Thursday, November 27, 2008

மாவீரர் நாளும் என் உணர்வும்!

உலகம் முழுவதும் பரந்து வாழும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழருக்கும், தாய் மண்ணில் வாழும் பாக்கியம் பெற்ற ஈழத் தமிழருக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தினம் என்ற ஒன்று எது என்றால் இந்த கார்த்திகை திங்களின் 27 வது நாளான மாவீரர் தினம் என்பது தான். எமக்காகவும் எமது எதிர்கால சந்ததியினருக்காகவும் இந்தக் கணம் வரை களம் கண்டு தம் இன்னுயிர் தந்த எம் குல வீரர்களுக்கு தமிழீழ மக்களும் தமிழின உணர்வாளர்களும் வணக்கம் செலுத்தும் உன்னத நாள் இது.

மரணத்தை விடக் கொடியது மறக்கப்படுவது .... இந்த வசனம் ஒரு சினிமாவில் வந்தது தான். ஆனாலும் மிகவும் சத்தியமான வார்த்தைகள் அவை. எமது குடும்பத்திலேயே நாம் உயிரையே வைத்திருக்கும் அன்புக்குரிய உறவுகளின் மரணங்கள் கூட மிகவும் வலி கொடுப்பவையாகத் தான் இருக்கும். இவர்கள் இல்லாத எதிர்கால வாழ்கையை நினைத்துப் பார்க்க மிகவும் துயரமாக இருக்கும். அந்த நினைப்பே கொடூரமானதாக தெரியும். ஆனால் காலம் தனது பயணப் போக்கில் அவர்களின் நிரந்தரப் பிரிவைக் கூட என்றைக்கோ ஒரு நாள் நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க தயாராகும் மனநிலைக்கு எம்மை பக்குவப்படுத்தி விடுகிறது அல்லது வேறு சூழலையோ அல்லது காரியங்களையோ, பொறுப்புகளையோ அல்லது புதிய உறவுகளையோ தந்து அந்த துயரிலிருந்து எம்மை விடுவித்துவிடுகிறது. அந்த மீளக் கிடைக்காத சந்திப்பை விட பயங்கரமான இன்னொரு துயரையோ அல்லது அதை மறக்கடிக்கக் கூடிய இனிமையையோ வாழ்கையை சந்திக்க அல்லது எதிர்பார்க்க எம்மை தயார்படுத்திவிடுகிறது .

இழப்பதும், இறப்பதும் வாழ்கையில் தவிர்க்க முடியாதவையாகிவிடுகின்றன.

இன்றைக்குப் பிணமானவனை சுற்றி இருந்து மாரடிக்கும் நாளைய சவங்கள் தான் நாங்கள். சாவு வரை விதிக்கப்பட்ட எமது ஆயுளில் என்ன சாதிக்கப் போகிறோம்? எதை சாதிக்க முடியும்? வாழ்கை பற்றிய கனவுகளையும், கற்பனைகளையும் மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டே சாவின் வருகையை மறந்து போய்விடுகிறோம். இத்தனை இலட்சணங்கள் பொருந்தியவர்களாகிய நாங்கள் தான் பொது மக்கள்.

இந்தப் பொதுமக்களின் ஒரு குறிப்பிட்ட இனமான தமிழினத்தில் பிறந்துவிட்டு , சொந்த தேசத்தில் வாழவும் வழியில்லாமல் புலம் பெயர்ந்த தேசத்தின் வாழ்கை முறையில் சேரவும் மனமில்லாமல் குடும்பம் என்ற ஒன்றின் தேவைகளினால் உருவான வாழ்கை வட்டத்தில் ஆசைகளோடும், கனவுகளோடும் வாழும் சாதாரண ஒரு பெண்ணாக இருந்து இன்று இந்த இணையத்தில் என் இனத்தின் மாவீரர் சமாதிகளையும், அந்தச் சமாதிகள் முன் அழுது கொண்டிருக்கும் தாய் மாரையும், சகோதரிகளையும், மனைவிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

என்னால் என்னுடைய மன உணர்வுகளை சரியான வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஆனால் அவர்களுடைய அந்த சோகத்தை அவர்களில் ஒருத்தியாக என்னை இருத்தி பார்க்க வல்ல உணர்வை இறைவன் தந்திருக்கிறான் என்பதற்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன். அவர்களுடன் சேர்ந்து என்னால் அவர்களுடைய உறவுகளுக்காக விம்மி விம்மி அழ முடிகிறது; உணர்வால் துடிக்க முடிகிறது; இப்போது இந்த நிமிடம் அவர்களுடைய இழப்பு என்னுடையதுமாகிறது.

ஒரு மாவீரர் தின நாளன்று இங்கு நடந்த எழுச்சி நாளில் கிருபா என்ற சகோதரி கீழ் வரும் பாடலை மேடையில் பாடிக் கொண்டிருக்க ஒவ்வொருவராய் மறைந்த மாவீரர்களுக்கு மக்களாகிய நாம் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தோம். அன்றைக்குத் தான் இந்தப் பாடலை முதன் முதலாகக் கேட்டேன். அந்த 7 நிமிடத்தில் அந்தப் பாடலின் வரிகளுக்கு கண்ணீர் விடாமல் அந்த மன்ற வளாகத்தில் யாரேனும் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே... அந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் அத்துணை உண்மையான வரிகள். இதயத்தை துளைத்து உயிரைத் தொடும் உணர்வு நிறைந்த வரிகள்.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இன்றைக்கும் அதே பாடலை தான் நானும் எனக்குள்ளே முணு முணுக்கிறேன்.

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

முடியாது என்று தெரியும்...ஆனாலும் மனம் அதற்காகத் தான் அழுகிறது. எனது அயலில் மறைந்த போராளிகளை , எனக்குத் தெரிந்த போராளிகளை நினைக்கும் போது ......மேலிருக்கும் அந்த வார்த்தைகளை எனக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொள்கிறேன்......

இந்த வீரர்கள் எல்லோரும் போராளிகளாக மாறியது எப்படி என்று தமிழீழத்தைச் சாராத வெளியுலகில் இருப்போரால் புரிந்து கொள்ள முடியாது. பலர் நினைப்பது போல் போராளிகள் அனைவருமே தமது குடும்பத்தில் எவரையாவது சிங்கள இராணுவத்தின் கொலை வெறிக்கோ அல்லது இந்திய அமைதிப் படையின் காட்டுமிராண்டித் தனத்திற்கோ பலி கொடுத்த ஆத்திரத்தில் அல்லது விரக்தியில் போராளிகளாக மாறினார்கள் என்று நினைத்தால் அது தவறு. அப்படி ஒரு சூழ்நிலையில் போராளிகளாக மாறியவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் எந்தவொரு இழப்புமில்லாமல் , வெளிச் சமூகம் நினைக்கும் காரணங்கள் எதுவுமில்லாமல் தமிழ் உணர்வு மேலீட்டால் போராளிகளானவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

எத்தனையோ பட்டதாரி இளைஞர்கள் தமது படிப்பின் தராதரத்தை உதறிவிட்டு தமிழீழம் தான் முக்கியம் என்று போராளிகளாக மாறிய உண்மைகள் பலருக்கு தெரியாதவை. விடுதலைப் புலிகள் மாத்திரமில்லை மற்ற போராளி இயக்கங்களிலும் இருந்த வீரர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன். மற்றைய போராளி இயக்கங்களில் இருந்த வீரர்களில் என்னைக் கவர்ந்தவர்கள் என்று சொன்னால் தம்பாபிள்ளை மகேஸ்வரன் அவர்களையும் பாலகுமார் அவர்களையும் சொல்லலாம். அதே போல் உமா மகேஸ்வரன் அவர்களும் மிகுந்த புத்திசாலித்தனமும், திறமையானவரும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தம்பா பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் எமது அயலவர் என்பதில் ஒருவித பெருமை எனக்கு எப்போதும் உண்டு. அவர் பூசா வதை முகாமிலிருந்து ஒரு முட்டாள் தினத்தில் தப்பியதை அந்தக் காலத்தில் எமது அயலில் மிகவும் பெருமையாகவும், சுவாரசியமாகவும் சனங்கள் கதை கதையாகச் சொல்வார்கள். அவரைத் தேடி சிங்கள இராணுவம் அவரது அண்ணன் வீட்டுக்கு வந்ததும், அப்போது வீட்டிலிருந்த அண்ணன் மனைவியின் தாயார் இராணுவத்தினருடன் நடத்திய உரையாடலையும் அவர்கள் வீட்டுக்கு மிக அருகில் வசித்த எனது பள்ளித் தோழி சொல்ல கேட்டிருக்கிறேன்.

மிகவும் இனிமையான நாட்கள் அவை. போராட்டக் காலமாயிருப்பினும் கூட அந்த நாட்கள் எமது போராளிகளின் நுட்பமான அணுகு முறைகளாலும், போராட்ட உணர்வுகள், போராட்டத்திற்கான அவசியத்தை மக்கள் உணரச் செய்தல் போன்ற விடயங்களாலும் மக்களின் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கிய காலகட்டம் அது..அதுவே எனது இளமைப் பருவமும் கூட. எந்த இயக்கம் என்ற பேதம் பார்க்காமல் எந்த கொள்கையுள்ள இயக்கமெனினும் அவர்களுடைய ஒரே நோக்கம் தமிழீழமாக இருக்கும் பட்சத்தில் அந்தப் போராளிகள் யாவரையும் எனது சகோதரர்களாகவும், என் இனத்தின் வரங்களாகவும் தான் நான் இன்று வரை அவர்களை மதிக்கிறேன்.

அரசியல் பார்வையாளர்களும் , போராட்ட ஆராய்வாளர்களும் சொல்லும் பல நுணுக்கமான கணிப்புகளை வைத்து என் இனத்துக்காக போராடும் எந்த ஒரு போராளியையும் நான் கேவலமாக நினைத்ததில்லை... ஆனால்... இந்திரா காந்தி அம்மையாரை எமது இனத்தையும், எமக்கான தாயகத்தையும் காக்க வந்த தேவதையாக நம்பி சக ஈழத் தமிழர்களைப் போல் நானும் ஏமாந்ததையும், அவரது இராஜ தந்திரத்துக்கு எமது போராளிகள் இரையாகி பிளவுண்டதையும், தமிழீழத் தீர்வுக்காக போராடியவர்கள் , இந்தியாவின் சாணக்கியத்தில் சிக்கி சிதையுண்டதையும் இந்தக் கணம் வரை நான் வெறுக்கிறேன்.

இந்தியாவின் தூண்டுதலில் எம் இனத்துக்கே துரோகமிழைத்த வரதராஜப் பெருமாள் போன்ற புல்லுருவிகளை ஈழத்து தமிழச்சியாக நான் என்றைக்கும் மன்னிக்க மாட்டேன்.

இன்று உயிருக்கு பயந்து, என் குடும்பம், என் வாழ்கை, என் உறவுகள் என்று என்னைச் சார்ந்த எல்லாவற்றையும் ஈழத்தின் அபாயகர எல்லைகளை விட்டு அப்பால் கொண்டு வந்து பாதுகாப்பாக இருத்திவிட்டி நிம்மதியாக இணையத்தில் என் இனம் மக்களும், வீரர்களும் மாண்டு கொண்டிருப்பதை படம் பார்த்துக் கொண்டிருக்கிறேனே.... நான் கேவலமானவள் இல்லையா? என்னுடைய உணர்வுகள் தமிழினத்துக்காக துடிக்கிறதா? இந்த துடிப்பும், இந்தக் கண்ணீரும் எனக்கு உண்மையானவையாயினும் என் தேசத்தில் மாண்டு கொண்டிருக்கும் மாவீரர் முன்னால் எம்மாத்திரம்?

எனக்கு வாழ வேண்டுமென்ற ஆசை எப்படி வந்தது? ஏன் இந்த போராளிகளுக்கு வாழ வேண்டுமென்ற விருப்பம் இல்லாமல் போனது? மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற பகுத்தறிவு தெரிந்த போதும் நானும் எனது குடும்பமும் உயிர் தப்பி இருக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது போல் ஏன் அந்த மாவீரர்களுக்கு ஏற்படவில்லை? எந்த நேரம் ஆமிக்காரன் வீட்டுக்குள் பூந்து சுடுவானோ, யாரை பிடிச்சுக் கொண்டு போய் சித்திரவதை செய்து கொல்லுவானோ, கற்பழிப்பானோ என்ற பயம் எனக்குள் இருப்பது போல் ஏன் அவர்களுக்கு வரவில்லை? என் குடும்பத்தில் எவரையும் இழக்க விரும்பாமல் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தேன்..ஆனாலும் என் அப்பாவை பறி கொடுத்துவிட்டேனே.... அவரை என்னால் சாகாமல் காப்பாற்ற முடியவில்லையே..? அப்பாவுடன் சேர்ந்து கன காலத்துக்கு வாழ வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே... இங்கு வந்து என்ன சாதித்தேன்? கல்யாணம் செய்து நானிருந்த குடும்பத்துடன் எனக்கென்று ஒரு குடும்பம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இனி என் பிள்ளைகளை வளர்த்து ,அவர்கள் வாழ்கை, அவர்கள் எதிர்காலம் என்று இப்படியே என் காலம் முடிந்துவிடுமானால் அதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைத்து விடுமோ?

