாட்டு நாட்டுரிமை கிடைக்கும் என்ற லாப நோக்குக் கணக்கு அங்கு சமப்படுத்தப்படுகிறது. அதன் பின்னான இருபாலருக்குமிடைப்பட்ட வாழ்க்கையில் அந்த்ரங்கம் என்பது பல்வேறு சிக்கல்களுடனும், நம்பிக்கை மோசடி, நடத்தை பிறழ்வு, எதிர்பார்ப்புகள், உடன்பாடுகள் மீறப்படுதல் போன்றவை எல்லை மீறி 25% திருமணங்கள் விவாகரத்து வரை போய்விடுவதும் வழக்கமாகிவிட்டது. வெளிநாட்டில் வாழும் தமிழீழப் பெண்களைப் பொறுத்தவரை கல்வி, வேலை , ஊதியம் போன்றவை சுயமாகவே அவர்களுக்கும் கிடைக்கும் சந்தர்ப்பமிருப்பதால் ஆண் என்ற மானுடம் உறவுக்கு மட்டுமே தேவைப்படுகிறது மனதளவில். ஆனால் சமூகக் கட்டுப்பாடு, கலாச்சார நிபந்தனைகள் போன்றவை குடும்பம் என்ற வட்டத்துக்குள் தான் கௌரவமான வாழ்கை என்பதை இன்னமும் அழுத்தமாக சுட்டப்படுவதால் வெளிஉலகுக்காகவேனும் ஒரு ஆணுடன் சேர்ந்தது தான் வாழ்கை என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டிய சார்பு நிலையில் தான் தமிழீழப் பெண் இருக்கிறாள் என்றால் மிகையாகாது. அது தவறா சரியா என்று வாதிடுவதை விட ஆண்களின் நிலைப்பாட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். தாம் ஆண் என்ற அதிகாரம், கணவன் என்பதால் மனைவி என்பவள் தமக்குக் கட்டுப்பட்டவள், தம்முடைய சொல்லை வைத்தே அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புள்ளவர்களாகவே பெரும்பாலான தமிழ் ஆண்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஒரு நிலைப்பாட்டில் தமிழீழக் குடும்பப் பெண்கள் சமூகவியல் படியும் சரி , கருத்தியல் படியும் சரி, பாலியல் அடிப்படையில் இன்னமும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை எனினும் இவர்களிடம் வரதட்சணைக் கொடுமையால் ஸ்டவ் வெடித்தல், பெண் பிள்ளை வேண்டாம் என்று கள்ளிப் பால் ஊட்டல், மாமியார் கொடுமை,போன்ற நிகழ்வுகள் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

பெண் போராளிகளைப் பொறுத்தவரை போர் என்ற ஒன்று தான் முதன்மைக் காரணமாகிவிட்ட வாழ்வியலுக்கு தம்மை தாமே அவர்கள் அர்ப்பணித்திருக்கிறார்கள் ;அவர்களாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கை மாற்றம் அது. சமூகத்தின் மீது ஏற்பட்ட அக்கறை அல்லது தனிப்பட்ட முறையில் காயப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட மன உளைச்சல் , ஒடுக்க முனையும் எதிரியின் மேலான வன்மம் , ஆத்திரம், நியாயமான சுதந்திரத் தேடல் , இன உணர்வின் முனைப்பு என்று எப்படிப் பார்த்தாலும் ஒரு தமிழீழப் பெண் போராளியாக மாற முனைந்த திருப்பு முனை தனிப்பட்ட நலனுக்கானது அல்ல என்பது கருத்தில் கொள்ள வேண்டிய விதயம்.

தமிழீழத்தின் பெண்ணிய ஆய்வில் பெண் போராளிகளின் செயற்பாடு அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருத இடமுண்டு. பெண்ணியத்தின் மிக முக்கியமான பாலியல் வேறுபாட்டின் தரம் பிரித்தலை இந்தப் பெண்கள் சமத்துவமாக்கியிருக்கிறார்கள். அத்தோடு தமிழ் சமூகத்தின் குடும்பப் பெண்களுக்கும் சமத்துவத்தை புரியவைக்க ஆவன செய்கிறார்கள். சமூக சேவை, கல்வி புகட்டல், ஆதரவு மையங்களை நடத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் இவர்கள் பங்காற்றுகிறார்கள்.

பெண் போராளியான கஜானி என்பவர் களம் கண்ட போராளியாக மட்டுமல்ல போர் களங்களில் புகைப்படப் பிடிப்பாளராயும் திகழ்கிறார். அவரைப் பற்றி ஈழத்தின் மூத்தபடைப்பாளியான கருணாகரன் என்பவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்.. "இன்று அதிக கவனம் பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்கள் உரிமை குறித்த கவனத்திற்கும் யதார்த்தத்திற்குமிடையிலான முரணை துல்லியமாக்குகின்றார் கஜானி. யதார்த்தத்தில்; பெண்கள் கலாச்சார ரீதியாகவும் சமூகவாழ்கையின் நிரப்பந்தங்கள் காரணமாகவும் இன்றும் இரண்டாம், மூன்றாம் நிலைகளியே உள்ளார்கள். சிறுவர் நலன்குறித்த சிந்தனைகளும் சட்டங்களும்; விழிப்புணர்வும் முன்னரைவிட வலுவடைந்தபோதும் இன்றும் சிறுவர்கள் உழைப்பாளர்களாகவும் கல்வி மற்றும் வாழக்கை உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை ஆதாரப்படுத்துகிறன கஜானியின் ஒளிப்படங்கள். பல சந்தர்ப்பங்களில் கஜானியின் கமெரா பொறுப்புள்ள சாட்சியாகப் பேசுகின்றது"

முதல் பெண் போராளியான மாலதியும் , முதல் பெண் கடற்கரும் புலிப் போராளியான அங்கயர்கண்ணியும் தமது கண்ணுக்கு முன்னால் தம் சமூகத்தை இராணுவம் அழிக்கும் கொடுமையைப் பொறுக்க முடியாமல் போராளியாகியவர்கள். போராட்டத்தை வேள்வியாக நினைத்து எதிர் கொண்டவர்கள்; களத்தில் தனித்து போராடி தமது உயிரையே ஈந்தவர்கள். இவர்களைப் போல் ஆயிரக்கணக்கான பெண் போராளிகள் சமூக அக்கறையின் முனைப்பில் தமது பங்களிப்பாக எதையாவது எமது இனத்துக்கு சாதித்துக் கொடுக்க வேண்டுமென்ற வேட்கையோடு தமது உயிரை பணயம் வைத்து களத்தில் நிற்கிறார்கள் என்பது கண்கூடு.

உடல்ரீதியான பலத்தை வைத்தே பெரும்பாலும் பெண் ஆணிடம் பலவீனமடைந்தவளாக அடிபணிய வேண்டியிருக்கிறது. இது பெண்னின் உளவியலில் தாழ்வுணர்ச்சி, தன்னம்பிக்கையில்லாமை, பயம் , சார்புநிலை போன்ற தாக்கங்களை ஏற்படுத்தி பலவீனப்படுத்துகிறது. ஆனால் பெண் போராளிகளிடம் இத்தகைய உளவியல் பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை. அவர்கள் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் பல புலனடக்கப் பயிற்சிகளோடு, போர் பயிற்சிகலும் தற்பாதுகாப்பு பயிற்சிகளும் சேர்த்து வலுப்பெற்று தன்னம்பிக்கைமிக்கவர்களாகிவிட்டனர். அத்துடன் அதை சமூகத்தின் மற்றைய பெண்களிடமும் எடுத்துச் செல்கின்றனர். இதன் மூலம் குடும்பப் பெண்களிடமும் தற்பாதுகாப்பின் தேவையை உணர்த்திவிடுவதன் மூலம் தற்போதைய காலகட்டத்தில் இனவெறியில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படும் தமிழீழப் பெண்களின் வாழ்கையில் அத்தகைய கொடூரங்களிலிருந்து அவர்கள் தம்மைக் பாதுகாத்துக் கொள்ள தகுந்த ஏற்பாட்டையோ அல்லது பலாத்காரப்படுத்தப்பட்ட பெண் இடிந்து போய்விடாமல் நம்பிக்கையையும், துணிவையும் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் வழி முறையையோ புகட்டிவிடுகிறார்கள்.


அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறையின் முற்றுகைக்குள் வாழும் குடும்பப் பெண்களும் கூட ஒரு வகையில் போராளிகள் என்று தான் கொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்கையில் உயிர் வாழ்தலுக்கான அவசியத்தில் தன்னம்பிக்கை, துணிவு என்பன தான் துணையாக இருக்க முடியும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற வாழ்வின் நிகழ்தகவு விளையாட்டில் தினமும் ஆயுளைக் கழிக்கும் பெண்களாகவே தமிழீழப் பெண்கள் தமது வாழ்கைகைய வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெண்ணியம் பற்றிய ஒவ்வொரு அடிப்படை அம்சங்களும் பலவாறாக சிதைக்கப்பட்டும், சீரழிக்கப்பட்டும் கொண்டிருப்பது வெறும் இன ஒழிப்பின் அன்றாட ஊடகச் செய்தியாக மாத்திரமே வெளியிடப்படுகின்றனவே தவிர அவர்களுக்காக குரல் கொடுக்க எந்த சர்வதேசத்தின் பெண்கள் அமைப்பும் இது வரை முயலவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

இத்தனை வருட இனவெறியின் கோரத்தாண்டவத்தின் வரலாற்றில் இலங்கை இராணுவத்தினராலும் இந்திய அமைதிப்படையினராலும் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட பெண்களினதும், கொல்லப்பட்ட பெண்களினதும் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருக்கிறது. 3 வயது பாலகியிருந்து மூன்று நாட்களுக்கு முன்னால் பாலியல் வன்புணர்வில் சீரழிக்கப்பட்ட 13 வயது சிறுமி புனிதவதி வரை அரச பயங்கரவாதத்தில் சிதைக்கப்பட்ட பெண்ணினத்தின் சாட்சிகளாக உலகத்தின் முன்னால் வெளிப்படுத்தப்பட்ட போதும் எந்த அமைப்பும் எமது தமிழீழப் பெண்களுக்காக குரல் கொடுக்கவில்லை. பொதுவான இனப்பிரச்சினையாகவும் இப்பிரச்சினையில் இவை போன்ற வன்புணர்வு என்பது இயல்பான நிகழ்வாகவுமே கணிக்கப்படுவது வேதனைக்குரியது மட்டுமல்ல ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட. இங்கே பெண்ணுக்கான நியாயம் மறுதலிக்கப்பட்டிருக்கிறதா அல்லது முக்கியத்துவமற்றதாக இருக்கிறதா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கே இருக்கும் பெண்களால் இதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாது. எந்தப் பெண் முனைந்தாலும் அவள் அரசின் கூலிப்படையால் அல்லது இராணுவத்தினரால் கொல்லப்படுவாள். புலம் பெயர்ந்த தமிழர் மொத்தமாய் தம் இனத்துக்காக குரல் கொடுப்பதையே சர்வதேசம் செவிட்டு வேசத்தில் தான் கேட்டுக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் இனப்படுகொலைக்கு எதிரான குரல்களையே செவிமடுக்காத இனவாத அரசு தமிழீழப் பெண்களுக்கான குரலை மட்டும் அக்கறைப்படுத்தும் என எதிர்பார்பது முட்டாள்தனம்.

பாலியல் வன்கொடுமை இருக்கும் வரை பெண்ணியம் வெற்றி பெற்றதாக கருதுவதற்கு வாய்ப்பில்லை. வன்புணர்வுகுட்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மரணிக்க வேண்டும் என்ற நிலை தீர்மானிக்கப்படுவதும் பெண்ணியத்தின் தோல்வியே. ஆக.. இந்நிலையில் தமிழீழப் பெண் என்ன செய்ய முனைந்தால் தன்னுடைய அடிப்படை உரிமைகளையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லது கௌரவமான மரணிப்பில் மரணிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்தக் கேள்விக்கான விடையை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் மாத்திரமே பெண்ணியம் என்பது தமிழீழத்துப் பெண்களின் வாழ்வில் எத்தகைய பரிமாணத்தை எட்டியிருக்கிறது என்று தீர்மானிக்க முடியும் எனக் கருதுகிறேன்.


{பிற்குறிப்பு:
படங்களுக்காக நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள் சந்திரவதனா அக்கா ,அகிலன்,பிரசன்னா &தெஹல்கா இணையத்தளம். }





No comments: