Saturday, October 4, 2008

தன்னழிப்பு அல்லது கருணைக் கொலை.

தன்னழிப்பு என்பது தன்னுடைய தற்கொலையை பிறரின் உதவியோடு மேற்கொள்ளப்படுவது என்று சொல்லலாமா? அல்லது இன்னொருவரை கொலையாளியாக்கி தன்னுடைய தற்கொலையை நிறைவேற்றிக் கொள்வது என்று சொல்லலாமா?

கருணைக் கொலை என்ற விடயம் பல காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது இன்னமும் பல நாடுகளில் சட்ட பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்தக் கருணைக் கொலை என்பதே செயலிழந்து கிடக்கும் நோயாளியின் குடும்ப அங்கத்தினரின் அறிவுக்கும் மனதுக்கும் நடக்கும் போராட்டத்தில் அறிவு வெற்றி பெறும் போது தீர்மானிக்கப்படுவது.
அமெரிக்காவில் ஒரு பெண் 14 வருடங்களாக மூளை செயலிழந்து (வெஜிடபிள்) தாவரமாகிக் கிடந்த போது இப்படியோர் போராட்டத்தை உலகம் பார்த்தது எனலாம்.
மூளை செயலிழந்த நிலையிலோ அல்லது கோமா நிலலயிலோ பல வருடங்களாக இருக்கும் நோயாளியை கருணைக் கொலை செய்ய அமெரிக்காவில் சட்டம் இடம் கொடுத்திருக்கிறது என்பதற்கு 2005ம் ஆண்டு புளோரிடா மாநிலத்தில் நடந்த டெர்ரி என்ற இளம் பெண்ணின் கருணைக் கொலை ஒரு உதாரணம்.
டெர்ரி 14 வருடமாக மூளை செயலிழந்து குழாய் வழியாக உணவூட்டப்பட்ட நிலையில் சுவாசிக்கும் ஜடமாக மருத்துவமனையில் வைக்கப்படிருந்தார். அவரைக் கருணைக் கொலை செய்யச் சொல்லி அவரது கணவரும் அதை எதிர்த்து அந்தப் பெண்ணின் பெற்றோரும் தொடர்ந்த வழக்கில் கணவன் வெற்றி பெற்று வயதான பெற்றோர்களின் கண்ணீருக்கிடையில் அந்த இளம் பெண் கருணைக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கணவன் சொன்ன காரணம் தன் மனைவி ஜடமாக இருப்பதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அதனால் அவளைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது. ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் "மருமகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அதனால் தமது மகளை கொல்ல நினைக்கிறார்" என்று மருமகனை எதிர்த்து வழக்காடினார்கள்.
அன்பு, பாசம், சுயநலம் என்று உணர்வுகளின் பன் முகப் போராட்டத்துக்கு நடுவில் செயலற்றுக் கிடந்த ஒரு பெண்ணின் வாழ்கை மற்றவர்களால் முடிவு செய்யப்பட்டது. இறந்து போனாள் என்பதை விட சட்டப்படி சாகடிக்கப்பட்டாள் எனலாம். http://en.wikipedia.org/wiki/Terri_Schiavo
மனைவியின் மரணத்தின் பின் வெகு சீக்கிரமே கணவர் தனது நெடுநாள் காதலியை மணம் செய்தும் கொண்டார். http://www.nytimes.com/2006/01/23/national/23schiavo.html...
அந்தப் பெண்ணின் கருணைக் கொலையை பற்றி நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. அந்தப் பெண்ணின் நிலமையிலும், அவள் பெற்றோரின் நிலமையிலும், அவள் கணவனின் நிலமையிலும் இருந்து யோசிப்பதுண்டு. என்ன தான் அறிவார்த்தமாக சிந்தித்தாலும் , ஒருவரை சாகடிப்பது என்பதை உணர்வுபூர்வமாக மனம் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எட்டவில்லை.
டெர்ரியின் மரணத்தின் பின் எனக்கு 3 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன. இங்கு அறுவை சிகிச்சைக்குப் போகும் முன் ஒரு விண்ணப்பபடிவம் தருவார்கள்; அதை சம்மந்தப்பட்ட நோயாளி நிரப்பிக் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். அந்த விண்ணப்பப்படிவத்தில் ஒரு கேள்வி வரும்... இந்த அறுவை சிகிச்சையிலோ அல்லது வேறேதும் சந்தர்ப்பத்திலோ நீ மூளை செயலற்றுப் போனாலோ , கோமா நிலைக்குட்பட்டாலோ உன் சார்பில் உனக்கான முடிவுகளை எடுக்கும் தகுதியை அல்லது உரிமையை யாருக்கு கொடுக்க விரும்புகிறாய் என்பது போல் அந்தக் கேள்வி இருக்கும்.
என் மூளை செயலிழந்து போனால் என்னைப் பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். ஆனால் என் மேல் பிரியமானவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை நான் தீர்மானிக்க முடியாது; எனக்காக என் கணவரை அவரது வாழ்கையை வெறுமையாக்கிக் கொண்டிருக்கும்படி வற்புறுத்துவதும் மனிதாபிமானமில்லை; அவராக விரும்பி எனக்காக என்னுடன் இருப்பது எனக்கு பெருமையே தவிர செயலிழந்த பின் அதை உணர எனக்கு உணர்வ்வோ அறிவோ வேண்டுமே....ஆதலால் அவருடைய வாழ்கை பற்றிய முடிவை அவர் தான் எடுக்க வேண்டும். இன்னொரு வாழ்கை அவருக்கு வேண்டுமெனில் இருக்கவே இருக்கிறது சட்டப்படியான விலகல். இதற்காக கருணைக் கொலையை ஒரு ஆயுதமாக அல்லது வழிகோலாக எடுக்க வேண்டியதில்லை. எத்தனை விளக்கம் சொன்னாலும் என்னுடைய மரணத்தை எனது தாயாரும் என் குழந்தைகளும் இந்த வகையில் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
அதனால் எதற்கு வம்பு என்று எப்போதும் அம்மாவின் விருப்பத்தைக் கேட்டு முடிவு செய்யும் என் தம்பியின் பெயரையே அந்த விண்ணப்பப் படிவத்தில் கொடுத்துவிட்டேன். :):)

ஆனாலும் என்னைப் பொறுத்தவரை ஒரு சுவாசிக்கும் ஜடமாக கிடப்பதில் சம்மதமில்லை. அந்தக் கணமே என்னை கொன்றால் நன்றியுடையவளாய் இருப்பேன்.

No comments: