Thursday, January 24, 2008

எதிர்பாராதது (சிறுகதை)

உண்மையில் இன்று ராமநாதன் மிகவும் சந்தோஷமாக இருந்தார்.
அவருடைய மகள் கவிதாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்பதில்...
காலம் தான் எத்தனை வேகமானது? வருடங்கள் என்ன இராட்சத இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறக்கின்றனவா என்று மலைப்பாக இருந்தது ஒரு புறம்...என்னமோ நேற்றுத் தான் தனக்கே கல்யாணம் ஆனது போல் நினைவுகள் துருப்பிடிக்காமல் இன்னமும் பசுமையாக இருக்கிறது. ஆனால் அவருடைய மகளுக்கே இருபத்தி நாலு வயதாகிவிட்டது என்று உறைத்த போது தான் அவர் தனக்கான அடுத்திருக்கும் கடமையை உணர்ந்தார். அவளுக்குக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவளுக்கு மூத்தவன் ஒரு பையன். பட்டதாரி. நல்ல உத்தியோகம்; கை நிறைய சம்பாதிக்கின்றான். மகளின் கல்யாணம் முடிந்ததும் மகனுக்கும் நல்ல இடத்தில் பெண் தேட வேண்டும். மிஞ்சியிருக்கும் இந்த இரண்டு கடமைகளையும் முடித்துவிட்டால் அக்கடா என்று அவரும் அவர் மனைவியும் நிம்மதியாக இருக்கலாம்.

பிள்ளைகளைப் பெற்று , அவர்களை பட்டதாரிகளாக்கி , நல்ல வேலையில் சேர்த்து..இதோ அடுத்த கட்டக் கடமைக்கும் அவரை தயாராக்கிவிட்டார்..கொஞ்சம் களைப்பாகத் தான் இருக்கிறது மனதில்..காலத்தின் வேகத்துடன் ஈடு கொடுத்து ஓடி ஓடி....இன்னும் கொஞ்ச நாள் தான் என்று மனதுக்குள் சமாதானப்படுத்தி ...வாழ்கை என்னவோ யாருக்கும் காத்திராத காலத்துடன் சிநேகமாய் இருக்கும் முயற்சியுடன்...ஓடிக் கொண்டு தான் இருக்கின்றது. முதலில் அவர் தேடிப் பிடித்தது நல்ல ஒரு கல்யாணத் தரகரைத் தான். தரகரும் நல்ல இடமாகத் தான் காட்டியிருக்கிறார். மாப்பிள்ளை பையன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான். அழகாகவும் இருந்தான்.பிச்சல் பிடுங்கல் இல்லாத குடும்பம். மாப்பிள்ளையின் அப்பா அரசாங்க வேலையில் இருக்கிறார். அம்மா கல்லூரிப் பேராசிரியையாம். மாப்பிள்ளைக்கு ஒரு அக்கா. நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறார்களாம்.இருவருமே கை நிறைய சம்மாப்திக்கிறார்களாம். விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் குடும்பம் மிகவும் கௌரவமான குடும்பமாகவே தெரிந்தது. எல்லோரும் அவர்களைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். எல்லாம் சுமுகமாக நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் மகளின் படத்தைப் பார்த்து திருப்தி என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் நேரில் பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று மாப்பிள்ளை சொன்னதால் இன்று பெண் பார்க்கும் படலம் ஏற்பாடாகியிருந்தது. இனி கடவுள் என்ன எழுதியிருக்கிறானோ அப்படித் தான் விதி நடத்தும் என்று அவரும் பெண்பார்க்கும் படலத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

வீட்டில் இன்று பெண்ணை மாப்பிள்ளை பார்க்க வரப் போகிறார்கள் என்பதில் கொஞ்சம் பர பரப்பு தெரிந்தது. கவிதாவுக்கும் இது முதல் அனுபவம். மாப்பிள்ளை எப்படி இருப்பார் என்ற கேள்விக் குறி மட்டுமே மனதுக்குள் விஸ்வரூபமாக இருந்ததில் வேறு எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை. ராமநாதன் இந்த வரனில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தாலும் இது முதல் வரன். சில நேரம் கை கூடலாம். சில நேரம் தட்டிப் போகலாம் எதையும் எதிர்கொள்ளும் சக்திக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்தார் மனதுக்குள். அவருடைய அக்கா மகள் கவிதாவை விட நாலு வயது பெரியவள். இதுவரை பதினெட்டு வரன்கள் வந்து பெண் பார்த்திருப்பார்கள். சொல்லும்படி பெண்ணிடம் எந்தக் குறைகளும் இல்லை ..ஆனாலும் அவளுடைய கல்யாணம் பெண் பார்க்கும் படலத்துடனேயே நிற்கிறது. இப்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் யாராவது அவளை பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் அவளுக்கு கோபம் கோபமாக வருகிறது. அப்படி ஒரு நிலை தன் மகள் கவிதாவுக்கு வந்துவிடக் கூடாது என்று ராமநாதன் கவலைப்பட்டார். இந்த வரனே பொருந்திவிட்டால் மிகவும் நல்லது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

அவர் மனைவி மரகதம் தான் எல்லா வேலைகளையும் சுழன்று சுழன்று செய்து கொண்டிருந்தாள். பலகாரம், பட்சணம் என்று சமையலறை வேலையிலிருந்து பெண்ணுக்கு சேலை கட்டி அலங்காரம் செய்வது வரை எல்லாவற்றையும் அவளே கவனித்துக் கொண்டாள். மரகதம் ஒரு வேலையை செய்யத் தொடங்கினாள் என்றால் அவர் அதை திரும்பி வந்து சரியாக இருக்கிறதா என்று பரிசீலிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவ்வளவு நேர்த்தியாக எல்லாவற்றையும் செய்வதில் மரகதத்தை மிஞ்ச யாருமில்லை என்பது அவரது நம்பிக்கை.

அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய வாழ்கையில் எந்தவொரு தடங்கலும், இடறுமில்லாமல் எல்லாமும் சுமுகமாகவே முடிந்ததில். கூடவே சந்தோஷமாயும் இருந்தது. அவர் ஒன்றும் இலட்சாதிபதியோ கோடிஸ்வரனாயோ இருக்கவில்லை. ஆனாலும் அவர் வசதியானவராக இருந்தார்.. தன் மகனையும் மகளையும் படிக்க வைத்து நல்ல நிலைக்கு உயர்த்தி , வேலையிலும் இருத்தி இருக்கிறார். இதோ பெண்ணின் கல்யாணம் வரை வந்தாகிவிட்டது. கல்யாணச் செலவுக்குக் கூட யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. அவள் பிறந்த நாளிலிருந்தே அவளுக்காக சேமிக்கத் தொடங்கியிருந்தார். இத்தனையும் சாத்தியமாகும் இந்த நேரத்தில் அவரால் தன் மனைவியை பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. என்ன ஒரு பெண் அவள்? இது வரை அவள் அவரிடம் முகம் சுருங்கி பார்த்திருப்பாரா? ம்ஹூம்.. எதற்குமே ஆசைப்படாத் ஒரு பெண் இருப்பாளா என்று யாராவது கேட்டால் அவர் உடனே தன் மனைவியை தான் நினைத்துக் கொள்வார்.அது வேண்டும் இது வேண்டும் என்று இதுவரை ..கல்யாணமாகி இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட அவள் அவரிடம் கேட்டதேயில்லை என்று சொனால் யாராவது நம்புவார்களா என்ன? ஆனால் அது தான் உண்மை.

இத்தனை நாளில் ஒரு முழம் பூ தன்னும் தன்னிடம் அவள் கேட்டதில்லை. எதுவாயினும் அவராக பார்த்து வாங்கிக் கொடுத்தால் தான் உண்டு. அவர் என்ன வாங்கிக் கொடுத்தாலும் மௌனமாக ஏற்றுக் கொள்ளும் ஒரே ஒரு ஆத்மா அவளாகத் தானிருக்கும் அந்த வீட்டில். அதுமட்டுமல்ல அவர் என்ன நினைக்கிறார் அல்லது என்ன எதிர்பார்க்கிறார் என்று அடுத்த நொடியில் புரிந்து அவருடைய விருப்பத்துக்கேற்றவாறு நடப்பதில் அவளைக் கேட்டுத் தான். அவருடைய உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொண்டவள் அவள். அதனாலேயே பாதிப் பிரச்சனைகள் அவருக்கு இல்லாமலேயே போய்விட்டன எனலாம். வீட்டுக் கவலையே அவருக்கு வராதபடி அவள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டதால் அவரால் மற்றைய விஷயங்களில் வெற்றி பெறுவது எளிதாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். அவளுடைய புரிந்துணர்வினாலும், சேவையினாலும், ஒத்துழைப்பினாலும் தான் அவரால் வாழ்கையைக் குழப்பமில்லாமல் ,சீராக , திட்டமிட்டு நடத்த முடிந்தது என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது.

நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டக்காரன் என்று அடிக்கடி நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வார். மகளின் கல்யாணமும் நல்லபடியாக நடந்து விட்டால் போதும் என்பதே இப்போதைக்கு அவருக்கிருந்த ஒரே ஒரு கவலை , பொறுப்பு எனலாம்.

பரபரவென்று மரகதம் எல்லா வேலையையும் செய்து கொண்டே மகளுக்கும் இன்ஸ்ரக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தாள். "ரொம்ப மேக்கப் போடாதேம்மா... இயல்பா இரு. அந்த முத்து ஜிமிக்கையை போட்டுக்கோ..அது உனக்கு அழகா இருக்கும். நீ கட்டியிருக்கிற சேலைக்கும் மாட்சிங்கா இருக்கும். தலையை வாரி கொஞ்சம் லூஸா பின்னிக்கோம்மா.. அளவா பூ வைச்சுக்கோ.. ஸ்டிக்கர் பொட்டெல்லாம் வேண்டாம் இன்னிக்கு..அழகா சாந்துப் பொட்டு வைச்சுக்கோ. ..."

அப்பப்போ அம்மா வந்து அவளை பார்த்து பார்த்து சரி செய்து கொண்டிருக்க கவிதாவுக்கு சிரிப்பு வந்தது. அத்தை பொண்ணு ஹரிணிக்கும் இப்படித் தான் ஒவ்வொரு மாப்பிள்ளையும் அவளைப் பார்க்க வரும் போதெல்லாம் அத்தையும் ஒவ்வொண்ணா பார்த்து பார்த்து செய்வாங்க.. என்ன புண்னியம் ஹரிணிக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே.."என்று நினைத்த போது ஹரிணிக்காக கவலைப்பட்ட மறு கணமே.."இன்னிக்கு வர்ர மாப்பிள்ளைக்கு என்னைப் பிடிக்காமல் போனாலோ அல்லது எதோ ஒரு காரணத்தினாலோ இந்த வரன் தட்டிப் போனால் ஹரிணி மாதிரியே நம்ம நிலைமையும் ஆயிடுமோ ன்னு பயம் தொற்றியது.

மரகதத்துக்கும் அந்தக் கவலை இல்லாமல் இல்லை. ஆனாலும் அவளுடைய மனநிலையில் கவிதாவுக்கும் மனப்பூர்வமாக மாப்பிள்ளையைப் பிடிக்க வேண்டும் . அதற்கும் மேலாக இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமே என்றும் தோன்றியது.
ஒரு மாதிரி எல்லா வேலைகளும் முடிந்து சகல ஆயத்தங்களையும் திரும்பவும் சரி பார்த்துக் கொண்டு அவள் குளித்து , உடை மாற்றி வரவும் கூடத்திலிருந்த ராமநாதன் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க போல இருக்கு என்று சொல்லிக் கொண்டு அவர்களை வரவேற்க வாசலுக்கு போகவும் சரியாக இருந்தது. மரகதமும் அவர் பின்னால் போய் நின்று மாப்பிள்ளை வீட்டாரை கை கூப்பி வணக்கம் தெரிவித்து கூட்டி வந்து கூடத்தில் இருத்தினாள். மாப்பிள்ளை தன் அப்பா , அம்மா, அக்கா, அக்கா கணவர், குழந்தை என்று குடும்ப சகிதமாக கூடவே தனது நண்பன் ஒருவனுடனும் வந்திருந்தான். படத்தில் பார்த்ததைவிட நேரில் இன்னமும் சிவப்பாகவும் களையாகவும் இருந்தான். பார்க்க இலட்சணமாகத் தான் இருக்கிறாஆன் பையன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் ராமநாதன்.

மரகதம் பரிமாறிய பலகாரங்களைக் கொறித்தபடி சம்பிரதாயமாக சென்னை மழையைப் பற்றியும், பங்கு சந்தையைப் பற்றியும் தொடங்கிய ஆண்களின் சம்பாஷணை மெல்ல குடும்ப அங்கத்தினர்கள், வேலை போன்ற விசாரிப்புகளை தடவி குடும்பப் பெருமை, அவரவர் எதிர்பார்ப்பு என்று தெளிவுபடுத்தலில் திருப்தியாக முடிந்ததும் பெண்பார்க்கும் படலத்தின் அடுத்த கட்டமாக மரகதம் கவிதாவின் கையில் காப்பி டம்ளார்களை ஒரு தட்டத்தில் வைத்து கொடுத்துவிட்டாள். "மாப்பிள்ளையை நல்லா பார்த்துக்கோ... உடனேயே முடிவு எதுவும் செஞ்சுடாதே.. உட்கார்ந்து நிதானமா யோசிக்கலாம் அப்புறமா... கல்யாணம்னா மாப்பிள்ளையைப் பார்த்து பிடிச்சா மட்டும் போதும்னு நினைக்காதே.....அதைவிட நிறைய விசயங்கள் இருக்கு.." என்று சொல்லித் தான் அனுப்பினாள். அவள் சொன்னது கவிதாவுக்கு புரிந்திருக்குமோ என்று ஐயமாக இருந்தது.

கவிதாவை பார்த்ததும் அவர்களுக்குப் பிடித்துவிட்டது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது ராமநாதனுக்கு மாப்பிள்ளை வீட்டாரின் முகத்தைப் பார்த்ததுமே...மற்ற மாப்பிள்ளை வீட்டாரைப் போல்வீட்டுக்குப் போய் லெட்டர் போடறோமே ன்னு சாக்கு போக்கு சொல்லாமல் மாப்பிள்ளை எல்லார் முன்னிலையிலுமே " அம்மா எனக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு.. உங்களுக்கும் அப்பாவுக்கும் பிடிச்சிருந்தா சரி" என்று தெளிவாக சொன்னதும் ராமநாதன் மலைத்துப் போய்விட்டார்.

"எங்களுக்கு என்னப்பா..உனக்குப் பிடிச்சிருந்தா சரி. ஒரு நல்ல நாளாப் பார்த்து கல்யாணத்துக்கு தேதி குறிச்சிடலாம்" என்ற மாப்பிள்ளையின் பெற்றோரை நம்பமுடியாமல் பார்த்தார் ராமநாதன்.

அட இவ்வளவு சுலபமாக முடியுதா நம்ம பொண்ணு கல்யாணம் என்று மனது குதூகலித்தது.

"எங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்கு... உங்க வசதிப்படி சொல்லுங்க.. ஒரு நல்ல நாளாப் பார்த்து நிச்சயம் பண்ணிக்கலாம்" என்று மாப்பிள்ளையின் அப்பா சொன்ன போது வாய் நிறைய புன்னகைத்தார் ராமநாதன்.

"அதுக்கென்ன ... அடுத்த முஹூர்த்தத்திலேயே நிச்சயதார்த்தத்தை வைச்சிக்கலாம்..."என்றார் ராமநாதன்.

"என்னங்க எதுக்கும் கவிதாகிட்டே ஒரு வார்த்தை கேட்டுடலாமே..." என்ற மரகதத்தை விநோதமாக பார்த்தார்.

என்ன ..இவளுக்கென்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா? என்று தனக்குள் நினைத்துக் கொண்டார். இது தான் முதல் தடவை அவர் எடுத்த முடிவுக்குள் அவள் தன் தலையை நுழைப்பது என்ற உணர்வும் சுரீர் என்று உறுத்தியது

"அவகிட்டே என்னம்மா கேட்கிறது..சின்னப் பொண்ணு அவ.. அவளுக்கென்ன தெரியும்? நான் எது செஞ்சாலும் அவள் சரின்னு தான் சொல்லுவா" மகளைப் பற்றி பெருமையாக சொல்லக் கிடைத்ததும் ஒரு விதத்தில் சந்தோஷமாகத் தான் இருந்தது ராமநாதனுக்கு..

"இல்லை சார்.. அவங்க சொல்வதும் சரி தான். எதையும் நீங்களாவே முடிவு செஞ்சிடாதீங்க... பொண்ணையும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க" என்றார் மாப்பிள்ளையின் அப்பா.

"ஆமா.. இந்தக் காலத்துப் பசங்க மனசில என்ன இருக்குன்னு பெத்தவங்களாலயும் புரிஞ்சுக்க முடியாது...மத்தவங்களாலயும் புரிஞ்சுக்க முடியாது..அவங்களா சொன்னாத் தான் உண்டு.. கவிதாகிட்ட அவளோட அபிப்பிராயத்தையும் கேட்டுடுங்க..."

"கவிதா விரும்பினா நம்ம பையன்கிட்ட கொஞ்சம் பேசி பார்க்கட்டும்.. நம்ம பையனுக்கும் கவிதாகிட்டே பேசினா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வாய்ப்பா இருக்கும்"

ராமநாதனுக்கு மரகதம் மேல் கொஞ்சம் கோபம் முதன்முறையாக வந்தது. தன் மகளுக்காக தான் எடுக்கும் முடிவு எப்படி தவறாகப் போகும் என்று மரகதம் நினைத்தாள் என்ற கோபம் அது...

"ஏன்மா.. நான் என் மகளுக்கு நல்லது செய்யமாட்டேனா? அவளோட வாழ்கையில் எனக்கு அக்கறை இல்லையா? இப்போ அவளிடம் கேட்க்க வேணுமா" என்று மனைவியிடம் மெதுவாகக் கேட்டார்...

"ஆனாலும் இது அவளோட வாழ்கை..அவளோட விருப்பத்தையும் தெரிஞ்சுக்கணும்" என்ற மரகத்தின் வார்த்தைகளில் என்றைக்குமில்லாத கண்டிப்பு தெரிந்ததை அவர் கவனிக்க தவறவில்லை. அது புதிதாகவும் இருந்தது அவருக்கு. அவருடைய பதிலுக்கு காத்திராமல் மரகதம் கவிதாவிடம் உள்ளே போனாள். கொஞ்சம் ஸ்தம்பித்துப் போயிருந்த ராமநாதன் சுதாகரித்துக் கொண்டு எழுந்து உள்ளே சென்ற போது மரகதம் கவிதாவிடம் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள் அவரை கவிதாவின் அறைக்குள் போகாமல் தடுத்துவிட்டன.

"இதோ பாரு கவிதா ..நான் செஞ்ச தப்பை நீயும் பண்ணிடாதே..."

"என்னம்மா சொல்றே? மாப்பிள்ளைக்கு என்ன? கண்ணுக்கு லட்சணமா இருக்கார். மத்த விஷயங்களை அப்பா பார்த்துக்க மாட்டாரா? உனக்கும் அப்பாவுக்கும் பிடிச்சிருந்தா சரி தானேம்மா?"

