Friday, March 27, 2009

கோணங்கள் - குறுநாவல்.( கடைசிப் பாகம்.)


கோணங்கள்
(குறுநாவல்)

4வீட்டு நிலமை கொஞ்சம் இலேசான மாதிரி இருந்தாலும் இறுகிப் போன சோகத்தின் சுவடுகள் முற்றாக மறையவில்லை. அக்காவின் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுடன் வந்து அணையத் தொடங்கின. அவன் அவர்களுக்காக கொண்டு வந்திருந்த உடுப்புகளையும், விளையாட்டுச் சாமான்களையும் அவர்களுக்குக் கொடுத்த போது ஏக்கத்துடன் அவனை பார்த்தார்கள். விளையாடும் மனமில்லாவிட்டாலும் விளையாட்டுச் சாமான்களை அணைத்துக் கொண்டு போய் தாயின் மடிக்குள் சுருண்டு படுத்துக் கொண்டார்கள். வில்லங்கத்துக்கு அவர்களைக் கூட்டிக் கொண்டு பின் வளவுக்குள் போய் விளையாட வைத்தான். மனமில்லாமல் விளையாடினாலும் கூட அந்த நேரத்து சோகத்தை மறக்கடிக்க முயன்றார்கள் என்பது உண்மை.

"இவர்களை இப்பிடி விடக் கூடாது. எப்பிடியாவது ஏதாவது செய்து என்ர குடும்பத்தை ஒப்பேத்திவிட வேணும் என்ற வெறி மெருகேறத் தொடங்கியது... கெதியெண்டு கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போய்ட்டால் போதுமெண்டு தோன்றியது. பிறகு அங்கேருந்து இந்தியாவுக்கு போய் பிள்ளையளை பள்ளியில சேர்த்துவிடலாம். தங்கச்சிக்கு மட்டுமில்லை குடும்பத்தில எல்லாருக்கும் ஒரு மாறுதலான வாழ்கை கிடைக்கும்... இந்தியாவில எண்டால் இந்த மாதிரி பிரச்சினை எதுவும் இருக்காது. அங்கயும் தமிழர் தானே? கோயில், குளமெண்டு போய் வரலாம். படம் , கடை எண்டு அங்கத்தைய வாழ்கை கொஞ்சம் கொஞ்சமாய் இந்த கசடுகளை மறக்கடிக்காட்டியும், தாக்கத்தை குறைக்கலாம்...இந்த செல்லடி யளையும், குண்டுச் சத்தங்களையும் விட்டு விலகி இருந்தாலே போதும்...நிம்மதியா இருக்கலாம்... மாசா மாசம் காசனுப்பினால் போதும்..இந்தியாவில சாப்பாட்டுச் சாமனுகளும் மலிவெண்டு மணியக்கா சொன்னவ..வாடை தான் சிலோன்காரர் எண்டால் கூட கேப்பினமாம்..எதுக்கும் முதலில் இதுகள் எல்லாரையும் கூட்டிக் கொண்டு கொழும்புக்கு போய்ச் சேருவம் " மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டான்....

அண்டைக்கு மத்தியானம் அம்மா விடமும் தனது முடிவைச் சொன்னான்.
"என்ன ராசா சொல்லுறாய்? இந்தியாவுக்கோ? நாங்களோ? இடம் வலம் தெரியாத தேசத்தில போய் இருக்கச் சொல்லிறியா ..?" என்று தயங்கினாள்.

"என்னம்மா இடம் வலம் தெரிஞ்சா தின்ன வேலில இருந்து இங்க வந்தனீங்கள்? அது மாதிரி இதையும் யோசியுங்கோ..அங்கயும் தமிழர் தான். அங்க இந்த குண்டுச் சத்தமும் துவக்குச் சூடும் இல்லாமல் நிம்மதியா இருக்கலாம். அக்காவிண்ட பிள்ளையளுக்கும் நல்ல சூழலில படிக்கிறதுக்கு வழி கிடைக்கும். அக்காவுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும். இங்க இருந்தால் அத்தாண்ட நினைவில தான் இருப்பா...”
“அகலியாவுக்கும் ஏதாவது நல்லது நடக்க வேணுமெண்டால் இங்க இருந்தால் அது கஷ்டம்.. எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுது அவளுக்கு நடந்தது.. யாரும் அவளைக் கட்ட வரமாட்டினம். நான் அங்க ஒரு மாப்பிள்ளை பார்த்திட்டு தான் வந்தனான். அவனுக்கு அகலியாவை படத்தில பார்த்து பிடிச்சுப் போச்சு எண்டு சொன்னவன். அவனை தான் முடிச்சு வைக்கிற யோசனையோட வந்தனான்.. ஆனால் இப்ப அவனுக்கு நடந்ததைச் சொல்லுறதா அல்லது சொல்லாமல் செய்யிறதா எண்டு குழப்பமா இருக்கு.. .சொல்லாமல் செய்யிறதா இருந்தால் இங்க வைச்சு செய்ய முடியாது. அதோட இனி இந்த நாட்டுப் பிரச்சினைக்குள்ள அவனை வரப் பண்ணி கலியாணம் செய்யிறதும் கஷ்டம்.. இந்தியாவில எண்டால் பிரச்சினை இல்லை.. இங்க கட்ட வாறவனுக்கும் கல்லுக் குத்த சனங்கள் இருப்பினம். அங்க எங்களை யாருக்கு தெரியப் போவுது? பேசாமல் ஒருத்தன்ர கையில அவளை ஒப்படைச்சு அவளுக்கு ஒரு புது வாழ்க்கை குடுத்திட்டால் போதும். என்னம்மா சொல்லுறாய்?"

அவளுக்கு மகனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது, பாவம் எத்தினை பேரை பத்தி தான் அவன் யோசிப்பான்? தனக்கெண்டு எதையும் யோசிக்காமல் சகோதரங்களைப் பத்தியே யோசிச்சுக் கொண்டிருக்கிறானே எண்டு கவலையா இருந்தது.

பாவம் அவனுக்கும் வயசு போய்க் கொண்டிருக்கு.. அவனுக்கு ஒரு பொம்பிளையைப் பார்த்து கலியாணத்தை செய்து வைச்சிட வேணும்...என்று யோசிச்சாள்...

"என்னம்மா யோசிக்கிறாய்?"

"ஒண்டுமில்லை ராசா... நீ யோசிக்கிறது எனக்கு விளங்காமல் இல்லை.. தின்ன வேலியைப் பார்க்கிலும் இந்த ஊர் எனக்கு வேற தான்..ஆனால் எங்கட நாட்டுக்குள்ள இருக்கப்பு.. இதுவும் என்ர மண் தான். ஆனால் இந்தியா வேற நாடு ..என்ன தான் தமிழ், கோயில் , குளமெண்டாலும் நாங்கள் எத்தினை நாளைக்கு தான் அங்க அன்னியமாய் இருந்து காலத்தைக் கழிக்கிறது சொல்லு? பெத்த தாயிண்ட மடியில படுத்திருக்கிற தும், மாற்றாந் தாயோட வாழுறதும் ஒண்டா ராசா? அந்த நாட்டில நாங்கள் வந்தேறு குடியளாதான் இருக்க முடியுமே தவிர, சொந்த மண் எண்டு உரிமை கொண்டாட முடியுமே சொல்லப்பு? நான் இழக்கக் கூடாததுகள் எல்லாத்தையும் இழந்திட்டன் தான். ஆனால் எந்த நாட்டுக்கு போனாலும் மனுசனுக்கு சாவு எண்டது நிச்சயம்..அந்த சாவு எனக்கு இங்க என்ர சொந்த மண்ணில வரட்டும். இன்னொரு இரவல் தேசத்தில அகதியா, நான் சாக வேணுமே...? உன்ர சகோதரங்கள் ஓமெண்டு சொன்னால் அவையளைக் கூட்டிக் கொண்டு போய் அங்க விடு..நான் வரேலை.. வேணுமெண்டால் உன்ர மனச் சாந்திக்காக கொஞ்ச நாள் அங்க வந்திட்டு வாறன்... இன்னும் நான் இங்க என்ன ஆசையோட இருக்கிறன்..என்ர மனுசன் தன்ர கையால செடி செடியா வைச்சு பூத்துக் குலுங்க வச்ச அந்த வளவுக்குள்ள போய் ஒரு கொட்டிலாவது போட்டுக் கொண்டு அங்க தான் என்ர கடைசி மூச்சுப் போக வேணும்...அங்க எனக்கு மேல செல் விழுந்தாலும் சரி.. துவக்கு சூடு பட்டாலும் சரி... அந்த வளவுக்குள்ள உக்கி மண்ணாய் போனால் போதும்..."

அவனுக்கு என்ன பேசுவது என்று தோன்றவில்லை. அம்மாவிடம் இருந்து இப்பிடியொரு பதிலை அவன் எதிர்பார்க்க ல்லை, . இந்த முதியவளின் மனதுக்குள் இப்படி ஒரு ஆவேசமும் உணர்வும் இருக்குமெண்டு அவனுக்கு தோன்றியதே இல்லை.

அக்காவோ..."எங்க இருந்தால் என்ன? என்னால என்ர புருசனை மறக்கவா முடியும்? இங்க இருந்தால் தான் என்ர பிள்ளையளுக்கு அதுகளின்ர அப்பா எப்பிடி இருந்தார், ஏன் செத்தார் எண்ட உணர்வு மாறாமல் இருக்கும்.. இட மாத்தம் எல்லாம் மனசை மாத்திடாது தம்பி.. அவர் செத்த பிறகு தான் இனி மேலயும் இந்த மண்ணை விட்டு வேற எங்கயும் போகக் கூடாது எண்ட எண்ணம் வந்திருக்கு எனக்கு..

இந்த வீட்டையும் வளவையும் விட்டுப் போனால் அவரை விட்டுப் போனது போல இருக்கும். அவர் இல்லாட்டிலும் அவர் திரிஞ்ச இந்த வீடும், வளவும், இந்த தெருவும் அவரிண்டை நினைவுகளை தந்து கொண்டிருக்கும். அந்த நினைவோடயே நான் என்ர பிள்ளையளை அவர் விரும்பினமாதிரி படிப்பிச்சு வளர்ப்பன்..என்ர பிள்ளையளுக்கு தாங்கள் யாரெண்ட அடையாளத்தை இந்த மண்ணால தான் குடுக்க முடியும். அதுகள் வெளி நாடுகளுக்கு போய் இங்கிலிஷ் படிக்கிறதைப் பார்க்கிலும் இங்க இருந்து தமிழ் பிள்ளையாய் வளர வேணும்.. எனக்கு அது தான் வேணும்... நான் இந்த ஊரை விட்டு எங்கயும் போக மாட்டன்... இந்த மண்ணை விட்டு என்ர பிரேதம் கூடப் போகாது. எனக்காண்டி யாரும் கவலைப்பட வேண்டாம் ராசா... நீ சொல்லுற மாதிரி அகல்யாவிண்ட வாழ்கை தான் இப்ப முக்கியம் அப்பு... அவளை கரை சேர்த்தால் போதும்.."

அவனுக்கு இந்த மக்களை நினைக்க நினைக்க அதிசயமாக இருந்தது, அவனும் இங்க இந்த தமிழ் மண்ணில தான் பிறந்து வளர்ந்தவன். ஆனால் போராட்டக் காலத்தின் உக்கிரத்தை அனுபவிக்காமல் வெளிநாட்டுக்கு போய் தப்பிவிட்டான். அதனாலும் , வெளிநாட்டில் மாறுதலான வாழ்கையினாலும் இந்த மண்ணின் மக்களுடைய நிலையில் அவனால் இருந்து பார்க்க முடியவில்லை. உணர்வுபூர்வமா சிந்திக்க நேரமில்லாமல் வெறும் பணத்துக்காக தன் பொழுதை செலவழித்தது இப்போது தான் உணர்ந்தான். எல்லாரும் போராட்டமெண்டு களத்தில் ஆயுதம் எடுக்க வேண்டும் எண்டில்லை..ஆனால் என்ர மண் என்ற உணர்வு தான் அவனையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துகிறது என்பது குத்திய போது வெட்கமாய் இருந்தது.

