Saturday, January 17, 2009

அகதி என்ற நிலை அகற்ற....

அகதி என்ற நிலை அகற்ற....


{நன்றி: www.tamilnation.org/art/struggle/rajan.htm (ஓவியம்) }

எந்த ஒரு மனிதப் பிறப்புக்கும் தன் சொந்த நாட்டில் வாழ்வது தான் கௌரவம்;பாதுகாப்பு. ஆனால் ஈழத் தமிழனுக்கென்று ஒரு பாழ் விதி எழுதி வைத்திருக்கிறான் கடவுள் அகதிகளாக அலைய வேண்டுமென்று. சொந்த மண்ணிலேயே வாழும் உரிமையோ, தகுதியோ இல்லாதவனாக அகதியாக்கப்பட வேண்டுமென்ற கொடும் விதி எழுதியவன் எவனோ அவனை நான் மதியேன்!

உயிர் தப்பி ஓடி வர ஈழத் தமிழனுக்கு பரப்பளவுகள் குறைந்து கொண்டே போகிறது. ஒன்று தமிழகத்தை நோக்கி ஓடி வர வேண்டும்; அல்லது இலங்கையின் கொழும்பை நோக்கி பயணிக்க முனைய வேண்டும். அகதியாக கொழும்பில் இருக்க முடியாது; அங்கே தமிழனை விரோதியாகத் தான் பார்ப்பார்களே தவிர அகதியாக புகலிடம் கொடுக்கமாட்டார்கள். ஆக..எஞ்சியிருப்பது 24 மைல் கடல் தாண்டிய தூரத்திலிருக்கும் தமிழகம் மாத்திரமே!! என்றைக்கு உயிருக்காக ஓடி வர நினைத்தோமோ அன்றைக்கே எமது நிலை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு வந்துவிட்டது என்று தெரிந்தே தான் அகதியாக ஓடி வருகிறோம்.

எங்கே தமிழன் அடித்து துரத்தப்படும் போதும் ஐயோ என்று ஓடி வருவது தமிழகத்தை நோக்கித் தான். நடுக்கடலில் உயிருக்காகத் தத்தளிக்கும் நீச்சல் தெரியாத எந்த பிறவியும் கைக்கு எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைப் பற்றி கரையேறித் தப்பிவிடத் தான் எத்தனிக்கும். அப்படியொரு சூழ்நிலை தான் எந்த ஒரு அகதிக்கும். முதலில் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்ற நிலை. தவிப்பு.. ஓடி வந்து விடுகிறோம். வந்த பின் உயிர் வாழ வேண்டுமென்றால் எத்தனை இன்னல்களையும் தாங்கித் தானாக வேண்டும். எத்தனை அவமானங்களையும் சகித்துத் தானாக வேண்டும். நாம் தான் எல்லாமிழந்துவிட்டோமே? எம்மைத் திரும்பக் கட்டியெழுப்பவோ நாம் இன்னார் என்று அடையாளம் காட்டவோ இனி என்ன இருக்கிறது, உயிரைத் தவிர...? பாழாய்ப் போன வயிறும், உயிரும் இருந்து தொலைக்கிறதே... என்ன செய்வது?

தமிழகத்தில் நாம் இருந்த காலத்தில் அகதிகளாக பதிய போலிஸ் நிலையங்கள் போன போது எத்தனை தூஷணை வார்த்தைகளை தலை கவிழ்ந்து சகித்திருப்போம். ..? தொட்டதற்கெல்லாம் மிரட்டப்பட்டு எத்தனை வருசமாக மாசா மாசம் போலீஸ்காரர் வீட்டுக்கே வந்து எங்களிடம் பணம் வசூலித்துப் போயிருப்பார்கள்? பள்ளிக் கூடத்தை விட்டு வெளியே வரும் போது டி.ஸி கூட காசு கொடுத்தால் தான் தருவேன் என்றார்கள். நீயே வைத்திரு என்று விட்டு வந்தேன். காசு இருக்கும் அகதி மட்டுமே பிழைத்துக் கொள்ளலாம். எனக்கு காசு அனுப்ப என் குடும்பம் வெளிநாட்டிலிருந்தது. நான் பிழைத்துக் கொண்டேன்; ஆனால் யாருமே இல்லாத அனாதரவான அகதிகள் எத்தனை பேர் மண்டபம் முகாமில் எத்தனை இன்னல்களுடன் இருக்கிறார்கள் என்று சொல்லிப் புரிய வைக்க முடியாது.

ஆனாலும்......

இந்தியாவைப் பொறுத்தவரை அந்த நாட்டுக் குடிமக்களுக்கே வேலை வாய்ப்புக் கிடைப்பது கேள்விக் குறியாக இருக்கும் போது எமக்கு வேலை வாய்ப்பு தரவில்லை என்று நாம் புறணி அழக்க மாட்டோம்; அங்கன கிடைக்கும் கூலி வேலைகள் செய்யத் தான் நாம் லாயக்கு. அல்லது சுய தொழில் செய்யலாம்..தையல், கூடை பின்னல், அப்பளம் போடுதல் என்று சில அகதிகள் தமது குழந்தைகளை படிக்க வைக்க சுய தொழில் செய்கிறார்கள் என்று பத்திரிகையில் படித்திருக்கிறேன். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அகதிகளாக வந்த ஈழத்துக் குழந்தைகள் பலர் நன்றாகப் படித்து , திறமையின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறார்கள் என்றும் அறியக் கிடைப்பதில் பெருமைகலந்த சந்தோஷம்.. இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்?; பரவாயில்லை...அந்தளவாவது படிப்படியாக முன்னேறட்டும்.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரை தமிழ் நாட்டில் குண்டு மழை பயம் கிடையாது; ஆமிக்காரன் வந்து அப்பாவையோ அண்ணன் தம்பியையோ சுட்டுப் போடுவான்; அல்லது கொண்டு போய்விடுவான் என்ற கவலை கிடையாது; அம்மாவையோ , அக்கா தங்கச்சியையோ வன்கலவியில் புணர்ந்து, சிதைத்து , சித்திரவதை செய்வானோ என்ற அச்சம் இல்லை. அந்தளவில் ஆத்மாவின் தேறுதல் கிடைப்பதில் நன்றி சொல்ல வேண்டும்..

ஆனாலும்.......

இன்னும் எத்தனை காலம் நாம் அகதிகளாக அந்த ஆழ்கடலில் தோணி ஏறி புலம் பெயர்வது? தமிழக மண்ணும் மக்களும் இன்னும் எத்தனை ஈழத்து அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பது? இந்தக் கேள்விக்கு ஒரு முற்றுப் புள்ளியுடனான சரியான தரவு கிடைத்தாலன்றி அகதி என்ற நிலைப்பாட்டை நடைமுறையிலிருந்து அகற்ற முடியாது. தமிழக மக்களின் மனிதாபிமானம் எத்தனை அகதிகளையும் வரவேற்கும்;

ஆனாலும்.............

எப்போது எமக்கான சுயம் கிடைக்குமோ அப்போது தான் அகதி என்ற வார்த்தை தமிழினத்தின் வரலாற்றிலிருந்து அகற்றப்படும். கற்பனை செய்து பாருங்கள்..அகதிகளாக தமிழகம் வருவதை விட , சுதந்திரமானவர்களாக தொப்புள் கொடியுறவுகளிடம் வரும் போது ஈழத் தமிழனுக்கு எத்தகைய ஆத்ம திருப்தி கிட்டும் என்று??. அந்த சந்தோசத்தின் அளவீடு என்பதே தனித்துவமானதாயிருக்கும்.

எப்போது தமிழினம் தன் சொந்த மண்ணில் சுதந்திரமாக சுவாசிக்க முடியுமோ அப்போது தான் அகதி என்ற நிலைபாடு எம்மை விட்டுப் போகும்.

அதற்கான வழிமுறையை ஈழத் தமிழன் அமைக்க முற்பட்டால் தடைக்கல் ஏன் மற்றவர்கள் போட நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு தார்மீகமான , மனிதாபிமான, உணர்வுமிகுந்தவர்கள் நியாயமான பதில் தரமுடியுமா? :(

நன்றி : ஓவியத்திற்கு - www.tamilnation.org/art/struggle/rajan.htm
படம் 1- http://arivazhagan1981.blogspot.com
படம்2- http://www.geotamil.com/pathivukal/world_refugee_day.htm

No comments: