Sunday, August 2, 2009

அன்புள்ள தோழி சிவசோதிக்கு!

எல்லோருக்கும் எனது நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்!!

"Truth and tears clear the way to a deep and lasting friendship."

வாழ்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம்; இந்த ஒரு வாழ்கையிலேயே எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன; எதிர்பாராத திருப்புமுனைகள் வாழ்கையை திசை திருப்பிவிடுகின்றன; புதிது புதிதான அறிமுகங்கள்;சந்திப்புகள், பிரிவுகள், உறவுகள், பிறப்புகள் , மரணங்கள் என்று பலவற்றைப் பார்த்துக் கொண்டு தான் எம்முடைய வாழ்கையின் ஒவ்வொரு மைல் கற்களையும் கடந்து வருகிறோம். இவற்றில் பல விசயங்கள் மறந்து போய் விடுகின்றன, அல்லது முக்கியத்துவமிழந்து விடுகின்றன. சில விசயங்கள் அல்லது மிகச் சிலரே மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றனர். இவற்றில் எத்தனை முயன்றாலும் அழிக்க முடியாத நினைவு பிம்பங்களக மனதில் பதிந்து வேருன்றி விடுவதில் நட்புக்கு இணையாக வேறெதையும் ஒப்பிட முடியாது. அதிலும் பள்ளி நாட்களில் மலர்ந்த நட்புக்கு இணையாக வேறெந்த பிணைப்பும் ஈடாக முடியாது; அந்த நட்பில் கிடைத்த இனிமையும் பசுமையும் கலந்த நினைவுகள் காலகாலத்துக்கும் எம்மைத் தொடர்ந்து வரும் எமது நிழலுக்கொப்பானவை.

பள்ளிப் பருவத்தில் கிடைத்த நட்பை பள்ளி முடிந்து , கல்லூரி நுழைந்து, கல்யாணமாகி, குடும்பஸ்தராகிய பின்னாலும் தொடரமுடியுமெனில் அப்படித் தொடரும் நண்பர்களை தான் மிகுந்த அதிர்ஷட சாலிகள் என்பேன் ; அந்த வகையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிர்ஷ்டம் செய்தவர்கள். கல்யாணத்தின் பின்னும் பள்ளிக்கால நண்பர்களை தொடர்பில் வைத்திருப்பதும், சந்திப்பதும் அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரமான விசயங்கள் ; ஆனால் பெண்களின் வாழ்கையில் திருமணம் என்ற திருப்பு முனையின் போது திசை திருப்பப்பட்ட வாழ்கையின் சூழ்நிலைகளும் , வாழ்வியல் அமைப்புகளும் நட்பு பாராட்டும் சாத்தியக் கூறுகளை அரிதாக்கி அல்லது இல்லாமலே போக்கிவிடுகின்றன.

இதுவரை வேரூன்றியிருந்த பிறந்த வீடு என்ற தோட்டத்திலிருந்து ஒரு பெண் தன்னை முழுவதுமாக பிடுங்கி புகுந்த வீடு என்ற புதிய தோட்டத்தில் பதியம் வைக்கும் அந்தக் கணத்தில் தனது மனதுக்குப் பிடித்த பல விசயங்களை அந்த மனதுக்குள்ளேயே புதைத்துவிட்டு தான் புது இடத்தில் வேரூன்ற முயற்சிக்கிறாள்.அவள் தனக்குள் சமாதிகளாக புதைத்த ஆத்மாவின் துடிப்புகளில் பெரும்பாலும் அவளுடைய தோழமைகளும் அடக்கமாகிவிடுகின்றன.

என்னுடைய பள்ளி நாட்களில் எனக்கும் ஒரு தோழமை கிடைத்தது; அந்த தோழமையை சுமந்த அந்த சுகமான நாட்களின் நினைவுகள் இப்போது ஏங்கிக் கிடக்கும் மனதுக்கு மருந்தா அல்லது அது தான் ரணமா என்று புரியாத புதிராக இருக்கின்றது. அந்த இனிமையான பள்ளி நாட்கள் இந்தக் கணம் வரை மட்டுமல்ல..என் கடைசி நேர சுவாசத்துளி அடங்கும் போது கூட பசுமையாக இருக்கப் போகும் ஒரு இனிமையான தோழமை அது!! அந்தத் தோழமையை எனக்கு தந்தவள் தான் சிவசோதி!

நட்பு என்ற பிணைப்பை என்னால் அவ்வளவு எளிதாக விவரித்து விட முடிவதில்லை. ஆனால் நட்பு என்ற ஒன்றைப் பற்றி எளிமையாக சொல்லச் சொன்னால் நான் உச்சரிப்பது "சிவசோதி "" என்ற வார்த்தையை மட்டும் தான். ஒரு இனிமையான நட்பும் அந்த நட்பைப் பாராட்ட நமது மனமும் உணர்வும் தேர்வு செய்யும் நபரும் மிகவும் விசேசமானவர்கள். அந்த வகையில் என்னுடைய வாழ்கையில் விசேசமானவள் சிவசோதி.

என்னுடைய பள்ளி நாட்களில் எத்தனையோ சிநேகிதிகள் வந்தாலும் சிவசோதிக்கு என் மனதில் கொடுத்திருந்த இடத்தை யாரோடும் என்னால் பகிரமுடியவில்லை.பள்ளியையும் கடந்து எங்கள் வீட்டுக்குள்ளும் நுழைந்து என் குடும்பத்தாரின் மனதிலும் ஒரு பிணைப்பை உருவாக்கிவிட்ட விசேசமான நட்பு அவளுடையது!

சில பல குடும்ப சிக்கல்களை , ரகசியங்களை கூட கலந்து பேசுமளவுக்கு என் அம்மாவை நெருங்கியிருந்தாள்; நான் மட்டுமே அப்பாவுடன் போன இடங்களுக்கு இன்னொரு மகளாக என்னோடு சேர்ந்து அப்பாவுடன் பயணிக்குமளவுக்கு அப்பாவின் அன்புக்கும் பாத்திரமானாள்; என்னைப் போலில்லாமல் சண்டை போடாத ஒரு அக்காவாக என் தம்பிமாரின் இதயங்களிலும் இடம் பிடித்துக் கொண்டாள். அத்தனை லாவகமும் , திறமையும் , உறுதியும் அவளுடைய நட்புக்கு இருந்தது.

ஒரு அன்னிய மனிதர் எமது மனதை நம்மை அறியாமலேயே ஆக்கிரமிப்பதும், உரிமை கொண்டாடுவதும், அக்கறைப்படுவதும், பங்கெடுப்பதும், ஆதரவு காட்டுவதும் ஆதூரமளிப்பதும் என்று சகலவிதமான இதங்களையும் வழங்கும் அந்த உன்னதமான உரிமை அல்லது பிணைப்பை , அந்த வியப்பை நானும் அனுபவித்தேன்... சிவசோதி மூலம்.

அதுவரை வகுப்பில் சேர்ந்து படிக்கும் பக்கத்து இருக்கை மாணவிகளுடனான உரையாடலை மட்டும் தான் சிநேகம் என்று நினைத்திருந்த எனக்கு சிவசோதிக்காக நான் செய்த ஒவ்வொரு உதவிகளும், அவள் எனக்காக மற்றவர்களிடம் காட்டிய வேறுபாடும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது..!

மிகவும் இதமான இனிமையான நட்பை எனக்குள் வியாபிக்க வைத்த அந்த தோழியை நான் இன்று தொலைத்துவிட்டேன். தொலைந்து போன என் நட்பின் முகவரியை கடந்த 26 ஆண்டுகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன். ஈழத்தில் இருக்கும் வரை அவளுடனான தொடர்பு கடித வடிவில் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் இந்தியா வந்த பின்னாலும் அவளுடனான கடிதத் தொடர்பு இருந்தது... இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் வைத்த சில நாட்களிலேயே வெடித்துவிட்ட யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் அவளிடமிருந்து கடைசியாக ஒரு மடல் வந்தது ... "நானும் அங்க வந்துவிடட்டாடி?? இங்க நிலமை மோசமாகும் போல இருக்கு...தொடர்ந்து படிக்கேலாது போல இருக்கு..அங்க வந்து படிப்பை தொடரலாமா எண்டு விபரம் எழுது "

அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் சந்தோசத்தில் வானத்துக்கும் பூமிக்குமாய் துள்ளிக் குதித்தேன்..பழையபடி அவளும் நானும் ஒன்றாக திரியலாம் என்ற கனவுகளுடன் பதில் அனுப்பினேன். ஆனால் அதன் பின் இன்று வரை அவளிடமிருந்து எந்த மடலும் இல்லை...! :(

என்னுடைய மடல்கள் குளத்தில் எறிந்த கற்களாய் போனதோ என்னமோ??? அவளுக்கோ அவளுடைய குடும்பத்தினருக்கோ என்ன நடந்தது என்று இன்று வரை எனக்கு தெரியாது. இத்தனை வருட காலத்தில் அவளைப் பற்றி எனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அவளுடைய ஊர்க்காரர்கள் யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் அவளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.. அமெரிக்கா வரும் விடயமாக மும்பாய் வந்து நின்ற போது அங்கு அவளுடைய ஊர்க்காரர் ஒருவரை சந்தித்தேன். வழமை போல் அவரிடமும் அவளைப் பற்றியும் அவளுடைய குடும்பத்தினர் பற்றியும் விசாரித்தேன். இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவள் இறந்துவிட்டாள் என்று அவர் சொன்ன போது என் இதயமே பிளந்து விட்டது. ஒரு வார காலமாக அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். ஏதோ சூனியத்தில் தள்ளிவிடப்பட்ட மாதிரி இருந்தது. அப்பாவின் மரணத்தின் பின் நான் அதிகமாக அவளுக்காக தான் அழுதேன். அந்த தடவை அமெரிக்கப் பயணம் சரிவரவில்லை; திரும்ப சென்னைக்கே வந்துவிட்டேன்.

அவள் இல்லை; என்னுடைய தோழிக்கு மரணம் என்ற முடிவு நேர்ந்திருக்கிறது; அதுவும் அவலமான துர்மரணம்; அவளுடைய கடைசி நேரத் துடிப்பு எத்தனை வலிமிகுந்ததாக இருந்ததோ? என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு உயிரை விட்டாளோ ? எப்படியெல்லாம் துடித்தாளோ?? என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை; இத்தனை நாளாக இவை எதையும் தெரியும் வாய்ப்புக் கூட இல்லாமல் நான் இருந்திருக்கிறேன் என்ற நினைவு தான் மிகவும் வலித்தது. அவளை இன்னொரு தடவை பார்க்கவே முடியாத விதியை சுமந்து கொண்டு தான் இனிமேல் நான் என் வாழ்நாள் முழுக்க திரிய வேண்டுமென்ற நினைப்பு நாளுக்கு நாள் அதிகமாகச் சுட்டெரிக்கத் தொடங்கியது.

ஒரு ஆறேழு மாத காலம் இந்த தகிப்புடன் தான் உழன்று கொண்டிருந்தேன். அ்ந்த உறுத்தலுடன் தான் அமெரிக்கா வந்தேன்.. வந்த ஓரிரு மாதங்களில் யாழில் எங்களோடு படித்த அருள் நங்கை என்ற சக மாணவியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது. பழைய கால வசந்தங்களையும், பிரிவுகளையும் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த போது அவர் " என்னுடைய தோழி இறக்கவில்லை துப்பாக்கிச் சூட்டில் இறந்தது என் தோழி சிவசோதியின் தங்கை நந்தினி என்றார்.. ! ஆனால் நான் இப்படிக் கேள்விப்பட்டேனே என்றதும் அவரே சந்தேகத்துடன் உதட்டைப் பிதுக்கினார்.. சிவசோதியைப் பற்றிய மேலதிகமான தகவல்களை அருள் நங்கையாலும் எனக்கு தர இயலவில்லை. எனக்கு எப்படி இருந்திருக்கும்??? என் தோழியா அல்லது அவளுடைய ஒரே ஒரு தங்கையா இறந்தது என்று இன்று வரை எனக்கு தெளிவாகத் தெரியாது.

நட்பின் அருகாமையில்லாத வாழ்கை பல தருணங்களில் நரகத்து முள்ளாக என்னை நெருடியிருக்கிறது. இந்த 26 வருடங்களாக நான் அனுபவித்த மகிழ்ச்சியான நிமிடங்கள், துயரத்தில் துடித்த நாட்கள், சிக்கலில் தவித்த தருணங்கள் என்று பல சூழ்நிலைகளில் அந்த நட்பின் அருகாமையை மனம் ஏக்கத்துடன் தேடியிருக்கிறது. அந்த நேரங்களில் தேவைப்பட்டும் கைவரக் கிடைக்காத அந்த ஏக்கம் , இயலாமை மனதளவில் என்னை எத்தனையோ தடவை தளர்வடைய வைத்திருக்கிறது. அந்த வேதனையின் போதெல்லாம் நினைவில் சிவசோதியின் முகம் தான் துருத்திக் கொண்டு வந்து நிற்கிறது.

அவளும் நானும் கவலைகள் எதுவும் தெரியாமல் குருவிகள் போல் திரிந்த அந்த நாட்களில் ஒரு சின்ன விசயத்தைக் கூட அவளிடம் நான் மறைத்ததில்லை; அவளும் அப்படித் தான். ஆனால் இப்போது எத்தனையோ நிகழ்வுகளுடன் என் வாழ்கை பாதையை நான் நகர்த்திக் கொண்டிருக்கிறேன்..அவளிடம் சொல்லவும் பகிரவும் என்னிடம் நிறைய சங்கதிகள் குவிந்து கொண்டிருக்கிறது....அவளிடம் சொல்ல வேண்டியவற்றை அவளிடம் சொல்லாமலே எனது வாழ்கை முடிந்துவிடும் பட்சத்தில் அவளுக்கென்று நான் விட்டுச் செல்லவென்று தான் இந்த கடிதங்களை ஒரு நாள் எழுதத் தொடங்கினேன். அவளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இந்தக் கடிதங்களை தூக்கி அவளிடம் கொடுத்துவிட்டு நான் ஆசுவாசமாக மூச்சு விடுவேன்.. இல்லையென்றால் அவள் தன்னந்தனியாக இருந்து அவளுக்காக நான் சேகரித்த நினைவுகளை படிக்கட்டும்... எப்படியாயினும் அவளுடைய கையில் அவளிடம் நான் பகிர நினைத்தவை போய் சேர வேண்டும் என்ற வெறியில் என் மனதில் அவளிடம் சொல்ல நினைத்தவை எல்லாவற்றையும் அவ்வப்போது கடித வடிவில் எழுதத் தொடங்கினேன்.

இந்த நிமிடம் வரை என்னுயிர் தோழி உயிருடன் இருக்கிறாளா அல்லது இல்லையா என்ற தகவல் கூடத் தெரியாமல் , அவள் எங்காவது உயிருடன் இருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன், அவளுக்கு எதுவும் நேர்ந்திருக்காது, அவள் உயிருடன் தான் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் , என்றைக்காவது அவளை சந்திக்காமலா போய்விடப் போகிறேன் என்ற எதிர்பார்ப்புடன் .....நான் இந்த கடிதங்களை அவளுக்காக அவளை தேடி , எழுதத் தொடங்கினேன். அந்தக் கடிதங்களை வாரத்துக் ஒன்றாக இங்கே பதியப் போகிறேன்.

அவற்றை நான் இங்கு தருவது கூட அவளோ அல்லது அவளைத் தெரிந்த எவரோ படிக்க மாட்டார்களா , படித்துவிட்டு என்னை தொடர்பு கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கத்தில் தான் .....

உங்களில் யாராவது வழியில் ஒரு அழகான ஈழத்துப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தால், அவளுடைய பெயரைக் கேட்க முடிந்தால், அந்தப் பெயர் சிவசோதி என்று இருந்தால்....தயவு செய்து அவளுடைய சிநேகிதி சாந்தகௌரி இன்னமும் அவளைத் தேடிக் கொண்டிருப்பதாக சொல்லுங்கள்... ஒரு தொலைந்து போன நட்புக்கு மீண்டும் உயிரூட்டிய புண்ணியம் உங்களுக்குக் கிடைக்க கடவுள் அருள் செய்வாராக!

(தொடரும்)
மீண்டும் எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!








2 comments:

துபாய் ராஜா said...

நெகிழ்வானதொரு பதிவு.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

சினேகிதி said...

சுவாதி அக்கா எனக்கொருவரைத் தெரியும் உங்கள் நண்பியின் பெயரில். தொழில்முறை ரீதியில்தான் தெரியும் அவர் எந்த ஊர் மற்றும் அவருடைய தங்கையின் பெயர் போன்றவை தெரியாது. அடுத்த வியாழன் அவரைச் சந்திப்பேன் முடிந்தால் விசாரித்துப்பார்க்கிறேன். நான் நினைக்கிறேன் அவருக்கொரு 35-40 வயதிருக்குமென்று.