Saturday, January 17, 2009

உண்ணா விரதம் - அன்றும்..இன்றும்.!!



உண்ணா விரதம் - அன்றும்..இன்றும்.!!



இப்படி ஒரு உண்ணா விரதத்தில் தான் எங்கள் சகோதரன் திலீபனை பறிகொடுத்தோம். 1987 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் 26 ம் நாளை எந்த உணர்வுள்ள ஈழத் தமிழனாலும் மறக்க முடியாது. எந்த ஈழத் தமிழனாவது இன்றைக்கு இந்தியாவின் அரசியல்வாதிகளை மன்னிக்க தயாராகவில்லை என்றோ எந்த இந்திய அரசியல்வாதிகளையும் நம்ப மறுக்கிறான் என்கிறானோ அவனுடைய ஆழ்மனதில் திலீபனின் மரணம் முதலாவது காயம்;இராஜிவ் காந்தியின் நம்பிக்கைத் துரோகம் அடுத்த காரணம்; இன்னும் பட்டியல் நீண்டு கொண்டு தான் இருக்கின்றதே தவிர எக் காரணத்தை முன்னிட்டும் எந்தக் காலத்திலும் குறையவில்லை.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் உயிர்ப் பறாவை அடங்கிக் கொண்டிருப்பதையும் அன்றைக்கு 1987-செப்டம்பர் 26ம் திகதி அந்த இளைஞனின் உயிர் முற்றிலுமாக பிரிந்ததையும் பக்கத்தில் இரக்கமின்றி, கை கட்டி நின்று விண்ணானம் பேசிக் கொண்டு, வேடிக்கை பார்த்த இந்திய , இலங்கை அரசியல்வாதிகளையும் தூதுவர்களையும் பார்த்தவர்கள் நாங்கள். தலைப்புச் செய்திகளாக ஊடகங்களில் சர்வ சாதரணமாக அரிதாரம் பூசிய அறிவிப்பாளர்கள் வாசித்துவிட்டுப் போக தலையிலடித்துக் கதறியவர்கள் நாங்கள். இன்னும் அந்தக் காட்சிகளை இந்தக் கணம் வரை எங்களால் மறக்க முடியவில்லை. எங்கள் உயிர் போய் உடல் சாம்பராகும் வரை திலீபனின் உயிர் அடங்கிய காட்சியை மறக்கவே முடியாது. உலகமே பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளைஞனின் அஹிம்சை வழிப் போராட்டத்தை அஹிம்சைக்கு பெயர் பெற்ற நாட்டின் அதிகாரமே தோற்கடித்தது.

“சிந்திய குருதியால்

சிவந்த தமிழ் மண்ணில்

சந்ததி ஒன்று

சரித்திரம் படைக்க….

முந்திடும் என்பதால்….

முளையிலே கிள்ளிட…..


சுpந்தனை செய்தவர்


சிறுநரிக் கூட்டமாய்….

‘இந்தியப்படையெனும்’

பெயருடன் வந்தெம்

சந்திரன் போன்ற…


திலீபனின் உயிரைப்


பறித்திட எண்ணினால்…..

பாரிலே புரட்சி…..


வெடித்திடும் என்று….


வெறியுடன் அவர்களை…..


எச்சரிக்கின்றேன் !”


திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதத்தின் 8 ஆம் நாள் அங்கு வாசிக்கப்பட்ட கவிதை இது...

எத்தனை கண்ணீர் வடித்தோம்? எத்தனை எச்சரிக்கை மணிகள் அடித்தோம்? எத்தனை எத்தனை பிராத்தனைகள்? அவனைச் சூழ்ந்து இருந்த அத்தனை ஈழத் தமிழர்களின் கண்களிலும் தாரை தாரையாக வடிந்த ஒவ்வொரு கண்ணீர் துளிகளுக்கும் இந்திய அரசும் , இராஜிவ் காந்தியும் பதில் சொல்லித் தானாக வேண்டும். ஒரு வரலாற்றுக் குற்றத்தை நிகழ்த்திய பேரரசு இன்றைக்கும் அஹிம்சையை போர்வையாகப் போர்த்தி நாடகம் போடுகிறது. அதன் முகமூடியிலும், போர்வையிலும் தான் எத்தனை எத்தனை பொத்தல்கள்? ஆனாலும் எதுவுமே நடக்காதது போல் இறையாண்மை பேசுகிறது. அஹிம்சை என்றால் அரங்கத் திரைக்குப் பின்னால் ஆயுதம் விற்கலாமாம். இந்த விசயம் தெரியாமல் திலீபன் வீணாக உயிரை விட்டுவிட்டானோ? அவனுடைய சாவும் விழலானதோ? அவன் வலிந்து வரவழைத்த அவனுடைய சாவு எமக்கானதன்றோ? அதை நாம் விழலாகிப் போக விடலாமோ?