"இல்லை.. எனக்கும் அப்பாவுக்கும் மட்டும் பிடிச்சிருந்தா போதாது. உனக்கு பிடிக்கணும் முக்கியமா.. இது உன்னோட வாழ்கை. மாப்பிள்ளை அழகா இருக்கார்ன்னு ஆசைப்பட்டுடாதே..அழகை விட நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழப் போற வாழ்கையில மனசு ஒத்துப் போகணும். உன்னோட ஆசா பாசங்களை புரிஞ்சிக்கிறவனா மாப்பிள்ளையும் அவனைப் புரிஞ்சு நடந்துக்கிறவளா நீயும் இருக்கணும். முக்கியமா உன்னோட நியாயமான ஆசைகளுக்கு மதிப்புக் கொடுக்கிறாவனா இருக்கணும். இதெல்லாம் மாப்பிள்ளையைப் பார்க்கிற ஒரு தடவைல புரிஞ்சுக்க முடியாதும்மா..."

கவிதாவின் முகத்தில் மெல்ல மெல்ல திகில் படர்ந்தது. வெளியில் நின்ற ராமநாதனுக்குக் கூட சுரீர் என்றது. '

"என்ன சொல்ல வரா? நான் பண்ணின தப்பை நீயும் பண்ணிடாதேன்னு சொன்னாளே..அப்படீன்னா என்ன அர்த்தம்?"

"என்னம்மா பயம் காட்டுறே?" கவிதா கலவரமாகக் கேட்டாள்.

"உன்னை மாதிரி தான் நானும் ..உங்கப்பாவை எங்கப்பா என்கிட்ட காட்டி இவரை தான் நீ கட்டிக்கணும். அழகா ஜம்முனு இருக்கார்; நல்ல உத்தியோகத்துல இருக்கார் இதை விட என்ன வேணும்ன்னு சொன்னப்போ எனக்கும் இதைவிட வேற எதுவும் தோணலை. நம்ம அப்பா தானே ... அவருக்கு தெரியாததா நமக்கு தெரியப் போவுதுன்னு சரின்னு உங்கப்பாவை கட்டிக்கிட்டேன்.."

"அப்பாவுக்கென்னம்மா குறைச்சல்?

மரகதம் விரக்தியாக சிரித்தாள்..."அவருக்கென்ன குறைச்சல்...எனக்கு தான் கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே குறைச்சலாகப் போய்விட்டது.. என்னிக்கு எனக்கு கல்யாணமாச்சோ...அன்னிலேருந்து நான் என்னோட ஆசைக்காக வாழவில்லை; உங்கப்பா ஆசைப்படி தான் என்னை வாழ வச்சிக்கிட்டிருக்கேன். எனக்குன்னு தனிப்பட்ட ஆசைகள் நிறைய இருக்கு..ஆனா அதுல ஒண்ணு கூட உங்கப்பாவால அடையாளம் கண்டுக்க முடியலை. எனக்கு விருப்பமான நிறத்துல ஒரு சேலை கட்டிண்டதில்லை தெரியுமா? அரக்கு கலர் புடவை கட்டினா எனக்கு எடுப்பா இருக்கும்.. ஆனா உங்கப்பா பச்சைப் பசேல்னு வயல் வெளி மாதிரி கலர்ல தான் புடவை எடுத்துண்டு வருவார். உனக்கு பிடிச்சிருக்கா என்று ஒரு பேச்சுக்கு தன்னு கேட்டிருப்பாரா? இல்லை.. இது தான் உனக்கு நல்லா இருக்கும்னு அவரே தீர்மானமா சொல்லிடுவார். என்னுடைய இயல்புக்கும் , குணத்துக்கும் எதிர்மாறான மனுஷன். மனைவியோட கருத்துக் கேட்கணும் , அவளுடைய அபிப்பிராயம் தெரிஞ்சுக்கணும்கிற அவசியம் தெரியாதவர் அல்லது அதை அவசியமா எடுத்துக்காம அலட்சியம் செய்யறவர். புருஷனோட விருப்பப்படி இருப்பவ தான் மனைவி ன்னு ஒரு மனப்பான்மை. "

ராமநாதனுக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை.

"கல்யாணத்துக்கு முன்னம் எத்தனை புத்தகம் படிச்சிருப்பேன் தெரியுமா? இப்போ ... இதுவரை ஒரு புத்தகம் படிக்க முடிஞ்சுதா என்னாலே?...எனக்குள்ள எத்தனையோ ஆசையும் கனவுகளுமா தான் அவர்கிட்டே வந்தேன். ஆனால் என்னை எதிர்பார்க்காத, என்னிடம் அபிப்பிராயம் கேட்க வேண்டுமென்று கூடத் தோணாத ஒருத்தரோட தான் இத்தனை காலமா வாழ்ந்து கொண்டிருக்கேன். என்னைப் பற்றிய விசயங்களிலேயே தன்னிச்சையா அவராகவே முடிவு எடுப்பதும் ,தீர்வு சொல்வதுமாய் வாழ்கை ஆரம்பித்ததும் நான் ஊமையாகிவிட்டேன். கனவுகள் நொருங்கிப் போனபின்னால நிறைய வெறுமை படர்ந்திடிச்சு வாழ்கைல. உங்க ரெண்டு பேரையும் பெற்று உங்களை வளர்ப்பதிலும் , வீட்டுக்குள் நத்தையாய் முடங்கிப் போனதிலும் ..மரத்துப் போனேன். நாளாடைவில் எனக்கென்று நான் எதையுமே சிந்திக்காமல் போனேன்.... என்னோட சிரிப்பிலயும் சரி , செயல்களிலும் சரி நான் இல்லை இப்போ... "
"என்னோட வாழ்கையே என்னோட விருப்பு வெறுப்பு பற்றிய அக்கறைப்படாத, தான் காட்டுற பாதையிலே என் பின்னால வா என்ற ஓரு அதிகாரத்துக்குப் பின்னால போய்ட்டு இருக்கே தவிர...வேற எதுவுமில்லை...."

"என்னை மாதிரி வாழணும்னு நினைக்காமல்...நீயாவது நல்லபடியா யோசிச்சு முடிவு செய்.. மாப்பிள்ளையோட பேசிப் பாரு. அவரை புரிஞ்சுக்க முயற்சி செய். உன்னைப் பற்றி அவர் எவ்வளாவு அக்கறையா விசாரிக்கிறார் என்று கவனி. அவருடைய அக்கறையும் , மனப்பான்மையும் உனக்கு திருப்தியாக இருந்தால் மட்டும் சரி ன்னு சொல்லு.. இல்லேன்னா வேணாம்.. புரிஞ்சுக்கோ... வாழ்கையை பத்தி..."

கவிதா மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்... கதவுக்கு அந்தப் பக்கமாக வெளியில் நின்று மனைவியின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ராமநாதனுக்கு சம்மட்டியால் யாரோ தலையில் படார் என்று அடித்தது போல் இருந்தது.

இத்தனை வருடம் தன்னை பரிபூரணமான கணவனாகவும் மனிதனாகவும் கற்பனை பண்ணியிருந்த அந்த கர்வம் ஒரு நிமிடத்தில் பொல பொலவென்று உதிர்ந்து போனது. இத்தனை வருடமாக அவருடன் மரகதம் தான் வாழ்ந்த வாழ்கையில் எந்தவொரு அர்த்தமும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக மகளிடம் சொன்னதில் அவர் மிகவும் நொருங்கிப் போனார். மரகதம் தனக்கேற்ற சரியான மனைவி என்று நினைத்து இருபத்தெட்டு வருசமாக இறுமாந்திருந்த அவர் ஒரு நொடி கூட தான் அவளுக்கேற்ற கணவனாக இருக்கிறோமா என்று யோசித்துப் பார்க்கவில்லையே என்று நினைத்து வெட்கப்பட்டார்.

இத்தனை வருடமாக தன்னுடைய வாழ்கையின் பலமான அஸ்திவாரமாக எதை நினைத்துப் பெருமைப்பட்டாரோ அந்த அஸ்திவாரம் வெறும் குருமணல் மேடாக சரிந்துபோன அதிர்ச்சியில் அவர் வெறும் கூடாக அந்த இடத்தைவிட்டகன்றார்.

2 comments:

Unknown said...

அருமை.

ஸ்வாதி said...

Kadugu said...

அருமை

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அன்புடன்
சுவாதி