காட்டிலும், களத்திலும், நச்சுக் குப்பிகளின் கைகாவலில், கன ரக ஆயுதங்களோடு எந்தக் கணத்திலும் களத்தில் உயிர் துறக்கலாமென்ற ஆயத்தத்துடன் வாழ முற்பட்டார்களே....அவர்கள் என்ன லாபம் எதிர்பார்த்து இந்த முடிவெடுத்தார்கள்? அவர்களுக்கு ஏன் என்னைப் போலும் மற்ற சாதாரண தமிழ் மக்களைப் போலவும் காதல், கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று வாழ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இல்லாமல் போனது? இது தான் எமக்கு தேவை, இந்தப் பாதையில் தான் நான் எனது வாழ்கையைக் கொண்டு போக வேண்டும், இப்படித் தான் நான் இறக்க வேண்டும் என்று தமது விதியை அவர்களே கோலம் போட்டுக் கொள்கிறார்களே...அதற்கு எத்தனை அசாத்திய துணிவு வேண்டும்?

இவர்களைப் போல் என்னால் முடிவெடுக்க இயலுமா? நிச்சயமாக முடியாது! ஏன் என்றால் நான் புத்திசாலித் தனமானவளாக வெளியுலகுக்கு தெரியும், சுயநலமிக்க கோழை! எனக்கு மரண பயம் இருக்கிறது! அதை விட வாழ வேண்டுமென்ற பேராசை மிக அதிகமாக இருக்கிறது! என்னையும், என்னைச் சுற்றிய உறவுகளின் நலனும் மட்டும் தான் எனக்கு முக்கியம்! மிகுந்திருக்கும் விரயமான பொழுதுகளில் சில கணங்கள் மட்டுமே என்னால் இந்த வட்டத்துக்குள் வெளியே இருக்கும் உலகை விடுப்பு பார்க்க முடியும்.

ஆனால் அவர்கள் எனக்கு முரணானவர்கள்! என்னுடைய வாழ்கையில் நான் எடுக்கும் ஒவ்வொரு தீர்வும் அவர்கள் முன் செல்லாக் காசு! என்னுடைய வாழ்கையில் நான் இதுவரை கண்டது எதுவும் அவர்களோடு ஒப்பிடும் போது தரமில்லாதவை!

இது தான் பொதுமக்களாகிய எமக்கும் மாவீரருக்குமிடையிலான வித்தியாசம்! அவர்களை வைத்து நாம் பெருமைப்படுகிறோம், அவர்கள் பிறந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகுதியுடன்!

அவர்கள் எமக்கு மேலானவர்களாகிறார்கள் நாமும், நமது சந்ததியினரும் சுதந்திரமான மக்களாக வாழ எமக்கென்று ஒரு தேசத்தை பெறுவதற்காக தமது உயிரைக் கொடுத்து போராட்டத்தை நடத்துகிறார்கள் என்ற நிதர்சனத்தில்!

கண்ணால் காணக் கிடைக்காத கடவுளை விட எமது கண்ணுக்கு முன்னே எமக்காக மரணமடைந்து சமாதிகளுக்குள் விதைக்கப்பட்ட இவர்கள் எமக்கு ஆண்டவர்களாக இருக்க தகுதியானவர்கள்!

தமிழீழம் !

அந்த ஒற்றை வார்த்தைக்காக தானே? அதற்காகத் தானே அவர்கள் தமது உயிரையே ஈடு கொடுக்க துணிந்திருக்கிறார்கள்! அதற்காகத் தானே அவர்கள் தமது பந்த பாசங்களை ஒதுக்கி விட்டு வந்திருக்கிறார்கள்? ஒரு வகையில் போராளிகளும் துறவிகள் தான்.

எமக்காக எம் மண்ணில் மரித்த மாவீரர்களின் சமாதிகள் ஒரு வகையில் தமிழீழத்தின் அத்திவாரங்கள்! ஒரு வகையில் நாம் வணங்கும் கோவில்களும் கூட.!

No comments: