Monday, December 1, 2008

ஆபிரிக்கன் காமோண்டோக்களின் சாகஸம்உலகையே குலுக்கிய அந்த நாள்.... மும்பையின் அழகை குலைத்த கோரமான அந்தப் பயங்கரவாதம்... மனிதாபிமானத்தின் மரணங்களின் பின்னாலான சாத்தான்களின் வெறியாட்டத்தில் மனித உயிர்கள் உதிர்ந்து போன அந்த மணித்தியாலங்கள்..... வர்ணிக்க முடியாத வரலாற்றின் கரிய ஏடு...


அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்த மனிதர்களுக்குள் அந்த நேரத்தில் மிகவும் சமயோசிதமாக செயல்பட்டு கிட்டத் தட்ட 150 உயிர்களை நிராயுதபாணிகளாக நின்று காப்பாற்றிய அந்த ஆறு தென்னாபிரிக்க கமோண்டோ வீரர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அவர்கள் அறுவரும் அங்கிருந்த உணவகத்தில் இராப் போசனம் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தான் பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டல் மீது தாக்குதலை ஆரம்பித்தனர். திடீரென்று எதிர்பாராத தருணத்தில் எதிர்கொள்ள வேண்டி நேர்ந்த அந்த பயங்கரச் சூழ்நிலையை மிகவும் சாதுரியமாகவும், தைரியமாகவும் எதிர்கொண்டு , புத்திசாலித் தனமாக நடவடிக்கைகளை கையாண்டு அங்கிருந்த 150 பேரின் உயிரையும் இவர்கள் காப்பாற்றிவிட்டார்கள்.


இந்தக் கமோண்டோக்கள் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். தாஜ் ஹோட்டலின் மேல் தளத்தில் இருந்த உணவகத்தில் அப்போது இவர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்த 150 பேரையும் காப்பாற்றி, பாதுகாப்பாக அசம்பாவிதம் எதுவும் நேரும் முன் அங்கிருந்த அவசர வழியாக (fire exit gate) அவர்கள் வெளியேற உதவினார்கள்.


"நாங்கள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஹோட்டலின் வரவேற்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. இரு பிரிவுகள் தமக்குள் சுட்டுக் கொள்வதாக எமக்கு சொல்லப்பட்டதால் நாம் மிகவும் குழம்பிப் போனோம்.." என்றார் அந்த காமோட்டக்களில் ஒருவரான பாப் நிக்கலோஸ்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்... " பயங்கரமான கிரனெட் வெடிச் சத்தங்களையும், அபாயக் குரல்களையும் கேட்ட போது அது நிச்சயமாக இரு குழுக்களிடையான துப்பாக்கிச் சண்டையல்ல , பயங்கரவாதிகளின் தாக்குதல் தான் என்பதை கணத்தில் புரிந்து கொண்டோம். அதே நேரம் நாம் இருந்த சூழலும் பாதுகாப்பற்றது என்பதையும் உணர்ந்தோம். பயங்கரவாதிகள் நாம் இருக்கும் மேல் தளத்திற்கும் வரக் கூடும் என்றும் எதிர்பார்த்தோம். அந்தக் கணமே எமது அணியினர் அந்த இடத்திலிருந்த அத்தனை உயிர்களையும் எம்மால் இயன்றளவு காப்பாற்றுவது என்று தீர்மானித்து செயல்படத் தொடங்கினோம்." என்றார்.

"நாம் இருந்த உணவகம் சுற்றிலும் நிறையக் கண்ணாடிகளைக் கொண்டிருந்ததால் அவ்விடம் பாதுகாப்பற்றது. அதனால் பக்கத்திலிருந்த கருத்தரங்க மண்டபத்தினுள் இங்கிருந்த மக்களை நகர்விக்க முடிவு செய்தோம். மக்களிடம் எம்மை அறிமுகம் செய்து , தற்போதைய நிலமையை விளக்கி, அவர்களை பாதுக்கும் நடவடிக்கைகளில் நாம் இறங்கியிருப்பதாக அறிவித்தல் செய்துவிட்டு எமது பணியை தொடங்கினோம். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல எம்மை நாமே பாதுகாப்பு வியூகமாக அமைத்துக் கொண்டோம். கூடிய வரையில் ஜன்னல்களை அண்மிக்காமல் மக்களை அமர்த்திக் கொண்டோம். எம்மால் முடிந்த அளவு கதவுகளை அடைத்து பலமாக முண்டு கொடுத்தோம். ஒரு வழியாக எமது கடமையை திருப்திகரமாக முடித்துக் கொண்டோம்" என்றார் பாப் நிக்கலஸ்.

ஆபத்து நேரத்தில் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டு போனால் போதும் என்று ஓடிவிடும் மனிதர்கள் நடுவில் தம்மை கேடயமாக வைத்து, தமது உயிரை பற்றிய கவலையில்லாமல் 150 உயிர்களை அந்த பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றி பாதுகாத்து தந்த இந்த ஆறு தென்னாபிரிக்க வீரர்களுக்கும் எனது தலை தாழ்த்திய வணக்கங்கள்!

ஆமா....தாக்ரே குடும்பம் இன்னும் வரவில்லையா ????

.


No comments: