
நிற வேற்றுமை, இன ரீதியிலான முரண்பாடுகளை பின் தள்ளிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றியை ஒரு கறுப்பினத்தவருக்கு ஜனாதிபதி அந்தஸ்தைக் கொடுத்ததன் மூலம் 2008ம் ஆண்டின் நவம்பர் 4ம் திகதியான இன்று அமெரிக்க மக்கள் தமது சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை இன்று எழுதியுள்ளனர்.
கென்யாவைச் சேர்ந்த கறுப்பின தந்தைக்கும் , அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த வெள்ளை இனத் தாயாருக்கும் மகனாக பிறந்த பாரக் ஒபாமா அமெரிக்காவின் டெமோக்ரட்டிக் கட்சியின் சார்பில் இலனோயிஸ் மாநிலத்தின் செனட்டராக இருந்து , 2008ம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் தனது கட்சியின் சார்பில் தனக்குப் போட்டியாக இருந்த முன்னாள் ஜனதிபதி கிளின்டனின் மனைவியான ஹில்லார் கிளிண்டைனை விஞ்சி , வேட்பாளர் தகுதி பெற்று இன்று ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளரான ஜோன் மெக்கெய்ன் அவர்களை வென்று அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.
அவரது சொந்த மாநிலமான இலனோயிஸ், சிக்காகோவில் மிகப் பிரமாண்டமான ஜனத் திரள் அவரது வெற்றியை எதிர்பார்த்து கூடியிருந்தனர். அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக அவர் வெற்றியடைந்த செய்தி வெளி வந்ததும் பலர் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
இத் தேர்தல் முடிவின் மூலம் அமெரிக்க மக்கள் தமது கருத்தை மிகத் தெளிவாக பகிரங்கமாகச் சொல்லிவிட்டார்கள் என்று ஒபாமாவின் போட்டியாளரான ஜோன் மெக்கெய்ன் அரிசோனாவில் தனது தோல்வியால் அதிருப்தியாகிய தன் கட்சியின் ஆதரவாளர் மத்தியில் ஒபாமாவின் வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒபாமாவும், அவருடன் இணயாக தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட டெலவெயரைச் சேர்ந்த செனட்டர் ஜோஸப் பிடென் என்பவரும் வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி , 2009ம் ஆண்டு முறையே அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும், துணை ஜனாதிபதியாகவும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.
அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக , நாட்டின் தலைமை பதவியை கையேற்கப் போகும் ஒபாமாவின் முன் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடத்தும் நீண்டகாலப் போர் பற்றிய தீர்வுகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.
தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒபாமா தனது முதல் கடமை நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீராக்குவது என்று குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் 16 மாதங்களுக்குள் ஈராக்கை விட்டு அமெரிக்க இராணுவத்தை திரும்பப் பெறுவேன் என்றும் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் சபையிலும் ஒபாமாவின் கட்சியினரே பெரும்பான்மையாக தேர்வாகியிருக்கின்றனர். நாற்பத்தியேழே வயதான இளைஞரான பராக் ஒபாமா நாலு வருடங்களாகத் தான் அமெரிக்க மக்களிடம் பிரபலமாகியுள்ளார். என்றைக்கு இலனோயிஸ் மாநிலத்தின் சென்ட்டராக தேர்வு செய்யப்பட்டு ஒரே இரவில் பிரபலமானாரோ அன்றே வெள்ளை மாளிகைக்கான வெற்றிப் பயணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டார் எனலாம்.
இத் தேர்தலில் அமெரிக்க மக்கள் ஈராக் போர் , பயங்கரவாதம், பெற்றோல்,ஹெல்த் கேர் எனப்படும் தேசிய அளவிலான வைத்திய வாய்ப்புகளுக்கான ஏற்பாடுகள் போன்றவற்றை விட 10ல் 6 பேர் பொருளாதார சீராக்கலை தான் முக்கியமாக எதிர்பார்த்து வாக்களித்திருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.
"யார் இன்று இரவு வெற்றி பெறுகிறார்களோ அவர்களை ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும் ("May God bless whoever wins tonigஹ்ட்,") என்று வெள்ளை மாளிகையில் நடந்த இன்றைய இராப்போசன விருந்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார் வரும் ஜனவரி 20ம் திகதி பதவியிலிருந்து விலகப் போகும் தற்போதைய ஜனாதிபதியான ஜோர்ஜ். புஷ்.
டெமோக்கிரட்டிக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் சபையின் தலைவர்கள் வாஷிங்டனில் தமது கட்சியின் வெற்றியை இன்று கொண்டாடினார்கள்.
"இன்று அமெரிக்க மக்கள் தமக்கான புதிய பாதையை அமைத்துவிட்டார்கள். இந்தப் பாதை அமெரிக்காவின் புதிய மாற்றத்திற்கானது" என்று கலிபோர்னியாவின் செனட்டர் நான்ஸி பெலோஸி கூறியுள்ளார்.
நியூயோர்க் நேரப் படி இரவு 11 மணிக்கு பின் ஒபாமா அவர்கள் இலக்ரோரல் வாக்குகள் தேவையான 270 க்கும் அதிகமாக 338 வாக்குகளைப் பெற்றிருப்பதையும், மெக்கெய்ன் அவர்கள் 127 இலக்ரோரல் வாக்குகளை பெற்றிருப்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஒபமாவின் வெற்றியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளார்களின் கருத்துகளின் அடிப்படையில் 10 ல் 6 பெண்கள் ஒபாமாவை ஆதரிப்பது தெரியவந்துள்ளது. பெண்களின் ஆதரவைப் பெற்ற எந்த தலைவரும் சோடை போனதில்லை. ஒபாமா அவர்களும் அப்படியே வெற்றியாளராகி விட்டார்.
முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற கிரீடத்தைச் சுமக்கும் பெருமையுடன் வெள்ளை மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கும் பராக் ஒபாமா அவர்கள் மூலமாக அமெரிக்காவின் சரித்திரம் இன்னொரு புதிய அத்தியாயத்தை வெற்றிகரமாக எழுத தொடங்கியிருக்கின்றது.
வாழ்த்துகள்!!
No comments:
Post a Comment