அமெரிக்க குடிமகன் என்று ஒரு நாள் யாரோ ஒரு வெள்ளைக்கார நீதிபதிக்கு முன்னால அமெரிக்காவை பற்றிய கேள்வி களுக்கு பாடமாக்கி வைச்சதை எல்லாம் ஒப்பிச்சுப் போட்டு அமெரிக்காவின் குடிமகனாய் வாழுவேன் எண்டு சத்தியப் பிரமாணம் செய்து வாங்கின அந்த பத்திரத்தின் பெறுமதி வெகுவாக மலிவாக தெரிந்தது இப்போது... ஆனாலும் வேறு வழியில்லை... இது தான் இனி அவனுடைய நிலைப்பாடு. என்ன கொஞ்சம் தமிழ் மண்ணின் உணர்வு ஏறிப் போயிருந்தாலும் கூட பெரிதாக எதுவும் மாறப் போவதில்லை... பழைய படி இரவு பகல் வேலையும், கிழமையில ஒரு நாள் டீவாஸ் தண்ணிப் போத்தலும் சமந்தாவும் தொடரத் தான் போகுது...அவனுடைய அமெரிக்க உழைப்பு இங்க ரூபாவை மாறி சாப்பாடு மட்டும் தான் அவனுடைய குடும்பத்தாருக்கு தரப் போகுதே தவிர வேற எதையும் அதால சாதிக்க முடியாது என்று தெரிந்தது,

அன்றிரவு முழுவதும் அவனுக்கு தன்னுடைய வாழ்கையில் என்ன சாதித்து விட்டேன் என்று மட்டும் தான் யோசிக்க வைத்தது..நாட்டுக்காக போராடாமல் வீட்டுக்காக உழைச்சது பிழையா? ஏன் அவனுக்கு மட்டும் நாட்டைப் பத்தின உணர்வு வராமல் இருந்தது என்று யோசித்தான்? வெளிநாடும், வாழ்கையின் முக்கால் வாசிப் பொழுதுகளும் டாலர் சம்பாதிப்பது எப்படி என்று இரவு பகலா உழைப்பிலேயே கழிந்து போய்விட்டிருப்பது இப்போது மிக நுணுக்கமாக மனதில் குத்தியது. போராளிகளெண்டு பிறம்பாய் ஆயுதங்களோட களத்தில யுத்தம் செய்யிறவை மட்டுமில்லை..களத்தில இறங்காட்டிக் கூட நாட்டை விட்டுக் கொடுக்காமல் இந்த மண் தன்னுடைய இனத்துக்குரியது எண்டு உணர்வு பூர்வமாய் நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் தமிழ் இனத்தை ஒடுக்கவும் அழிக்கவும் கங்கணம் கட்டும் எந்தவொரு சக்திக்கும் எதிரான போராளியள் தான் என்று அவனுக்கு விளங்கியது...

எப்ப நித்திரை கொண்டானெண்டு அவனுக்கே தெரியவில்லை.. ஏதோ ஆளரவம் கேட்டு திடுக்கிட்டு எழும்பின போது யாரோ தன்னை கடந்து நடந்து போற மாதிரி இருந்துது... யார் அது எண்டு அவன் சுதாகரிக்கும் முன் அந்த உருவம் அவன் அறையை விட்டு வெளியேறி கூடத்துக்குள் போய் விட்டது...

அம்மாவாக்கும் என்று நினைத்துக் கொண்டு புரண்டு படுத்தான்... தண்ணி குடிக்க வேணும் போல இருந்தது. திரும்பி தலை மாட்டுப் பக்கமாய் வைத்திருந்த புட்டுவத்தில் இருந்த செம்பையும் தண்ணியையும் எடுக்க எத்தனித்த போது தான் கவனித்தான் செம்புக்கு கீழ கடிதம் மாதிரி தெரிஞ்சுது... குறைச்சு வைச்சிருந்த அரிக்கன் லாம்பை தூண்டி விட்டு வடிவாகப் பார்த்தான்... அது கடிதம் தான்... அதுவும் அவனுக்கு எழுதிய கடிதம்...ஏதோ உறைக்க சடாரென்று எழும்பி கடிதத்தை உருவி பிரித்து வாசிக்க தொடங்கினான்...

அன்புள்ள அண்ணா ...எண்டு...கடிதம் தொடங்க யார் அகலியாவா எழுதியிருக்கிறாளா என்று யோசித்தான்.. அவள் தான்...தொடர்ந்து படிக்க தொடங்கினான்...

அன்புள்ள அண்ணா!

அண்டைக்கு எனக்கு நடந்தது விபத்தும் இல்லை; விரும்பி நடந்ததுமில்லை; வன்முறையால என்னை சீரழிச்சிட்டாங்கள்...அந்த நொடி அவங்கட கேலியும், வெறிச் சிரிப்பும் , அவங்கள் தொட்ட இடங்களும், அதுல நான் இன்னமும் புளுங்கி புளுங்கி செத்துக் கொண்டிருக்கிறதையும் என்னால் உங்களுக்கு விரிவா எழுத தெரியேலை. அது விளக்கப்படுத்த முடியாத வலி. அருவெருப்பு. மரணிப்பதை விட இந்த வலியும் வேதனையும் பெரிசா இருக்கு.

இப்ப தான் எனக்கு கமலினி அண்டைக்கு என்ன பாடு பட்டிருப்பாள் எண்டு விளங்குது. ஆனால் கமலினி சொன்ன மாதிரி என்ர கற்பை யாராலயும் அழிக்க முடியாது. அது என்ர மனசிலயும் நடத்தையிலயும் எப்பவும் இருக்கும்...அவங்கள் சின்னண்ணையை அடிச்சு சித்திரவதைப்படுத்தி வளர்த்தினதை விட என்னை அதிகமா சித்திரவதை படுத்தினதா தான் நான் அந்த நிகழ்வை எடுக்கப் போறன்.

எனக்கு ஒரு காலத்தில் கலியாணம் பத்தின கனவுகள் இருந்தது என்னவோ உண்மை தான்.. ஆனால் இப்ப இந்த நிமிசம் அதுகளை விட வேற எதிர்பார்ப்பு இந்த மூண்டு கிழமையில எனக்குள்ள வேரோடிப் போச்சுது. இன்னொரு கமலினியோ இன்னொரு அகலியாவோ இராணுவத்தால இனப்பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கை எண்ட பெயரில் உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாகாமல் எங்கட பெண்கள் தலை நிமிர்ந்து வாழ வேணுமெண்டால் முதலில் என்ர மண்ணுக்கு சுதந்திரம் வேணும்.

நீங்கள் நினைக்கிற மாதிரி நானும் ஒரு கல்யாணம் பண்னி குடும்பம் நடத்தலாம் தான்.. அது என்னால முடியும்; எனக்கு அதில எந்த குற்ற உணர்வும் வராது ; காரணம் நடந்து போன நிகழ்வுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பில்லை ; என்னுடைய ஒத்துழைப்பில்லாமல் நடந்த ஒரு பலாத்காரத்துக்கு , வன்புணர்தலுக்கு ஏன் குற்றவாளியாயோ பாவப்பட்டவளாயோ என்னை நானே நினைக்க வேணும்?

ஆனால் என்னை களங்கமில்லாதவள் என்று சொல்லி ஒப்பேத்த உங்களுக்கே தயக்கமாய் இருக்கு. பாக்கிற மாப்பிள்ளைக்கு என்ர நிலையை சொல்லுறதா வேண்டாமா எண்டு உங்களுக்குள்ளேயே ஒரு போராட்டம் நடத்துறீங்கள்...
ஒரு கற்பிழந்த பெண்ணை வாழ்கையில மனைவியா ஏத்துக் கொள்ளுற மனப்பக்குவமுள்ள ஆண்கள் இன்னமும் எங்கட சமூகத்தில வெகு குறைவு தான். ஒரு வேகத்தில ஓமெண்டு கலியாணம் முடிச்சாலும் கூட நாள் போக போக அவர்களுடைய மனப் போக்கு மாறிப் போச்சுதெண்டால் , ஒரு நாள் மாதிரி ஒரு நாள் இல்லாமல் வார்த்தையால் தன்னும் ஏதாவது சொல்லிட்டால்...அது அண்டைக்கு சீரழிந்த நேரத்தில் பட்ட வலியை விட மோசமானதாய் போயிடும்.

