Tuesday, February 24, 2009

வெள்ளை மாளிகை முன் இரத்தம் சிந்தும் ஒரு இனத்துக்காகஈழத்தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ளை மாளிகை முன்னான மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்குப் போகும் போது மனதில் நினைத்து, திட்டமிட்டுப் போனவை என்னென்னவோ அவை எதுவும் பேரணியின் போதும் சரி , முடிந்து வீடு வந்த பின்னும் சரி நான் செய்யவில்லை. பேரணியைப் பற்றிய என்னுடைய பதிவு கூட எல்லோரும் அதைப் பற்றி மறந்து வேறு அரசியல் அல்லது பேரணிகள் பற்றிய கவனத்தைத் திருப்பிய பின் தான் எழுத முடிகிறது.

இரு வாரங்களுக்கு முன்னேயே என் கணவர் தனது வேலையில் அன்றைக்கான ஓய்வு எடுத்திருந்தார். பிள்ளைகளுக்கும் அந்த வாரம் முழுவதும் பள்ளி விடுமுறையாக இருந்ததால் அதுவும் வசதியாகவே இருந்தது என்று நிம்மதிப்பட முடியாமல் குளிர் பயமுறுத்தியது. அந்த நேரம் பார்த்து முதலில் அஷ்வத்தாமாவுக்கும் எனக்கும் காய்ச்சல் வந்தது. என்னுடைய காய்ச்சலைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை... நோயும், மருந்தும் வாழ்கையில் எனக்கு மூன்று வேளை சாப்பாடு போல் இயல்பானதாகிவிட்டதால். ஆனால் அஷ்வத்தாமாவின் காய்ச்சல் யோசிக்க வேண்டிய ஒன்று. எப்படியோ 2 நாளில் அஷ்வத்தாமாவுக்கு காய்ச்சல் குறைய அடுத்து வழமை போல் தம்பிக் குட்டிக்கு தான் வருமென்று எதிர்பார்த்தால் வழக்கத்திற்கு விரோதமாக என் பிராண்நாதர் செவ்வாய்க்கிழமை இரவு இருமிக் கொண்டு வந்தார்; நடு இரவில் ஐய்யோ அம்மா அச்சச்சோ அம்மா என்று முனகல்...தூக்கி தூக்கிப் போட காய்ச்சல் உச்சத்தில் அவரை உதறித்தள்ளிக் கொண்டிருந்தது. இது என்னடா வெள்ளை மாளிகைக்கு வந்த சோதனை என்று (எத்தனை நாளைக்கு தான் மதுரைக்கு வந்த சோதனையை பயன்படுத்துவதாம்)எனக்கு வெறுத்துப் போனது.

19ம் திகதி இரவு அடுத்த நாள் 20ம் திகதி அதிகாலை ஐந்தரை மணிக்கு பேருந்து நிற்குமிடத்துக்கு வரச் சொல்லி எமது பகுதியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பிரதாபன் நினைவூட்டிய போது கூட எனக்கு சந்தேகமாகவே இருந்தது குடும்பமாக பேரணிக்கு போக முடியுமா என்று. உடல்நிலை சரியில்லாதவரை வற்புறுத்துமளவுக்கு எனக்கு மனமில்லை. அதனால் அவரிடம் சொல்லிவிட்டேன்...

"உங்களால் முடியாவிட்டால் பரவாயில்லை ...நீங்களும் பிள்ளைகளும் நில்லுங்கோ..நான் மட்டும் போய்ட்டு வாரேனே?"

"பார்ப்பம்...இப்ப மருந்து போட்டிருக்கிறேன்....சரியாகிடும்... இல்லையென்றால்.. பஸ்ஸுக்குள் வந்து கிடக்கலாம்.." என்ற போது அவரை நம்ப முடியாமல் பார்த்தேன்... !

மற்ற நேரங்களில் என்றால் தனது தூக்கத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டார். அப்படியே அவரை வற்புறுத்தி எங்காவது அழைத்துப் போனால் கூட இரண்டு நாளுக்கு அந்த குறைபாடு இருக்கும். ஆனால் இன்று இத்தனை உடல்நலக் குறைவிலும் அவர் தன்னுடைய பங்களிப்பை அங்கு கொடுத்தேயாக வேண்டுமென்று தானாகவே அவர் நினைத்தது மனதுக்குள் பெருமையாக இருந்தது.

இந்த சுய புலம்பல் எதற்காக என்று பலருக்கு சந்தேகமாக இருக்கலாம். இது ஒரு உதாரணம்...!

ஆம்... அன்று அந்தப் பேரணியில் கலந்து கொண்ட அத்தனை தமிழ் மக்களிடமும் இப்படி ஏதாவது ஒரு வரவேற்கத்தக்க மாற்றத்தையும், மனம் ஒன்றிய முழு ஆதரவையும் காண முடிந்தது. இதே போல் நான் அமெரிக்கா வந்த புதிதில் இப்படி ஒரு கவனயீர்ப்பு ஒன்று கூடலுக்கு வெள்ளை மாளிகை முன் வந்ததற்கும் இம் முறை வந்ததற்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. அதிகப்படியான மக்களின் வருகையும் ஆதரவும் இந்த தடவை செறிந்திருந்தது மட்டுமல்ல.. அக்கறையும், திட்டமிடலும், நேர்த்தியும் , கட்டுப்பாடான நடத்துதலும் கூட இங்கே பாராட்டுதலுக்குரியதாகியிருந்தது.எம் மக்கள் எந்த நிகழ்வுகளுக்கும் நேரத்தோடு போகும் வழக்கம் இல்லை. 7 மணி விழாவுக்கு 9 மணிக்கு வருபவர்களே அதிகம். அதனாலேயே ஏதாவது விழாவை 6 மணிக்கு தொடக்க வேண்டியிருந்தால் 4 மணிக்கு விழா என்று எல்லோரிடமும் சொல்வது வழக்கம். ஆனால் இந்தத் தடவை நாம் பேரூந்து நின்ற இடத்துக்கு 5;40 க்குப் போன போது 2 பேரூந்துகளில் மக்கள் ஏற்கனவே அமர்ந்திருந்தார்கள்.

இம்முறை கட்டுப்பாடோடும், நேர்த்தியாகவும் எவ்வித தடங்கலும் இல்லாமல் ஒன்று கூடல் நடந்து முடிந்ததற்கு முக்கிய காரணம் கூட மக்களின் மனமொத்த ஒத்துழைப்புத் தான் என்று சொன்னால் மிகையாகாது.

3 பேரூந்துகளும், ஏறக்குறைய 15-20 சொந்த வாகனக்காரருமாக வாஷிங்டன் பயணப்பட்டோம். பாதி வழியில் போய்க் கொண்டிருந்த போதே அங்கு ஏற்கனவே வந்திருந்தவர்கள் அலை பேசிவழியாக எமது ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு எச்சரிக்கை கொடுத்துவிட்டார்கள்.

"இங்கே ஒரு பக்கத்தில் சிங்கள ஆட்களும் வந்து நின்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எமது ஒன்று கூடலில் இடையூறு விளைவித்து எமது நோக்கத்தை திசை திருப்பி ஒன்று கூடலை கலைப்பது தான் அவர்கள் நோக்கம் என்பது அவர்கள் நாம் வரும் போதும் போகும் போதும் போடும் கோஷங்களில் இருந்து தெரிகிறது. அதனால் நீங்கள் வரும் போது அவர்கள் எப்படி கத்தினாலும் காதில் வாங்காமல் ஒன்று கூடும் இடத்துக்கு அமைதியாக உங்கள் மக்களை அழைத்து வாருங்கள். நாம் எதற்காக வந்தோமோ அதை எமது வழியில் செய்ய வேண்டும். அது தான் எங்களுடைய இன்றைய கடமை" என்று படித்து படித்து பெரியவர்கள் பேரூந்தில் வந்த கொஞ்சம் கொதிப்பான இளைஞர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களும் தலையாட்டிக் கொண்டிருந்தாலும் மனதுக்குள் அனைவருக்கும் கொஞ்சம் திகில் தான்...

இளைஞர்களின் உணர்ச்சிவசப்படுதல் என்பது எந்த வடிவில் எந்த நேரத்தில் வெடிக்கும் எந்த நேரத்தில் அமைதியாக குமுறிக் கொண்டிருக்கும் என்று கணிக்க முடியாது. பெரியவர்களாகிய எம்மாலேயே பல சந்தர்பங்களில் அடக்க முடியாத உணர்ச்சிப் போராட்டமாகவே தற்போதைய ஈழத்தமிழர் பிரச்சினை இருக்கும் போது இளைஞர்களை அடங்கிப் போ என்று சொல்லும் போதே சரியான முறையில் அதை அவர்களிடம் சேர்ப்பிக்கிறோமா என்ற சந்தேகமும் வலுத்தது.

அதுவும் இணையத்தில் இரத்தமும் சதையுமாக சிதறிப் போய்க் கிடந்த குழந்தைகளையும், எம் மக்களையும் பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் மனதுக்குள் மாகாளியின் உக்கிரத் தாண்டவத்தின் தகிப்பை நானே எனக்குள் அனுபவித்திருக்கிறேன். எத்தனையோ நாள் சாப்பிட முடியாமல் உழன்றிருக்கிறேன். அந்த வாழையிலையில் சிதறிய உடலோடு வைத்திருந்த அந்தக் குழந்தையை பார்த்தால் அச்சு அசலாக என் இளைய மகன் அச்சுதனை பார்ப்பது போல் இருக்கிறது. அந்தக் குழந்தையின் பெற்றவர்களின் நிலையை கற்பனையில் கூட என்னால் யோசித்துப் பார்க்க இயலவில்லை. விம்மி விம்மி அழுதிருக்கிறேன். இரண்டு தடவை அறிவு கெட்டு மயங்கி விழுந்தும் போனேன். அப்படி எனது நிலமையே இருக்குமானால்...மற்றவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

அப்படி ஈழத்தில் நடப்பதை இம்முறை " யாருக்கோ நடக்கிறது; நமக்கென்ன. கடவுளேயெண்டு நாம் தப்பி இங்கால வந்திட்டோம் என்று அலட்சியமாக இருக்க முடியவில்லை எவராலுமே...

"அங்கே செத்துக் கொண்டிருக்கிறதுகள் எங்கட சனம்; எங்கட இனம்; அதுகளை காப்பாற்ற எங்களால முடியேலை எண்ட இயலாமையுணர்வோடு ஒவ்வொரு நாளும் சாப்பிடும் சாப்பாடு செரிக்காது; உடம்பில சுவராது. இந்தளவிலாவது எங்கட உணர்வுகளை வெளிப்படுத்தாட்டில் நாங்கள் என்ன தமிழர்?" என்ற உணர்வு இந்த தடவை சிறியவர் பெரியவர் என்று பேதமில்லாமல் எல்லோரிடமும் கனன்று கொண்டிருந்ததை கண் கூடாகப் பார்க்க முடிந்தது.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்....முன்பெல்லாம் இங்கு பிறந்த எம் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு நாகரீகமும், நுனி நாக்கில் ஆங்கிலப் பாட்டுமாக வெகு உல்லாசமான பிறவிகளாகத் தான் உலாவந்தார்கள். ஆனால் அதே பிள்ளைகள் தான் இம்முறை எம்மைவிட மிகவும் அக்கறையாக பங்காற்றினார்கள். அவர்கள் பேசும் தமிழ் மழலைகளின் உச்சரிப்பாக இருந்தாலும் கூட அந்த எமது இனம் இழிநிலையில் துன்புற்று செத்து மடிகிறதே என்ற ஆதங்கம், ஆத்திரம், ஆவேசம் என்ற கலவையான , கவலையான உணர்வு பெரும் தகிப்பாகவே அவர்களிடம் இருந்தது.
ஒருவகையில் அவர்களிடமும் எமது போராட்டத்தின் சாயலை பார்க்க முடிந்தது.

பேர்ள் ஆக்சன் http://www.pearlaction.org/ என்னும் அமைப்பு ஈழக் குழந்தைகளால் தான் இங்கு நடத்தப்படுகிறது. அந்த அமைப்பில் சேர்ந்திருக்கும் அத்தனை குழந்தைகளும் தமது சேமிப்புப் பணத்திலேயே பதாகைகளுக்கும், டி-சர்ட்டுகளுக்கும் செலவு செய்து தமது கைகளாலேயே எல்லாவற்றையும் வடிவமைத்து முடிந்தளவு கொஞ்சப்பேருக்கு வழங்கினார்கள்.

அந்த வகையில் எனது வாழ்விடப் பகுதியான ஸ்டேட்டண்ட் ஐலண்ட்டைச் சேர்ந்த குழந்தைகளான அஞ்சனா முருகதாஸ், சஜன் முருகதாஸ், ஜொஸிக்கா கணேசமூர்த்தி, ரசிக்கா வசந்தகுமார், ஆதவி சுகந்திராஜ் போன்றவர்களை நான் பாராட்டித்தானாக வேண்டும். இவர்களைப் போல் மற்ற பிராந்தியங்களிலும் பல குழந்தைகள் தமது கடமைகளை செய்தார்கள். அவர்கள் பெயர்கள் தெரியாவிட்டாலும் அவர்களுக்கும் எமது நன்றியும், பாரட்டுகளும் உரித்தாகுக.

முக்கியமாக பேர்ள் ஆக்சன் அமைப்பின் முக்கியமான உறுப்பினரான வள்ளி சன்முகலிங்கம் என்ற இளம் பெண்ணை இந்த இடத்தில் நான் குறிப்பிட வேண்டும். என்னவொரு நிதானம்; எத்தகைய சுறு சுறுப்பு; மிகப் பெரிய பொறுப்புகளைக் கூட பதட்டப்படாமல் இலாகவமாக கையாளும் திறன். பாரட்டுக்குரிய பெண். அவருடைய ஒவ்வொரு செயலிலும் தெரிந்த அக்கறை உணர்வு பூர்வமானது; அர்ப்பணிப்பு என்பதன் முழுமையான அர்த்தத்தை அவரிடம் காணலாம். அந்தப் பெண் ஒரு இடத்தில் அமைதியாக நின்று நான் பார்க்கவில்லை அன்று முழுவதும்.

அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனதுக்குள் சிறிய ஏக்கம் ... அவளைப் போல் ஓடியாடி நானும் பாடுபட வேண்டும் என்று ... முடியவில்லை. காலைக் கட்டிக் கொண்டு நின்ற என் இரு பிள்ளைகளையும் அகற்றி ஒரு இடத்தில் இருத்திவிட்டு எந்த வேலையிலாவது ஈடுபடுத்த முடியுமா என்ற எத்தனிப்புக்குக் கூட என்னால் இயலவில்லை. ஒரு நிமிடம் அப்படி கண்ணை திருப்பினால் கூட இவர்கள் இருவரும் காணாமல் போய்விடுவார்கள் போல் இருந்தது. தோலை உறைய வைத்த குளிர்...எத்தனை பெரிய அங்கிக்குள்ளும் ஊடுருவி வந்து துளைக்க அதில் சினந்து போய் சிணுங்கிய படி இருவரும் என்னை எதிலுமே ஈடுபட அனுமதிக்கவில்லை.... என்னுடைய ஆத்மாவை உணர்வு பூர்வமாக வள்ளியிடம் ஒப்படைத்துவிட்டு வெறும் கூடாக தான் என்னால் அங்கு நிற்க முடிந்தது. நான் நினைக்கிறேன் என்னைப் போல் பலரின் ஆத்மாக்கள் அன்று வள்ளியிடம் போய் சேர்ந்திருக்குமென்று....

எமது பேரூந்து ஒன்று கூடல் நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்த போது பகல் 11 மணியாகியிருந்தது. முன்பு எம்மவர்கள் எச்சரிக்கை தந்தது போலவே நாம் பேரூந்திலிருந்து இறங்கி வரும் வழியில் சிங்கள இனத்தவர் நின்று எமக்கெதிரான கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அவற்றில் மிக முக்கியமான கோசம் "Tamils are terrorists" ! எனக்குள் சிரித்துக் கொண்டேன். அந்தக் கோசத்தின் மூலம் அவர்கள் தமது இன விரோதத்தை எத்தனை தெளிவாக வெளிக்காட்டுகிறார்கள் என்று.

தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றால் சிங்கள் இனத்தவர் அனைவரும் அஹிம்சாவாதிகளா; அப்படியானல் சிங்கள அரசும் அந்த அரசின் இராணுவமும் தமிழினத்தை அழிப்பதை சரியென்று இவர்கள் கோசம் போடுகிறார்களா? தமிழர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தானா? அதைத்தானே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? இந்தக் கோசம் அதைத் தானே நிரூபிக்கிறது? இப்படியொரு மனோபாவம் இருக்கும் மக்களுடன் எப்படி எம்மால் இணைந்து வாழ முடியும்? நாம் இவர்களுடன் தான் இணைந்து வாழ வேண்டுமென்று எப்படி வெளிச்சமூகம் எம்மை அழுத்தம் கொடுக்க முடியும்? யார் அவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்தது?

ஈழத்தமிழரின் கவனயீர்ப்பு ஒன்று கூடலுக்கு அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்தும் அன்று தமிழ் மக்கள் வந்திருந்தனர். அமெரிக்காவிலிருந்து வந்த அத்தனை மக்கள் தொகையையும் விஞ்சுமளவுக்கு கனடாவிலிருந்து பெருவாரியான தமிழ் மக்கள் வந்திருந்தனர். இத்தறிக்கும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேரூந்துகளில் சராசரியாக 10 பேரூந்துக்களை உள்ளாளும் கள்ளாளுமாய் நடந்த சதியில் வரமுடியாமல் வகை செய்திருந்தது கனடாவிலிருந்த இலங்கைத் தூதரகம். ஆனாலும் கூட வேறு பேருந்துகளில் ஏறி வாஷிங்டனுக்கு வந்தனம் எம்மவர்; போராட நினைத்து களம் புகுந்த பின் தடைகள் தாண்டுவதே தமிழரின் அதி முக்கிய முதல் அலுவல் என்பது எதிரிக்கு புரியாமல் போனது வேடிக்கைக்குரியது தான்...! எத்தனையோ இடர்களையும், தடைகளையும் கடந்து வந்த எம் சோதரருக்கும் சோதரிகளுக்கும் தலை தாழ்த்தி வணக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

அங்கு வந்திருந்த மக்களில் பலர் சக்கர நாற்காலியில் வந்திருந்த முதியோர்களும், குழந்தைகளும், நோயாளிகளும் கூட அடங்குவர். கால் கை வழங்காத ஒரு இளம் பெண் சக்கர நாற்காலியில் தனது வெள்ளைக்கார தாதியுடன் வந்திருந்தார். அதே போல் போஸ்டன் மாநகரில் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதமிருக்கும் 14 வயது பெண்ணும் அங்கு வந்திருந்தார் என்ரு சொன்னார்கள். ஆனால் என்னால் கடைசி வரை அவரை பார்க்க முடியவில்லை. மிகவும் மெலிந்தும் சோர்ந்தும் போய் இருந்ததாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.

வரும் போதே தமிழினி, சங்கர் அண்ணா, சிநேகிதி, கேப்பிட்டல் ஆகியோரின் அலை பேசி எண்களுடன் தான் வந்தேன். எப்படியாவது இவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் பேரூந்தில் ஏறிய கணத்திலிருந்து மேலிட்டுக் கொண்டேயிருந்தது. விஜியின் சுதன் கூட பேரணிக்கு வரலாம் என்று விஜி சொல்லியிருந்தார். ஆனால்...அங்கு வந்து இறங்கிய நேரம் தொட்டு முடியும் நேரம் வரை என்னால் யாரையும் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. முதலாவது காரணம் என்னிடம் அலை பேசி இல்லை. இரண்டாவது காரணம் இன்னொருவரிடம் அலைபேசி கடன் கேட்டு வாங்க வேண்டுமே என்ற தயக்கம். தெரிந்தவர்கள் பக்கத்திலிருந்தால் கேட்டு வாங்கலாம்.. ஆனால்... அக்கம் பக்கம் எல்லோரும் அறிமுகமில்லாத முகங்கள். மூன்றாவது காரணம் மிக வலுவான சத்தத்துடனான கோஷங்கள், அந்தக் கோஷங்களுடன் ஒன்றிப் போய் நாமும் தான் குரல் கொடுத்துக் கொண்டு நின்றோம். நிகழ்வுகளை படம் எடுத்துக் கொண்டும் இருந்தேன், வீடியோ உட்பட ! குளிர் ஒரு புறம். குழந்தைகள் இருவரும் இன்னொரு புறம்; என் பிரண்நாதரை கூட்டத்தில் வேறு தொலைத்துவிட்டேன்... (அது மிகப்பெரிய சங்கடம்... அவர் இருந்திருந்தாலாவது பிள்ளைகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நான் ஏதாவது பிரியோசனமாக செய்திருக்கலாம்.) 11;30 மணிக்கு காணமல் போனவரை திரும்பக் கண்டுபிடித்தது 3:00 மணிக்கு தான். அவர் ஊர்வலமாக ஹில்லாரி கிளிண்டன் அலுவலகத்துக்குப் போன 200 பேருடன் ஒருவராக போய்விட்டு வந்திருந்தார். அதற்குள் பிள்ளைகளுக்கு இயற்கை உபாதை அளிக்க அவர்களை பக்கத்திலிருந்த கட்டிடத்தின் கழிவறைக்கு அழைத்துப் போய் ஆசுவாசப்படுத்திவிட்டு அழைத்து வரும் வழியில் வயதான ரஜனிகாந் தோற்றத்தில் ஒருவர் தொப்பியுடன் வந்து "சுவாதி" என்றார் புன்னகையுடன்.

ஒரு கணம் திகைத்துத் தான் போனேன். ஆனால் அடுத்த நொடியே புரிந்துவிட்டது என்னை சுவாதி என்பவர்கள் குழுமத்து நண்பர்கள் தான். அதனால் இவர் கட்டாயம் சங்கர் அண்ணா தான் என்று. ஆனாலும் எப்படி இத்தனை பேருக்குள் என்னை முன் பின் பார்க்காதவரால் கண்டுபிடிக்க முடிந்தது என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்து பேச நா வரவில்லை. "ஓ டொக்டர் அண்ணா..?" என்று ஏதோ குளறினேன்.. அதில் பாதி தான் அவருக்கு விளங்கியிருக்கும்... :):)

"எப்பிடியண்ணா கண்டுபிடிச்சீங்கள்...?
"நான் நம்பும் கடவுள்.. ம்ம்ம் அஃப்கோர்ஸ் நீங்கள் நம்பாத கடவுள் ஆசீர்வாதத்தால பார்த்தாச்சு " என்றார் புன்னகையுடன்.

அடக் கடவுளே இந்த நேரம் பார்த்து என் பிராண்நாதர் எங்கே போனார் என்று இருந்தது. ஏன் என்றால் சங்கர் அண்ணா அவரிடம் தனது சந்தேகம் சிலதை நேரில் கேட்கவேண்டுமென்று குழுமத்தில் ஒரு இழையில் எழுதியிருந்தார்.. என் கணவர் அதற்கு என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்று நான் கேட்க வேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தேன்.. முடியாமல் போனதில் எனக்கு சிநேகன் மேல் மிகவும் ஆத்திரம் தான். :):)

எப்படியும் இன்னொரு தடவை சந்தித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் விடை பெற்றேன். ஆனால் கடைசிவரை முடியவில்லை.... எதை காரணம் காட்டுவது என்று புரியாவிட்டாலும் காலநிலையும், மனநிலையும் தான் முக்கிய காரணமாக இருக்கும். வான் புலிகளின் தாக்குதல் செய்தி காட்டுத்தீ போல் அந்த நேரம் கிடைத்ததில் ஒரு வித உவகையும், சரியான முழு விபரம் தெரியாத படியால் இன்னொரு புறம் பதற்றமும் மக்களிடம் தெரிந்தது.

இணையத்தில் பார்க்காமல் தவிர்த்த எத்தனையோ கொடுமையான கோரமான படங்களை பதாகைகளாக பெரியளவில் பார்க்க நேர்ந்த போது மனதை என்னவோ செய்தது. வெள்ளிக்கிழமை என்பதால் எதுவும் சாப்பிடவில்லை; பசி யில் சோர்ந்து போனதுமல்லாமல் என்னுடைய ஆஸ்துமாவும் சேர்ந்து கொள்ள , என் நிலமை புரிந்து கொள்ளவியலாத குழந்தைகள் "அம்மா குளிருது, குளிருது " என்று சிணுங்க அந்த நேரம் பக்கத்தில் உதவிக்கு இல்லாமல் வேறு எங்கோ போய்விட்ட சிநேகன் மீது கொஞ்சம் ஆத்திரம் அதிகமாகவே வந்தது. ஒரு வழியாக அவரை தேடிப் பிடித்த போது அந்த ஆத்திரத்தைக் காட்ட முடியவில்லை. மாறாக பாவமாக இருந்தது. முகம் எல்லாம் எங்கேயோ யாரிடமோ அடிவாங்கியது போல் சிவந்து வீங்கியிருந்தது... காய்ச்சல் திரும்ப வந்திருந்தது. சோர்வும், வலியும் வேதனையாக தெரிந்தது. எங்கேயும் குளிருக்கு இதமாக ஒதுங்க முடியாமல் வெட்ட வெளியாக இருந்த மைதானத்தில் மாலை நேரமாகத் தொடங்கியதால் இன்னும் சற்று அதிகமாகவே காற்றும் குளிரும் வீசி உடலை வலியெடுக்க வைத்தது. அந்தக் குளிரிலும் அச்சுதன் அழுது கொண்டே தூங்கிப் போனார். பிள்ளைகளின் உதடுகள் பாளம் பாளமாய் வெடிக்கத் தொடங்கி சிவப்பாக இரத்தம் பிசுபிசுத்தது மனதுக்கு கஷ்டமாகத் தான் இருந்தது.

"இந்த சின்னப்பிள்ளையளை கொண்டு ஏன் ராசாத்தி வந்தனியள் ?"என்று கனடாவிலிருந்து வந்த வயதான மூதாட்டி ஒருவர் கேட்ட போது பதிலேதும் சொல்லாமல் வேதனையுடன் புன்னகைக்க தான் முடிந்தது.

எல்லோரிடமும் "ஏதோ அங்க செத்துக் கொண்டிருக்கிற எங்கட சனங்களுக்கு எங்களால இந்தளவாவது குரல் குடுக்க முடியுதே " என்ற அக்கறையும், உணர்வும் மிகுந்திருந்தது. அந்த உணர்வு தான் அத்தனை குளிரையும் அலட்சியம் செய்து எங்களையும் அங்கு நிற்க வைத்தது. இது தான் - இந்த பங்களிப்பு தான் எம்முடைய போராட்ட்டத்தில் புலம் பெயர்ந்தவரகளுக்கான பங்கு. இதை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும். அவர்கள் களத்தைக் கவனிப்பார்கள்; நாங்கள் புலத்தைக் கவனிப்போம். எமது பொறுப்பை சீராக செய்வோம்.


பேரணியில் பல விடயங்கள் என்னைக் கவர்ந்தன.

  1. ஒரு சிறுமி...! அவருக்கு எத்தனை வயசிருக்குமோ எனக்கு தெரியவில்லை. கன நேரமாக அவருக்குப் பக்கத்திலேயே தான் நானும் என் பிள்ளைகளும் இருந்தோம். என்னால் விபரிக்கத் தெரியவில்லை அவளுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளையும், வேகத்தையும்... ஆனால் அற்புதமான ஒரு உணர்வின் வீச்சத்தை அந்தச் சின்னஞ்சிறு முகத்திலும் அவள் கோசம் போட்ட விதத்திலும் பார்த்தேன். அதை அப்படியே என் கருவிக்குள் கொண்டுவர பல தடவை முயன்றும் சரியான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு வழியாக மடியில் அச்சுதனை படுக்க வைத்துவிட்டு அந்த சிறுமியை புகைப்படக் கருவிக்குள் அமுக்க முற்பட்ட போது அவர் அதைக் கவனித்துவிட்டதில் அதுவரை அந்தச் சிறுமியிடம் தெரிந்த அந்த ஈடுபாடு கலைந்து போய்விட்டது. அவளுடைய ஒன்றிப்போன உணர்ச்சி வேகத்தை கலைத்துவிட்ட குற்ற உணர்வு எனக்கு இன்னமும் போகவில்லை...!
  2. 18 நூற்றாண்டில் எழுதப்பட்ட தேசிய கீதத்தை பாடினார் ஒருவர். அவர் பெயர் றெஜி ரிச்சர்ட்.
  3. சுனாமியின் பாதிப்புகளினால் எம் மக்கள் அல்லலுற்ற போது அங்கு போய் தொண்டாற்றிய நார்த் கரோலினாவைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் மனோதத்துவ ஆய்வாளர்/மருத்துவர் ஒருவர் உரையாற்றினார். அவர் உரையின் ஈற்றில் தமிழில் நன்றி சொன்ன விதம் மிகவும் அழகாக மனதை தொட்டது . அத்துடன் அவர் இன்னமும் ஒன்று சொன்னார் " நான் தோற்றத்தில் தான் வெள்ளைக்காரி. மனதளவில் நானும் உங்களவள் தான். ஈழத்து தமிழச்சி தான்" என்று கூறி இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்த பாங்கு எல்லோரையும் மனம் நெகிழவைத்தது.!
  4. அடுத்து முக்கியமாக என்னைக் கவர்ந்தது சரத் பொன்சேகா , கோத்தபாயா ஆகிய இருவர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் இனப்படுகொலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கும் TAG அமைப்பின் ஆஸ்தான வழக்குரைஞர் திரு புரூஸ் வெய்ன் அவர்களின் உரை. ராஜபக்சேவின் கொடூர ஆட்சிக்கும் முடிவு காணாமல் நான் ஓயமாட்டேன் என்று அவர் சூளுரைத்த போது அங்கு குழுமியிருந்த அத்தனை தமிழ் மக்களின் இதயங்களிலும் ஒரு நம்பிக்கை ஒளி புதிதாக விதைக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். நெடுங்காலமாக சோகங்களையும், ஆதரவின்மையையும் தொடர்ந்து அனுபவித்து வந்த எமக்கு அன்று அந்த நிமிடம் அந்த மனிதரின் பேச்சு உண்மையிலேயே மிக முக்கியமான அருமருந்தாகத் தான் தெரிந்தது.
  5. ஏழாம் வகுப்பு & ஒன்பதாம் வகுப்பு மாணவிகளான தேவிகா , ராதிகா என்ற கனடிய தமிழ் சகோதரிகள் மாம்பழம் சுவாமியின் தமிழ் பாடலை பாடி நிகழ்சியை முடித்து வைத்தார்கள். அந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் கண்ணீரை வரவழைத்தன. பெருதோப்பாய் நீ பிறந்தாய், தனிமரமாய் வாழலாமோ? அருங்கொத்தாய் நீ மலர்ந்தாய் ....என்ற வரிகளில் இன்றைய தமிழனின் இழி நிலையை நன்கு தெளிவாகத் தான் படம் போட்டது. என்னுடைய வாழ்கையையே நான் சற்று திரும்பிப் பார்க்கிறேன்... எத்தனை சொந்தங்கள், எத்தனை உறவுகள், எப்பேர்ப்பட்ட குடும்பப்பரிவாரங்கள், அத்தனை விழுதுகளும் வேர்களும் இப்போது எங்கே..?அங்கு கொன்று குவித்த பிணக்குவியல்களில் இன்று என் சொந்தங்களில் எத்தனை பேரோ ... யாருக்கு தெரியும்...? அன்றிலிருந்து இன்று வரை என் தனிப்பட்ட வாழ்வில் சொந்தங்களாயும், நண்பர்களாயும் இந்த இனவெறியில் எத்தனை பேரை இழந்திருப்பேன்...? கணக்குக் கூட்டிப் பார்த்தேன்.. சொந்தங்கள் மட்டும் 27 பேர். எனக்கு மட்டுமே இத்தனை இழப்புகள் என்றால்..... மொத்தமாக இங்கு கூடியிருக்கும் 13,000 தமிழர்களில் எத்தனை பேர் என்னைப் போல இருப்பார்கள்..? நினைத்துப் பார்த்தால் தான் அந்த வேதனையின் தாக்கம் புரியும். உன்மையில் புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி பலருக்கும் ஒரு விதமான ஏளனமும் காழ்ப்புணர்ச்சியும் இருப்பதை அவதானித்திருக்கிறேன். ஆனால் இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் மனக் குமுறல்களையும், ஏக்கங்களையும், இயலாமையையும், துடிப்பையும் எமது மண்ணிலிருக்கும் ஒவ்வொரு சகோதரனுக்கும் சகோதரிக்குமாய் துடித்துக் கொண்டிருப்பதை உலகமே அவதானித்திருக்கும்.    புலம் பெயர்ந்த மக்கள் உணர்ச்சிகளற்றவர்களல்ல... ! மரத்துப் போனவர்கள்! இயந்திரங்களோடு இயந்திரமாக துருப்பிடித்த சுயங்களோடு மாடு போல் மாய்ஞ்சு மாய்ஞ்சு உழைப்பதும், உறங்குவதுமாய் வாழ்கை வட்டம் சுருங்கிப் போனவர்கள். ஆனால் தகுந்த நேரத்தில் அவர்களுடைய பங்களிப்பு அவர்களுடைய சக்திக்கும் மீறியதாய் எப்போதும் வரும் என்பதை எம்மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
    எங்களுடைய ஈழப் போராட்டத்தின் களங்கள் பல. அதில் புலம்பெயர்ந்தோருக்கான களத்தையும், சரியான போராட்டத்தையும் இப்போது தான் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சரிவர தொடங்கியிருக்கிறார்கள். இனி வருங்காலங்களில் இந்த களத்தின் தீவிரம் உலக சமூகத்தை ஈழத்தமிழர் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் நிச்சயமாக!
2 comments:

bharathi said...

பதிவை படிக்கும் போது வேதனை எழுகிறது. தீர்வு எப்போது என்ற ஏக்கம் நெஞ்சை கொல்கிறது. சிங்கள பேரினவாத அரசு பத்திரிகையாளர்களையும் விட்டுவைக்க வில்லை. என்று தீரும் இந்த அவலம்.

சுவாதி சுவாமி. said...

bharathi said...

பதிவை படிக்கும் போது வேதனை எழுகிறது. தீர்வு எப்போது என்ற ஏக்கம் நெஞ்சை கொல்கிறது. சிங்கள பேரினவாத அரசு பத்திரிகையாளர்களையும் விட்டுவைக்க வில்லை. என்று தீரும் இந்த அவலம்.

வருகைக்கு நன்றி சகோதரா!
ஏக்கமும், எதிர்பார்ப்பும், தளராத நம்பிக்கையும் ஈழத்தமிழருக்குப் பழகிப் போனது. எமது மக்களிடமிருக்கும் நம்பிக்கையின் உறுதியைத் தான் இன்று வரை போராளிச் சகோதரர்கள் தமது கையிலிருக்கும் ஆயுதங்களைப் பார்க்கிலும் பலமானவையாக பற்றியிருக்கிறார்கள். வெற்றிகளை முன்னிறுத்திச் செல்கின்றார்கள்! வெற்றி நிச்சயம் கிடைக்கும். எப்போது என்பது தான் இப்போதைய கேள்வி.

அன்புடன்
சுவாதி