Saturday, April 18, 2009

நிர்மூலமாக்கப்படும் எம்மினத்துக்காக நியூயோர்க்கில் ஒரு பேரணி!

நிர்மூலமாக்கப்படும் எம்மினத்துக்காக நியூயோர்க்கில் ஒரு பேரணி!வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னாலான ஒன்று கூடல் & ஊர்வலம் என்ற அறிவிப்பு மட்டும் தான் நாம் வசிக்கும் ஸ்டேட்டண்ட் ஐலண்ட் பகுதித் தமிழ் மக்களுக்கு தெரிந்த விசயம். மற்றப்படி நேரம் , தொடக்கம், முடிவு என்று சகலதும் கனடாவிலிருந்து வருபவர்களிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று. அந்த வகையில் எமது வசிப்பிட நடத்துனர்களின் பொறுப்பின்மையை நான் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

ஒருங்கிணைப்பாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கென்று சில கடமைகளை வரையறுத்து அதை பொறுப்புணர்வுடன் செய்ய தம்மால் இயலுமென்றால் மாத்திரமே அந்த பொறுப்பை அவர்கள் எடுக்க வேண்டும். இத்தகைய உணர்வுபூர்வமான ஒன்றுகூடலுக்கு மக்களின் ஆதரவும், வரவும் அதிகப்படியானதாக இருக்க வேண்டும் என்பது யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விதயம். தினமும் இணையம் வருவதால், எம்மைப் போன்றவர்களால் எங்கே என்ன நிகழ்வு நடக்கிறது என்ற தகவல் தெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் இரவு பகல் பாராது வேலைக்கு போகிறார்கள்; உடல் நோக வேலை செய்துவிட்டு எப்ப கொஞ்ச நேரமாவது நித்திரை கொள்ளலாம் என்று விழுந்தடித்து வருகிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தான் முன்னின்று தகவல்களை தெரிவிக்க வேண்டும். என்ன இலட்சக்கணக்கானவர்களா இருக்கிறோம்???இங்கிருப்பவர்களே சில நூறு பேர் தான். அவர்களில் பாதிப்பேருக்கு மேல் நேற்றைய ஒன்றுகூடலில் கலந்து கொள்ளவில்லை. காரணம் உரிய நேரத்தில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமை அல்லது தகவலே தெரியாத நிலமை. எமது பகுதியில் 2 ஒருங்கிணைப்பாளர்கள். இருவரையும் கடந்த 3 நாட்களாக தொடர்பு கொள்ள முயன்றால் அவர்கள் தொலைபேசிக்கு பதிலே அளிக்கவில்லை, வெறுத்துப் போய்விட்டது, நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று நிகழ்வு நடக்குமிடத்தில் மட்டும் முதலாளித்தனம் காட்டும் வகையில் வந்து நிற்கும் போலித்தனத்தை விடுத்து உண்மையான உணர்வுபூர்வமாக உழைக்கக் கூடிய ஒருங்கிணைப்பாளர்களை இனம் கண்டு நியமிக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

யாருக்கும் சரியான வகையில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. தமது நண்பர்களிடம் மட்டும் சொல்லப்பட்டதோடு அவர்கள் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். பக்கத்தில் இருந்தும் நேரத்துக்கு தகவல் தெரியாததால் பலரால் வேலையிலிருந்து விடுப்பு எடுக்க போதியளவு அவகாசம் கிடைக்கவில்லை. அதனால் பாதிப்பேருக்கு மேல் பேரணியில் கலந்து கொள்ளவில்லை. ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் வீடு வீடாக தொலைபேசியில் எல்லோரையும் அழைக்கிறார்கள். தமது வீட்டு விசேசம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று காட்டும் அக்கறையை நமது இனத்துக்கான நிகழ்வுகளிலும் காட்ட வேண்டாமா? தொலைபேசி அழைப்புகள் இல்லாவிட்டாலும் இங்கிருக்கும் தமிழ் கடைகளில் சில பிரசுரங்களை வைத்தாலே போதுமே... அது கூடவா செய்ய முடியாது..அப்படியானால் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் ஏன் இவர்கள் தங்கள் பெயர்களைப் பொறுப்புக் கொடுக்க வேண்டும்?? இனத்துக்காக செய்ய வேண்டும் என்ற உணர்வு இருப்பவர்கள் தாமாக தான் வரவேண்டும் என்று இவர்கள் தரப்பில் நியாயம் சொல்லப்படுமானால் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பொறுப்பிலிருந்து இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. வெறும் சாப்பாடு பொட்டலமும், தண்ணீர் போத்தலும் விநியோகிக்கவா??

வெள்ளிக் கிழமை காலையில் நானும் எனது தம்பி திவியக்குமாரும் மட்டுமே பேரணிக்கு போவதாக இருந்தது. ஆனால் நான் வெளிக்கிடும் போதே நித்திரையால் அஷ்வத்தாமா எழுந்துவிட்டார். அதனால் அவருக்கு போக்குக் காட்டிவிட்டு போக முடியவில்லை,. அதனால் அவரையும் எங்களோடு அழைத்துச் சென்றோம். சிநேகனுக்கு அலுவலகத்தில் விடுப்பு எடுக்க விடவில்லை. (க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)அதனால் அவர் வரவில்லை. அவர் இல்லாமல் இரண்டு இம்சை அரசர்களுடன் நான் போனால் அங்கு எந்த நிகழ்வையும் என்னால் சரிவர அவதானிக்க முடியாது.அதனால் அச்சுதனை அழைத்துப் போகவில்லை.

9 மணி படகில் (Ferry) மான்காட்டன் போய் , மின் இரதத்தில் ஐக்கிய நாடுகள் சபையை அடைய 10 மணிக்கு மேலாகிவிட்டது.

இம் முறையும் கனடாவிலிருந்து வருபவர்களை தடை செய்யச் சொல்லி வேண்டி இணையத்திலும் சிங்கள இணையக் குழுமங்களில் கனடா - அமெரிக்க எல்லைகளின் இமிகிரேஷன் அலுவலக மின்னகல், தொலைபேசி இலக்கங்கள் கொடுத்திருந்தார்கள். ஆனாலும் தடைகளை கடந்து எமது மக்கள் அலை அலையென திரண்டு வந்துவிட்டனர் . வாஷிங்டனுக்கு வந்திருந்த பல முகங்களை இங்கும் கண்டேன்.எனது கணிப்பு சரியாக இருந்தால் எப்படியும் அங்கு திரண்டிருந்த எம்மவர் ஐயாயிரத்துக்கும் மேலாகத் தானிருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் கட்டிடத்தை நாம் நெருங்கும் போது தமிழீழச் சட்டைகளை அணிந்த இளம் பெண் பிள்ளைகள் தெரு முனையில் இனப்படுகொலை பற்றிய பிரசுரங்களை போவோர் வருவோருக்கு விநியோகித்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். பெரும்பாலானோர் அலுவலகம் போகும் இயந்திர மனிதர்களாய் விரைந்து கொண்டிருந்த வேகத்திலும் பிரசுரத்தைக் கை நீட்டி வாங்கிக் கொண்டு போனார்கள். அவர்களில் பலர் கண்களால் நோட்டமிட்டு ,குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டுப் போவதை அவதானித்தாலும் மனந்தளராது அந்தப் பெண்பிள்ளைகள் அதே புன்னகை தாங்கிய முகத்தை மாற்றாமல் திரும்பவும் மற்றவர்களிடம் விநியோகித்துக் கொண்டு நின்றது கண்கலங்க வைத்தது, பிரசுரங்களை வாங்கியவர்களில் யாராவது ஒருவராவது தனது கையிலிருக்கும் பிரசுரத்தின் கனத்தை மனதாலும் உணர்வாலும் உள்வாங்கிக் கொள்வார்களா என யோசித்தேன். வெறும் இருட்டான புலத்தில் எனது கேள்விக்கான பதில் எங்கு கிடக்கிறது என்று புரியவில்லை.

ஏற்கனவே கனடாவிலிருந்து வந்த மக்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் குழுமியிருந்தனர். பதாகைகளும், படங்களும் மிகச்சிறந்த முறையில் சீரான அளவுகளில் பளபளத்துக் கொண்டிருந்தன. சிவப்பு வர்ண டி-ஷர்ட்டுகள் தமிழீழப் படத்துடன் விற்பனையில் களை கட்டியது. எமது மக்களுக்காக செலவிடப்படுவதற்கான நிதியுதவி என்பதால் மக்கள் முகம் கோணாது வாங்கினார்கள். நாங்கள் வாங்கின போது எனது அளவிலோ அல்லது அஷ்வத்தாமாவின் அளவிலோ கிடைக்க வில்லை. அதனால் தம்பி திவியாவின் அளவில் தான் கிடைத்தது. அதை அவர் தான் போட வேண்டும் என்று அஷ்வத்தாமா அடம் பிடித்து வாங்கி போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் நடை பயின்றார் அங்கும் இங்கும்.

வாஷிங்டனில் முழங்கிய அதே இளம் பெண்கள் இங்கும் இடை விடாது கோஷம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் . கத்தி கத்தி அவர்கள் குரல் கமறியதும், கீச்சிட்டதும், அதையும் பொருட்படுத்தாது திரும்ப திரும்ப அவர்கள் கோஷம் போட்டதும் மனதை என்னவோ செய்தது. கிளிப்பிள்ளைகள் போல் அவர்களோடு சேர்ந்து பெரியவர்களும் சிறியவர்களுமாய் கோஷம் போட்டுக் கொண்டிருந்தோம். இம் முறை அஷ்வத்தாமாவும் உற்சாகமாக கோஷம் போட்டுக் கொண்டிருந்தார். வாஷிங்டன் போனதை விட இங்கு இவர் மிகவும் ஈடுபாடாக கலந்து கொண்டார். பல பெரியவர்களுடன் வலியப் போய் பேசினார். விளக்கம் கேட்டார். ஒரு பெரியவர் தனது கழுத்தில் ஈழத்தில் கொலையுண்ட குழந்தைகளின் படங்கள், செல்லடிகளால் எரிந்த நிலையில் கிடந்த சடலங்களின் படங்களடங்கிய பதாகையை அணிந்திருந்தார். அவரிடம் போய் அஷ்வத்தாமா விளக்கம் கேட்டார். அந்தப் பெரியவர் அஷ்வத்தாமாவுக்கு நாட்டு நடப்பை விளக்கினார். அந்தப் பதாகையின் ஒரு மூலையில் இரு சிறுவர்கள் அழுதபடி இருந்த படமும் இருந்தது. அந்தப் படத்தைக் காட்டி அந்தப் பெரியவர் "உமக்கு தம்பி இருக்கோ ? என்று அஷ்வத்தாமாவிடம் கேட்டார்.


"ஓம்" - அஷ்வத்தாமா.

"உம்மட தம்பியையும் உம்மையும் விட்டிட்டு உம்மட அம்மாவும் அப்பாவும் எங்கேயாவது போய்ட்டால் நீரும் உம்மட தம்பியும் என்ன செய்வீர்?"

அஷ்வத்தாமாவின் முகத்தில் கவலைபடர்ந்தது.

"அழுவீங்கள் தானே அம்மா அப்பாவை காணேலையெண்டு?"

"ஓம்"

"அப்ப அப்பா அம்மா செத்துப் போனால் இந்தப் பிள்ளையள் என்ன செய்வினம்? ஆர் இவையளுக்கு சாப்பாடு குடுக்கிறது? ஆர் இவையளை கவனிக்கிறது?"

அஷ்வத்தாமாவுக்கு கண் கலங்கிவிட்டது. "பாவம்...அவை"

"ம்ம் அது தான்...இவையளைப் போல அப்பா அம்மா செத்துப் போன பிள்ளையளுக்காகவும் , பிள்ளையள் செத்துப் போன அப்பா அம்மாவுக்காகவும் தான் நாங்கள் இங்க வந்து நின்று கத்துறம். நீங்களும் நல்லா உரத்துக் கத்த வேணும் என்ன?"

அஷ்வத்தாமா ஓம் என்று வேகமாக தலையாட்டினார். தனக்கும் ஒரு பதாகை வேண்டுமென்று சொன்னார். அந்தப் பெரியவரே அவரைக் அங்கே எல்லோருக்கும் பதாகைகள் உடனுக்குடன் செய்து கொடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் கூட்டிக் கொண்டு போனார். அங்கே தமிழீழம், பிரபா அண்ணா. இனப் படுகொலை , என்று பல்வேறு வகையான பதாகைப் படங்கள் இருந்தன.

"தம்பிக்கு எது வேண்டும் என்று அந்த இளைஞர் கேட்டார். அஷ்வத்தாமா தமிழீழம் படம் பொறித்த பதாகையை காட்டினார். .."

"ம்ம்ம் தம்பிக்கு தமிழீழம் தான் வேணும் என்ன?". என்று புன்னகைத்தார் அந்தப் பெரியவர். இவருக்கு என்ன புரிந்ததோ தெரியாது "ஓம்..எனக்கு அது தான் வேணும்"என்றார்.

பின் அந்தப் பதாகையுடன் நானும் எனக்கு பிரபாகரன் அண்ணாவின் படம் போட்ட பதாகையை வாங்கிக் கொண்டு வரிசையாக வேலியோடு நின்று கோஷம் போட்ட சகோதர சகோதரிகளுடன் கலந்து நின்றோம். அஷ்வத்தாமா மிகச் சிறியவராய் இருந்ததால் அவரை ஒரு பெண் முன்னுக்கு அழைத்து தன்னோடு வைத்திருந்து என்ன சொல்லி கோஷம் போடுவது என்று சொல்லிக் கொடுக்க இவரும் உற்சாகமாக கோஷம் போட்டார்.

என்னவோ..அந்த நிமிடம் எனக்குப் பக்கத்திலேயே நின்ற அந்தப் பெரியவரின் கழுத்திலிருந்த படத்தைப் பார்த்தேன். அந்த அழுது கொண்டிருந்த சிறுவர்களைப் பார்க்கும் போது "என் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலை வராமல் காப்பாற்றிவிட்டாய் என்று நம்ப இயலாத கடவுளுக்கு நன்றி சொல்வதா அல்லது அந்த அழுது கொண்டிருக்கும் சிறுவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான எம்மினத்தின் குழந்தைகளின் அவல நிலைக்கு யார் காரணம் என்று கோபப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பக்கத்தில் ஆயிரம்பேர் இருக்கிறார்களே என்ற உள்ளுணர்வில் வெட்கிப் போய் தலையைக் குனிந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொள்வதைத் தவிர என்னால் வேறு எதுவும் முடியவில்லை. அழுவது ஒரு பலவீனம் என்று நினைக்கும் என்னை இப்போதெல்லாம் அதிகப்படி கண்ணீர் சிந்த வைக்கும் சூழ்நிலைகள் மீது கோபம் வருகிறது.சாப்பாட்டுப் பொட்டலங்களும் , தண்ணீரும் தாராளமாக விநியோகித்தார்கள். புளி சாதம், வடை தான் பெரும்பாலானோர் பொட்டலங்களில் காணக்கூடியதாக இருந்தது. வெள்ளிக்கிழமையாதலால் நான் எதுவும் சாப்பிடவில்லை. அஷ்வாவுக்கும் இந்த சாப்பாடு வாயில் ஏறாது. அதனால் அவரும் சாப்பிடவில்லை. {ஆக இதை உண்ணாவிரதமாக சேர்க்கலாமா? }

கோஷங்கள் நிறுத்தப்பட்டு , ஈழத்தில் இறந்த போராளிகள் உட்பட ஆயிரக்கணக்கான எம்மவர்களுக்காக மௌன அஞ்சலியைத் தொடர்ந்து தாய் தமிழுக்கு வாழ்த்துப் பாடி நிகழ்சி தொடக்கி வைக்கப்பட்டது. சட்ட ஆலோசகர் திருவாளர் உருத்திரக் குமார் உரையாற்றினார், பின் 4 வயதுக் குழந்தை உரைவீச்சு ஒன்றை முழங்கியது. எந்தவிதமான தடங்கலுமில்லாமல் , உச்சரிப்பு சுத்தமாக அந்தக் குழந்தை பேசிய தமிழ் மெய்சிலிர்க்க வைத்தது, வீடு வந்து நெடு நேரத்துக்கு எனது தம்பி அந்தப் பிள்ளையின் தமிழ் உச்சரிப்பைப் பற்றி தான் சிலாகித்துக் கொண்டிருந்தார்,

ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னான நிகழ்வுகள் முடிந்து மதியம் 2:15 மணியளவில் மாநகர வீதியில் ஊர்வலம் தொடங்கியது. அமெரிக்க , கனடா தேசியக் கொடிகளுடன் தமிழீழத் தேசியக் கொடிகளும் சிவப்பு வர்ணத்தில் தெரிந்த போது , உக்கிரமான நெருப்பு சுவாலைகள் காற்றில் அசைந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. பிரபாகரன் அண்ணாவின் படங்கள் தாங்கிய பதாகைகளும், ஈழத்தின் இன்றைய அவல நிலையை காட்டும் பதாகைகளும் பலநூற்றுக் கணக்கான மக்கள் கைகளில் ஏந்தி வர உணர்வு பூர்வமான கோஷங்களுடன் அதே நேரம் மிகவும் நேர்த்தியான கட்டுப்பாடான முறையில் ஊர்வலம் இருந்தது. நியூயோர்க் மாநகர வீதிகளில் எமது ஊர்வலம் போன போது வழியில் சிங்கள மக்களும் சிலர் சிங்கக் கொடிகளோடு ஏதோ பிரசுரங்களை வெள்ளைக்காரர்களிடம் கையளிக்க முயன்றனர். என்ன நடந்தது என்று விபரமாக தெரியவில்லை.. சில நிமிடங்களில் போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். அதனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது என்று எமது மக்கள் சொன்னார்கள்.

வழியில் மெக்ஸிக்கோ தூதராலயத்தின் முன்னால் சில நிமிடங்கள் நின்று மெக்ஸிக்கோ நாட்டு அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்லிக் கோஷம் போட்டார்கள். அதே போல் ரஷ்யா தூதரகத்துக்கு முன்னாலும் சில நிமிடம் நின்று கோஷம் போடப்பட்டது. ஊர்வலத்தின் முன்னணியில் செல்ல இயலாமல் போனதால் இந்த தூதரங்களில் மகஜர் கொடுக்கப்பட்டவற்றை என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.கடைசியில் ஊர்வலம் நியூயோர் மாநகரின் மிக முக்கிய சந்தியான "டைம்ஸ் ஸ்கொயர் (Time Square) ல் நின்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நார்த் கரோலினாவைச் சேர்ந்த ஜெயராஜ் அவர்களும், சமூக சேவகி எலின் சாண்டலர் (Ellyn Shandler),உட்பட மற்றும் பலர் உரையாற்றினார்கள்.

கோஷங்கள் பலவாறு இருந்தன. விடுதலைப் புலிகள் எமது பிரதிநிதிகள் , தமிழீழத்தை அங்கீகரியுங்கள் என்பன கோஷங்களில் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்டன.
அதிலும் என்னை ஈர்த்தது அந்த வெள்ளைக்கார சமூக சேவகியான எலின் சாண்டலரின் கோஷங்கள்..! சில சமயம் அவர் தமிழீழம் என்று முழங்கியது தமிழ் இல்லம் என்று கேட்டாலும் அதுவும் ஒருவகையில் பொருத்தமானதாகவே தோன்றியது.

"குழந்தைகளைக் கொல்லும் ராஜபக்சாவே உன்னை நினைத்து வெட்கப்படு" என்று ஆங்கிலத்தில் அவர் முழங்கியபோது அவரது குரலில் தொனித்த கோபமும் , குமுறலும் நியூயோர்க் மாநகரின் முக்கிய பிரதான சாலைகளில் எதிரொலித்தது, இனப்படுகொலைக்கான குற்றத்திலிருந்து நீ தப்பிக்கவே முடியாது என்ற அவரது கூற்று ஒருவித அறைகூவலாகவே எனக்கு உணர்த்தியது.

ஈழத்தமிழரின் வாழ்கையில் அன்றாடம் நடக்கும் வன்கொடுமைகளுக்கும் , இழப்புகளுக்கும், சேதங்களுக்கும் ஈடாக யாரும் எதையும் கொடுத்துவிட முடியாது. எம்முடைய இழப்புகளை நாம் தான் சீராக்க வேண்டும். எமக்கெதிரான வன்கொடுமைகளை நாம் தான் தட்டிக் கேட்க வேண்டும். அடிக்க வந்தவனிடம் அடி வாங்கிக் கொண்டு இருந்தோம். அடித்து ஓய்ந்தவன் நாம் வாய்மூடி மௌனிப்பதை பார்த்து நாதியற்றவர்கள் என்ற துணிவில் எம் உடமைகள் மீதும் , குடியிருப்புப் பகுதிகள் மீதும் கை வைத்தான்; உரிமைகளை முடக்கிப் போட்டான்; தரப்படுத்தினான்; ஒடுக்கினான்; இறுதியில் ஒழித்துக் கட்ட நினைத்தான். மௌனித்திருந்த இனம் சாத்வீகமாகப் போராடிப் பார்த்தது; காலில் அடிபட்டு, சிறை சென்றது. சிறையில் சித்திரவதைப் பட்டது; தட்டிக் கேட்க வழி தேடிய இனம் வாக்குகளில் தன் பலம் காட்டியது. அதை தம் பதவிகளுக்காக பலி கொடுக்கத் துணிந்தது அரசியல். அரசியல் என்றால் எல்லா தேசத்திலும் இப்படி தான் போலும். ஆனால் எம் மக்கள் சுரண்டப்பார்த்த அரசியலை சும்மாவிடவில்லை. சுரணை கெட்டு மூலையில் இருந்து 4 வருடத்துக்கு ஒரு தடவை வாக்குப் போட மட்டும் சாவடிக்கு வரிசையில் நிற்க தயாராக இருக்க வில்லை. எமக்கான பிரதிநிதிகள் நாம் இட்ட கட்டளையை நிறைவேற்றாமல் எதிரிக்கு கோவணம் தோய்க்க முற்பட்ட போது நாம் எமது போராட்டப்பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள்ளானோம். நாம் வளர்த்த போராட்டம் தான் இன்று நம்மை இதுவரை உலகத்தின் முன் அடையாளம் காட்டியது. அந்த போராட்டத்தின் இன்னொரு வடிவம் தான் புலம் பெயர்ந்த தமிழர் இப்போது கையில் எடுத்திருப்பது. இந்தப் போராட்டம் இனி ஓயாது. இது எந்தவொரு தனிமனிதனுக்காகவும் நடத்தப்படும் போராட்டமல்ல. ஒட்டு மொத்தமாக நாட்டின் அரசால் அழிக்கப்படும் ஒரு இனத்தைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட போராட்டம். மனிதாபிமானமுள்ள எந்த மானுடமும் இதை புறக்கணிக்கவோ , அல்லது மறுக்கவோ முடியாது.


நன்றி: www.Tamilnet.com (The largest UN & NY Rally) (எலின் சாண்டலர் படம்.)
glitter-graphics.com

3 comments:

A.GOPAL said...

Your article has good ideas
In this time coordinators of USA @Canada has to work sincerly. If Canada coordinator give early notice of this demonstrations over 10000 Tamils can participate. I think next
time all coordinators work very
sincerly
GOPAL TORONTO CANADA

Thamizhan said...

நல்ல பதிவு.உணர்ச்சிகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

ஆனால் உழைப்பவர்களைக் குறை கூறுவதைத் தவிர்க்கவும்.நீங்கள் பொறுப்பேற்று நன்கு உழைத்து எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுகிறேன்.
அயராது உழைத்தவர்களைப் பாராட்டிக் குறைகளை தவிர்க்க அனைவரும் பாடு படவும்.
இணையத்திலே தினம் முக்கியமான தகவல்களை நாமே சென்று பார்த்து நண்பர்களுக்கும் தெரிவிப்போம்.

இணையத்திலே உடனே செய்திகள் போடப் படுகின்றன.
sangam.org
tamilsagainstgenocide
PEARL
thamilmanam
பல இணைய தளங்களிலே போட்டு வந்தார்கள்.பார்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

சுவாதி சுவாமி. said...

வருகைக்கும் , கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரர்களே!!. ஆதங்கத்தைச் சொன்னால் குறை கூறுவதாக அர்த்தம் கற்பிக்கப்படும் மக்களிடம் தவறுகளைச் சுட்டிக் காட்டும் உரிமை கூட இல்லை போல் தெரிகிறது. :(
ஒதுங்கி இருப்பது தான் மேல்..!

சகோதரர் தமிழன் அவர்களின் கருத்துப் பகிர்விற்கு பதில் எழுதத் தொடங்கினால் அது இன்னொரு பதிவு அளவுக்கு விரிந்து கொண்டே போகிறது. பார்க்கலாம் அதையே இன்னொரு பதிவாகவும் பிரசுரிக்கலாம். :)

நன்றி!

அன்புடன்
சுவாதி.