அதே நேரம் பொய் சொல்லி வாழவும் நான் தயாரா இல்லை..நான் சொன்ன பொய் எப்ப தெரிய வருமோ எண்டு பயந்து கொண்டே தன்ர புருசனோட ஒரு மனைவி வாழுற வாழ்கையை விட நரகம் வேற எதுவும் இருக்க முடியாது. அதனால எனக்கு அந்த மாதிரி வாழ்கை வேண்டாம்.

நானும் இன்னொரு கமலினி தான் இனி..எல்லா விதத்திலயும்; கமலினி சொல்லாமல் போனாள்; நான் சொல்லிட்டு போறன்; சிங்கள இராணுவத்தால பாலியல் வன்முறையால சீரழிக்கப்பட்ட கடைசி ஈழத்து தமிழச்சியா இந்த அகல்யா இருக்க வேணும். இனி எந்த ஒருவனும் எந்தப் பொம்பிளயளிலயும் கை வைக்க கனவில கூட நினைக்கக் கூடாது. அப்பிடி ஒரு நிலையை நாங்கள் உருவாக்க வேணும்; அது போராட்டத்தால தான் முடியும். நான் அந்தப் பாதையில தான் போக விருப்பப்படுறன்.

அம்மாவை நீங்கள் தான் சமாதானப்படுத்த வேணும்; என்னை பிரிஞ்ச துக்கம் தான் அவவுக்கு கஷ்டமாய் இருக்குமே தவிர நான் தேர்வு செய்த பாதை அவவுக்கு கட்டாயம் சரியாய் தான் படும். இப்ப நான் போற பாதையில போராட்டம் தான் இருக்கும்; ஆனால் எனக்கு மனநிறைவு கிடைக்கும். என்னுடைய மண்ணுக்கு விடிவு காலம் வரும் நேரத்தில் நானும் ஒரு அத்தியாயமாயோ அல்லது அதற்கு ஒரு அத்தாட்சியாவோ இருப்பேன், அது என்னையும் என்னுடைய வாழ்கைக்கான அர்த்தத்தையும் பூரணப்படுத்தும் எண்டு நிச்சயமாய் நம்புறன்.

என்னவோ உங்களிட்ட தான் சொல்லிட்டு போக வேணும் போல இருந்துது... நினைவு தெரிஞ்ச நாளில இருந்து என்ர வாழ்கையில நீங்கள் தான் எனக்கான எல்லாத்தையும் முடிவு செஞ்சீங்கள்; இப்ப நான் முதன் முதலா தனிய முடிவு எடுத்திருக்கிறன். அதை உங்களிட்ட சொல்லிட்டு போறது தான் முறை. நான் போட்டு வாறன் அண்ணா.

இப்படிக்கு
உங்கள் அன்புத் தங்கச்சி
அகல்யா.

வாசலுக்கு ஓடிப் போய் படலையடியைப் பார்த்தான். அகலியா இருட்டில் கரைந்து போய் கன நேரமாகிப் போயிருந்தது. திரும்பி அறையை நோக்கி வரும் போது நினைத்துக் கொண்டான்... " அம்மாவிடம் எப்பிடி சொல்லுறது? ...எப்பிடியும் இரண்டு நாளில நான் வெளிக்கிட வேண்டியது தான்...இனியும் என்ர குடும்பத்துக்கு நான் தான் உழைக்க வேணும்...?அக்காவையும் , பிள்ளையளையும் நான் தான் பார்க்க வேணும்...அவை உயிரோட இருக்கிறவரை அல்லது என்ர உயிர் இருக்கிறவரை என்ர உழைப்பு அவையளுக்கு வேணும்"

அகலியாவை தேடிப் போக வேண்டிய அவசியம் இருப்பதாய் அவனுக்கு தோன்றவில்லை...

பொழுது விடியலை நோக்கி நொடிகளாக கடந்து கொண்டிருந்தது....

ம்ம்ம் கெதியா விடியப் போகுது..!

(ஈழத்தில் மிகுதி தொடரும்.)


glitter-graphics.com

No comments: