Thursday, January 3, 2008

புத்தாண்டு சங்கல்பம்!

திடீரென்று முந்த நாள் ஷைலஜா எனக்கு தனி மடலில் தன் வலைப்பூவைப் படிக்கச் சொல்லியிருந்தார். சபதத்தில் உங்களையும் இழுத்திருக்கிறேன் சுவாதி என்று ஒரு புரியாத புதிரை வெடி குண்டு மாதிரி அனுப்பியிருந்தார். எனக்கு புரியவில்லை. அவருடைய வலைப்பூவுக்குப் போய் படித்தேன்..
அங்கே அவர் தன்னுடைய இந்த புதிய வருட சங்கல்பம் எழுதியிருந்தார்.அதை தான் சபதம் என்று எழுதியிருந்தார். அதே போல் நான் உட்பட நாலு பேருக்கு அழைப்பு விடுத்து, எங்களுடைய வலைப்பூவில் எங்களது புத்தாண்டு சங்கல்ப்பங்களை எழுதச் சொல்லியது மட்டுமல்ல நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குத் தெரிந்த நாலு பேரை அழைத்து அவர்களையும் எழுத வைக்க வேண்டுமாம். ஆஹா.. என்னடா இது ..என்று நினைத்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. நான் எழுதுவதைவிட இன்னும் நாலு பேரை வம்பில் மாட்டிவிடாலாம் என்ற சுவாரஸ்யம் தான் அதிகம். ஆனால் யார் அந்த 4 பேர் என்பது அடுத்த பிரச்சினை. வழமையாக வலைப்பூ எழுதுபவர்கள் என்றால் நிலாரசிகன், கென், விழியன் என்று என்னுடைய நண்பர்களே நிறையப் பேர் இருக்கிறார்கள். இவர்களை வந்து அவரவர் வலைப்பூவில் எழுதச் சொல்வதில் என்ன புதுமை. அதுவும் நிலாரசிகன் ஈழப் பிரச்சனை, மலேசியப் பிரச்சனை , எதியோப்பியா பிரச்சினை எல்லாம் தீராமல் புத்தாண்டு வாழ்த்தே சொல்லமாட்டேன் என்று வேறு கவிதை எழுதி விட்டார். அவரை வந்து புதுவருட சங்கல்பம் எழுதச் சொல்லி அழைப்பு விட முடியுமா என்ன? கென் , விழியன் வாரம் ஒரு கவிதையும் புகைப்படமுமாய் பதிவுகள் போட்டு அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை அழைத்தால் என்னைப் பார்த்து தங்களுக்குள்ளேயே சிரிக்க மாட்டார்களா? :):)... ஒருவேளை இதற்காக தான் ஷைலஜா இப்படி ஒரு ஐடியா பண்ணினாங்களோ என்னமோ...?

இப்போது அந்த நாலு பேருக்கு யாரை தேர்வு செய்வது என்பது அடுத்த ஒரு பிரச்சினை. தேகியை மாட்டிவிட்டால் ரொம்ப ஜோராக இருக்கும்... ஆனால் தேகியிடம் வலைப்பு இருக்கிறதா என்பது முதல் கேள்வி; அதைப் பற்றி ஏதாவது ஞானம் அவரிடம் இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி; எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு இந்த வருடம் வலைப்பூவில் வந்து எழுதுவதற்கு நேரம் இருக்குமோ என்னமோ? ஏன் என்றால் அவர் இப்போது தான் புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதனால் அவரை இழுப்பது சரியல்ல. மணிவண்ணனை அழைக்கலாம். பாண்டித்துரையையும் அழைக்கலாம். மற்றது கல்பகம். நாலாவதாக கீதா சாம்பசிவம் அல்லது சீதாம்மா அல்லது விசாலம்மா என்று இருக்கிறார்கள். பார்க்கலாம்.

அடுத்தது புத்தாண்டு சங்கல்பம்.
எனக்குத் தெரிந்து புதுவருட சபதம் எடுத்த எவரும் அந்த சபதத்தை சாதித்து பார்க்கவில்லை இது வரை! அநேகமானோர் புத்தாண்டு சபதங்களை ஒரு சில நாட்களிலேயே மறந்துவிட்டதை கண்கூடாகப் பார்த்திருக்கின்றேன். உண்மையைச் சொல்லப் போனால் நான் புதுவருட சபதம் எதுவும் இத்தனை காலத்தில் ஒரு முறை கூட எடுத்ததில்லை. என்ன காரணமோ தெரியாது. எதையாவது நினைத்தால் அதை உடனடியாக சாதித்துவிடுவதாலோ என்னமோ ஒரு வருடம் முழுவதும் செலவு செய்து எதையும் சாதிக்கும் சங்கல்பம் எனக்கு இது வரை தேவையில்லாமல் இருந்தது. ஆனால் ஷைலஜாவின் அழைப்புக்காகவாவது புதுவருட சபதம் எடுக்க வேண்டும். :)

ஷைலஜா வாரத்துக்கு ஒரு பதிவு வலைப்பூவில் எழுதப் போவதாய் சபதம் எடுத்து தன்னுடைய வலைப்பூவை தூசு தட்டி மறு வீடு வந்திருக்கிறார். பார்க்கலாம்..அப்படி வாரம் ஒரு பதிவு அவர் எழுதினால் அருமையான இலக்கிய சுவை எமக்கும் கிடைக்கும். ஆனால் எனக்கு வாரம் ஒரு பதிவு சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. முன்பெல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்த போதும், சென்னையில் இருந்த போதும் நினைத்த நேரமெல்லாம் கதை கவிதை என்று எல்லாம் எழுதிக் கொண்டே இருந்தேன். அப்போதெல்லாம் எழுதுவதை தவிர எனக்கு எதுவுமே தெரியாதே..?! அப்பா இறந்த ஆண்டு தினக்குறிப்பில் எனக்கு எதுவுமே எழுத தோன்றவில்லை .. அப்படியே இடிந்து போயிருந்த போது என் மைத்துனன் சிவக்குமார் என்னை அந்த சோகத்தில் இருந்து மீட்க மேற்கொண்ட ஒரு முயற்சியை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்... :) என்னோடு சவால் விட்டான்," உன்னால் ஒரு நாளைக்கு ஒரு கவிதையாவது எழுத முடியுமா" என்று. சவால் என்றால் கண்மூடித்தனமாக ஒப்புக் கொண்டு விடுவேனே? அதுவும் அப்போது சிவக்குமாருடன் எனக்கு மனதுக்குள் இலக்கிய சம்மந்தமான விசயங்களில் ஒரு போட்டி இருந்தது. இந்தியாவுக்கு வரும் போது கவிதை என்றால் என்னவென்று தெரியாமல் வந்தவன். என்னுடைய கவிதைக் கொப்பிகளை படித்துவிட்டு எப்படி உன்னால் இப்படி எழுத முடிகிறது என்று அவன் ஆச்சரியப்படுவதை பார்த்து என்னைப் பற்றி எனக்குள் மற்றவர்களுக்கு காட்டிக் கொள்ளாத கர்வமிருந்தது. என்னைப் பார்த்துக் கவிதை எழுதப் பழகியவன் ஒரு காலகட்டத்தில் என்னைவிட அற்புதமாக எழுதத் தொடங்கியதை என்னால் நம்ப முடியவில்லை. அவனுடைய வாசிக்கும் ஆர்வம் அவனை ஒரு தேர்ந்த கவிஞனாக்கியிருந்ததை புரிந்து கொண்டேன். கம்யூனிஸத்திலிருந்து மனோதத்துவம் வரை படித்தான். வாரத்தில் பெரும்பாலும் கன்னிமாரா நூலகத்திலேயே இருப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தன்னை தானே சிற்பமாக்கிக் கொண்டவன் அவன். அவனுடைய மற்ற பழக்க வழக்கங்கள் , நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காவிட்டாலும் இந்த அவனுடைய திறமை மலைக்க வைத்தது. கொஞ்சம் போட்டியாகவும் நினைக்க வைத்தது. அதனாலேயே அவன் போட்ட சவாலை ஏற்று கவிதையும் எழுத வைத்தது. ஒரு கறுப்பு நிற தினக்குறிப்பு புத்தகத்தின் ஒவ்வொரு திகதியிலும் ஒவ்வொரு கவிதையாக எழுதினேன். அமெரிக்காவுக்கு வரும் போது எதுவுமே கொண்டுவர முடியாமல் போய்விட்டதால் அந்த கறுப்பு டயரியும் அங்கேயே தங்கிவிட்டது. இப்போது நினைக்க மிகவும் கவலையாக இருக்கிறது. அந்த டயரி இருந்தால் இப்போது தினமும் ஒரு கவிதை எழுதுவேன் என்று ஒரு சபதம் போட்டு விட்டு தினமும் ஒவ்வொரு கவிதையாக ஒரு வருடத்துக்கு பதிவு போடலாமே என்று தோன்றுகிறது. :)

இந்த புலம் பெயர்வு ஊரை மட்டுமல்ல எத்தனையோ நல்ல நல்ல விசயங்களை இழக்க வைத்திருக்கிறது. இந்தப் புலம் பெயர்வால் எவ்வளவோ எனக்குள் முடங்கிப் போய்விட்டது. பழையபடி எழுத நினைத்தாலும் முடியவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை. சோம்பேறியாகிவிட்டேனா அல்லது எழுதும் திறமை என்னைவிட்டு போய்விட்டதா? கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான் என்று தோன்றுகிறது.

இப்போது ஷைலஜாவுக்காக - ஷைலஜாவின் அழைப்புக்காக நான் கட்டாயம் புத்தாண்டு சங்கல்பம் எழுதியாக வேண்டும். சும்மா முகத்துக்காக எழுதுவது எனக்குப் பிடிக்கவில்லை. எழுதினால் அதை ஒரு சபதமாக எடுத்து செயல்படுத்த வேண்டும். அது தான் ஷைலஜாவுக்கு நான் கொடுக்கும் மரியாதை. :)
என்ன சபதம் எடுக்கலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பு குழுமத்தில் வைக்கலாம் என்று தோன்றுகிறது. :):)

சரி எப்படியாவது கஷ்டப்பட்டு ஷைலஜா மாதிரி நானும் வாரம் ஒரு பதிவு போடுவது என்று சபதம் எடுத்தால் தான் என்ன என்று தோன்றுகிறது. பரிணாமம் என்ற ஒரு வலைப்பூவை தூசு தட்டலாம் என்று ஒரு எண்ணம் கொஞ்ச நாட்களாக இருக்கிறது. இரண்டு கட்டுரைகளோடு அது அப்படியே முடங்க்கிடக்கிறது. அந்த வலைப் பூவை கட்டுரைகள் பதிவுக்காக வைத்திருக்கிறேன். வாரம் ஒரு கட்டுரை எழுதலாமா என்று யோசிக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கட்டுரைக்கும் கரு கிடைக்குமா என்பது அடுத்த கவலை. என்றாலும் பரவாயில்லை பரிணாமம் வலைப்பூவில் வாரம் ஒரு பதிவு போடுவது என்பது முதல் சபதம்.

இரண்டாவது ....கல்யாணத்துக்கு முன் இருந்த எடை வெறும் 100 இறாத்தல் அதாவது 50 கிலோ. ஆனால் இப்போது 125 இறாத்தல். கிட்டத்தட்ட 62 1/2 கிலோ. பழையபடி 50 KG தாஜ்மஹால் ஆகவேண்டும் என்று ஒரு பேராசை எனக்குள் இல்லாமல் இல்லை. 2006ம் வருடம் வை.எம்.சி.ஏ யில் ஜிம், நீச்சல் என்று போய்க் கொண்டிருந்தேன். இப்போது அதெல்லாம் கிரமமாக செல்ல முடியவில்லை. இந்த வருடம் எப்படியாவது எனது உடல் எடையைக் குறைக்க வேண்டும். அட்லீஸ் 10 இறாத்தலாவது குறைக்க வேண்டும்.

மூன்றாவது... எப்படியாவது என்னுடைய குடியுரிமை சம்மந்தப்பட்ட விசயங்களை கவனிக்க வேண்டும். இன்னும் எத்தனை வருடத்துக்கு இந்த நாட்டிலேயே முடங்கிக் கிடப்பது? ஒரு மன ஆறுதலுக்காகவாது பக்கத்தில் இருக்கும் கனடாவுக்கு, 10 மணி நேர பயணத்தில் போய் சந்திக்கும் தூரத்தில் இருக்கும் கனடாவுக்கு போய் சொந்த பந்தங்களை பார்க்க முடியாமல் ஒரு சிறைத் தடை போன்ற வாழ்வு. கனடாவிலும்,ஜேர்மனியில்லிருக்கும் பெரியம்மா, பெரியப்பாவின் மூப்பும் அவர்களது உடல் நலக்கேடும் சமயத்தில் நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. அவர்களைப் பார்த்து 23 வருடங்களாகிறது. அவர்களைப் பார்ப்பதற்காகவாது எனது இந்தப் பிரச்சினையை முடிக்க வேண்டும்.

நாலாவது புதிய கலிதொகை கவிதைத் தொகுப்பு இரண்டாம் பாகம், அன்புள்ள மகன் அஷ்வத்தாமாவுக்கு அம்மா எழுதுவது என்னவென்றால் ஆகிய இரண்டு படைப்புகளும் பாதியிலேயே நிற்கின்றன. அவற்றை மீண்டும் எழுதத் தொடங்க வேண்டும். அத்துடன் புதிதாக அன்புள்ள தோழி சிவசோதிக்கு ..என்ற கடிதத் தொடரையும் எழுதத் தொடங்கியிருக்கிறேன். அதையும் தொடர்ந்து எழுத வேண்டும்.

ஐந்தாவது என் பிள்ளைகள் இரண்டு பேருக்கும் தமிழ் எழுதப் பழக்க வேண்டும். நன்றாக தமிழ் பேசுகிறார்கள். அ, ஆ எல்லாம் சொல்கிறார்கள். இனி எழுதப் பழக வேண்டும். என்னுடைய எந்த சபதத்தை செய்கிறேனோ இல்லையோ இதை கட்டாயம் செய்தாக வேண்டும்.

ஆறாவது என்னுடைய குழுமம். குழுமத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அல்லது அமைதிப் படையிலிருக்கும் உறுப்பினர்களை தட்டி எழுப்ப வேண்டும்; எழுத தூண்ட வேண்டும்; நல்ல நல்ல தலைப்புகளில் இழைகள் தயாரிக்க வேண்டும். யாராவது இதற்கு நல்ல ஐடியா தரலாமே விரும்பினால். ? எப்படி எழுதாத உறுப்பினர்களை எழுத வைப்பது அல்லது புதிய இழைகளுக்கான கருத்துக் கரு என்பவை பற்றி யாராவது ஐடியா தாருங்களேன்?????? வரும் வைகாசி மாதம் (மே மாதம் 1ம் திகதி) குழுமம் தொடங்கி 1 வருடம் ஆகிறது. வருடப் பூர்த்திக்கு போட்டிகள் அறிவிப்பதா வேண்டாமா என்று ஒரே குழப்பம். போட்டிகள் என்று தொடங்கினால் அதற்கு நடுவர், பரிசுகள் என்று பலவிதமான பொறுப்புகளை நான் சமாளிக்க வேண்டும். இதையெல்லாம் எனது புத்தாண்டு சபதத்தில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.:)

ஆக... இவ்வளவு தான் என்னுடைய புத்தாண்டு சங்கல்ப்பம்.

பார்ப்போம் இவற்றில் எவை எவை 100% என்னால் சாதிக்க முடிகிறது என்று.

இப்போது நான் தேர்ந்தெடுத்திருக்கும் நான்கு பேர்.....

1- கீதா சாம்பசிவம்.
2- கல்பகம்.
3- விசாலம் அம்மா.
4- மணிவண்ணன் (எ) கரிகாலன்.

வாருங்கள்..உங்கள் வலைப்பூவில் வாரம் ஒரு பதிவென்ற புத்தாண்டு சங்கல்ப்பம் எடுக்கிறீர்களோ என்னமோ....ஆனால் ஏற்கனவே உங்களிடம் உங்களுக்கென்று ஒரு சபதம் இருக்குமே.....? அதை வந்து எழுதுங்கள். இன்னும் 4 பேரையும் அழையுங்கள் உங்கள் பங்குக்கு!

வர்ட்டா? ;)

7 comments:

Geetha Sambasivam said...

"இந்த புலம் பெயர்வு ஊரை மட்டுமல்ல எத்தனையோ நல்ல நல்ல விசயங்களை இழக்க வைத்திருக்கிறது. இந்தப் புலம் பெயர்வால் எவ்வளவோ எனக்குள் முடங்கிப் போய்விட்டது. பழையபடி எழுத நினைத்தாலும் முடியவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை. சோம்பேறியாகிவிட்டேனா அல்லது எழுதும் திறமை என்னைவிட்டு போய்விட்டதா? கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான் என்று தோன்றுகிறது. "

படிக்கும்போதே நெஞ்சம் கனத்துப் போய்விடுகிற ஒன்றை சர்வ சாதாரணமாய்ச் சொல்லி இருக்கும் பாங்கைப் பார்த்து அதிசயிக்கிறேன்.

சுவாதி சுவாமி. said...

என்ன செய்வது கீதா? அதை எழுதும் போது மனம் மிகவும் கனத்துத் தான் போகிறது. ஆனால் அது தான் என்னுடைய யதார்த்தம். ஒப்புக் கொண்டு தானாக வேண்டும். :)

ஷைலஜா said...

ஏதாவது நமக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டால் அதைநிறைவேற்ற நினைப்போமே அதுவே முயற்சிதான் சுவாதி....நல்ல எழுத்து உங்களுது வாழ்த்துகள்!
ஷைலஜா

Geetha Sambasivam said...

எழுதி விட்டேன் சுவாதி, ஆனால் சபதம் எல்லாம் எடுக்கவில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள், மற்றபடி என் பங்கிற்கு நாலு பேரை அழைத்தும் விட்டேன்.

சுவாதி சுவாமி. said...

நன்றி கீதா!

பாருங்களேன் புத்தாண்டு சங்கல்பமே இதுவரை எடுக்காமல் இருந்த என்னை ஷைலஜா 6 சபதம் எடுக்க வைத்துவிட்டார். :) சந்தோஷமாகத் தான் இருக்கிறது.. ஆனால் முடியுமா என்பது தான் கேள்விக் குறி! :)
அன்புடன்
சுவாதி

manjoorraja said...

ஸ்வாதி தூங்கிக்கொண்டிருந்த உன் திறமையை சைலஜா தட்டி எழுப்பி விட்டார்கள். அழகாக எழுதுகிறாய்.
தொடரட்டும்.

பின்குறிப்பு: கீதா மேடத்தை நானும் கூப்பிட்டிருக்கிறேன்.
பரவாயில்லை.

சுவாதி சுவாமி. said...

ஹைய்யா... மஞ்சூர் அண்ணா வந்து வாசிச்சிருக்கீங்களா? நன்றி ..அண்ணா!
நிச்சயமாய்.. தொடர்ந்து எழுத முயற்சிப்பேன். எனக்கும் ஆசை தான் நிறைய எழுத வேண்டுமென்று... பதிவில் குறிப்பிட்டது போல் என்னுடைய எழுத்துத் திறமை மெல்ல மெல்ல மளுங்கிக் கொண்டு வருகிறதோ என்று கவலையாக இருக்கிறது. :-(

அன்புடன்
சுவாதி