சிங்கள அரசுகளுக்கு அகிம்சை , சாத்வீகம் என்பதைப் பற்றிய அறிவை எதிர்பார்த்தால் நாம் தான் முட்டாள்கள். ஆனால் உலகுக்கே அகிம்சையை சாதித்துக் காட்டிய மகாத்மா காந்தியை தெய்வம் என்று போற்றுகின்ற தேசமாயிற்றே...அத்தகைய தேசத்தின் அரசு ஒரு இளைஞனின் அகிம்சைப் போராட்டத்தை கவனத்தில் எடுக்காமலா போகும் என்று இந்தியா மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த அத்தனை ஈழத் தமிழர் மட்டுமல்ல இந்தியாவின் அகிம்சா தத்துவத்தை நம்பிய மற்ற இனத்தவரும் திலீபனின் உயிர் பிரிந்த அந்தக் கணமே இந்தியாவின் பாசாங்குகளில் ஒன்றாகவே அகிம்சை என்ற கொள்கையையும் பட்டியலிட்டுக் கொண்டனர்.

திலீபன் அண்ணா சாவை நெருங்கிய போது எம்மீது நம்பிக்கை வைத்து சொல்லிவிட்டுப் போனதை அவ்வளவு விரைவில் மறந்துவிடுவோமா?

"என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். ...... நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான்.
வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்" 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" -

திலீபன் அண்ணாவின் அந்த வார்த்தைகள் மிகச் சரியானவை; எம்மை நம்பி எம்மிடம் அவன் விட்டுச் சென்ற பணியை முடிக்க நாம் தான் முயல வேண்டும். இந்தியா என்ற நடிகர்கள் நிறைந்த அரசாங்கங்கள் எமக்கு எதுவும் செய்யப் போவதில்லை. அங்கிருக்கும் அப்பாவி தமிழ் இன உணர்வாளார்களின் ஆவேசக் குரல்கள் அவர்கள் களைப்படைந்து ஓய்ந்தாலும் , மாய்ந்தாலும், மாண்டாலும் அரசு கண்டு கொள்ளப் போவதில்லை. இது எமக்குத் தெரியும்.

ஆனால் .....

இப்போது இன்னொரு சகோதரர் அதே அஹிம்சை வழியில் தனது அரசு அதிகாரத்திடம் நியாயம் கேட்கிறார். இறையாண்மை , அஹிம்சை என்ற முகமூடிகளுடன் பல்லிளிக்கும் இரக்கமற்ற அரசியல் பகடை விளையாட்டுக்காரர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கிறார்; செயல்வீரர்களுக்கு உயிர் ஒரு பொருட்டல்ல தான்.ஆனால் உயிரோடு இருந்தால் தானே எந்த ஒரு செயலையும் அர்த்தமுள்ளதாக்க முடியும். இன்று தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினரின் நிலையும் ஈழத் தமிழரின் நிலையில் தான் இருக்கிறது. அவர்களுக்கும் எமக்கும் இந்த சகோதரன் கட்டாயம் வேண்டும். கவலையாக இருக்கிறது அவரை நினைக்கும் போது..! :(


நன்றி : மூனா அண்ணா (திலீபன் அண்ணாவின் ஓவியம் )
http://www.tamiloosai.com (திலீபன் அண்ணா உண்ணாவிரதப் படங்கள் )
http://thooya.blogspot.com (திருமா உண்ணாவிரதப் படங்கள்.)

No comments: