Sunday, April 19, 2009

ஏப்பிரல் மாதம்!

ஏப்பிரல் மாதம்!

ஏப்பிரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அளவில் இனக்கொலை , மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாள மாதமாக பிரகடனப்படுத்தப்பட்ட மாதமாகும்!


இனப்படுகொலை என்ற வன் கொடுமைக்கான வரைவிலக்கணத்தை 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பின்வருமாறு வரையறுத்திருக்கிறது "ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் , உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது ,வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனக்கொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்".

உலகின் வரலாற்றில் இதுவரை ஆர்மினியா, போஸ்னியா, ஹாலாஹோஸ்ட்,கம்போடியா, ருவாண்டா இனப்படுகொலைகள் கறுப்பு பக்கங்களாக என்றைக்குமே அழிக்க முடியாமல் பொறிக்கப்பட்டுள்ளன . அவற்றுடன் இந்த வருடத்திலிருந்து ஈழத்தமிழின கொலைகளும் வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் வகைப்படுத்தப்படும் தகுதியை பெற்றுவிட்டது என்றால் மிகையாகாது.

ஐக்கிய நாடுகள் சபையால் எந்த மாதம் இனக்கொலைகளுக்கெதிரான மாதமாக பிரகடனப்படுத்தப் பட்டதோ , எந்த மாதம் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமையை எதிர்க்கும் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதோ அந்த ஏப்பிரல் மாதத்திலேயே ஈழத்தில் மிகப் பாரிய அளவில் தமிழினக் கொலைகள் நடத்தப்படுவதையும், ஈழக் குழந்தைகள் அதிகளவில் கொல்லப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபையும் , சர்வதேசமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது??

இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா அரசின் இராணுவம் இதுவரை கொன்று குவித்திருக்கும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு எவர் பதில் சொல்லப் போகிறார்கள்??

இத்தனை கொலைகளாலும் அழிக்கப்பட்டவை வெறும் மானுட உடல்கள் மாத்திரம் தானா? ஒரு இனத்தின் வருங்கால சமுதாயமும், வாழ வேண்டிய மனிதர்களும் தமது மரணங்களோடு தொலைத்தவை அவர்களது கனவுகளும், ஆசைகளும், வாழ வேண்டிய உரிமைகளையும் அல்லவா? ஒரு இனத்தின் எதிர்காலம் இன்று சர்வதேசத்தின் முன் எவ்வித கவனிப்புமின்றி ஒரு அந்நிய தேசத்தின் தலையீட்டின் மேற்பார்வையில் இன்னொரு அரசின் காட்டுமிராண்டித் தனமான கொலை நடவடிக்கையில் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தட்டிக் கேட்க நாதியில்லை.
இவற்றை விட என்ன ஆதாரங்கள் வேண்டும் இன்னும் இந்த உலகத்துக்கு எம்மினத்தின் இழி நிலையை நிரூபிக்க..??

இத்தனை இழப்புகளுக்கும் இந்த இன ஒழிப்பில் பங்கேற்ற அத்தனை பேரும் நிச்சயம் பதில் சொல்லித் தானாக வேண்டும்!


1 comment:

Anonymous said...

என்ன சுவாதி அக்கா!
ஒண்டும் தெரியதா சின்னப் பிள்ளை மாதிரி
இத்தனை இழப்புகளுக்கும் இந்த இன ஒழிப்பில் பங்கேற்ற அத்தனை பேரும் நிச்சயம் பதில் சொல்லித் தானாக வேண்டும்!
எண்டு சொல்லியிருக்கிறியள்!

எங்கயக்கா இருக்கிறியள்?
எப்ப போனியள் நாட்டைவிட்டு? இஞ்ச நடந்ததெல்லாம் தெரியுமே உங்களுக்கு?

எத்தனை பேரைக் கொண்டானுகள் உவன்கள்!
போன 2004 டிசம்பரில ஒரு சுனாமி! இப்ப ராசபக்ச அடி!
ஆனைக்கொரு காலம் பூனைக்கொருகாலமக்கா!
ஏனக்கா புலி ஆக்களை சுடுறது மட்டும் உங்களுக்குத் தெரியலையோ!உவங்களால தாலியறுந்த சனத்தின்ர கண்ணீர்தான் இப்ப இடிமாதிரி வந்த சனத்தைக் கொல்லுதக்கா!