Saturday, December 27, 2008

ஐயா கலைஞரே...!

ஐயா கலைஞரே..!

நன்றி: மூனா அண்ணா & யாழ்.காம் (ஒவியங்களுக்காக.)


மிகவும் ஆத்திரமாக வருகிறது இப்போதெல்லாம் இந்திய அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் பிரச்சினை என்று வாய் திறந்தாலே... இவர்களுடைய வெறும் வாய்களை மெல்லுவதற்க்குக் கிடைத்த அவலா ஈழத்தமிழர் பிரச்சினை?

உங்கள் உங்கள் அரசியல் வேலைகளைப் பார்த்து உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக , உங்கள் அரசாட்சிக் காலத்தில் ஏதோ செய்தோம் என்ற திருப்திக்கு நல்ல விசயங்களை செய்துவிட்டுப் போக வேண்டியது தானே? எதற்காக ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்து வாய்ச்சவாடல் செய்ய வேண்டும்? அவன் தான் சொல்லிவிட்டானே உங்களைக் கோமாளிகள் என்று.. உங்களுடைய ஈழத் தமிழர் பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகள், நடவடிக்கைகள் என்பவை எல்லாம் பட்டவர்த்தனமான பொய்கள் என்று உலகமே தெரிந்து வைத்திருக்கும் நிதர்சனத்தின் பின்னும் ஏன் இந்த சாலமும் நாடகமும் போடுகிறீர்கள்? அந்தளவுக்கு உங்களுக்கு வாக்களித்த மக்களை முட்டாள்கள் என்றே தீர்மானித்துவிட்டீர்களா அல்லது ராஜபக்சேவின் தளபதி சொன்னது போல் நீங்கள் கோமாளிகள் தானா?

நேற்று திமுக வின் 13 வது கழகத் தேர்தலின் போது 10வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கலைஞர் ஈழத் தமிழர் பற்றிய கூறிய கருத்தில் " மத்திய அரசுக்கு அவர் மீண்டும் நினைவூட்டுகிறாராம் எமது பிரச்சினையைப் பற்றி.. தாங்கள் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஈழத்தில் ஒரு தமிழனின் உயிர் பறிக்கப்படுகிறதாம். வேண்டுமானால் ஈழத் தமிழருக்காக தனது உயிரையும் இழக்கத் தயாராம்..." சன் டிவியில் இந்த செய்தியறிக்கையை கேட்ட போது சிரிப்பதா அழுவதா என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஆத்திரம் மட்டும் வருவதை என்னால் உணரமுடிகிறது.

ஒவ்வொரு தடவையும் தன்னுடைய சுய ஆதாயங்களுக்காக ஈழத் தமிழர் பிரச்சினையை கறிவேப்பிலையாக கையில் எடுத்துக் கொள்வது தமிழகத்தின் அரசியல்வாதிகளுக்கு கை தேர்ந்தவொன்றாகிவிட்டது. கருணநிதியும் இதற்கு விதிவிலக்கல்ல..

சிறிது காலத்துக்கு முன்னால் தான் ஈழத் தமிழர் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமது கட்சியினர் அத்தனை பேரும் பதவி விலகுவோம் என்று அறிக்கை விட்டு இராஜினாமா நாடகம் போட்டுக் காட்டி மந்தி மாதிரி கரணமடித்துக் காட்டினார். இப்போது திரும்பவும் உயிரைக் கூடக் கொடுக்கத் தயார் என்று வசனம் சொல்கிறார்.

உண்மையில் இந்த அறிக்கையை யார் கேட்க வேண்டும் , யார் நம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சொல்கிறார்? அவருடைய எதிர்கட்சியினரா அல்லது இவர் கூட்டணி வைத்து அமைத்த மத்திய அரசா அல்லது இலங்கை அரசாங்கமும் , அதன் இராணுவமுமா அல்லது ஈழத் தமிழரும் அவர்களது போராளிகளுமா? அல்லது இவரை தமிழினக் காவலர் என்று கொண்டாடும் குடிமக்களா? இவரது இந்த வாக்குமூலத்தை இவரது கட்சிக்காரர்களே நம்ப மாட்டார்கள்; நாங்களா நம்பப் போகிறோம்? ஈழத் தமிழர்கள் இந்திய அரசியல்வாதிகளை நம்பி எதிர்கொண்ட அனர்த்தங்கள் போதாதா? ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்த்து
வைப்பதாகக் கூறிக் கொண்டு தமிழினத்தை அழிக்க ஆயுதம் வழங்கும் இந்திய அரசா ஈழத்தமிழனைக் காப்பாற்றப் போகிறது? ஒருக்காலும் இல்லை.

அம்மா என்று தலை மேல் வைத்துக் கொண்டாடினோம் இந்திரா அம்மையாரை; அவர் தனது "ரா" வைத்து எமது முதுகில் குற்றி பிளவுபடுத்தினார். சோற்றுப் பார்சல் போட்டு ஊருக்குள் தனது இராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி எம் பெண்டு புரசுகளை வன்கலவி மூலம் சிதைத்து, உயிர்களை அறுவடை செய்தார் அம்மையாரின் மகன். இப்போது அவரது மனைவி தலமையிலான அரசு ஆயுதமும், அதிகாரிகளையும் அனுப்பி கொல்லுகிறது.


ஆக மொத்தத்தில் ஈழத் தமிழரைப் பொறுத்தவரை எமது இனத்தைக் கொல்லும் கொலைகாரர்களாகத் தான் இந்திய அரசியல்வாதிகளைப் பார்க்க முடியும். அப்படி ஒரு உணர்வில் இந்திய அரசியல்வாதிகளை பார்க்கும் எமக்கு ஈழத் தமிழருக்காக என் உயிரையும் தருவேன் என்று ஒரு இந்திய அரசியல்வாதி சொன்னால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்? "சரி ஐயா உங்கள் வார்த்தைகளை நம்புகின்றோம்..எங்கே எமக்காக உங்கள் உயிரைக் கொடுங்கள் பார்க்கலாம்" என்றோ "எப்படி எந்தச் சூழலில் எங்களுக்காக உங்கள் உயிரைக் கொடுக்கப் போகிறீர்கள் " என்றோ நாங்கள் கேட்க மாட்டோமென்ற தைரியமா? எங்களுக்காக என்ன வன்னி போர்க்களத்தில் ஆயுதமேந்தி உயிர் துறக்கப் போகிறீர்களா? அல்லது சாகும் வரை அஹிம்சாவழியில் உண்ணாவிரதமிருந்து அசத்தப் போகிறீர்களா? இரண்டுமே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமிருந்து ஊடகங்களில் படம் போட்டு செய்தி தரப் போகிறீர்கள்? அந்த ஒரு உண்ணாவிரதத்தை வைத்து வரும் தேர்தல் பிரச்சாரங்களில் வாக்கு சேகரிக்கப் போகிறீர்கள்...அவ்வளவு தானே?

ஒரு நல்ல அரசியல்வாதியாக இருந்து மக்களுக்கு நல்லவற்றைச் செய்தாலே போதுமே. மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, இன, மத மொழி வேறுபாடற்ற சமத்துவமான அரசை உங்கள் குடிமக்களுக்கு கொடுங்களேன். மக்களைச் சுரண்டி குடும்பத்துக்கு சொத்து சேர்க்காமல் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் வாழ்கையை அர்ப்பணியுங்களேன். ஒன்றுக்கு இரண்டு குடும்பங்களை தயாரித்து அத்தனை வாரிசுகளையும் அரசியல்வாதிகளாக்கி பணக்காரர்களாக்க வேண்டுமென்ற நோக்கத்தை தவிர்த்து தகுதியான அரசியல்வாதிகளுக்கு வழிவிட்டு , வழிநடத்திச் செல்லுங்களேன்.... இவையத்தனையையும் செய்தாலே போதுமே...திரும்ப திரும்ப அரியாசனத்தில் முடிசூடா மன்னராக நீங்கள் விரும்பும் வரை மக்கள் உங்களை தலைவராக வைத்திருப்பார்களே....அல்லாமல் ஈழத் தமிழர் பிரச்சினையை ஏனய்யா வெறும் வாயில் அவல் போல் கறிவேப்பிலை போல் கையில் எடுத்துக் கொள்கிறீர்கள்?

உங்களுடைய இத்தகைய செய்கையால் உங்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் தமிழினத்தின் மிக முக்கிய தலைவர் என்ற மரியாதையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறீர்கள். வெறும் அரசியல் நோக்கில் செயல்படும் சுயநலவாதியாகவே உங்களை கணிக்கத் தோன்றுகிறது. இன்னொரு தடவை ஈழத் தமிழர் பிரச்சினையை பேச வாய் திறக்கும் முன் நீங்கள் சொல்வதில் எத்தனை வீதம் உண்மை இருக்கும் என்று உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுவிட்டுப் பேசுங்கள். வெறும் வெற்றுத் தாளில் எழுதி வாசித்துவிட்டுப் போக ஈழத் தமிழர் பிரச்சினை ஒன்றும் நீங்கள் கதை வசனம் எழுதும் திரைப்படமல்ல, . எம்முடைய இரத்தமும், சுவாசமும், உயிரும் கலந்த உண்மை என்பதை நினைவில் வைத்திருங்கள். இன்னொரு மனிதனின் வாழ்கையும் உயிரும் அரசியல் லாபங்களின் முன் உங்களுக்கு தூசுக்குச் சமமானவை தான் என்று தெரிந்தாலும் கூட ஏதோ ஒரு உணர்வு இப்படி உரக்கச் சொல்ல வேண்டுமென்று தூண்டியது...

ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு தன்னால் சாதிக்க முடிந்ததை மட்டுமே அறிக்கை விடுவது அல்லது அறிக்கை விட்டதை சாதித்துவிட்டு மௌனமாக இருப்பது. இரண்டையும் உங்களிடம் காணக்கிடைக்கவில்லை என்பதே உங்களை எங்களால் நம்பமுடியாமல் போன காரணம்.

1 comment:

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி,

//இவர்களுடைய வெறும் வாய்களை மெல்லுவதற்க்குக் கிடைத்த அவலா ஈழத்தமிழர் பிரச்சினை?//

ஈழப்பிரச்சினையும் இனக்கலவரமும் அரசியல்வாதிகளுக்குத் தங்கள் இருப்பை வெளிப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு.

மக்களின் துன்பத்தைப் பார்த்து இவர்கள் நிஜமாகவே வருந்துகிறார்களென்றா நினைக்கிறீர்கள் ? எல்லாம் ஒரு பொய்மை, மாயை.

"என் தலைவனைப் பாருங்கடா..உங்களுக்காகவெல்லாம் குரல் கொடுக்கிறான்" எனத் தொண்டனைக் கூச்சலிட வைத்து வாக்குகளை அள்ளிக்கொள்ளும் கயமைத்தனம்தான் தற்போதைய இந்திய அரசியலில் மலிந்திருக்கிறது.

மிகச் சரியான நேரத்தில், காத்திரமானதொரு கட்டுரை சகோதரி..தொடருங்கள் !